உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச்சட்டத்தை,
ஜனநாயகத்தை காக்க வேண்டும்
எஸ்.குமாரசாமி
தேசவிரோதம் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 அ பிரிவு, சுதந்திர இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை பறிக்க, கருத்து சுதந்திரத்தை நசுக்க பயன்படுத்தப்படுகிறது.
கேள்விக்குள் நுழைய, 124 அ சட்டப் பிரிவு, கேதார்நாத், பல்வந்த்சிங் தீர்ப்புகளை காண வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124அ தேசத் துரோகம் என்ற தலைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை, அவமதிப்பை, பாசமின்மையை, பேச்சால், எழுத்தால் இதர வடிவங்களால் எவர் செய்தாலும், அது 3 வருடங்கள் தண்டனைக்குரியதாகும். கூடுதலாக அபராதமும் விதிக்க முடியும்.
விளக்கம் 1: பாசமின்மை (டிஸ்அபெஃஷன்) என்பது விசுவாசமின்மையையும், பகையுணர்வையும் உள்ளடக்கும்.
விளக்கம் 2: வெறுப்பை, அவமதிப்பை, பாசமின்மையை தூண்டாமல், சட்டபூர்வ வழிகள் மூலம் அரசாங்க நடவடிக்கைகளை மாற்ற, அதிருப்தி கருத்து சொன்னால் அது, இந்தப் பிரிவுப்படி குற்றமாகாது.
விளக்கம் 3: வெறுப்பை, அவமதிப்பை, பாசமின்மையை தூண்டாமல், அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கையை விமர்சிப்பது, இந்தச் சட்டப் பிரிவுப்படி குற்றமாகாது.
*வெள்ளையர் இந்தியாவை ஆண்டபோது 'இந்திய அரசாங்கம் என்ற இடத்தில், 'பிரிட்டிஷ் மகாராணி', அவரது அரசாங்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டின் தெற்கு மூலையில் உள்ள இடிந்தகரை கிராமத்தின் மக்கள் 8,856 பேர் மீது, கூடங்குளம் அணுஉலை வேண்டாம் என போராடியதற்காக, தேச துரோக வழக்கு போடப்பட்டது. அணு உலை வேண்டாம் என்றால் தேசத் துரோகம், எட்டு வழிச்சாலை வேண்டாம் என்றால் தேச துரோகம், மோடியும், அமித் ஷாவும், யோகியும் மக்கள் விரோதிகள் என்று சொன்னால், தேச துரோகம், கருப்பு சட்டங்களின் ஆட்சி என்றால் தேச துரோகம், நீட் கொலை, கொரோனா கொலை, இந்துத்துவா வெறியாட்டம் என்றால் தேசத் துரோகம்.
2010க்கு பிறகு 10,968 பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. மோடியை விமர்சனம் செய்த 149 பேர் மேல், யோகியை விமர்சனம் செய்த 144 பேர் மேல் தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட 3,700 பேர் மேல் தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. இப்படியே போனால், மத்திய அரசு என்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசு என்று அழைப்பதைக் கூட தேசத் துரோகம் என்பார்கள். சுதந்திரமும், உரிமையும் உள்ள குடிமக்கள் வாழும் தேசம் என்பதற்கு மாறாக, காலனிய அரசு அடிமை மக்களுக்கு எதிராக பயன்படுத்த வைத்திருந்த சட்டப்பிரிவை, சுதந்திர இந்தியா அப்படியே வைத்திருக்கலாமா? இங்கேதான் உச்சநீதிமன்றம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
கேதார்நாத் வழக்கு
பீகாரில் கேதார்நாத் சிங் என்பவர் 'புரட்சியின் தீப்பிழம்புகளில், இந்தியாவின் முதலாளிகள், ஜமீன்தார்கள், காங்கிரஸ் தலைவர்கள், வெந்து சாம்பல் ஆவார்கள்', என்று பேசியதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. வன்முறைக்குத் தூண்டுவது ஒழுங்கின்மையை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உருவாக்குவதை மட்டுமே தேச விரோதம் என சொல்ல முடியுமென, உச்சநீதிமன்றம் 1962ல் தீர்ப்பளித்தது.
பல்வந்த் சிங் வழக்கு
இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட நாளில், பஞ்சாபில் ஒரு பொது இடத்தில் பல்வந்த்சிங் காலிஸ்தான் வாழ்க என்ற தனிநாடு கோரும் முழக்கத்தை எழுப்பினார். அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அவர் செயலால் தேசத்திற்கு, சமூகத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. என்று சொன்ன உச்சநீதிமன்றம், காவல்துறையின் ஆர்வக் கோளாறை விமர்சனம் செய்தது.
சமூக தளத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377, 497 ஆகியவை குடிமக்களை குற்றவாளிகளாக்கியதற்கு முடிவு கட்டிய உச்சநீதிமன்றம், எது தேச துரோகம் என்று 1962ல் இருந்து 2021 வரை நீட்டி முழக்கி விளக்கம் தருவதோடு நின்று விடுவது சரியா? அப்படி முடங்கி, சுருங்கி நிற்பது உயிர்வாழும் உரிமைக்கு, சுதந்திரத்திற்கு ஆபத்தாகாதா?
சுதந்திரப்போராட்ட வெளிச்சத்தில் உச்சநீதிமன்றம் செயல்பட வேண்டும்
நாட்டு விடுதலை போராட்ட வீரர்கள் மீது, பிரிட்டிஷ் அரசு தேச விரோத குற்றம் சுமத்தியது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கிய திலகர் மீது 1897, 1909, 1916 என மூன்று முறை தேசவிரோத குற்றம் சுமத்தி சிறையிலும் அடைத்தது. காந்தி 1922ல் தேச விரோத பிரிவு வழக்கை சந்தித்தார். அவர் குற்றத்தை மறுக்கவில்லை. அரசியல் தன்மை கொண்ட சட்டப்பிரிவுகளில், தேச விரோத சட்டப் பிரிவே இளவரசன் என்றார். தமக்கு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட பேரார்வம் உள்ளது என்றார். 'இந்த அமைப்பு முறையிடம் பாசம் கொண்டிருப்பது, ஒரு பாவச் செயலாகும். சட்டத்தால் பாசத்தை உருவாக்குவோ, நெறிப்படுத்தவே முடியாது. ஒரு மனிதரிடமோ, ஓர் அமைப்பு முறையிடமோ ஒருவருக்கு பாசம் இல்லையென்றால் வன்முறையை தூண்டும் விதம், முன்னெடுக்கும் விதம் அவர் செயல்படாதவரை, தமது பாசமின்மையை முழுமையாக வெளிப்படுத்த சுதந்திரம் வேண்டும்' என்றார் காந்தி.
தேசிய குற்ற ஆவணக தகவல்படி, 2016 முதல் 2019 வரை தேசத் துரோக குற்றங்கள் 160% உயர்ந்துள்ளன. தண்டனை விகிதம் 33.3%லிருந்து 3.3% ஆக குறைந்தது.
124 அ சட்டப்பிரிவு இருக்கும் வரை, அடுத்தடுத்த அரசுகள் தேசவிரோதம் என்று வழக்குகள் போட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். நேருவின் மொழியில் அருவருக்கத்தக்கதான இந்த சட்டப்பிரிவை, ரத்து செய்ய நேரம் வந்துவிட்டது என, உச்சநீதிமன்றம் முடிவுக்கு வர வேண்டும்.
டில்லி உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும்
தேவாங்கனா கலிதா, நடாஷா நர்வால், அசிப் இக்பால் தன்ஹா என்ற மூன்று மாணவர்கள் விசாரணையில்லாமல், பிணையில்லாமல் ஒரு வருடம் வரை சிறையில் இருந்தனர். தேவாங்கனாவும் நடாஷாவும் பிஞ்ரா டோட் (கூண்டை உடைத்து சுதந்திரம் பெறு) இயக்கத்தைச் சேர்ந்த, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள். மூவரும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இவர்களை பயங்கரவாதிகளாகக் காட்ட மோடி அரசு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை (மஅடஅ) இவர்கள் மீது ஏவியது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவானால் பிணை கிடைப்பது கிட்டத்தட்ட முடியாது. இந்தச் சட்டத்தின் பிரிவு 43 (ஈ)(5)ன்படி, கேஸ் டைரி அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 173 அறிக்கையை பார்த்துவிட்டு மட்டுமே அரசு தரப்பு சாட்சிகள், விசாரணை நடக்காமலே, வாதுரைகள் இல்லாமலே, குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள், பார்த்த மாத்திரத்திலேயே உண்மையெனத் தோன்றினால், நீதிமன்றம் பிணை தரக்கூடாது எனச் சொல்லப்படுகிறது. தேசவிரோதம், பயங்கரவாதம் என்று அரசு சொன்னால், பயங்கரவாதம், பயங்கரவாதம் என்று கதறி பதறும் அரச நீதிமன்றங்களாகவே நீதித்துறையின் கணிசமான நீதிமன்றங்கள் இன்றும் இருக்கின்றன.
இந்த சட்டப்படி 2015ல் 1122 பேர் மீதும், 2016ல் 999 பேர் மீதும், 2017ல் 1554 பேர் மீதும், 2018ல் 1421 பேர் மீதும், 2019ல் 1948 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஏகப்பெரும்பான்மையினர் அரசின் மொழியில் நகர்ப்புற நக்சல்கள், புனிதப் போர் நடத்தும் இஸ்லாமியர்கள். பத்து ஆண்டுகளும், அதற்கு மேலும் பிணை கிடைக்காமல் சிறை யில் இருந்து, குற்றம் நிரூபணம் ஆகவில்லை என விடுதலை ஆனவர்களும் உள்ளனர். எவ்வளவு மோசமான ஜனநாயகப் படுகொலை!
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிருதுளும், அனூப் ஜெயராம் பம்பானியும் ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டியுள்ளார்கள். எதிர்ப்புப் போராட்டங்கள், கூச்சல் நிறைந்தவையாக, குழப்பம் உருவாக்குபவையாக, வன்முறை நிகழ்வு நடந்தவையாக இருந்தால் கூட, அவை பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகாது. எதிர்ப்பை பயங்கரவாதம் ஆக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்து என அறுதியிட்டு உறுதியாக சொன்னார்கள்.
குற்றம் நிரூபிக்காதவரை எவரும் நிரபராதி என்றே சட்டம் கருதுகிறது, பிணை வழங்குவதுதான் இயல்பானது என்ற சட்டகோட்பாடுகளை மறுஉறுதி செய்து தேவாங்கனா, நடாஷா, அசிப் ஆகியோர் பிணையில் வர, வழி செய்தனர்.
அரசு தரப்பு பிணை வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது. அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா நாட்டின் பாதுகாப்புக்கு பயங்கரவாதத்தால் ஆபத்து வரும்போது, பிணை வழங்கியது சரியல்ல என்றார். உச்சநீதிமன்றம், பிணை வழங்கியது சரியே என துணிந்து சொல்லவில்லை. அதேநேரம் அரசுக்கு ஆறுதல் தர முயன்றதாகவும் தெரிகிறது.
'அறிவிப்பு அனுப்புக. நான்கு வாரங்களில் பதிலை தாக்கல் செய்யவும். ஜ÷லை 19க்கு பிறகு இடைமனுக்கள் விசாரணை வராத வாரம், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பிணை உத்தரவை எந்த நீதிமன்றத்திலும் முன்னுதாரணமாக காட்ட முடியாது', என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிணை வழங்கியது முன்னுதாரணமாகாது என சொன்னபோது, டில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை, தன்னுடைய இடைக்கால உத்தரவை, உச்சநீதிமன்றம் பலவீனப்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எ.பி.ஷா அமர்வம் குற்றவியல் வழக்குகளில் தீர்ப்பு முன்மாதிரி ஆகாது என்ற எச்சரிக்கையுடன் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை சாடியது. சந்திரசூட் குறிப்பிட்டார்: 'அப்படிச் செய்வது ஒருவருக்கு தன் உத்தரவிலேயே நம்பிக்கையில்லை என்றுதானே காட்டும்? என் முடிவு, என் முடிவுதானே? என் முடிவை முன் மாதிரியாக கருத வேண்டாம் என்று நான் சொல்லும்போது, என் சொந்த கருத்திலேயே எனக்கு வலுவான நம்பிக்கை இல்லை என்றாகி விடும். உத்தரவு பலவீனமானது எனக் கருதினால், உத்தரவு போடாமல் இருந்திருக்க வேண்டும்'.
அர்னாப் கோசுவாமிக்கு பிணை தந்த உச்சநீதிமன்றம், சமீபகாலங்களில் உரிமை போராளிகளுக்கு பிணை தருவதில்லை. டில்லி உயர்நீதிமன்றம் பிணை தந்தது தவறு, அதற்கு தடை வழங்குகிறோம், மூன்று மாணவர்களும் மீண்டும் சிறைக்கு செல்லட்டும் என, இன்றைய இந்திய நிலைமைகளில் உச்சநீதிமன்றத்தால் சொல்ல முடியவில்லை. அப்படியானால் டில்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது சரி என்றாகும். ஆனாலும் அது அவ்வளவு சரியில்லை என்பது போல், அந்த பிணை உத்தரவு முன்மாதிரி ஆகாது என சொன்னது, உச்சநீதிமன்றத்திற்கு அழகல்ல.
உச்சநீதிமன்றம், தேச விரோத சட்டப் பிரிவை காந்தியைப்போல் அணுகி, நேருவைப் போல், அது ஜனநாயக குடியரசிற்குத் தேவையில்லை என முடிவுக்கு வரவேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் ஏவப்பட்டால், பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டால், திரை விலக்கி உண்மையறிந்து அஞ்சாமல் நீதித்துறை நியாயம் வழங்க வேண்டும். சட்டம் நல்லது (ப்ஹஜ் ண்ள் ஞ்ர்ர்க்) என்று பேசுவதோடு நில்லாமல், நியாயமே மேலானது (த்ன்ள்ற்ண்ஸ்ரீங் ண்ள் க்ஷங்ற்ற்ங்ழ்) என்ற அடிப்படையில், தீர்ப்புகள் வழங்குமாறு நீதித்துறைக்கு வழிகாட்ட வேண்டும்.
அமோல்யா, திஷா ரவி, நோதிப் கவுர், ஆயிஷா சுல்தானா, தேவாங்கனா, நடாஷா போன்ற இளம் பெண் போராளிகள், செயல் வீரர்கள் வழியில் தடைகள் போடாமல், தடைகள் அகற்றும் கடமை, நீதித்துறைக்கு இருக்கிறது.