பெரியார் சொல் கேளீர்.....
ஆச்சாரியார் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா?
12.06.1938 , குடி அரசு தலையங்கம்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 26, பக்கம் 378 – 382
ஆச்சாரியார் பிரதம மந்திரியானாலும் ஒப்பற்ற ஒரே தனி மந்திரியானாலும் அல்லது சர்வாதிகாரமுள்ள தன்னாட்சி உள்ள ஏகபோக சக்கரவர்த்தியேயானாலும் அவர் இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களான (100க்கு 97 பேர்களான) பழங்குடி மக்களுக்கு அன்னியப்பட்ட ஒரு பார்ப்பனர் - அதுவும் ஆரியப் பார்ப்பனர் என்பதையும் அதிலும் ஆரிய மதம், ஆரியக் கலை, ஆரியப் பழக்கவழக்கம் ஆகியவைகளில் குரங்குப் பிடிவாதமுள்ள ஒரு வகுப்பைச் சேர்ந்த - ஒரு கருத்தை - கொள்கையைக் கொண்ட ஒரு அன்னிய மனிதன் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
அப்படியானால் ஆச்சாரியார் ஆட்சிக்கு முன் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் நடத்திவந்த காரியங்களையெல்லாம் ஆச்சாரியார் தலை வணங்கி ஏற்று அதன்படி நடந்து வந்தாரா என்று கேட்கின்றோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய மந்திரிகளுக்கு ஆச்சாரியார் கீழ்ப்படிந்தாரா?
ஆச்சாரியார் பதவி ஏற்ற பின்பாவது தாம் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரானதால் தமது ஆக்கினை செல்லுகிறதா இல்லையா என்பதை "வந்தே மாதரப் பாட்டில்௸ ஏன் ஒரு கை பார்க்கவில்லை என்று கேட்கின்றோம்.
மற்றும் கனம் ஆச்சாரியார் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்கிற விஷயத்தில் சந்தேகமற உறுதி கொண்டு தமது அதிகாரம் செல்லுகிறதா இல்லையா? என்பதை உண்மையில் அறிய ஆசைப்பட ஒரு ஆண்மை உள்ள வீரரானால் சென்னை மாகாணம் பூராவும் ஹிந்தியை புகுத்த முடிவு கொண்ட அவர் 125 பள்ளிக்கூடத்துக்கு மாத்திரம் குறைத்து கொள்வானேன்? கட்டாய பாடம் என்று சொன்னவர் பாக்ஷை இல்லை என்று சொல்வானேன்? முஸ்லிம்கள் உருதுவில் படிக்கலாம் என்று சொல்லுவானேன்? ஹிந்தி என்கிற உச்சரிப்பை மாற்றி ஹிந்துஸ்தானி என்று உச்சரிப்பானேன்? கூடுமானவரை தங்களுக்கு ஆதிக்கமுள்ள பள்ளிகளை மாத்திரம் பொறுக்கி எடுத்து அதில் வைக்கச் சொல்லுவானேன்? எல்லோருக்குமாக என்று ஆரம்பித்த ஹிந்தி 1, 2, 3 பாரங்களுக்கு மாத்திரம் என்று மாற்றப்படுவானேன்?
தேசீயத்துக்காக ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன ஆச்சாரியார் கல்விமுறை பூர்த்தி அடைய ஹிந்தி அவசியம் என்று சொல்லுவானேன்?
முன்பு ஹிந்தியை நாகரி லிபியில் படித்தாக வேண்டும் என்று சொன்ன ஆச்சாரியார் பின்பு முஸ்லிம்கள் உருதுவிலும், ஹிந்துக்கள் நாகரியிலும் படிக்க வேண்டும் என்று சொல்லுவானேன்?
பிறகு இன்று 9 -ம் தேதி அசோசியேட் பிரஸ் நருபருக்கு அளித்த அதே பேட்டியில் எந்த மாணவரும் "எந்த எழுத்தில் வேண்டுமா னாலும் அதாவது நாகரியிலோ, உருதுவிலோ கற்கலாம்௸ என்று சொல்லுவானேன் என்பவைகளையெல்லாம் பார்த்தால் ஆச்சாரியார் தமக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிறதை பார்த்து விடுவதற்காக ஹிந்தி பிரச்சினை வைத்திருக்கிறாரா அல்லது முடிந்த வரையில் மக்கள் ஏமாந்த வரையில் பார்ப்போம் என்று கருதி எப்படியாவது ஹிந்தியை இன்று புகுத்திவிட்டால் மற்ற காரியத்தை நாளை சிறிதுச் சிறிதாக சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறாரா என்று கேட்கின்றோம். கடைசியாக, தாம் ஆட்சி நடத்துவதா விட்டுவிட்டுப் போய்விடுவதா என்பதைப் பார்த்து விடுவதாக வீரம் கூறுகிறார்.
ஆட்சிமுறையை சீர்திருத்த சட்டத்தை அழித்துவிட்டுப் போவதாக வாக்களித்து ஓட்டுப் பெற்று பதவி பெற்ற ஆச்சாரியார், ஆட்சி நடத்த முடிகிறதா இல்லையா சீர்திருத்த சட்டப்படி அதிகாரம் செய்ய முடிகிறதா இல்லையா என்பதை ஓட்டர்களிடம் ஒரு கை பார்ப்பதாகக் கூறும் இவர் உண்மையில் ஒரு வீரராக இருக்க முடியுமா? அல்லது கோழை வஞ்சகராக இருக்க முடியுமா என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.
ஆச்சாரியார் வீரப்பிரதாபம் ஒருபுறமிருக்கட்டும்
ஆச்சாரியாரின் வீரப்பிரதாபம் ஒருபுறமிருக்கட்டும். அவரது நல்லெண்ணத்தையும் நாணயத்தையும் பற்றி யோசிப்போம். மெயில் பத்திரிகை குறிப்பிட்டதுபோல் தாய்ப்பாஷை தெரியாத மக்கள் 100க்கு 93 பேர் இருக்கிற தமிழ்நாட்டில் அந்த பாஷையை, தமிழை, எல்லோருக்கும் கட்டாய இலவச பாஷையாக ஆச்சாரியார் ஆக்காமல் ஒருசில குழந்தைகளுக்கு அன்னிய - ஆரிய பாஷையைப் பணம் கொடுத்து கட்டாயமாக படிக்கும்படி செய்வதின் கருத்து என்ன என்று கேட்கின்றோம்.
நாடு பூராவும் ஒரு பாஷையைப் பொது பாஷையாக சிலர் கற்றாக வேண்டுமென்றால் அந்நாட்டுமக்களின் தாய்பாஷை என்ன கதி அடைந்து அதை எல்லோரும் படிக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று யோசித்துப்பார்த்தால் ஆச்சாரியார் தமிழ் மக்களுக்கு அவர்களது தாய்பாஷையைக் கற்றுக்கொடுக்கவோ காப்பாற்றவோ தனக்கு அதிகமான கவலை இருக்கிறது என்று சொல்லுவதில் யோக்கியமோ ஒழுக்கமோ இருக்கிறதா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.
தமிழ் பாஷையை ஆரியப்பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்ததாலேயே இன்று 100க்கு 33 வார்த்தைகள் ஆரிய பாஷையை கலக்காமல் பேச முடியவில்லை என்றால் இனி ஆரிய பாஷையை கட்டாயமாக ஆரிய உபாத்தியாயர்களே கற்றுக்கொடுப்பதானால் அதன் மூலம் தமிழ் பாஷையில் இனியும் ஒரு 33 விகிதம் ஆரிய பாஷை தமிழ் பேச்சில்கலந்து விடாதா என்று கேட்கின்றோம்.
இன்று 100க்கு ஒருவர் இருவர் ஆங்கிலம் படித்திருப்பதாலேயே தமிழ் பாஷை கிராமங்களில் கூட 100க்கு 10, 15 ஆங்கில வார்த்தை கலக்காமல் பேசமுடியவில்லை என்றால் இந்த எல்லா பாஷைகளும் இனியும் குழப்பப்படுமானால் தமிழில் என்ன மீதியாகும் என்று கேட்கின்றோம்.
இந்த நிலையில் கனம் ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாய் 10, 11, 12 வயது குழந்தைகளுக்குப் புகுத்தினால் தமிழ் சிறிதும் கெடாது என்கிறாரே, இது தெரியாமல் பேசுகிறாரா அல்லது தெரிந்தே மக்களை வஞ்சிக்க பேசுகிறாரா என்று கேட்கின்றோம்.
பாஷைத் தொல்லை ஒருபுறமிருக்கட்டும்
பாஷைத் தொல்லை ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் மக்கள் ஹிந்தி கட்டாய பாட விஷயத்தில் தங்களுடைய அதிருப்தியை காட்டிக் கொண்டால் அவர்களை அடக்குமுறை கொண்டு அடக்குவானேன் என்று கேட்கின்றோம். கனம் ஆச்சாரியார் ஹிந்தியை தோழர் ராமசாமி ஒருவர்தான் எதிர்க்கிறார் என்று சட்டசபையில் சொன்னார். ஆகவே ஆச்சாரியார் ஹிந்தியை பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். அதை அவர் அறியும்படி செய்ய அதாவது தோழர் ராமசாமியைத் தவிர வேறு 'சிலராவது' எதிர்க்கிறார்கள் என்பதை ஆச்சாரியார் அறிய வேண்டும் என்பதற்காக மக்கள் முயற்சி செய்தால் அது சட்ட விரோதமா? என்று கேட்கிறோம். அதுவும் யாருக்கும் எவ்வித அசௌகரியம் விளைவிக்காமல் முனிசிபாலிட்டி ரோட்டில் டிச்சி ஓரத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தோ நின்று கொண்டிருந்தோ விளக்குவது சட்டவிரோதமா என்று கேட்கின்றோம்.
இதுவரை இக்காரியத்துக்காக சுமார் 30 பேர்களுக்கு மேல் கைதி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சாரியார் ஆட்சி பிரஜா உரிமை, சாவதானமான கிளர்ச்சி உரிமை உடைய ஜனநாயக ஆட்சியா என்று கேட்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தெருவில் ஓரத்தில் பேசாமல் நன்று இருப்பது சட்டவிரோதமானால், போனவாரத்தில் காங்கரஸ்காரர்கள் கிறாம்பு பகிஷ்காரம் என்னும் பேரால் வண்டியின் சக்கரத்தடியில் படுத்து மறித்தும் கடைகளின் முன் நன்று கிராம்பு வாங்குபவர்களை வாங்க வொட்டாமல் தடுத்து மறியல் செய்ததும் சட்டத்துக்கு கட்டுப்பட்ட காரியமா என்று கேட்கின்றோம்.
எனவே இப்படிப்பட்ட ஆச்சாரியார் ஆட்சியானது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டது என்கின்ற காரணத்தாலேயே எதுவும் செய்துவிடலாம் என்றும் செய்ய முடிகிறதா இல்லையா என்றும் ஒரு கை பார்த்து விடப் போவதாகவும் பூச்சாண்டி காட்டினால் இதை எந்தத் தமிழ் மகன் லட்சியம் செய்வான் என்று கேட்கின்றோம்.
ஆச்சாரியாருக்கு உள்ள வீரமும் உறுதியும் இரண்டிலொன்று பார்த்துவிடும் சூரத்தன்மையும் அதைத் தடுக்க முடியுமா முடியாதா? என்று பார்த்துவிட தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதை ஆச்சாரியார் உணர வேண்டுமாய் வணக்கமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
அதுமாத்திரமல்ல. இந்தப் பிரச்சினையின் மூலம் இந்த நாட்டு வாழ்க்கை முறை தமிழ் முறையா ஆரிய முறையா என்பதை ஒரு கை பார்த்து விடுவதென்றே முடிவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கனம் ஆச்சாரியார் அவர்கள் அறிய வேண்டும் என்று பிறார்த்தித்துக் கொள்ளுகிறோம்.