அநீதி எங்கே நிலவினாலும், அது,
எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தலே
எஸ்.குமாரசாமி
என்.ஆனந்த் வெங்கடேஷ். இவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. அநீதி எங்கே நிலவினாலும், அது, எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தலே என்று மார்ட்டின் லூதர் கிங் சொன்னதன் வெளிச்சத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ஒருபால் ஈர்ப்பு உடையோர் பிரச்சனையில் அநீதிக்கு முடிவு கட்ட 'உளபூர்வமாகவும்' 'இதயபூர்வமாகவும்' விரும்பினார்.
'நாம் ஒரு சமூகம் என்ற விதத்தில், அநீதியின் வடிவங்கள் தொடர்பாக, அடையாளச் சின்னங்கள் தொடர்பாக, துளைத்தெடுக்கும் கேள்விகள் கேட்டுக் கொண்டாக வேண்டும். நாம் அப்படி கேட்டுக் கொள்ளாவிட்டால், அநீதியான ஒரு சமூகத்தை வழிமரபாக பெற்றுக் கொண்டவர்களாக ஆவதோடு, அந்த அநீதியான சமூகம் உருவாகக் காரணமும் ஆவோம்'. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நல்டெஜ்சிங் ஜோஹர் வழக்கில் 06.09.2018 அன்று சொன்னபடி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கேள்விகள் எழுப்பிக் கொண்டார். உரையாடினார். விவாதித்தார். உத்தரவுகள் பிறப்பித்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் 22.03.2021 முதல் 07.06.2021 வரையிலான பயணம்
மதுரையில் பட்ட மேற்படிப்பு படிக்கும் 22 வயது பெண்ணும் பட்டப்படிப்பு படிக்கும் 20 வயது பெண்ணும் இரண்டு ஆண்டுகளாகப் பழகினார்கள். நட்பு காதலாய் மலர்ந்தது. இணையராய் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். பெற்றோரின் சங்கடமும் சமூகத்தின் கேள்விகளும் துரத்த, மதுரையில் இருந்து சென்னைக்கு, வேலை தேட, கல்வி கற்க, இணையராய் வாழ வந்தார்கள். பெண்ணுடன் பெண் லெஸ்பியன் உறவா, என்ன ஆகும் நம் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப உறவுகள், இது இயற்கைக்கு மாறான உறவல்லவா என்ற கேள்விகள் எழுப்பும் சமூகத்துடன், இந்தப் பெண்கள் தொடர்ந்த ரிட் மனு எண் 7284/2021 வழக்கில் நீதிபதி உரையாடினார். தம் உறவில் பெற்றோர் தலையீடு கூடாது, தமக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று அந்தப் பெண்கள் கேட்டார்கள்.
காவல்துறை அந்தப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று 22.03.2021 அன்று உத்தரவிட்டபோதே, ஒரேபால் விருப்ப திசை (நஹம்ங் நங்ஷ் ஞழ்ண்ங்ய்ற்ஹற்ண்ர்ய்) உள்ளவர்களிடம் சமூகம் கொண்டுள்ள சிக்கலான உறவை வழக்கு காட்டுவதாகவும், அந்தப் பெண்களின் பிரச்சனை கூருணர்வோடும் ஒத்துணர்வோடும் அணுகப்பட வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை வாய்ப்பாகக் கொண்டு, ஆண் மய்ய, ஆண் பெண் திருமண உறவு குடும்ப மய்ய, ஆண் குறி பெண் குறி ஒற்றைப் பாலுறவு மய்ய சமூகத்துடன், தாமே சமூகமாக நின்று கொண்டு உறவாடினார். அப்படி உறவாட, பால் பன்மைத்துவம் பற்றி நன்கறிந்த, அதனை அங்கீகரிக்கிற உளவியல் நிபுணர்களிடம், உடலால் ஆணாய்ப் பிறந்து, பெண்ணாய் தம்மை உணர்ந்து வளர்ந்த ஒரு பெண் மருத்துவர் மற்றும் அவரது தாயுடன் நீண்ட உரையாடலும் செறிவான கருத்துப் பரிமாற்றங்களும் நடத்தினார். அந்த உரையாடலில் சமூகத்தின் நிலையில் இருந்து தான் எழுப்பிய கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு, அந்த நிபுணரும், பெண்ணின் தாயும் தந்த விளக்கங்களை 07.06.2021 தேதிய தீர்ப்பில் அப்படியே பதிவு செய்தார்.
தமிழ்ச் சமூகத்திடம், அகம், புறம் என ஆண், பெண் காதலை, ஆண் வீரத்தை ஏற்றிப் போற்றியே வந்த தமிழ்ச் சமூகத்திடம், ஆண் பெண் இடையிலான உறவு தாண்டிய உறவுகள் பற்றி, அசாதாரண, மரபுசாரா, அணுகுமுறையில் எடுத்துச் சொல்லி இணங்க வைக்க, ஏற்க வைக்க, நீதிபதி எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவையே.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர், நாரிமன், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இருந்த, அரசியலமைப்புச் சட்ட அமர்வம், ஒருபால் உறவை குற்றமயப்படுத்தும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 15, 19, 21 ஆகியவற்றுக்குப் புறம் பானது என தீர்ப்பளித்துவிட்டது, உச்சநீதி மன்ற தீர்ப்பே இருக்கிறது, பாதுகாப்பு கொடுங்கள் என அவர் நின்றுவிடவில்லை. தனிநபர் சுதந்திரம், சகிப்புத் தன்மை, அதிகார உறவுகள், அரசியலமைப்புச் சட்ட அறம், எண்ணிக்கை சிறுபான்மையினருக்கு பன்மைத்துவத்துக்கு சுதந்திரம் வழங்கும் ஜனநாயகம் ஆகியவை பற்றிய உரையாடல் நடக்க, கூருணர்வு உருவாக, 22.03.2021 முதல் 07.06.2021 வரை அவ்வப்போது நடந்த நீதிமன்ற அமர்வங்கள், நிச்சயம் உதவின.
உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன், 06.09.2018 அன்றைய தமது தீர்ப்பின் பத்தி 98ல், தீர்ப்பு விவரங்கள் பற்றி, தீர்ப்பு பற்றி, அச்சு, தொலைக்காட்சி, இணைய ஊடகம் மூலம், ஒன்றிய அரசு பரந்து விரிந்த பரப்புரை செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசின், மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு கூருணர்வும் விழிப்புணர்வும் உருவாக்க பயிற்சி தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 141ன்படி, நீதிபதி நாரிமனின் ஆணை இந்திய ஒன்றியம் நெடுகப் பொருந்தும், அனைவரையும் கட்டுப்படுத்தும். ஆனால், தீர்ப்பு வந்து 30 மாதங்கள் ஆனபின்னும், அந்த ஆணைப்படி, அரசுகள் பொருளுள்ள நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்த குற்றமய அலட்சியம், அரசியலமைப்புச் சட்ட அறம் பிறழ்தல் என்ற பின்னணியில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உணர்ச்சித் தெறிப்புடன், இதயபூர்வமாய் அணுகி தீர்ப்பு எழுதுவதாகச் சொன்னதில் வியப்பேதும் இல்லை.
அரசு துறைகள், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் என 17 நிறுவனங்களை வழக்கில் தரப்பினராக்கி, ஒருபால் உணர்வு பற்றி கூருணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்த, அவர்கள் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்க்கை தொடர்பாக எட்டு உத்தரவுகளும் பிறப்பித்துள்ளார்.
தீர்ப்பில் பத்தி 17ல், திருமணம் தாண்டிய மணஉறவுக்கு, ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை, சமூக அங்கீகாரம் இல்லை என நீதிபதி கவலைப்படுகிறார். சமூக அங்கீகாரம் பற்றிய அவரது கவலை நியாயமானதே. திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்வதும் வாழ்வுரிமையின் ஒரு பகுதியே எனவும் அதில் சட்ட விரோதம் எதுவும் இல்லை எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்லிவிட்டன. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், மண உறவின்றி இணைந்து வாழும் பெண்களுக்கு சில பாதுகாப்புகளும் உரிமைகளும் வழங்குகிறது.
ஒருபால் உறவுக்கு எதிரான நிலை எடுப்பது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 14, 15, 19, 21 ஆகியவற்றுக்கு விரோதமானது என அறிவித்த உச்சநீதிமன்றம், ஒருபால் உறவு, அந்தரங்க உரிமையின், கவுரவ உரிமையின், உயிர் வாழும் உரிமையின் பிரிக்க முடியாத பகுதி எனப் பிரகடனம் செய்துள்ளது. ஆகவே, மிகப் பெரிய தேவை சமூக அங்கீகாரமே.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முயற்சிகள், சமூக அங்கீகாரம் நோக்கியவையே. அவரது முயற்சிகளுக்கு வலு சேர்க்க, ஒருபால் உறவை இயற்கைக்கு மாறான உறவு என்று குற்றமயப்படுத்தும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377, மண உறவில் உள்ள ஒரு பெண்ணுடன் ஓர் ஆண் பாலுறவு கொள்வது (கணவன் சம்மதமோ, ரகசிய ஒத்துழைப்போ இல்லாமல்) அடல்டரி என்ற தண்டனைக்குரிய குற்றம் எனச் சொல்லும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 ஆகியவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை என விரிவாக எடுத்துரைத்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகள் பற்றி சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. காதல், கர்ப்பத் தடை, ஆண்மை அழிதல் பற்றிய பெரியார் கருத்துகளையும் காண வேண்டியுள்ளது. தனிநபர் உரிமைகளில் கம்யூனிஸ்டுகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்ற கேள்விக்கும் விடை சொல்ல வேண்டியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377
377 - இயற்கைக்கு எதிரான குற்றங்கள்: எந்த ஓர் ஆணோடும் பெண்ணோடும் விலங்கோடும் எவர் ஒருவர் இயற்கையின் ஒழுங்கை மீறி தாமாக உடலுறவு கொள்கி றாரோ, அவருக்கு ஆயுள் தண்டனை, பத்து வருடங்கள் வரை தண்டனை என்பதோடு அபராதமும் விதிக்கலாம்.
377 பிரிவோ அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்த ஒரு பிரிவோ, இயற்கைக்கு விரோதமான உறவுகள் எவை என விவரிக்கவில்லை.
நடைமுறையில் ஆணும் ஆணும் உறவு கொள்வதையும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதையும் இந்தச் சட்டப் பிரிவு காலா காலமாய் குற்றமயப்படுத்தியது.
ரிட் மனு (கிரிமினல்) எண் 76/2016ல் 'பாலியல் விருப்ப திசை உரிமை', 'பாலியல் தன் ஆளுமை உரிமை', 'பாலியல் இணையர் தேர்வு செய்யும் உரிமை' ஆகியவை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்கும் உயிர் வாழும் உரிமையின் பகுதியே என்று அறிவிக்கு மாறும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்குமாறும் கோரப்பட்டது. 06.09.2018 தீர்ப்பில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கனிவல்கர் 166 பக்கங்களும், நாரிமன் 96 பக்கங்களும், சந்திரசூட் 181 பக்கங்களும் இந்து மல் ஹோத்ரா 52 பக்கங்களும் கொண்ட தீர்ப்பை எழுதி மனுவை அனுமதித்தனர்.
தீர்ப்பில் இருந்து
'நான் நானாகவே இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே என்னை எடுத்துக் கொள்ளுங்கள்'. இது எமது உரிமை, என ஒருபால் ஈர்ப்பு உடையவர்கள் கோரினார்கள்.
ஒருபால் உறவை குற்றமயப்படுத்தும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 உறைய வைக்கும் விளைவு கொண்டது. பாலியல் விருப்ப திசை, தேர்வு உரிமை முடங்கிப் போகிறது. பாலியல் விருப்ப திசையை வெளிப்படுத்தும் ஆசை, அச்சத்தால் விலங்கிடப்பட்டு அரித்துப் போகிறது. சதையும் எலும்பும் கொண்ட உடல் கூண்டில் அடைக்கப்படுகிறது. அச்ச உணர்வு படிப்படியாக உணர்வற்ற எலும்புக் கூடாக, உடலை மாற்றி விடுகிறது.
ஒரு பால் உறவு ஒரு மனநோய் அல்ல. அது அறம் பிறழ்வதுமல்ல. அது மக்களின் ஒரு சிறு பிரிவினர் தமது மானுட அன்பை, விருப்பத் திசைத் தேர்வை வெளிப்படுத்துவதேயாகும். ஒருபால் உறவு ஒரு தேர்வு கூட அல்ல. ஒரு பால் திசை தேர்வு குழந்தைப் பருவத்திலேயே, பிறப்பதற்கு முன்பு கூட உருவாகிவிடுவதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
அரசியலமைப்புச் சட்ட அறம், தன் குடையின் கீழ் பல நற்பண்புகளை அரவணைத்துக் கொள்கிறது. பன்மைத்துவ சமூகம், அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்பவை, அவற்றில் முதன்மையானவையாகும். அரசியலமைப்புச் சட்ட அறத்தை, சமூக ஒழுக்கத்திற்கு பலி தர முடியாது,
150 ஆண்டுகளுக்கு மேல், 200 பேருக்கும் குறைவானவர்களின் மீது மட்டுமே பிரிவு 377ன் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளபோது, பாதிக்கப்படக் கூடியோர் மிகக் குறைந்த எண் ணிக்கையிலானவர்களாக இருக்கும்போது, இந்த பிரச்சனையை அரசியலமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏன் கருத வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அறிவித்துக் கொண்ட, அறிவித்துக் கொள்ளாத, பால் பன்மைத்துவத்தினர் 7% முதல் 8% வரை உள்ளனர். அது போக, அடிப்படை உரிமைகள் மீறல் என்ற பிரச்சனை வரும்போது, பாதிக்கப்படக் கூடியோர் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. அது ஓர் எண்ணின் இடதுபக்கம் போடப்படும் பூஜ்ஜியங்களுக்கு சமமானது.
பிரபல எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் ஒருபால் உறவுக்காக தண்டிக்கப்பட்டார். அவரோடு ஒருபால் உறவு கொண்டிருந்த லார்ட் டக்ளஸ், இந்த உறவை, 'தன் பெயரை பேசத் துணியாத காதல்' என்று அழைத்தார்.
பெரும்பான்மையினரின் ஒற்றை அறத்தை சமூக அறமாக்கி, பல்வகைப்பட்ட சிறுபான்மையினரை மற்றமையாக்கி (Othering) களங்கப்படுத்துவதை, ஒதுக்குவதை, தண்டிப்பதை அரசியலமைப்புச்சட்ட அறம் ஏற்காது.
பார்த்த மாத்திரத்தில் பிரிவு 377 சில செயல்களை, நடத்தையை மட்டுமே குற்றமயப்படுத்துவதாக தோன்றும். ஆனால், சம்மதித்து ஒருபால் உறவில் ஈடுபடும் ஒரு மக்கள் பிரிவினரை அது, குற்றமயப்படுத்துகிறது. பாலியல் வன்முறை, குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்ற பாலியல் குற்றங்களோடு, சம்மதத்துடன் கூடிய ஒருபால் உறவும் பாலியல் குற்றமாக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற A Suitable Boy என்ற நாவலை எழுதிய விக்ரம் சேத் ஒருபால் ஈர்ப்பாளர். அவரது தாய் லெய்லா சேத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். டெல்லி உயர்நீதிமன்றம் பிரிவு 377 அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பளித்த பிறகு, அந்த தீர்ப்பை முதல் சுற்றில் உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஒருபால் உறவை மீண்டும் குற்றமயமாக்கியது. அப்போது லெய்லா சேத்தும், விக்ரம் சேத்தும் எழுதிய விசயங்களை நீதிபதி சந்திரசூட் மேற்கோள் காட்டுகிறார்.
'காதலே வாழ்வை பொருளுள்ளதாக்குகிறது, காதலிக்கும் உரிமையே தன்னை மனித ராக்கும் உரிமையாகும். இந்த உரிமையின் வெளிப்பாட்டை குற்றமயமாக்குவது, ஆழமான விதத்தில் குரூரமானதும் மானுடத் தன்மை இல்லாததுமாகும். இந்த குற்றமயப்படுத்த லுக்கு விட்டுக்கொடுப்பது, மோசமான விதத்தில் மறுகுற்றமயப்படுத்துவது, ஆகிய செயல்கள், கருணைக்கு நேர் எதிரானவையாகும். நாடாளுமன்ற பெரும்பான்மையிடம் அளவு கடந்த மதிப்பு காட்டுவது, அதுவும் அடிப்படை உரிமைகள் விசயத்தில் அப்படி செய்வது, நீதித்துறையின் துணிச்சலின்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனெனில், சந்தேகத்திற்கிடமின்றி, நமது அரசியலமைப்புச் சட்ட முறையில், நீதித்துறையே இறுதி கருத்தை சொல்லும் நிலையில் உள்ளது' - லெய்லா சேத்
நீதியை நிராகரிப்பது, பலவீனமானோரின் உரிமைகளை நீக்க கோருவது, காதலை எள்ளி நகையாடுவது, தவறான காரணங்களுக்காகவும், காரணமேயில்லாமலும் உடல், மனம், இதயம் ஆகியவற்றின் பிணைப்பை பிய்த்து எறிவது. இதுவே, இதுவே உண்மையில் இயற்கைக்கு விரோதமான குற்றமாகும் - விக்ரம் சேத்
ஆண் பெண் பாலுறவு சட்டப்பூர்வமானது, ஆனால் ஒருபாலுறவு சட்டவிரோதமானது என்பது, சமத்துவ கோட்பாட்டிற்கு விரோதமானதாகும்.
பெண்ணின் சம்மதத்துடன் பிறப்புறுப்பு உள்நுழையும் (ஆசனவாய், வாய்வழி) உள்ளிட்ட செயல், 2013 திருத்தச் சட்டப்படி பாலியல் வன்முறை ஆகாது. அப்படியிருக்க, சம்மதத்தோடு கூடிய ஒருபாலினத்தவரின் உள்நுழையும் பாலுறவு குற்றம் என்பது சமத்துவக் கோட்பாட்டிற்கு விரோதமானது.
இயற்கைக்கு விரோதமானது என்பதை வரையறுக்காமல், அதுபற்றி முடிவெடுத்து வழக்குப் போடும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கியுள்ளது, மனம் போன போக்கிலானதாகும். இந்த வகையிலும் பிரிவு 377 அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14க்கு விரோதமானது ஆகும்,
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15, பால் அடிப்படையில் பாகுபடுத்தல் கூடாது எனச் சொல்லும்போது, பால் திசை விருப்பப் பாகுபாடும் பால் பாகுபாடே ஆகும். ஒருபால் ஈர்ப்புடையவரை பாரபட்ச பாகுபடுத்தலுக்கு உள்ளாக்குவது, அரசியலமைப்பு சட்ட பிரிவு 15க்கு விரோதமானது.
உயிர் வாழும் உரிமையென்பது, தன் ஆளுமை உரிமையையும், அந்தரங்க உரிமையையும் உள்ளடக்கியதாகும். கவுரவமும், அடையாளமும் ஒவ்வொருவரின் பிரிக்க முடியாத பகுதிகள் என்பதால், அவை உயிர் வாழும் உரிமையின் ஒரு பகுதியே ஆகும். அந்த வகையில் தம் இணையரை தம் பாலியல் விருப்பத் திசையை தேர்வு செய்யும் உரிமையை ஒருபால் ஈர்ப்பினருக்கு மறுப்பது, அரசியலமைப்பு சட்ட பிரிவு 21க்கு விரோதமானதாகும்.
வயது வந்த இருவர் எந்த பால் விருப்பத் திசை கொண்டவராக இருந்தாலும், தன் ஆளுமையோடு தம் இணைவை வெளிப்படுத்த, அரசியலமைப்பு சட்ட பிரிவு 19படி உரிமை உண்டு என்று நீதிபதி நாரிமன் சொல்கிறார். அந்த உறவை இயற்கைக்கு மாறானது என சொல்வது நியாயமான கட்டுப்பாடு அல்ல என்கிறார்.
ஆக ஒருபால் ஈர்ப்பு ஒரு மனநோய், அது சமூகத்தின் அச்சாணியான திருமணம், குடும்பம் என்ற நிறுவனங்களின் எதிரி, அது இயற் கைக்கு விரோதமானது என, இரு மனிதர்களுக்கிடையிலான அன்பில், காதலில், நேசத்தில் சட்டம் நுழைந்து, நீங்கள் இருவரும் ஆண்கள், நீங்கள் இருவரும் பெண்கள், அதனால் உங்கள் உறவு குற்றமென, அரசியலமைப்புச் சட்டம் உருவான பிறகும், 68 ஆண்டுகளாக சொல்லி வந்தது. 2018ல்தான் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 377, அரசியலமைப்பு சட்ட பிரிவுகள் 14, 15, 19, 21 ஆகியவற்றிற்கு புறம்பானது என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பிரிவு 497, திருமணத்திற்கெதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது. மணஉறவில் உள்ள ஒரு பெண்ணோடு மாற்று ஆண் உறவு கொள்வது அடல்டெரி என்ற குற்றமென ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. பிரிவு 377 போல் 497ம் விசித்திரமானதுதான். அது இவ்வளவு காலம் எப்படி பிழைத்திருந்தது என்பது வியப்புக்குரியது.
497படி, அ. திருமணமான பெண் தன் கணவர் அல்லாத ஓர் ஆணுடன் பாலுறவு கொண்டிருக்க வேண்டும்.
ஆ. அவ்வாறு உறவு கொண்ட ஆணிற்கு அந்தப் பெண் வேறொருவரின் மனைவி என தெரிந்திருக்க வேண்டும். அல்லது அப்படி அறிந்திருக்க காரணம் இருக்க வேண்டும்.
இ. அந்த உறவு வன்முறையின் அடிப்படையில் இல்லாமல், அந்த பெண்ணின் சம்மதத்துடன் இருக்க வேண்டும்.
ஈ. மணமான பெண்ணுடன் பாலுறவு அந்தப் பெண்ணின் கணவருடைய ஒப்புதல் இல்லாமலோ, ரகசிய ஒத்துழைப்பு இல்லாமலோ நடந்திருக்க வேண்டும்.
இந்த சட்டப் பிரிவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என, ரிட் மனு (கிரிமினல்) 194/2017ல் 27.09.2018 அன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர், நாரிமன், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்ற அரசியல் அமைப்புச் சட்ட அமர்வம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிவு 497ல் உள்ள முரண்களை நீதிபதி இந்து மல்ஹோத்ரா பட்டியலிடுகிறார்.
அ. அடல்டரி என்ற குற்றத்திற்கு அடுத்தவர் மனைவியுடன் உறவு கொண்ட ஆணை மட்டுமே தண்டிக்க முடியும். ஆணோடு சேர்ந்து, உறவில் அவருக்கு இணையாக குற்றம் செய்த பெண்ணை ஒரு கூட்டாளி என்ற பெயரில் கூட தண்டிக்க முடியாது. அப்படி ஓர் உறவில் ஈடுபட்ட பெண், பெண் பாலினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவர் மீது அடல்டரி என குற்றம் சுமத்த முடியாது.
ஆ. அத்தகைய பாலியல் உறவில் ஈடுபட்ட மணமான பெண்ணின் கணவன் மட்டுமே, குற்றவியல் நடவடிக்கையை தொடர முடியும். அவ்வாறு அடுத்தவர் மனைவியோடு உறவு கொண்ட ஆணின் மனைவி இருந்தால், அவரால் தன் கணவர் மீதோ, அவர் உறவு கொண்ட பெண் மீதோ குற்றவியல் நடவடிக்கை தொடர முடியாது.
இ. இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 497 உடன் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 198(2)அய் இணைத்து காணும்போது, உறவில் ஈடுபட்ட பெண்ணை மனைவியாக கொண்ட கணவனே பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆவார். அவரே அடல்டரி என நடவடிக்கை தொடர முடியும்.
ஈ. திருமணமான ஓர் ஆண், மணமாகாத, மணமுறிவு பெற்ற ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் அது அடல்டரி ஆகாது.
அடல்டரி பற்றி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர்
அடல்டரி பொறுத்தவரை, சட்டம் இரு தரப்பினரும் திருமண உறவு நெடுக ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என சொல்வதோடு, அடுத்தவர் மனைவியோடு உறவு கொண்டவரை குற்றவாளியாக்குகிறது. சட்டத்தின் இந்த எதிர்பார்ப்பு, அந்தரங் கத்தின் சாரத்திற்குள் நுழையும் ஒரு கட்டளையாகும். அதுபோக இந்த கட்டளை பாரபட்சமானதுமாகும். இந்த கட்டளை சமூக அறம் சார்ந்த கட்டளையே ஆகும். இது மண உறவில் உள்ள இரு தனிநபர்கள் பிரிய ஒரு காரணமாக அமைய முடியுமே தவிர, இதற்காக எவரையும் குற்றவாளியாக்க, பொருந்தாததாகும்.
தரப்பினர், தம் உறவில் உள்ள அறம் சார்ந்த கடப்பாட்டை அல்லது பொறுப்புறுதியை இழந்த பிறகு, திருமணத்தில் ஓட்டை விழுகிறது. அதன் பின் சூழலை எப்படிக் கையாள்வது என தரப்பினரே முடிவு செய்ய முடியும். பொறுத்துக் கொண்டு செல்வதா அல்லது மணமுறிவுக்கு செல்வதா என்பது அவரவரின் முடிவாகும். அவர்களில் ஒருவருக்கோ, உறவில் நுழைந்த மூன்றாம் தரப்பினருக்கோ தண்டனை கொடுத்து திருமண உறவை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கைக்கு சில சூழல்களில் அடல்டரி காரணமாக அமையாது. மகிழ்ச்சியற்ற மணவாழ்வின் விளைவாகவும் அடல்டரி அமையலாம்.
நீதிபதி நாரிமன் தீர்ப்பிலிருந்து
பெண், கணவரின் உரிமை பொருள், அந்த உரிமை பொருளைப் பயன்படுத்தும் உரிமையை (லைசன்ஸ்), கணவன் நேரடி ஒப்புதலாகவோ, மறைமுக ஒத்துழைப்பாகவோ தர முடியும் என பிரிவு 497 சொல்கிறது.
திருமண உறவு தழைக்க, அதனை காக்க இந்த சட்டப்பிரிவு உள்ளது என்று சொல்லப்படுகிறது. திருமணமான ஒரு மனிதன், மணமாகாத, மணமுறிவு பெற்ற பெண்ணுடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல என, இந்த சட்டப்பிரிவு சொல்லும்போது, திருமணம் தொடர்பான மேலே சொல்லப்பட்டுள்ள வாதம் தகர்ந்து விடுகிறது. இந்த சட்டப் பிரிவு மனைவி மீதான சொத்துரிமையை காக்க மட்டுமே உள்ளது.
நீதிபதி சந்திரசூட் தீர்ப்பில் இருந்து
மானுட பாலியல் விருப்ப திசையில், அடையாளத்தின் சாரமான அம்சம். பாலியல் விருப்ப திசை தேர்வுகள், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் மானுட விருப்பத்தின் பிரதிபலிப்பே ஆகும்.
பாலியல் விருப்ப திசையை மானுட ஆளுமையில் இருந்து பிரித்து நிறுத்த முடியாது. மனிதராய் இருப்பதற்கு, மகிழ்ச்சி தேடுகையில், பாலியல் விருப்பங்களை நிறைவு செய்யும் ஆற்றல் அவசியமானது. பாலியல் விருப்ப திசை தன் ஆளுமை, கவுரவமான மானுட இருத்தலின் உள்ளார்ந்த விசயமாகும்.
திருமணத்தில் பெண் விசுவாசமாய் இருக்க வேண்டும் என்று கோருவதில், பெண்ணுக்கு திருமணம் ஆகும்போது, அவள் தன் பாலியல் முகாமையை விட்டுக் கொடுக்கிறாள் என்பது உள்ளார்ந்த விசயமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு திருமணமாகும்போது, தன் கணவனோடு பாலுறவுக்கு முன்னரே சம்மதிக்கிறாள், திருமணத்துக்கு வெளியே, கணவன் அனுமதி இல்லாமல் உறவு கொள்ள மாட்டேன் என சம்மதிக்கிறாள் என்பது, சுதந்திரத்துக்கும் கவுரவத்துக்கும் விரோதமானது. அரசியலமைப்புச் சட்ட முறையில், இந்த கருத்துக்கு இடமே கிடையாது. பாலியல் தன் ஆளுமை ஒவ்வொரு தனி நபரின் கவுரவத்தின் மீற முடியாத சாரமாகும்.
திருமணத்துக்கு முன்பும் திருமண உறவிலும் பெண்கள் பரிசுத்தமாயும் விசுவாசமாயும் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெண்களின் பாலியல் முகாமையை முடக்கும்போது, பிரிவு 497, சமூகரீதியில் பாகுபடுத்தும், பால் அடிப்படையிலான தர அளவைகளை அங்கீகரிக்கிறது.
மானுட இருத்தலின் யதார்த்தங்கள் மிகவும் சிக்கலானவை. அனைத்தையும், மூடப்பட்ட சரி, தவறு வகையினங்களில் அடைக்க முடியாது. தவறு என கருதப்படும் விசயங்களை குற்றவியல் சட்டங்கள் கொண்டு தண்டிக்க முடியாது. குற்றச் செயல் ஆகாத எல்லா செயல்களும், அறம் சார்ந்து நியாயம் இல்லாதவையாக இருக்கலாம். அதேபோல, பொருந்தாத நடவடிக்கைகளை எல்லாம் குற்ற நடவடிக்கை தளத்துக்கு உயர்த்த முடியாது.
பாலியல் அந்தரங்கம், அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட இயற்கையான உரிமை என இந்த நீதிமன்றம் கருதுகிறது. பெண்ணின் பாலியல் சுதந்திரத்துக்கு தளை போட்டு, கருத்தொற்றுமை அடிப்படையிலான உறவுகளையும் குற்றமயமாக்குவது, இந்த உரிமையை மறுப்பதாகும். அரசியலமைப்புச் சட்ட அறத்தோடு முரண்படுகிற, திருமணம் பற்றிய ஆணாதிக்க கருத்தாக்கத்தை, சட்டத்தின் வலிமை கொண்டு, பாதுகாக்க பயன்படுத்தும்போது, பிரிவு 497 திருமணமான பெண்ணின் முகாமையை, அடையாளத்தை பறிக்கிறது.
ஒரு பெண்ணியவாதிபோல் பார்க்கும் போது என்ற நூலை எழுதும்போது, நிவேதிதா மேனன் எழுதியதை சந்திரசூட் மேற்கோள் காட்டுகிறார்: 'திருமணத்தின் சட்டபூர்வ சம்பிரதாய நிரந்தரத் தன்மையோடு பெண்களின் பாலியல் விருப்ப இயல்பு போக்குகள் பிணைக்கப்பட்ட நாளில், விசுவாசமின்மை பிறந்தது; சொத்து மற்றும் வாரிசுகள் மீது கட்டுப்பாட்டை நிறுவும் போக்கில், பெண்கள் விசுவாச சங்கிலிகளால் கட்டப்பட்டனர்'.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அய்ந்து நீதிபதிகளும் சொன்னார்கள். (377, 497 பிரிவுகள் தொடர்பான தீர்ப்புகளை எழுதும்போது, தீபக் மிஸ்ரா, இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார்).
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377 பற்றி எழுதும்போது, இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 பற்றியும் ஏன் எழுத வேண்டும்? சமூகத்தின் கடைசி அலகாக, அடிப்படை அலகாக, சொத்துரிமை குடும்பம் நிறுத்தப்படுகிறது. மந்திரக் கயிறுகளால் கட்டப்பட்ட, மந்திர வலையாலான குடும்பம், திருமணம் என்ற நிறுவனம் மூலம் மானுட மறுஉற்பத்தியில், பிள்ளை பெறுதலில் ஈடுபடுகிறது. இதுவே இயற்கையானது. இந்த இயற்கைக்கு மாறானதுதான் இந்திய தண் டனை சட்டப் பிரிவு 377 தண்டிக்கும் செயல்கள். இந்த இயற்கையான குடும்பம் காக்கவே இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497 உள்ளது.
நமக்கு ஓர் ஆதங்கம். இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 377 மற்றும் 497 ஆகியவற்றை நீக்க, அந்தரங்க உரிமை காக்க, முற்போக்கான தீர்ப்புகள் எழுதும் உள்ளாற்றலை வெளிப்படுத்திய உச்சநீதிமன்றம், சபரிமலை தீர்ப்பில் ஏன் தயங்கி தடுமாறுகிறது? பாப்ரி மசூதி வழக்கில் ஏன் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை? அரச நீதிமன்றம் என்ற அவப்பெயருக்கு ஏன் ஆளானது?
பெரியாரே பெரியார்
நமது தமிழ் மொழி இனிதானது. இது இன்பத் தமிழ். அது பெரியோரெல்லாம் பெரியருமல்லர், சிறியோரெல்லாம் சிறியமல்லர் என்கிறது. பெரியார்தான் பெரியார் என்ற சொல்லுக்கு இலக்கணம் என 01.01.1942 அன்று அவர் எழுதிய முகவுரையுடன் வெளியிடப்பட்ட பெண் ஏன் அடிமையானாள் நூல் புலப்படுத்தும். காதல், கர்ப்பப்பை, ஆண்மை அழிதல் பற்றி 1942ல் பெரியார் கொண்டிருந்த நவீன முற்போக்கு பார்வை பெருவியப்பு தருகிறது.
காதல் பற்றி பெரியார்
ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப்பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.
கர்ப்பத்தடை பற்றி பெரியார்
பெண்கள் சுயேட்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதமாய் இருக்கிறது. சொத்தும் வருவாயும் தொழிலும் இல்லாததால் பெண்களும், குழந்தைகளை வளர்க்க மற்றவர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்தே தீர வேண்டியுள்ளது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்த வேண்டும் என்கிறோம். அன்றியும் பெண்கள் வியாதிஸ்தர்கள் ஆவதற்கும் சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் இந்த கர்ப்பம் என்பதே மூல காரணமாயிருக்கின்றது.
தவிர பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால், உலகம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்?
ஆண்மை அழிதல் பற்றி பெரியார்
பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது, பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதியே.
கம்யூனிஸ்டுகளுக்கென்ன புது அக்கறை?
இதற்கெல்லாம் எப்போதோ பதில் சொல்லி விட்டோம், தெரியாமல் கேள்வி கேட்கிறீர்கள் என நிச்சயமாக, பதில் சொல்லப் போவதில்லை. அப்படி பதில் சொல்லவும் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், துவக்கத்திலுள்ள முதலாளிகளும், பாட்டாளி களும் என்ற அத்தியாயம், 'சமூக வரலாறு' பற்றி பேசியே துவங்குகிறது. 'சமூகத்தில்' பொருளாதாரமும் அரசியலும் செயல்படுகின்றன என்பதே கம்யூனிஸ்ட் புரிதலாகும். பன்மைத்துவம், சாதி, மொழி, இனம், பால், பால் திசை விருப்பம், என அடையாளம் தொடர்பான அனைத்துக் கரிசனங்களும், சமூகப் பிரச்சனைகளும், கம்யூனிஸ்டுகளின் அக்கறைக்குரியவையே ஆகும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்களும் என்ற அத்தியாயம் 'ஒவ்வொருவரும் தங்கு தடையின்றி சுதந்திரமாக வளர்வதையே, எல்லோரும் சுதந்திரமாக வளர்வதற்கான நிபந்தனையாகக் கொண்ட மக்கள் கூட்டு ஒன்று எழுந்துவிடும்' என முடிகிறது.
'ஒவ்வொருவரின் வளர்ச்சி, தங்குதடையற்ற வளர்ச்சி, சுதந்திரமான வளர்ச்சி', 'பல நூறு பூக்கள் மலரட்டும், பல நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்', 'அனைத்து அதிகார உறவுகளும் ஒழியட்டும்' என உரக்கச் சொல்வோம்.
கம்யூனிஸ்ட் கட்சி விரும்பும் இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிசம் செயல்படுத்தும் ஜனநாயகத்தில், கற்பனை வளம், படைப்பாற்றல், பல வண்ணங்கள், பன்மைத்துவம், தனிநபர் உரிமைகள், வளர்ச்சி, நிச்சயமாய் இருக்கும்.
அனைத்துப் பிரிவு மக்களுக்கும், குறிப்பாக அனைத்து வகைப்பட்ட சிறுபான்மையினருக்கும் அச்சமற்ற சுதந்திரம், தடையற்ற வளர்ச்சி இருக்கவேண்டும். சமூகம் தன் ஆளுமையும், உரிமைகளும் கொண்ட, சக மனிதரை, உழைப்பை நேசிக்கிற, மதிக்கிற, குடிமக்கள் கொண்டதாக இருக்கும். இவையே கம்யூ னிஸ்ட் இலட்சியங்கள்.
தனிமனித படைப்பாற்றலை, வளர்ச்சியை, உரிமைகளை, ஜனநாயகத்தை, முதலாளித்துவம்தான் முடக்கிப்போட்டுள்ளது. மகிழ்ச்சி நிறைந்த மானுட வளர்ச்சியே கம்யூனிஸ்ட் இலட்சியமாகும்.