தலைநகர் மண்டல தொழிலாளர்களுடன்
திருபெரும்புதூரில் மூன்று நாட்கள்
சான்மினா சங்க கிளைத் தலைவர் தோழர் நித்தியானந்தம் திருமணம் திருமால்பூரில் 21.06.2021 அன்று காலை நடைபெற்றது. திருமணத்திற்கு தோழர்கள் குமாரசாமி, பாரதி, ராஜகுரு, சுரேஷ், ஜேம்ஸ், ராஜேஷ், தினகர், பாலாஜி, சதீஷ் சென்றிருந்தோம்.
திருபெரும்புதூர் அலுவலகத்திற்கு 9:30 மணி வாக்கில் திரும்பினோம். அன்று மேக்னா, மற்றும் மதர்சன் தொழிலாளர்களோடு சந்திப்பு நடந்தது.
மேக்னா நிறுவனத்தில் சங்கத்தில் இல்லாத 14 பேருடன் நிர்வாகம் பேசுவதாகவும், அய்ந்து வருடத்திற்கு நிர்வாகம் விரும்பும் ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இந்த முயற்சிகள், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை தொழிலாளர் மத்தியில் அம்பலப்படுத்தி உள்ளதாகவும் மேக்னா தொழிலாளர்கள் சொன்னார்கள். டெபுடேஷன் பிரச்சனை, சங்கம் துவங்கிய உடன் 5 பேர் மீது ஏவப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் முடிந்து விட்டதாகவும், சமரச அலுவலர் முன் விசாரணை முடிவு அறிக்கைகளைத் தாக்கல் செய்து இறுதி நடவடிக்கைகள் தொடர்பாக அவரது ஆலோசனையை பெறுவது, இனிதான் நடக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தனர். சம்பள உயர்வு உள்ளிட்ட தொழில் தகராறுகளை விரைந்து நடத்த வேண்டும், சங்க அங்கீகாரம் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை வேண்டும் என தெரிவித்தனர்.
மதர்சன் தோழர்கள், சம்பள உயர்வு வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளதில் அனைவருக்கும் மகிழ்ச்சி என தெரிவித்தனர். சங்க முன்னணிகள் வேலை நீக்க வழக்கை, கொரோனா மூன்றாவது அலைக்கு முன்பு முடிப்பது நல்லது எனத் தெரிவித்தனர்.
ஃபோர்ட் தோழர்கள் தொழிற்சாலை வாயிலில் முழக்கம் எழுப்பியது தொடர்பான விசயத்தை 21.06.2021, 22.06.2021 தேதிகளில் தொலைபேசி மூலம் விவாதித்துக் கொண்டனர். 21.06.2021 தொழிலாளர் துறை ஆணையர் இருக்கிறாரா என்று விசாரித்து அறிந்த பிறகு, தோழர்கள் குமாரசாமி, ராஜகுரு அவரை சென்று சந்தித்தனர். மேக்னா டெபுடேஷன், தொழில் தகராறு பற்றி பேசினர். மதர்சன் வழக்கை விரைந்து நடத்த ஒப்புக்கொண்டார். வொர்க்ஸ் கமிட்டி விஷயத்தில், சட்டப்படி நடக்குமாறு நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வ ஆலோசனை தருவதாக சொன்னார்.
அன்று மாலை மதர்சன் சம்பள உயர்வு, தொழிற்தகராறுக்கான தயாரிப்புகள் விவாதிக்கப்பட்டன. பிராந்தியம் மற்றும் தொழில் அடிப்படையில்தான் நீதிமன்றங்கள் சம்பள உயர்வு வழக்குகளை முடிவு செய்யும். இந்த பிராந்தியத்தில் மதர்சனோடு ஒப்பிடக்கூடிய தொழிற்சாலைகள், அனில் ஆட்டோமோடிவ் மற்றும் பின்ஸ்டார் என்பதால், அங்குள்ளவர்களின் சம்பள ரசீதுகளை பெற வேண்டும், கல்வித் தகுதி அனுபவம் என ஒப்பிடக்கூடிய விஷயத்தில் சம்பள விவரங்களை தயாரிக்க வேண்டும், திருபெரும்புதூரில் வீட்டு வாடகை விவரங்கள், தையற்கூலி, துணி துவைத்து இஸ்திரி போட கட்டணம் ஆகியவற்றை விசாரித்து அறிய வேண்டும், இவற்றின் அடிப்படையில் வழக்கில் க்ளெய்ம் ஸ்டேட்மென்ட் தாக்கல் செய்யலாம் என முடிவானது.
கொரோனா வடிந்த பிறகு மதர்சன் மேக்னா என இரண்டு தொழிற்சாலைகளிலும் பொதுப் பேரவை கூட்ட முடிவானது. மேக்னா தொழிலாளர்கள் மத்தியில், நீட் தொடர்பான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை படிக்கப்பட்டது.
22.6.2021 அன்று ஷ்விங் ஸ்டெட்டர் நிறுவன சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். கொரோனாவை எதிர்கொண்ட விதம், கடந்த கால நடப்பு, தற்போதைய நிலை, ஜெர்மானியப் பின்னணி, சந்தை நிலை பற்றிய எல்லாம் விவாதித்து கேட்டறியப்பட்டது. ஒருமைப்பாடு மன்ற நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக சொல்லிச் சென்றார்கள்.
ஹ÷ண்டாய் பயிற்சித் தொழிலாளர்கள் காலை வந்தார்கள். 350 பேரை ஜ÷லை இரண்டாம் வாரத்திற்குள் நிறுத்தி விட வாய்ப்பு உண்டு என்றார்கள். அவர்கள் அடுத்து செய்ய வேண்டியது பற்றி யோசித்துள்ளனர்.
22.06.2021 அன்று டேய்ம்லர், பின்ஸ்டார், நிப்கோ தோழர்கள் சம்பள உயர்வு கோரிக்கை பற்றி கலந்து பேசினர்கள். நிப்கோவில் அடுத்து பேச்சுவார்த்தை விரைந்து நடக்கும் எனத் தெரிவித்தனர். கொரோனா விடுப்பு மறுப்பு பற்றி விவாதிக்கப்பட்டு கடிதம் தயாரிக்கப்பட்டது. பின்ஸ்டாரில் ஒப்பந்தத்தை ஏகப்பெரும்பான்மை தொழிலாளர்கள் ஏற்கும் போது, ஒரு சிறு பகுதி ஏற்க மறுக்க முடியுமா, தனித்தனியாக ஒவ்வொரு தொழிலாளியிடம் ஒப்பந்தம் போடுமாறு நிர்வாகம் கேட்டது சரியா, முடிந்து போன வருட போனஸ் பிரச்சனையை இந்த ஒப்பந்தத்தில் எவ்வாறு கையாள்வது போன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.
டேய்ம்லரில் நிர்வாகக் கோரிக்கைகளான, டைம் அண்டு மோஷன் ஸ்டடி, உற்பத்தித் திறன் போன்ற விஷயங்களை முதலில் நிர்வாகம் பேசச் சொல்வது பற்றி விவாதிக்கப்பட்டது. அசோக் லேலண்ட், டாடா தொடர்பான விவரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, ஒப்பிட்டு பேசுமாறு ஆலோசனை சொல்லப்பட்டது.
23.06.2021 அன்று ஹ÷ண்டாய் சப்ளை நிறுவனத்தின் இரண்டு பேர், கமிட்டி எண்ணிக்கை, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி விவாதித்தனர். அன்று ஹ÷ண்டாய் முன்னணி தோழர் ஒருவருடன் ஒரு சந்திப்பு நடந்தது. ஹுண்டாயில் ஒரு கோடி கார் தயாராவதையொட்டி ஒரு தொழிலாளிக்கு ரூபாய் ஒரு லட்சம் வேண்டும், 25ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு கார் வேண்டும், கொரோனாவில் இறந்தவரின் வாரிசுக்கு வேலை வேண்டும் என்ற கோரிக்கைகளையும் சங்கம் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளோடு பேசுவதாக தெரிவித்தனர்.
ஹுண்டாய் ஒரு கோடி கார் தயாராகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் போது, 2002 முதல் இதுவரை 20,000 பயிற்சி தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பார்கள் போல் தெரிகிறது. ஒருமைப்பாடு மன்றம் இவர்களின் கதையை ஒரு பிரசுரமாக கொண்டு வருவது நல்லது.
23.06.2021 மாலை சான்மினா நிர்வாக குழு கூட்டம் நடந்தது. ஆயுள் காப்பீடு, திடீர் இறப்பு நிவாரணம், சம்பளத்தை விடுப்பில் பிடித்தம் செய்வது, கட்டாய பதவி உயர்வு 2020ஆம் ஆண்டு சம்பள பிடித்தம், வழக்குகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. சங்க அங்கீகாரத்திற்காக வேலை நிறுத்தம் செய்வது எனவும், அதற்கு வெகுவிரைவில் பொதுக் குழுவைக் கூட்டி ஒப்புதல் பெறு வது எனவும், அதுவே சங்கத்தின் முதன்மை கடமை எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஹுண்டாய்க்கு உதிரிபாகம் தயாரித்து வழங்குகிற பெரும்பாலான நிறுவனங்களில் ஒர்க்ஸ் கமிட்டிகள் செயல்படுகின்றன. இவை, துவக்கத்தில் சங்கம் உருவாவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டன. ஒர்க்ஸ் கமிட்டி உறுப்பினர் எண்ணிக்கை, பதவிக் காலம், தேர்தல் நடக்கும் முறை, இவற்றின் அதிகாரம் ஆகியவை நிர்வாகத்தின் தலையீட்டிற்கு உட்பட்டதாகவே உள்ளன. தொழிற் தகரறுகள் சட்டம் 1947 மற்றும் தமிழ்நாடு தொழிற்தகராறு விதிகள் 1958 ஆகியவற்றில் ஒர்க்ஸ் கமிட்டி பற்றி சொல்லப்பட்டுள்ள விசயங்களுக்கும், நடைமுறைக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை. இது பற்றி தொழிலாளர் துறை எதுவும் செய்ததாக தெரியவில்லை.
பெரும்பாலான சங்கங்கள், ஒர்க்ஸ் கமிட்டிகள் கொரோனா கால முழுசம்பளம், விடுப்போடு அதனை சரிகட்டுவது, போக்குவரத்து வசதி இல்லாததால் வேலைக்கு வரமுடியாதவர்கள் பிரச்சனை, கொரோனா மரணத்தை ஒட்டிய கோரிக்கைகள், இவற்றோடு கூடவே சம்பள உயர்வு ஒப்பந்தங்கள் போனஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தொகுப்பு: கே.ராஜேஷ்