அனைத்து தளங்களிலும்
அனைத்தும் தழுவிய
மக்கள் சார்பு நடவடிக்கைகள் வேண்டும்
இது முன்னோட்டம் மட்டுமே என்று ஆளுநர் உரை மீதான பதிலுரையில் முதலமைச்சர் சொல்கிறார்.
சமூகநீதி, சுயமரியாதை, மொழி - இனப்பற்று, மாநில உரிமை என்ற நான்கு கால்களின் பலத்தில்தான் திமுகவும் இந்த அரசும் நிற்பதாக, இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதே அவர்களின் முன்னேற்றத்துக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளம் என்றும், முதல் கட்டமாக செய்யாறில் 12,000 பேருக்கும் திண்டிவனத்தில் 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் அமையவுள்ளதாக, முதலமைச்சரின் பதிலுரை சொல்கிறது.
முதலமைச்சர் சொல்கிற நான்கு கால்களுக்கு அப்பால்தான் வேலை வாய்ப்பு தொடர்பாக முதலமைச்சர் சொல்லியிருப்பது உள்ளது. 22,000 புதிய வேலை வாய்ப்புகள் வரவேற்கத்தக்கது. என்ன வகை வேலை வாய்ப்பு என்பது கேள்விக்குரியது. இன்று தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியின் பின்னால் உருவான லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் நிரந்தரமற்றவைதான். பாதுகாப்பற்றவைதான். கவுரவம் அகற்றப்பட்டவைதான். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அபாரம் என்று அறியப்படுகிற கடந்த இரண்டு பத்தாண்டுகளாக இதுதான் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் நிலைமை. இந்த நிலைமைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க, தொட்டுணரத்தக்க மாற்றம் உருவாக்காமல் அந்த நான்கு கால்கள் உள்ளீடற்றவையாக இருக்கும். அவற்றுக்கு குறிப்பான பொருள் ஏதும் தர முடியாது.
உழவுக்கும் தொழிலுக்கும் சேர்த்துத்தான் பாரதி வந்தனை செய்யச் சொன்னான். விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை, விவசாயிகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று நெல் கொள்முதல் போன்ற அறிவிப்புகள் விவசாயிகள் நலன் காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் துவக்கம் என்று கொள்ளலாம். தொழிலுக்கு என்ன? சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடனான கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் கலந்துகொண்டிருக்கிறார். பெருநிறுவனங்கள் நலன் அவர்கள் தேவைக்கு மேல் பாதுகாப்பாக உள்ளது. இந்தத் தொழில் எல்லாம் தொழிலாளர்களே இல்லாமல் அந்தரத்தில் நடக்குமா?
மாடு போல் வேலை செய், உரிமைகளைக் கேட்காதே என்று ஆலை நிர்வாகங்கள் சொல்கிறபோது, அங்கு சமூக நீதிக்கோ, சுயமரியாதைக்கோ எங்கே இடம் இருக்கிறது? தலைநகர் மண்டலத்தில் தமிழ்நாட்டு நிலத்தை சலுகைகள் பல சேர வாங்கி, வரி, பதிவு, மின்சாரம், தண்ணீர் என பல சேவைகளிலும் சலுகையும் விலக்கும் பெற்று, தமிழ்நாட்டு தொழிலாளர் உழைப்பையும் மலிவாக வாங்கிக் கொண்டு, உணவகத்தில் தரப்படும் உணவில் புழு நெளிகிறது என்ற சொல்லும் தொழிலாளியிடம் எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடு என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் சொல்ல முடியும் என்றால் அங்கே யாருக்கு என்ன சுயமரியாதை இருக்கிறது?
சுயமரியாதை மறுக்கப்படும் இதுபோன்ற பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால், அந்த வளர்ச்சிக்கு பலி தரப்படுகிறார்கள். பலி தருவது என்பது உயிரை எடுப்பது மட்டுமல்ல என்பது இன்றைய ஆட்சிக்குப் புரியும். சுயமரியாதையை பறித்துவிட்ட பின் உயிருடன் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது?
இந்த சுயமரியாதையை மீட்டெடுப்பதில் என்ன திட்டம் இருக்கிறது என்று இந்த 50 நாட்களில் தெரியவில்லை. அதற்கான அறிகுறிகளும் கிட்டத்தட்ட தென்படவில்லை. காணும் ஆற்றல் இல்லை என்று சொல்லி தப்பித்துவிட முடியாது. கொரோனா காலத்து நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானவை எனும்போது, அந்த அறிவிப்புகள் எதுவும் இந்தத் தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் எதிர்கொள்ளும் எந்த துன்பத்துக்கும் பதில் சொல்லவில்லை. அவர்கள் எப்போதும்போல், ஆலைகளுக்குச் சென்றார்கள். கொரோனாவுக்கு உகந்த இடைவெளிவிட்டு பணியாற்றினார்கள். கொரோனா அவர்களை பிடித்துக் கொண்டது. பலர் உயிரிழந்தார்கள். தொற்று ஏற்பட்ட பலருக்கு விடுமுறை வீணானது. அரசு மருத்துவமனை, வீட்டுத் தனிமை என்றாலும் எதிர்பாராத வருமானமின்மையும் மருத்துவ செலவும் மென்னியைப் பிடித்தன. அவர்களும் கத்தி கத்தி சொல்லிப் பார்த்தார்கள். அவர்கள் குரல் அதிகாரத் தாழ்வாரங்களை எட்டவே இல்லை. உயிரிழப்புகளும் தொற்றுகளும் தொடர்ந்தன. தொற்று குறைந்துள்ள இன்றைய சூழலில் நிவாரணங்கள் கேட்டு கேளாச் செவிகள் கொண்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தைகள், வேண்டுகோள்கள் என்று அலைகிறார்கள். இவர்களது சுயமரியாதையை அந்த நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டோமா?
தொடர் செயல்முறை நிறுவனங்கள் இயங்கும் என்ற சொன்ன பிறகு எல்லா முதலாளிகளும் நாங்கள் தொடர் செயல்முறை என்றார்கள். தொடர் செயல்முறை இல்லாத உற்பத்தி இங்கு எதுவும் இல்லை. எல்லாம் சமூக உற்பத்தி. சமூகத்தின் உற்பத்தி சக்திகள் அனைத்தும் ஒரு சேர இயங்கினால்தான் எந்த உற்பத்தியும் நடக்கும். பிரச்சனை என்ன உற்பத்தி இன்று அவசியம் என்பதுதான். கார் தொழிற்சாலை தொழிலாளர்கள், அந்தத் தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொழிலாளர்கள் கொரோனா தொற்றால் மிகப் பெரிய பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். கார் உற்பத்தி நடப்பது இன்றைய தமிழ்நாட்டுக்கு அப்படி என்ன அவசியம்? மிகவும் அவசியமான தடுப்பூசி உற்பத்தியே, ஆலை இருந்தும், நிதி இருந்தும், அதிகாரம் இருந்தும் நம்மால் செய்ய முடியவில்லையே.
இவர்களது மலிவான உழைப்பை பெற்றுக் கொழுத்துப் போயுள்ள தொழில் நிறுவனங்கள், இந்த கொடூரமான காலத்தில் கூட, அவர்களது உயிர்களை, அவர்களது குடும்பங்களின் நலனை விட தங்களது லாபத்தில் குறை வந்துவிடக் கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தின. அந்த நிறுவனங்கள் கறாரான தொற்று தடுப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது கூட புதிய அரசாங்கத்தால் அழுத்தம்திருத்தமாக சொல்லப்படவில்லை.
சகஜ நிலை திரும்பிய பிறகு இப்போது இதைப் பற்றி பேசி என்ன பயன்? சகஜ நிலை இல்லாத நேரங்களில் கூட, தொழிலாளர்களின் நலன்களை விட, சரியாகச் சொல்வதென்றால், அவர்கள் உயிர்களை விட, அவர்களது குடும்பங்களின் நலன்களை விட, முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்பது முன்னுரிமையாக இருக்கிறது என்பதை, அதுவே எழுதப்படாத விதியாகவும் இருக்கிறது என்பதை அழுத்தமாக எடுத்துக்காட்டுவதுதான் நோக்கம். ஆட்சி மாற்றம் வந்த பின்னும் தொழிலாளர்களுக்கு பாதகமான இந்த சகஜ நிலையில் மாற்றம் வரவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதுதான் நோக்கம். தானாக வராது என்பதையும் சொல்வதுதான் நோக்கம்.
நாங்கள் உயிரோடும் உடல்நலத்தோடும் இருந்தால்தானே முதலாளிகளுக்கு லாபமும் அரசுக்கு வரியும் கிடைக்கும் என்று கேட்கும் தொழிலாளியின் குரலில் உள்ள உண்மையை புரிந்து கொள்வதில் அப்படி என்ன சிரமம்?
போக்குவரத்து தொழிலாளர்கள் நலன்கள் கணக்கில் கொள்ளப்பட்டு அவர்களது நீண்ட கால நிலுவைகள் தரப்பட்டுள்ளன. இது அரசு செய்ய வேண்டிய கடமை. இதைக் கூட முந்தைய அரசு செய்யவில்லை என்பதால் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியதாகிறது. போக்குவரத்து தொழிலாளர்களைப் போல் பலப்பல பிரிவு தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள் ஒட்டச் சுரண்டும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என ஒரு மிகப்பெரிய கூட்டம், வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் காத்துக் கிடக்கிறது. தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வெளியேற்றப்பட்டது போல், இனி வரும் காலத்திலும் தொடராமல் அரசின் கவனத்தை ஈர்க்க என்ன செய்ய வேண்டும் என தமிழ்நாட்டு தொழிலாளர்கள் திட்டமிட துவங்கிவிட்டனர்.
பின்செய்தி: ஹுண்டாய் நிறுவனத்தின் தொழிலாளர்கள் உற்பத்தி செய்த 1 கோடியாவது வாகனத்தில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். இரண்டு, மூன்று ஆண்டுகள் வரை, பயிற்சியாளர்களாக நிரந்தர வேலை செய்த சில நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பயிற்சிக் காலம் முடிந்தது என்ற பெயரில் மிக விரைவில் ஹுண்டாய் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.