பாசிஸ்டுகளின் ஆய்வுக் கூடமாக
லட்சத்தீவு மாறுகிறதா?
உமாமகேஸ்வரன்
கடந்த சில மாதங்களாக லட்சத்தீவு மக்கள் பெரும் கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். மிகவும் அழகான, அமைதியான இந்த தீவு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு அப்படி என்ன திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது?
கடந்த டிசம்பர் மாதம் லட்சத்தீவு நிர்வாக அதிகாரி தீனேஷ்வர் சர்மா இறந்து போனதை தொடர்ந்து மற்றொரு ஒன்றிய பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவின் தற்போதைய நிர்வாக அதிகாரியாக இருக்கும் பிரபுல் கோடா படேலுக்கு கூடுதல் பொறுப்பாக லட்சத்தீவு கொடுக்கப்பட்டிருக்கிறது. லட்சத்தீவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அரசு அதிகாரிக்கு பதிலாக ஒரு அரசியல்வாதியான பிரபுல் கோடா பட்டேலுக்கு இந்த பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குஜராத்தை சேர்ந்த இவர் பாஜ கட்சியைச் சேர்ந்தவர் சட்டசபை உறுப்பினராகவும் இருந்தவர்.
லட்சத்தீவு நிர்வாக அதிகாரிதான் ஒன்றிய பிரதேசமான லட்சத்தீவின் தலைவராவார். பொதுத்துறையான லட்சத்தீவு வளர்ச்சிக் கழகத்திற்கும் ஸ்போர்ட்ஸ் என்றழைக்கப்படுகின்ற பொழுதுபோக்கு சுற்றுலா வளர்ச்சி மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கும் இவரே தலைவர். மேலும் பதவி வழி (ex officio) பொறுப்பாக இவரே லட்சத்தீவு காவல்துறை தலைவர் (IPG) லட்சத்தீவு நிர்வாக அதிகாரி ஆகிய இவர் 05.12.2020 பொறுப்பேற்றார். அன்றிலிருந்தே அமைதியான அந்த தீவில் வாழும் மக்களுக்கு பிரச்சனை துவங்கியது.
பிரச்சனை 1: லட்சத்தீவு நிர்வாகம் உரிய அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெறாமல் இனி பசு மற்றும் எருமை மாடுகளை கொல்வதற்கு தடை ஆணை பிறப்பித்து, விற்பனை போக்குவரத்து மற்றும் மாட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சிப் பொருட்கள் சேமிப்பு ஆகியவற்றை தடை செய்தது. மீறினால் ஒரு வருடம் வரை சிறை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் என அறிவித்தது. இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எதிர்ப்பு: லட்சத்தீவில் மக்கள் இந்த ஆணை தங்களுடைய கலாச்சாரம் மற்றும் உணவு பழக்கங்களில் நேரடியாக தலையிடுவதாக கருதுகிறார்கள். இந்த ஆணை முடிவு உள்ளாட்சி அமைப்புகள் கலந்தாலோசிக்காமல் எடுத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்.
பிரச்சனை 2: வரைவு பஞ்சாயத்து விதிமுறைகள் 2021ன் படி நிர்வாகம் இரண்டு குழந்தை களுக்கு மேல் இருப்பவர்கள் ஊரக பஞ்சாயத்து உறுப்பினர்களாக தடை கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு தகுதி இழப்பு இல்லை யென்றாலும் இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட தேதிக்கு பின்னால் அவர்களுக்கு மேலும் குழந்தைகள் இருக்கக்கூடாது.
எதிர்ப்பு: உள்ளூர் மக்கள் இந்த ஆணையின் நோக்கத்தை கேள்வி கேட்கிறார்கள். காங்கிரஸ், என்.சி.பி போன்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரச்சனை 3: நிர்வாகம் மக்கள் வசிக்கின்ற தீவுகளில் உள்ள விடுதிகளில் மதுபானங்களை விற்பதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது மது விலக்கு மக்கள் வசிக்கும் எல்லாத் தீவுகளிலும் நடைமுறையிலுள்ளது. மதுபானம் மக்கள் வசிக்காத பங்காரம் தீவு விடுதியில் மட்டும்தான் வழங்கப்படுகின்றன.
எதிர்ப்பு: தற்போது வரை மதுவிலக்கு கடைபிடிக்கப்பட்டு வரும் லட்சத்தீவில் இனி மது விற்பனை பல்கிப் பெருக இந்த முடிவு வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பிரச்சனை 4: நிர்வாகம் ஒரு வரைவு லட்சத்தீவு வளர்ச்சி குழும விதிமுறைகளை கொண்டுவந்து. தீவுகளிலுள்ள நகரங்களின் வளர்ச்சியை மேற்பார்வையிட உள்ளது. அது நிலங்களை எவ்வாறு கையகப்படுத்துவது மற்றும் பயன்படுத்துவது ஆகியவை பற்றிய பாரதூரமான மாற்றங்களைச் செய்ய உள்ளது. அது பெரிய திட்டங்களுக்கு ஒரு நிலப் பயன்பாட்டு வரைபடம் மற்றும் பதிவேடு உருவாக்குவதற்கு திட்ட பகுதி மற்றும் வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றை அறிவிப்பதை பற்றி பேசுகின்றது.
எதிர்ப்பு: உள்ளூர்வாசிகளிடம் எந்தவித கலந்தாலோசனையுமின்றி தயாரிக்கப்பட்ட இந்த முன்வைப்புகளை அவசர அவசரமாக நிறைவேற்றுவதை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்கள் உள்கட்டுமான மற்றும் சுற்றுலா திட்டங்கள் சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் எனவும், இந்த அறிவிக்கை இங்குள்ள ஆதிவாசி உள்ளூர் மக்களின் சிறு நில உடைமையை அரசு எடுத்துக்கொள்ள நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிப்பதாகவும் அஞ்சுகிறார்கள்.
பிரச்சனை 5: இந்த வரைவு லட்சத்தீவு சமூக விரோத நடவடிக்கை தடுப்பு விதிமுறைகள் எந்த ஒரு நபரையும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக கருதி ஒரு வருடம் சிறையில் அடைக்க அதிகாரம் அளிக்கின்றது. சமூக விரோத நடவடிக்கைகள் என்கிற பெயரால் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை எந்தவித சட்ட பாதுகாப்புமின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கின்றது.
எதிர்ப்பு: இந்தியாவிலேயே மிகவும் குறைவான குற்ற எண்ணிக்கை உள்ள ஒன்றிய அரசு பிரதேசத்தில் இதுபோன்ற கடுமையான சட்டத்தின் அவசியம் குறித்து உள்ளூர் மக்கள் மிகவும் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். நிர்வாகத்திற்கு எதிரானவர்கள் கைது செய்ய கொண்டு வரப்பட்ட சட்டம் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
பிரச்சனை 6: கடந்த ஒரு வருடமாக லட்சத் தீவு கடுமையான தனிமைப்படுத்துதல் நடை முறைகள் மற்றும் உள்வரும் பயணிகளுக்கு பரிசோதனை ஆகியவற்றின் காரணமாக கோவிட் பெருந்தொற்று ஒன்று கூட பதிவு செய்யப்படவில்லை கடந்த டிசம்பர் மாதம் கோவிட் 19 நடைமுறைகள் கொச்சி மற்றும் கவரத்தியிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமான தனிமைப்படுத்துதல் விதிகள் தளர்த்தப்பட்டு 48 மணி நேரத்திற்கு முன்பாக கோவிட் எதிர்மறை சான்றிதழ் பெற்ற எவரொருவரும் லட்சத்தீவு பயணிக்கலாம் என கோவிட் 19 நடைமுறை விதிகள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. நிர்வாகம் பொருளாதாரத்தை மீட்க உள்துறை அமைச்சக விதிகளின்படி நடைமுறை விதிகள் மாற்றப்பட்டு இருப்பதாகக் கூறியது.
எதிர்ப்பு: இந்த மாற்றம் பச்சை மண்டல அடையாளத்தை தீவுகள் இழந்ததுதான் அடுத்தடுத்த மாதங்களில் இந்த தொற்று மிக வேகமாகப் பரவவும் வழிகோலியது. மே மாதம் 28 அன்றைய புள்ளிவிவரப்படி இந்த ஒன்றிய பிரதேசத்தில் 7 ஆயிரத்து 300 பேருக்கு மேலாக தொற்றும் 28 மரணமும் நிகழ்ந்தன. தீவில் வசிப்பவர்கள் இந்த பெருந்தொற்றை கையாள்வதில் நிர்வாகத்தின் தவறான மேலாளுமையே காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலே கூறப்பட்டுள்ள பிரச்சனைகளால் மிகச் சிறிய தீவுக் கூட்டமான லட்சத்தீவு மக்கள் பெரும் கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் ஆளாகி உள்ளனர். உள்ளூர் மக்கள் பெருவாரியானவர்கள் முஸ்லிம்கள். பட்டேலின் அடாவடியான தலையீடுகள் ஒரு பெரிய சதித் திட்டத்தின் பகுதியாகவே பார்க்கின்றனர். தங்கள் சமூக கலாச்சார பொருளாதார வாழ்க்கையை அழிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கின்றனர். இந்த போராட்டத்தின் எதிரொலி கேரளா முழுவதிலும் காண முடிந்தது. நிலங்களை கையகப்படுத்த வெளியிலிருந்து மூலதனத்தை வரவழைக்கவே இந்த மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள் என உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். லட்சத்தீவு வளர்ச்சிக் குழும விதிமுறைகள் (கஈஅத) நிர்வாக அதிகாரிக்கு முழு அதிகாரம் அளிக்கிறது. இந்த விதிமுறைகள் இப்போது உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பெரிய தெருக்கள், சுற்றுச் சாலைகள், இருப்புப் பாதைகள், விமான தளங்கள், கால்வாய்கள் ஆகியவை பற்றிக் கூறுகின்றன. இந்தப் பகுதியின் பூகோள எதார்த்தம் மற்றும் உள்ளூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை புறக் கணித்து விட்டு அந்நிய உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதன வளர்ச்சிக்கும், அவர்களின் பொழுதுபோக்கு மையங்களாக பெரிய வர்த்தக வாய்ப்புக்காக இந்த மோடி ஒன்றிய அரசு மிக ஆபத்தான பாதையில் லட்சத்தீவை கொண்டு செல்ல திட்டடுமிகின்றது. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வரைவு லட்சத்தீவு வளர்ச்சி குழும விதி முறைகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். லட்சத்தீவு மக்களின் நீண்டகால கோரிக்கையான கொச்சிக்கும் லட்சத்தீவுக்கும் இடையேயான போக்குவரத்து அதிகப்படுத்த அதிகமான கப்பல்கள் மற்றும் படகுகள் விடவேண்டும். நாடு முழுவதும் சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்விடங்களை மையமாக வைத்து நடக்கும் பா.ஜ.கவின் பாசிச வெறுப்பு அரசியல் முறியடிக்கப்பட வேண்டும்.
அரசியல்ரீதியாக லட்சத்தீவை தேர்ந்தெடுத்ததற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. இந்தியாவின் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பெரும் பான்மையாக வாழும் இடம் லட்சத்தீவுகள். கேரளாவின் கொச்சியில் இருந்து தென்மேற்கே 200 மைல் தொலைவில் உள்ள லட்சத்தீவுகளில் 90% மலையாளிகள். இந்த குட்டித் தீவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இந்து மதவெறியை கேரளத்தில் தூண்டிவிட்டு இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டனர். ஐயப்பன் உதவாத நிலையில் மதவெறி அரசியலும் கேரளத்தில் தோற்றுப்போனது. தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை தோல்வியில் முடிந்தது. மேற்கு வங்கத்தில் காளியும் காலி செய்துவிட்டாள். மதவெறி சாயம் வெளுத்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலிலும் மோடி - ஷா கும்பலுக்கு பலத்த அடி. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் சொல்லிக் கொள்ள வேறொன்றும் இல்லை. மீண்டும் இந்து மத வெறியை தூண்டி ஆட்சியில் அமர சதித் திட்டம் போடுகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.