மகப்பேற்று நல மசோதா பற்றி
28.07.1928
பம்பாய் சட்டமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர்
நான் மசோதாவின் முதலாவது வாசிப்பை ஆதரிக்க எழுகிறேன். இதை செய்யும் போதே, இந்த மசோதாவுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆட்சேபங்களுக்கும் பதில் சொல்லுகிறேன்.
மாண்புமிகு பொது விவகாரத் துறை அமைச்சர் மசோதாவை எதிர்த்துப் பேசும் போது, முதலில் இது விபத்தன்று, எனவே, தொழிலாளர் நஷ்டஈடு சட்டம் வழங்கும் உரிமையை வழங்குவதற்கு, மாதர்க்கு இந்தச் சட்டத்தை நீட்டிக்கக் கூடாது என்றார். மகப்பேறு விபத்தன்று என்பதனை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மசோதா தர விரும்பும் அனுகூலங்களைப் பெற மாதர் உரியவரல்லர் என்றாகி விடாது. மசோதாவிற்கு அடிப்படையாக அமைந்துள்ள கோட்பாடு ஒரு சார்புடையதாக உள்ளது. மகப்பேற்றுக்கு முன் தாயைப் பாதிக்கும் நிலைமைகளும் குழந்தை வளர்ப்பு இந்த மசோதாவின் ஒரு முக்கியமான அம்சம் என்பது குறித்த குறித்து ஒத்த கருத்து உள்ளது என முழுவதும் நம்புகிறேன். இந்த கருத்தை மறுப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டின் நலன் கருதி, மகப்பேற்று முன்னரும் பின்னரும் தாய் ஓய்வு பெறுவது அவசியம்; மசோதா இந்தக் கோட்பாட்டை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வாறிருப்பதால், பளுவை பெரும்பாலும் அரசாங்கமே தாங்கியாக வேண்டும் என்பது என் கருத்து; ஏனெனில் மக்கள் நலன் பேணுவது அரசாங்கத்தின் தலையாய கடமை. எனவேதான் மகப்பேற்று நலத்திட்டம் அமல் செய்யப்பட்டு வரும் ஒவ்வொரு நாட்டிலும் மகப்பேற்று உதவி சம்பந்தப்பட்ட செலவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதைக் காண்கிறோம். இவ்வாறிருப்பதால் ஒரு பெண்ணை வேலைக்கமர்த்திக் கொள்ளும் ஒரு முதலாளி, இத்தகைய உதவி அளிப்பதில் எவ்வகையிலும் பங்கு கொள்ள வேண்டியதில்லை என்ற வாதத்தை நான் ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. இதற்குக் காரணம் இதுதான். சில குறிப்பிட்ட தொழில்களில் ஒரு முதலாளி, பெண்களை வேலைக்கமர்த்திக் கொள்வதற்கு காரணம் ஆண்களை வேலைக்கமர்த்திக் கொள்வதை விட இதில் அதிக வருவாய் கிடைக்கிறது என்பதேயாகும். ஆண்களை வேலைக்கமர்த்தி கொள்வதை விடப் பெண்களை வேலைக்கமர்த்திக் கொள்வதில் அதிக விகிதத்தில் அவரால் லாபம் ஈட்ட முடிகிறது. இவ்வாறு ஆண்களுக்குப் பதிலாகப் பெண்களை வேலைக்கமர்த்திக் கொள்வதில் சிறந்த நன்மை இருக்கும் போது, இவ்வகையான மகப்பேற்று உதவி அளிப்பதில் முதலாளி ஓரளவாவது பங்கேற்க வேண்டும் என்று கூறுவது முற்றிலும் நியாயமே ஆகும். ஆகவே, மகப்பேற்று உதவி விஷயத்தில் அரசாங்கத்துக்கு ஓரளவு கடமைப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றாலும், தற்போதைய நிலைமைகளில், இந்தப் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்த இந்த மசோதா முயல்வது முற்றிலும் தவறில்லை என்று கூற விரும்புகிறேன். ஆகையால் இந்த காரணத்திற்காக இந்த மசோதாவை ஆதரிக்கிறேன்.இந்த மசோதா தொழிற்சாலைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும், வேறு தொழில்களுக்கோ விவசாயத்துக்கோ பொருந்தாது என்று சொல்லப்படுகிறது. இது ஏன் என்று விளக்குவது எளிது. மாதர் சுகாதாரத்தைப் பாதிக்கும் நிலைமைகள் இருக்கும் தொழில்களுக்கு இக்கோட்பாடு நீட்டிக்கப்படுகிறது. வேளாண்மைத் துறையிலும் பிற பணிகளிலும் இந்த அபாயங்களுக்குப் பெண்கள் ஆளாவதில்லை; அல்லது, பெண் தொழிலாளர்களுடைய சுகாதாரத்தைப் பாதிக்கும் தொழிற்சாலைகளிலுள்ள காரணிகள் இங்குச் செயல்படுவதில்லை. இதனால்தான், இத்தகைய சட்டம் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. தொழிலாளர் நஷ்ட ஈடு சட்டம் சம்பந்தமாகவும் இவ்வாறே கூறலாம். விபத்துகள் நேரிடக் கூடிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்பொழுது தொழில்களின் மேல் விழும் பளுவை பொறுத்தமட்டிலும் மாண்புமிகு பொது விவகாரத்துறை அமைச்சர், இது கூலிக் குறைப்பில் முடியும் என்றார். இது பற்றி உறுதியாக சொல்வதற்கு இல்லை. அப்படியே ஆனாலும் தொழில்களின் மீது விழும் பளு ஓரளவுக்கு வேறு எங்கேனும் மாற்றப்படும் என்பதையே இது காட்டுகிறது. ஆகவே, பொது விவகாரத்துறை அமைச்சர் இதை இதனைக் காரணம் காட்டி எதிர்க்க வேண்டாம். மசோதா நிறைவேற்றப்பட்டால் பளு அநேகமாக நுகர்வோர் மேல் சென்று விழும். அவ்வாறு விழுமானால் நுகரும் பொருளை உற்பத்தி செய்து தருபவர் பலனடையும் பொருட்டு, அப்பொருளுக்கு அதிக விலை கொடுக்கச் சமுதாயம் மறுக்கக் கூடாது.
பம்பாய் மாநிலத்தில் மட்டுமே இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் நியாயமன்று; இந்தியா முழுவதற்கும் இது விரிவாக்கப்பட வேண்டும்; இது விஷயத்தில் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களையும் பம்பாய் மாநிலத்தின் நிலையில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான என் கருத்து இதுதான்; இந்த மசோதா பிரிட்டிஷ் இந்தியா முழுவதற்கும் விரிவுபடுத்தப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம், அப்போதும் கூட என்ன நடைபெறும் தெரியுமா? யாரேனும் ஒருவர் எழுந்து பின்வருமாறு வாதிக்கலாம்: 'இந்த மசோதா இந்தியாவை மட்டும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? இதர நாடுகளையும் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது? இதனால் உலகிலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா நன்மையற்ற நிலையில்தான் இருக்கும். ஆகையால் இந்த மசோதாவின் கோட்பாட்டை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் வரைக் காத்திருப்போம். அதன் பிறகு நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சரிநிகர் சமானமாகி விடுவோம்'. இந்த வாதத்தில் எத்தகைய பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, இந்த மசோதாவில் திட்டமிடப்பட்டுள்ள நன்மைகளை இந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் படாத பாடுபட்டு உழைத்து வரும் ஏழைப் பெண்களுக்கு இந்த அவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.