COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 1, 2021

 ஆதிக்க மூளைகளின் குப்பைகளை அகற்ற புறப்பட்டுவிட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்


கே.பாரதி


கொரோனா தீவிரமடைந்து புரட்டிப் போட்டபோது, தூய்மைப்பணியாளர்களின் தலைகளின் மீது மலர் தூவப்பட்டது. கால்கள் தண்ணீரால் கழுவப்பட்டன. இப்போது இரண்டாம் அலை வடிகிறது

.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட (சமகங) தூய்மைப் பணியாளர்களை, தூக்கியெறிய திட்டமிட்டுள்ளார்கள். இப்போதைய முதல்வர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது 19.01.2021 அன்று சமகங தூய்மைப் பணியாளர்களின் வேலைநீக்கம் வேண்டாம்,  அவுட்சோர்சிங் வேண்டாம், அவர்கள் பணி நிரந்தரம் வேண்டுமென கடிதம் எழுதினார் என, மாநகராட்சிக்கு சுட்டிக் காட்டியபோது, அவர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் எழுதினார் என, நமட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதன் பொருள், எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு தூய்மைப் பணியாளர்கள் மீது நல்லெண்ணம் இருந்தது, அவர் முதல்வரான பிறகு நல்லெண்ணம் போய்விட்டது என்று ஆகாதா?
தூய்மைப் பணிகளில், திடக்கழிவு  மேலாளுமையை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்க, அம்பத்தூர் 7ஆவது மண்டலத்தில் என்வைரா சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் (உசயஐதஞ நஞகமபஐஞச டதஐயஅபஉ கபஈ) ஒப்படைக்க முந்தைய அரசு ஒப்பந்தம் போட்டுவிட்டது, ஓர் அரசு போட்ட ஒப்பந்தத்தை, அடுத்து வரும் அரசு எப்படி மீற முடியும் என, புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள். நிதிச்சுமை மூச்சை திணற வைக்கும்போது, நிரந்தரம் எல்லாம் நடக்கிற கதையா என பேசுகிறார்கள்; பேச வைக்கிறார்கள்.
முந்தைய அரசுகளின் கொள்கை முடிவுகளை, புதிதாக வருகிற அரசுகள் மாற்றுவது ஒன்றும் அதிசயம் அல்ல. முந்தைய  அரசு காலத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக, பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டு வருவோம் என திமுக சொல்லவில்லையா? பத்தாண்டுகள் பணி முடிந்தவர்கள் நிரந்தரம், தூய்மைப் பணியாளர்கள் நலன்காத்தல் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை, சமூகத்தின் அடித்தட்டு தொழிலாளர்கள் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினால், அது குற்றமா? வற்றாத நதியின் தன்மைகொண்ட, சாரமான தன்மை கொண்ட வேலைகளை, ஒப்பந்தமயமாக்க கூடாது என்று சட்டமும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் சொல்லும்போது, மாநகராட்சியின் தவிர்க்கமுடியாத, அதன் பணியில் இருந்து பிரிக்க முடியாத, திடக் கழிவு அகற்றும் பணியை, அவுட்சோர்ஸ் செய்ய முந்தைய அரசு ஒப்பந்தம் போட்டிருந்தால்,  அந்த சட்ட விரோத ஒப்பந்தத்தை, இப்போதைய அரசு ரத்து செய்வது மட்டும் தானே, சட்டப்படியும், நியாயப்படியும் சரியாக இருக்கும்.
அம்பத்தூரின் 84 முதல் 88 வார்டுகள் வரை பேருந்து செல்லும் சாலைகள் அய்ந்தும், உட்புற சாலைகள் தொள்ளாயிரத்து பதினேழும் உள்ளன. இங்கு தோராயமாய் மக்கள் தொகை, ஒரு லட்சத்து தொன்ணூறாயிரத்து எழுநூற்றி இருபது (1,97,720). இங்கு 475 சமகங தற்காலிக தூய்மைப் பணியாளர்களும், 100 நிரந்தர தொழிலாளர்களும், ஒரு நாளில் 94,190  மெகா டன் குப்பை அள்ளுவதாக, மாநகராட்சியின் தீர்மானம் ஒன்று சொல்கிறது. இந்த குப்பை அள்ளும் அடிப்படை வேலையை, மாநகராட்சி, கார்ப்பரேட் கம்பெனிகளிடம், தனியா ரிடம் அவுட்சோர்ஸ் செய்யுமென்றால், அமைச்சரவையை ஏன் நேரடியாக கார்ப்பரேட்டுகள் பார்த்துக் கொள்ளும் விதம், அவுட்சோர்ஸ் செய்ய முடியாது என, தூய்மைப்பணியாளர்கள் மத்தியிலிருந்து கேள்வி எழுந்தால், அது தவறாகிவிடுமா?
மாநகராட்சி, அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் தருவதில்லை. அரசியலமைப்புச் சட்டப்படி சம வேலைக்கு சம ஊதியம் தருவதில்லை. ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என, தமிழ்நாட்டின் முதலமைச்சரோ, நிதியமைச்சரோ குரல் கொடுத்தால் வரவேற்கிற மக்கள், வாக்களித்த எங்கள் உரிமைகளை காக்கும் விதம் நடந்து கொள்ளுங்கள் என்று, மாநில அரசிடம் தானே கேட்க முடியும்.
இருநூறு வார்டுகள் கொண்ட, பெருநகர சென்னை மாநகராட்சியின் 7ஆவது மண்டல தொழிலாளர்கள் மட்டுமே, தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே, ஒப்பந்தமயமாதலை போராட்டத்தால் தடுத்து நிறுத்தினார்கள். எல்டியுசி என்ற இடது தொழிற்சங்க மையத்தின், செங்கொடி ஏந்தி, நீதிமன்றத்திலும், வீதிகளிலும் போராட்டங்கள் பல கண்டு, 1457 தூய்மைப் பணியாளர்களின் பணிகளை, பல மாதங்களாக பாதுகாத்து வருகிறார்கள்.
இப்போது, தெலுங்கானா உயர்நீதிமன்றம் சொன்னது போல், தூய்மைப் பணிகளை அவுட் சோர்சிங் செய்யக்கூடாது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் 03.09.2015 அன்று, இரு தொடர் வருடங்களில் 480 நாட்கள் பணி புரிந்தால், மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் 309 பேரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கியதற்கேற்ப, சென்னை மாநகராட்சியும் செய்தாக வேண்டுமென, அவர்கள் கோரி வருகிறார்கள்.
12.07.2021 அன்று வெற்றிகரமான வேலை நிறுத்தம் ஒன்றை நடத்தி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர், வட்டார துணை ஆணையர் சரண்யா இ.ஆ.ப, மண்டல அதிகாரி விஜயகுமாரி ஆகியோருடன், எல்டியுசி மாநிலச் செயலாளரும், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவருமான தோழர் பாரதி தலைமையில், மோகன், சுரேஷ், ஹரிபிரசாந்த், செபாஸ்டின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, ஜ÷லை 15க்கு பிறகும், மூன்று மாதங்கள் சமகங பணி நீடிக்கும் என்ற, வாய்மொழி வாக்குறுதியை பெற்றனர். இதற்கு முன்பாக எழுச்சியோடு ஒரு ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, 900 பேருக்கு மேல் கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதுவது ஆகியவை நடந்தன.
26.07.2021 அன்று போராட்ட தயாரிப்புக் கூட்டம் தோழர் பாரதி முன்னிலையில், தோழர் ஹரிபிரசாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எல்டியுசி பொறுப்பாளர்கள் தோழர்கள் வேணுகோபால், பசுபதி, சுரேஷ், மக்களுக்கான மாணவர்கள் தோழர் சுகுமார், மக்களுக்கான இளைஞர்கள் தோழர் சீதா, தோழர் ஆண்டனி தினகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மோகன், குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் துவங்கி, செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்த நாள் வரை, மக்கள் கோரிக்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பரப்புரை இயக்கத்தில், தூய்மை பணியாளர்களும் கலந்து கொள்வார்கள், அவர்களது கோரிக்கை, அந்த இயக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் என முடிவானது. ஜ÷லை 31 அன்று, பரப்புரையை கட்டமைக்க நடைபெறும் ஊழியர் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.
தூய்மைப் பணியாளர்கள் அவுட்சோர்சிங் கூடாது, பணிநிரந்தரம் வேண்டும் என, வலியுறுத்தும் ஒரு முறையீட்டில், அம்பத்தூர் மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் கையொப்பங்கள் வாங்கும் வேலையை துவங்கிவிட்டார்கள். கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் மாநாடு ஒன்றை நடத்துவது எனவும், கடையடைப்பு வரை அழைப்பு விடுவது எனவும், சிந்திக்க, செயல்பட, போராடத் துணிந்துவிட்டார்கள்.
ஆதிக்க மூளைகளின் குப்பைகளை அகற்ற, புறப்பட்டு விட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

Search