COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 1, 2021

 பிகாசஸ் உளவு: முழுமுற்றூடான அதிகாரத்துக்கான பாசிச வெறித் தேடல்


கைதுகள், சாவுகள், படுகொலைகள், உரிமை பறிப்புகள், மறுப்புகள், பெரும்பான்மையான மக்களிடம் இருப்பதையும் பறித்து அவர்களை  ஏதிலிகளாக்குதல், எந்நேரமும் பதட்டத்திலேயே வைத்திருத்தல், அரசியல்சாசன நிறுவனங்களை கட்டுப்படுத்துதல், ஒடுக்குமுறை சட்டங்கள், வாழ்வாதார பறிப்பு சட்டங்கள், ஆதார் போன்ற எதேச்சதிகார நடைமுறைகளை திணிப்பது.......


மோடிக்கும் ஷாவுக்கும் இன்னும் என்னதான் வேண்டும்? தங்களிடமுள்ள அதிகாரம் முழுமுற்றூடானது என்பதை தங்களுக்கு தாங்களே மெய்ப்பித்து இன்பம் கொள்ள இன்னும் என்ன செய்தால் மனநிறைவு பெறுவார்கள்?
இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தால் என்ன, வேறு என்ன உயர்பாதுகாப்பு வளையும் இருந்தால்தான் என்ன, அனைத்தையும் ஏமாற்றி, தொழில்நுட்பம் கொண்டு படுக்கையறை வரை எங்களால் நுழைந்து வேவு பார்க்க முடியும் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாட்டின் முக்கிய அரசியல்வாதியாக கருதப்படுபவர் என்று இருக்கும் ராகுல் காந்தி பயன்படுத்தும் இரண்டு அலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. அவரது உதவியாளர்கள் அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன.
அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்று புதிதாக பதவிக்கு வந்திருக்கும் ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சொல்ல, வேவு பார்க்கப்பட்ட அலைபேசிகளை பயன்படுத்துவோர் பட்டியலில் அவரது பெயரும் வருகிறது.
ஒன்றிய நீர்வளத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பிய பெண்ணின் மூன்று அலைபேசிகள், தமிழ்நாட்டின் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 1,000 இந்தியர்களின் அலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டுள்ளன.
வேவு பார்ப்பது எந்த அரசுக்கும் புதிய நடைமுறையில்லை. தொலைபேசி, அலைபேசி ஒட்டுக்கேட்பு சட்டபூர்வமாகவே நடக்கிறது. மக்கள் நலனை நேரில் அறிந்துகொள்ள மன்னர்கள் வேவு பார்ப்பது புதிதல்ல என்று பாஜக கொபசெ கூட சொல்கிறார். மக்கள் நலனை அறிந்துகொள்கிறார்களோ இல்லையோ, பிளவுவாத அரசியலை முன்நகர்த்த வேவு பார்ப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
குஜராத் முன்னாள் முதலமைச்சருக்காக அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் ஒரு பெண்ணை ஆள் வைத்து வேவு பார்த்தது அந்தக் காலம். இது டிஜிட்டல் இந்தியா. உளவு மென்பொருள் வந்துவிட்டதால் ஹைடெக் முறையில் வேவு பார்க்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா சாமான்ய மக்களுக்கு பெரிய பயன் ஏதும் கொண்டு வரவில்லை. ஆதார் போன்ற சுமைகளைத்தான் ஏற்றியது. டிஜிட்டல் இந்தியாவின் உண்மையான நோக்கம் என்னவென்று இப்போது இந்திய மக்களுக்கு தெரிந்துவிட்டது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ என்ற நிறுவனம் பிகாசஸ் (பறக்கும் குதிரை) என்ற சாஃப்ட் வேரை - மென்பொருளை - இஸ்ரேல் அரசு ஒப்புதலுடன், ஒப்புதல் பெறப்பட்ட அரசுகளுக்கு விற்கிறது. என்எஸ்ஓ நிறுவனம் அரசுகளுக்கு மட்டுமே தனது உளவு மென்பொருளான பிகாசசை விற்பதாகச் சொல்கிறது.
இன்றைய இஸ்ரேல் அரசும் இந்திய அரசும் சேர்ந்து ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டால் அங்கு நிச்சயம் நாணயம், நேர்மை, பெரும்பான்மை மக்கள் நலன் எல்லாம் ஒவ்வாதவையாகவே இருக்கும். பிகாசஸ் விசயத்திலும் அப்படியே.
பிகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுக்கேட்பது மட்டுமின்றி, அந்த அலைபேசிக்குள் நுழைந்து, அலைபேசியின் உரிமையாளர் அனுப்பியதுபோல ஒரு செய்தியை அனுப்ப முடியும். அந்த அலைபேசியின் நிழற்பட செயலி மூலம் நிழற்படம் எடுக்க முடியும். அதாவது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரது சட்டைப் பையில் அல்லது வீட்டில் காவல்துறையினர் எதையாவது வைத்து கையும் களவுமாக பிடிபட்டதாகச் சொல்வது போல், பிகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செய்ய முடியும். பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ரோனா வில்சனின் மடிக்கணினி ஊடுருவப்பட்டு அவருக்கு எதிராக பத்து கடிதங்கள் அந்த மடிக்கணினியில் ஏற்றப்பட்டன என்ற பிப்ரவரி 2021ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இந்த பறக்கும் குதிரை, தேர்தல் உத்தி வடிவமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர் அலைபேசிக்குள் நுழைந்து அவர் ஸ்விக்கியில் என்ன ஆர்டர் செய்தார் என்றா பார்க்கப் போகிறது? ராகுல்காந்தி அலைபேசிக்குள் அதற்கு என்ன வேலை இருக்கும் என்று ஊகிப்பது அவ்வளவு கடினமா? பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சங் பரிவார் சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணின், அவரது உறவினர்களின் அலைபேசிகளுக்குள் பிகாசஸ் மென்பொருள் வேவு பார்ப்பதால் யாருக்கு ஆதாயம் என்று அனைவருக்கும் தெரியும். மோடி அரசு பற்றிய சங்கடமான கேள்விகளை விடாப்பிடியாக எழுப்புகிற பத்திரிகையாளர்கள் பலரது அலைபேசிகள் இந்தப் பட்டியலில் உள்ளன. இந்த ஊடுருவலில் ஆதாரம் எதுவும் கிடைக்கிறதோ இல்லையோ, ஒருவரது அலைபேசி வல்லமை கொண்ட அரசால் ஊடுருவப்பட்டு, அரசின் கண் காணிப்பில் இருக்கிறது என்ற அச்சமே அரசின் பல நோக்கங்களை நிறைவேற்றிவிடும். இது போன்ற முறையில் அலைபேசிகளை ஊடுருவி செய்திகள் சேகரிப்பது சட்டத்துக்கு எதிரானது.
இந்திய ஒன்றிய அரசு பிகாசசை வாங்கியது என்பதற்கு என்ன ஆதாரம் என்று சங்கிகள் கூட்டம் கேள்வி எழுப்புகிறது.
உலகத்தின் பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த உளவு மோசடியை, பொய்ச் செய்திகள் பரப்புவதையே திட்டமாகக் கொண்ட சங்கிகளின் வாட்சப் குரூப் வெளியிட்டிருந்தால் ஆதாரம் பற்றி கேள்வி எழுப்புவது நியாயமாக இருக்கலாம். (சங்கிகள் எழுப்பும் எந்த கேள்வியும் நியாயமாக இருக்க வாய்ப்பில்லை என்பது பொதுவான விசயம்).
உலகம் முழுவதும் உள்ள முன்னணி பத்திரிகையாளர்களின் 17 அமைப்புகளை கொண்ட கூட்டமைப்பு, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், பாரீசைச் சேர்ந்த ஃபர்பிட்டன் ஸ்டோரீஸ் என்ற அமைப்பு ஆகியவை சேர்ந்து வெளியிட்டுள்ள 'பிகாசஸ் திட்டம் பற்றிய புலனாய்வு' என்ற அறிக்கையில் இந்த உளவு மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பற்றிய செய்தி இந்தியாவின் தி வயர், இங்கிலாந்தின் தி கார்டியன், அய்க்கிய அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.
பிகாசஸ் உளவு மென்பொருள் ராணுவ தரத்திலானது என்றும் தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே அரசாங்கங்களால் பயன்படுத்தப்படுவதாகவும் 36 அரசாங்கங்களால் அந்த மென்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் என்எஸ்ஓ நிறுவனம் சொல்கிறது.
மெக்சிகோ, இந்தியா, பிரான்ஸ், கத்தார், அய்க்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், கஜகஸ்தான், அஜர்பய்ஜான், ஹங்கேரி ஆகிய நாடுகள் பிகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தியுள்ளதாக அறிக்கை சொல்கிறது.
உலகம் முழுவதும் 50,000 அலைபேசிகள் ஊடுருவப்பட்டுள்ளதாகவும் இது தடயவியல் சோதனை மூலம் மெய்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இவற்றில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், 40 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 1000 அலைபேசிகள் இந்தியர்களுடையவை. இந்த 1000ல், 300 எண்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 22 அலைபேசிகள், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்துகிற தடயவியல் ஆய்வகத்தில் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த 22ல் 10 அலைபேசிகளில் ஊடுருவல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனையை எப்படிச் செய்தார்கள் என்பதும் இந்த உளவு மோசடி தொடர்பான விரிவான  தொடர் கட்டுரைகள் ஒன்றில் தி வயர் இணைய இதழில் வெளியிட்டுள்ளார்கள்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரேமபோசா ஆகியோர் எண்களும் இந்த 50,000 எண்கள் கொண்ட பட்டியலில் உள்ளன. (பிகாசஸ் திட்டம் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேகரன் தனது அலைபேசியையே மாற்றிவிட்டாராம்).
121 எண்களில் பிசாசஸ் மென்பொருளின் ஊடுருவல் இருப்பதாக, 2019 மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் வாட்சப் நிறுவனம் இந்திய ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்துக்கு தெரிவித்தது. அரசு அப்போது, அது பெரிய விசயமில்லை என்றது.
2019ல் கர்நாடகத்தின் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்படுவதற்கு முன்பாக, அப்போதைய முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் இருவர், துணை முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஆகியோரின் அலைபேசிகள் பிகாசஸ் ஊடுருவ லுக்கு உட்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தி வயர் இணைய இதழ் தந்துள்ள அறிக்கை சொல்கிறது.
நிபா வைரஸ் கட்டுப்படுத்துவதில் அரிய பங்காற்றிய ககன்தீப் காங் என்பவரின் அலைபேசியும் அந்தப் பட்டியலில் வருவதாக தி வயர் இணைய இதழ் சொல்கிறது. நிபா வைரஸ் தொடர்பாக உயர்கட்ட ஆய்வுகள் நடத்த அவர் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அந்த முயற்சிகள் எடுபடாமல் போனதால் அவற்றை அவர் கைவிட்டுவிட்டதாகவும் தி வயர் சொல்கிறது.
ஊடுருவல் நிச்சயம் நடந்துள்ளது என்று 112 பேர் கொண்ட பட்டியலை தி வயர் இணைய இதழ் வெளியிட்டுள்ளது.
பிரதமருக்கு தேசப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2016 - 2017ல் ஒதுக்கப்பட்டதை விட அடுத்த நிதியாண்டில் 10 மடங்கு அதிகரித்ததை பிரஷாந்த் பூஷன் சுட்டிக்காட்டுகிறார். இணைய குற்றங்கள் தொடர்பான ஆய்வு என்ற தலைப்பு கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தது. 2018 - 2019ல் இந்த வகையில் ரூ.303.83 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.841.73 கோடி என திருத்தியமைக்கப்பட்டு, 2019 மக்களவை தேர்தல்களுக்கு முன் ரூ.812.32 கோடியும் 2019 - 2020ல் ரூ.130.32 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது. 2020 - 2021ல் ரூ.170.73 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.228.72 கோடி என அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017 - 2018ல் காணப்படுகிற கூடுதல் ஒதுக்கீடும் செலவும் பிகாசஸ் மென்பொருள் வாங்க செலவிடப்பட்டது என்று பிரஷாந்த் பூஷன் சொல்கிறார். அவர் மீது இன்னும் தேசத் துரோக வழக்கோ, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட வழக்கோ, குறைந்தபட்சம் அவதூறு வழக்கோ கூட மோடி அரசு இன்னும் போடவில்லை. அப்படியானால் அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று நாம் முடிவு செய்வதா?
நிதிநிலை அறிக்கை தொடர்பான இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு விவாதத்துக்கு வந்த பிறகும் இந்திய அரசுக்கும் பிகாசஸ் உளவுக்கும் தொடர்பில்லை என்று சொல்லப் பார்க்கிறார்கள். ஒரு மங்கி பாத் கூட முடிந்து விட்டது. பிரதமர் எதுவும் சொல்லவில்லை.
முன்னணி பத்திரிகையாளர்கள் சிலர் முன் வந்து தங்கள் அலைபேசிகளை சோதனைக்கு உட்படுத்தி அவை ஊடுருவப்பட்டதை உறுதி செய்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள 112 பேர் பட்டியல், 300 பேர் பட்டியல், 1000 பேர் பட்டியல் ஆகியவற்றில் என்ன நடந்தது என்று தெரிந்தாக வேண்டும். இந்தியாவில் தனி மனித சுதந்திரத்துக்கு இடமில்லை என்ற நிலை உருவாகிவிட்டதாக ஒரு பக்கம் குரல்கள் எழும் போது, தேசத்தின் பாதுகாப்புக்கு இது ஆபத்து என்று எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார்.
நாட்டு மக்கள் அனைவரும் எந்த நேரமும் அரசாங்கத்தின் கறாரான கண்காணிப்பின் கீழ் இருப்பார்கள் என்ற சாத்தியப்பாடு அடிமைகள் காலத்தில் கூட முழுமையாக இருந்திருக்க முடியாது. இன்று அறிவியல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமான வளர்ச்சியை கொண்டு வந்திருக்கும்போது, அது சாத்தியமாகிறது. கொரோனா பெருந்தொற்று இணைய தளம் மூலம் கல்வி என்பதை அவசியமாக்கியிருக்கிற காலத்தில், பாஜக ஆட்சி நடக்கிற பல மாநிலங்களில் பல பள்ளிகளில் இணைய வசதியே இல்லை. மக்கள் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படுத்த இணையத்தை பயன்படுத்தும் அவசியம் பல தளங்களில் உள்ளது. அவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து முன்செலுத்துவதற்குப் பதிலாக, முக்கிய புள்ளிகள், எதிரிகள் பெயர்களை பட்டியலிட்டு உளவு பார்க்க, அவர்கள் அலைபேசிகளை அவர்கள் பயன்படுத்துவது போலவே பயன்படுத்த, கோடிகளில் செலவு செய்கிறார்கள்.
நாடாளுமன்ற திரைகளுக்குப் பின்னால்தான் பெரும்பாலான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று மார்க்சிய ஆசான்கள் சொல்கிறார்கள். நாட்டு மக்கள் நலன்களை விட உளவு பார்ப்பது முக்கியம் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஆபத்தானது.
ஜெர்மனி (ஹிட்லர்), இத்தாலி (முசோலினி), ஸ்பெயின் (ஃப்ரான்கோ), சிலி (பினொசே), இந்தோனேஷியா (சுகர்தோ) ஆகிய நாடுகளின் பாசிச அரசாங்கங்கள் பற்றி ஆய்வு செய்த அய்க்கிய அமெரிக்க எழுத்தாளர் லாரன்ஸ் பிரிட், இந்த ஆட்சிகளின் பொதுவான பண்புகளாக 14 அம்சங்களை முன்வைத்து, அவை பாசிசத்தின் அடையாள இயல்புகள் என்கிறார். அவற்றுடன், தனது அதிகாரத்தில் சற்றும் திருப்தியடையாத, முழுமுற்றூடான அதிகாரத்துக்கான வெறி பிடித்த தணியாத தேடல் எனும் பண்பையும் சேர்த்து மோடியின் ஆட்சியில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வெறி பிடித்த தேடலை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும். சற்றே அனுமதித்தாலும் நாட்டு மக்களின் சாதாரணமான, சகஜமான வாழ்க்கையே பாதாளத்துக்குள் சென்று விடும்.
பிகாசஸ் உளவு மென்பொருள் பிரச்சனையில் பிரான்ஸ் அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசாங்கமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை தலையீடுகள், இடையூறுகள் இன்றி நடப்பதற்கு ஏதுவாக மோடியும் அமித் ஷாவும் உடனடியாக பதவி விலக வேண்டும்

Search