நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் குரல்
கொள்முதல் நிலைய தொழிலாளர்களின்
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
நாகப்பட்டினம் மண்டலத்தில் 300 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
அவர்கள் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.40 வாங்குகிறார்கள் என்ற புகார் உண்டு. எந்த ஆட்சி வந்தாலும் விவசாயிகளிடம் பணம் வாங்கக் கூடாது என சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஆனால் நிரந்தர தீர்வுக்கு முயற்சிப்பதில்லை. இந்தப் பிரச்சனை பற்றி தொழிலாளர்கள் மத்தியில் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் குரல் என்ற அமைப்பு பேசியது.
அவர்களது பணி நியமனத்திலிருந்து பணி முடியும் வரை, அதாவது அவர்கள் மொழியில் ஒரு பருவத்திற்கு (குறுவை மற்றும் சம்பா பருவங்கள்) ஒரு லட்சத்திற்கு மேல் ஒரு கொள்முதல் நிலைய தொழிலாளர்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதில் லஞ்சம், மாமூல், அவர்களுக்கான பணப் பிடித்தம் போன்றவையும் அடக்கம். நெல் கொள்முதல் செய்தவுடன் அதனை ஏற்றி அனுப்ப லாரிகள் உடனுக்குடன் வராததால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து அதனால் எடை குறையும். அந்த இழப்பு தொழிலாளி தலையில் இதுவரை சுமத்தப்பட்டு வந்தது. பணம் கட்டாவிட்டால் அடுத்த பருவத்திற்கு வேலை கிடையாது என அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். அனைத்து பணப்பிடித்த உத்தரவுகளும் வாய்மொழி உத்தரவுகளே!
கடந்த சம்பா பருவத்தில் ஒரு ஏக்கருக்கு மூன்று லட்ச ரூபாய் வரை இந்த இழப்பு வந்திருக்கிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.50,000க்கு குறையாமல் பணப்பிடித்தம் வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் குரல் தொழிலாளர் மத்தியில் தொடர்ந்து பேசி, அந்த இழப்பிற்கும் தொழிலாளர்க்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை ஆழமாக அவர்களிடம் பதிய வைத்ததன் விளைவாக இன்று ஏறத்தாழ ஆயிரம் ஊழியர்கள் பணம் கட்ட மாட்டோம் என உறுதியாக நிற்கிறார்கள். இது நுகர் பொருள் வாணிபக்கழக வரலாற்றில் பெரிய சாதனை. இது பற்றி ஜ÷லை 22 மற்றும் 23 தேதிகளில் நிர்வாக இயக்குநரிடம் பேசி ஓரளவு நிர்வாகத்தை பணிய வைத்துள்ளோம். பிரச்னை தொடர்கிறது. ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் குரல் பக்கம் நிற்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏறத்தாழ 120 கொள்முதல் நிலையங்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் ஆளெடுக்காமல் அலுவலகம், கிடங்குகளில. பணியாற்றுவோரை பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் ஆள் எடுக்க வைத்து விட்டோம். இதனால் ஏறத்தாழ 300 குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும். இன்றும் நிர்வாகத்திடம் பேசி தொழிலாளர் ஆதரவு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். தொமுச நமக்கு எதிராக வேலை செய்கிறது.
நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் குரல் தொழிலாளர் நலன் காப்பதற்கான தனது முயற்சிகளை தொடர்கிறது. – சண்முகவேல்