“மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் ஜனநாயகம்”
மியான்மரில் நடப்பது என்ன?
ஆர்.வித்யாசாகர்
தற்போது மியான்மர் என்று அறியப்படும் நாடுதான் அக்காலத்திய பர்மா. 1952ல் தமிழில் வெளியான 'பராசக்தி' திரைப்படம் பார்த்தவர்களுக்கு பர்மாவிலிருந்து இரண்டாம் உலகப்போர் சமயத்தில் விரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பர்மிய அகதிகளை பற்றி நன்றாகத் தெரியும்.
(ஒரு புறம் இங்குள்ள தீண்டாமையும், சாதியக் கொடுமைகளும் தாங்க முடியாமல் தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து அங்கே சென்றவர்கள், நான்கைந்து தலைமுறைகளாக அங்கே வசித்தவர்கள், மறு புறம் அங்கே வியாபாரம் செய்ய சென்ற காசுக்கடை நகரத்தார் மற்றும் படித்த வர்க்கத்தினர்). இக்கால இளைஞர்களுக்கு பரிச்சயமான அத்தோ உணவுக்கடைகள், பர்மா பஜார்கள், புதுக்கோட்டை மாத்தூர் பிலிகன் முனீஸ்வரர் கோயில், (பர்மாவில் பிலிகன் என்ற இடத்திலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் வழிபடும் கோயில்) போன்றவை பர்மாவை நினைவு படுத்தக்கூடியவை. 1962லும், அங்கு ராணுவ ஆட்சி நிறுவப்பட்டபோது, சுமார் 150,000 தமிழர்கள் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு விரட்டி அடிக்கப்பட்டனர். அக்காலத்தில் பர்மாவில் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வசித்த இந்தியர்களில் 60% மேல் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே.இது அல்லாமல் சமீபத்தில் ஆகஸ்ட் 2017 முதல், வங்க தேசத்திலுருந்து பர்மாவிற்கு இடம் பெயர்ந்த சுமார் 10 லட்சம் ரோகிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். பல்லாயிரக்கணக்கானோர் மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இவர்கள் தற்போது அகதிகளாக வங்க தேசத்தின் காக்ஸ் பஜார் என்ற பிராந்தியத்தில் ஒரு சிறிய இடத்தில் 914000 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர். இந்தியாவிற்குள் அவர்கள் நுழைவதற்கு மோடி அரசாங்கம் மனிதத் தன்மை இன்றி விதித்த தடைகள் நாம் அறிந்ததே. மியன்மரில் ராணுவம் இதுவரை அதனுடைய வரலாற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தற்போது உள்நாட்டு மக்களையே உள்நாட்டில் அகதிகளாக்கி பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. மிக மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் மியான்மர் ராணுவம் எனும் அதி பயங்கரமான ஆதிக்க வெறி வைரஸ் ஒரு புறமும், மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் மறு புறமும், மக்களை மத்தளம் போல் தாக்கிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் ராணுவ ஆட்சி
நீண்ட நெடிய காலமாக சர்வாதிகார ராணுவ ஆட்சியையே சந்தித்துக்கொண்டிருக்கும் மியான்மர் மக்கள் ஜனநாயக உரிமைகளுக்காக ஏங்கி தவித்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, 2011 முதல் ஜனநாயக அமைப்பு முறை ஏற்பட்டதை போன்ற தோற்றம் உருவாக ஆரம்பித்தது. ராணுவத்தின் கை ஓங்கி இருப்பினும், பல தடைகளுடன் ஜனநாயகம் போல் தோற்றமளித்த ஒரு அரசு அமைந்தது. கரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் 2020 நவம்பரில் நடந்த தேர்தலில் முதன் முறையாக ஆட்சியமைக்கத் தேவையான395-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ராணுவ ஆட்சிக்கு ஆதரவான கட்சியும், ராணுவத்தால் நியமிக்கப்படும் 25 சதவிகித உறுப்பினர்களையும் சேர்த்து ராணுவத்திற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேசிய ஜனநாயக லீக் கட்சி நாடாளுமன்றத்தை கூட்ட இருந்த நேரத்தில், 2021 பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. ஒருவருட காலத்திற்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டிவந்தது. இந்தநிலையில், சில வாரங்களாகவே அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துவந்தது. அதையே காரணம் காட்டி ஜனநாயகம் மீண்டும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் மற்றும் முக்கியத் தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிரடியாகக் கைதுசெய்தது. இதை எதிர்த்து கிளம்பிய மக்கள் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
இதுவரை 912 பேர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 6770 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 75 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 1000 குழந்தைகள் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம் தெரிவித்துள்ளது. குழைந்தைகளை பிணைய கைதிகளாக வைத்து பெற்றோர்களை மிரட்டும் தந்திரத்தை மியான்மர் ராணுவம் பயன் படுத்தியது. (இந்தியாவில் கூட இது போல் காஷ்மீரில் சமீபத்தில் நடந்ததை நாம் கேட்டிருக்கிறோம்).
இது வரை வெளியில் சொல்லப்படாத பல கிரிமினல் குற்றச்சாட்டுகள் (14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில்) சுமத்தப்பட்டு, ஆங் சாங் சூகி நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். வெளிப்படையாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு, அவர் சட்டத்திற்கு புறம்பாக வாக்கி டாக்கி இறக்குமதி செய்து பயன்படுத்தினார், மற்றும் பேரிடர் சட்டம் அமுலில் உள்ளபோது, கொரோனா விதிமுறைகளை மீறினார் என்ற அற்ப குற்றச்சாட்டுகளாகும்.
அரசு வெளியிடும் செய்தித்தாளை தவிர, பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம், பேஸ் புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள், போன்றவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.
ஆங் சாங் சூகியின் மூத்த ஆலோசகரும், வழக்கறிஞரும், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளருமான நியான் வின் சிறையிருக்கும்போதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூலை 20, 2021 அன்று மருத்துவமனையில் காலமானார்.
காலனி ஆதிக்கத்தின் அடையாள சின்னமாக நிலவும், யாகோனிலுள்ள இன்செய்ன் சிறைச்சாலையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க கூறி பெண் கைதிகளால் துவக்கப்பட்டு, அரசியல் கைதிகள் , சர்வாதிகாரம் ஒழிக, புரட்சி ஓங்குக என்கிற அறைகூவல்களோடு பெரும் எதிர்ப்பு போராட்டங்களை கட்டி அமைத்துள்ளனர். சிறை அதிகாரிகளில் சிலர் கூட இந்த போராட்டங்களை ஆதரிப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
ராணுவ ஒடுக்குமுறைக்கு அஞ்சி, இதுவரை 230, 000 மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம் மதிப்பீடு செய்திருக்கிறது.
அப்பாவி பொது மக்களை தாக்குவதோடு நில்லாமல், மோதல் பகுதிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் செல்வதை ராணுவம் தடை செய்திருக்கிறது. மக்கள் தங்கி இருக்கும் முகாம்களையும் , மக்கள் தங்கியிருக்கும் தேவாலயங்களையும் குண்டு வீசி தகர்த்திருக்கிறது. உணவுப்பொருட்கள், மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் எடுத்துவரும் அவசர ஊர்தியையும் எரித்திருக்கிறது.
ஏற்கனவே மிக மோசமான நிலையில் இருக்கும் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நிலைமை, நடந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டங்களாலும், ஒத்துழையாமை இயக்கங்களாலும் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது. மருத்துவ மனைகள் மூடப்பட்டிருக்கின்றன. மருத்துவர்கள் கூட ராணுவத்தால் தாக்கப்பட்டிருக்கின்றனர். மருத்துவ மனைகளை ராணுவம் கைப்பற்றி இருக்கிறது.
இதே நேரத்தில் கொரோனாவும் மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. போதுமான ஆக்ஸிஜன் இல்லை. போதுமான தடுப்பூசிகள் இல்லை. மக்கள் பல வகைகளிலும் மிக மோசமான, ஆபத்தான வாழ்க்கை நிலைமைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அமைதியாகப் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுத்து சில ராணுவ அதிகாரிகளும், காவல் துறையினரும் தங்கள் பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள். சிலர் மக்கள் இயக்கங்களிலும் சேர்ந்திருக்கின்றனர்.
புதியதாக பூத்த ஜனநாயகம் ஏன் பிடுங்கி எறியப்பட்டது?
1948 ஜனவரியில், மியான்மர் நாடு விடுதலை அடைதந்ததிலிருந்து ,ராணுவ ஆட்சி, உள்நாட்டு போர், வெளி உலகத்திலிருந்து தனிமை படுவது, பரந்துபட்ட வறுமை போன்ற பிரச்சனைகளால் அங்குள்ள மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.
பிப்ரவரி 1, 2021, மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடத்திக்கொண்டிருந்த ஆங் சான் சூகி கட்சியின் அரசு ராணுவ சதியால் வீழ்த்தப்பட்டது. 50 வருடங்களுக்கும் மேலாக மியான்மரை ஆண்டுவந்த ராணுவத்தின் இரும்புக்கரங்கள், மீண்டும் ஒருமுறை அதிகாரத்தை இறுக்கிப் பிடித்தன, புதிதாக அங்கே பூத்த ஜனநாயகம் பிடுங்கி எறியப்பட்டது. மியான்மர் ஏன் இப்படி ஆக்கப்பட்டிருக்கிறது?
தமிழ் நாடு மாநிலத்தின் மக்கள் தொகையை விட குறைவாக, 5.7 கோடி மக்கள் தொகையை கொண்ட தற்போதைய மியான்மர் தமிழ் நாட்டை போல சுமார் நன்கு மடங்கு நிலப்பரப்பை கொண்டது. சீனா, தாய்லாந்து, லாவோஸ்,இந்தியா, வாங்க தேசம் ஆகிய ஐந்து நாடுகளுடனான எல்லையை கொண்டது மியான்மர். இது பூகோள அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது.
மியான்மர் கிட்டத்தட்ட 135 இன குழுக்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. பாமர் என்ற இனக்குழு மக்கள் தொகையில் சுமார் 68% கொண்டது. இதை அடுத்து இன்னும் 7 இனக்குழுக்கள் சேர்ந்து மொத்தம் 25 % மக்கள் தொகை. அரசு பதவிகளிலும், ராணுவ பதவிகளிலும் அதிக இடங்களை வகிப்பது, செல்வாக்கு மிக்க பாமர் குழுவை சேர்ந்தவர்களாகும். பர்மாவில் வசிக்கக்கூடிய சீனர்கள், இந்தியர்கள், ரோகிங்யா முஸ்லிம்கள் போன்றவர்கள் அங்கீகரிக்கப்படாதவர்களாகும். இதர சிறுபான்மை இனக்குழுக்கள் வளர்ச்சி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லாமல் பல்வேறு வடிவங்களில் பாகுபாடுகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள். ரோகிங்யா போன்ற குடியுரிமை அற்ற மற்ற அங்கீகரிக்கப்படாத இதர குழுக்களின் மோசமான நிலைமை பற்றி சொல்லத் தேவையில்லை. மியான்மர் மக்களின் பெரும்பான்மை மதம் புத்த மதம். சுமார் 89% மக்கள் புத்த மதத்தை சார்ந்தவர்கள். மியான்மரில் நடக்கும் நிகழ்வுகளை புரிந்து கொள்ள மேற்கூறிய பின்னணி மிகவும் அவசியம்.
காலனி ஆதிக்க ஆங்கில ஏகாதிபத்தியம் 1886ல் பர்மாவை கைப்பற்றிய பிறகு, 1937 வரை அதை பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகவே தன் ஆதிக்ககத்தின் கீழ் வைத்திருந்தது. பர்மாவின் வித்தியாசமான கலாச்சாரம், அரசியல் போன்றவற்றை கணக்கில் கொள்ளவில்லை. இந்தியா குடிமை பணி அதிகாரிகள் அங்கு அரசுப்பணிகளில் நியமிக்கப்பட்டனர். எல்லை தடை அற்ற நிலையில், பல்லாயிரக்கணாக்கான தொழிலாளர்களும், வியாபாரிகளும், முதலாளிகளும் அங்கு சென்றனர். பர்மிய தேசிய போராட்டங்களில் இந்தியர்கள் தாக்கப்பட்டனர். பர்மா பர்மியர்களுக்கே என்பது, தற்போதைய ஆங் சான் சூகியின் தந்தையாகிய ஆங் சான் அவர்களால் தலைமை தங்கப்பட்ட பர்மா தேச விடுதலை போராட்ட அறைகூவலாக இருந்தது. பல்வேறு சமூக பதற்றங்கள் காரணமாக 1930 முதல் அங்கு ஏற்பட்ட கலவரங்களால், 1937ல் பர்மாவை தனி பகுதியாக்கி, காலனி ஆதிக்கம் அறிவித்தது.
1939ல் நிறுவப்பட்ட பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரான ஆங் சன் இரண்டு முறை கட்சியை விட்டு விலகி பிறகு மக்கள் புரட்சிகர கட்சியை நிறுவினார்.
1941ல் ஆங் சான் அவர்களுடன் 30 தோழர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் சேர்ந்து, ஏகாதிபத்திய ஜப்பானிடம் பயிற்சி பெற்று "பர்மா விடுதலை படையை" தோற்றுவித்தனர். ( பர்மா விடுதலை அடைந்த பிறகு இப்படையே அங்கு ராணுவத்தின் முதுகெலும்பாக அமைந்தது).
ஜப்பானிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் செயல் பட்ட ஆங் சான், பிரிட்டிஷ் காலனியவாதிகளின் ஆதரவாக செயல் படத் துவங்கி, நாடு விடுதலை அடைவதற்கு ஒருவருடம் முன்பே 1947ல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை கொலை செய்ததில் பிரிட்டிஷ் காலனியவாதிகளின் கை இருந்ததாக கூறப்படுகிறது.
1937ற்குப்பிறகு தனி நாடாளுமன்றம் போன்ற உரிமைகள் வழங்கப்பட்டு பர்மா பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் நேரடி ஆட்சியில் தனி நாடாக ஆக்கப்பட்டது. இரண்டாம் உலகப்ப்போரில், 1942 முதல் 1945 வரை பர்மாவில் சில பகுதிகள் ஜப்பானிய காலனி ஆட்சியின் கீழ் வந்தது. அது 1945ல் மீண்டும் பிரிட்டிஷ் காலனிய சக்திகளால் கைப்பற்றப்பட்டது. 1948 ஜனவரியில் பர்மா ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை அடைந்தது. ஆனால் இது இந்தியாவை போல ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியால் இயக்கத்தால் உருவாகவில்லை. பர்மாவினுடைய ராணுவப்படையால் தான் சாத்தியமாயிற்று.
நாடு விடுதலை அடைந்ததில் பர்மாவின் சுதந்திர படையின் கீழ் செயல்பட்ட "தட்மடாவ்" (Tatmadaw) என்று அழைக்கப்பட்ட ஆயுதப்படை மிக முக்கிய பங்காற்றியது என்று வரலாறு கூறுகிறது. 1948 முதல் 1958வரை ஒரு அரசியல் அமைப்பு சட்ட ஜனநாயக நாடாக விளங்கிய பர்மா, நாட்டில் ஏற்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கலவரங்கள், கட்டுப்படுத்த முடியாத உள்நாட்டு போர், ஊழல், மோசமான நிர்வாகம் போன்ற சூழலில், அப்பொழுதைய பிரதம மந்திரி, 1958ல் ஒரு காபந்து அரசாங்கம் அமைக்கும் படி ராணுவத்தை அழைத்தார்.
1960ல் நடந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இரண்டு ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. 1962ல், ராணுவ சதியால் ஜெனரல் நீ வின் தலைமையில் ஒரு ராணுவ சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டம் நீக்கப்பட்டு, தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு ஜனநாயக நாடாக மலர்ந்த பர்மா, ராணுவ சர்வாதிகார ஆட்சியாக மாற்றம்ப்பட்டது.
1962 முதல் 1974 வரை ராணுவ சர்வாதிகார ஆட்சி நிலவிய பர்மாவில், 1974ல் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த “பர்மா சோசலிச திட்ட கட்சி” என்ற ஓற்றை கட்சி ஆட்சிமுறை, அரசியலமைப்பு சர்வாதிகாரம் என்ற பெயரில் 1988 வரை நடைபெற்றது.
உள்நாட்டு பிரச்சனைகள் எதையும் ராணுவத்தாலோ ராணுவ ஆட்சியினாலோ தீர்க்கமுடியவில்லை. உள்நாட்டில் பாகுபாடுகளினால் பல இன குழுக்கள் ஆயுதமேந்தி போராடின. சில குழுக்களை ராணுவமே ஆதரித்து அவர்களுக்கு ஆயுதம் அளித்து இனக்குழுக்களிடையே மோதலை ஏற்படுத்தியது. குடியுரிமை சட்டத்தின் மூலம் ரோஹிங்கியா போன்ற மக்களுக்கும் இதர சில சிறுபான்மை இனக்குழுக்களுக்கும் குடியுரிமை பெறுவது தடுக்கப்பட்டது. அவர்களுக்கு அரசியல் உரிமைகள் ஏதும் கிடையாது. மருத்துவ வசதிகள் பெறமுடியாத நிலையில் பலர் இருந்தனர்.
ராணுவ சர்வாதிகார ஆட்சி என்பதால் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் பர்மாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன. வளர்ச்சி இன்மை, வேலை இன்மை, வறுமை, பெரும்பான்மை சிறுபான்மை குழுக்களை அடக்குவது போன்ற பல்வேறு நிகழ்வுகள் மக்களை போராட்ட விளிம்பிற்குத் தள்ளியது.
பர்மாவின் விடுதலை போரில் மிக முக்கிய பங்காற்றிய பர்மா கம்னிஸ்ட் கட்சி 1953ல் தடை செய்யப்பட்டு, பிறகு ஆயுத குழுக்களாக மாறி செயல் பட்டுக்கொண்டிருந்தனர். 1988ல் நடந்த ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் 1989ல் ஆயுத குழுக்களும் முழுமையாக கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகார பூர்வமாக இப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி எதுவும் மியான்மரில் இல்லை.
பர்மா பொருளாதார ரீதியில் சீனத்தையே அதிகம் சார்ந்திருந்தது. ஆட்சியின் மலிந்து கிடந்த ஊழல், கள்ள சந்தைகள், உணவு பற்றாக்குறை அரசின் பண மதிப்பிழப்பு கொள்கைகள் (கள்ள பணத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1964ல் ஒரு முறை 50 மற்றும் 100 மதிப்புடைய பர்மா க்யாட் (Burma Kyat) செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிய 50, 100 நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. மறுபடியும் 1985ல் 100, 50, 20 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதில், 35, 25, மற்றும் 75 மதிப்புடைய நோட்டுக்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. மறுபடியும் 1987ல், ஆட்சி அதிகாரத்தில் இருந்த நீ வின் யாரிடமும் கலந்து கொள்ளாமல், 25,35 மற்றும் 75 மதிப்புடைய நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். - (இது நமக்கு இதே போல் வேறு ஒருவரை ஞாபகப்படுத்தலாம்) புதியதாக 45 மற்றும் 90 மதிப்பு கொண்ட நோட்டுக்கள் அச்சிடப்பட்டன)., போன்ற நடவடிக்கைகளால் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து, விலைவாசி விண்ணை முட்டியது. கள்ளப்பணம் ஏதும் வெளி வரவில்லை. இவற்றை எதிர்த்து நாடு தழுவிய மாணவர்கள் போராட்டம் 1988 ஆகஸ்ட் மாதத்தில் வெடித்தது.
இந்த போராட்டங்களில் சுமார் 3000 பேர் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதை ஒட்டி நீ வின் பதவி விலகி அதற்கு பதில் மற்றொரு ராணுவ சர்வாதிகார குழு பதவிக்கு வந்தது. 1989ல் இவர்கள் செய்த முதல் வேலை - பர்மா என்ற பெயர் காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சம், இது பர்மர் என்ற இனத்தை மட்டும் குறிக்கிற பெயர், எனவே அனைத்து இனக்குழுக்களையம் உள்ளடக்கிய மியான்மர் என்று பெயர் மாற்றம் செய்தது. ரங்கோன் என்பது யாகோன் என்று மாற்றப்பட்டது. பெயர் மற்றம் மட்டும் பெரிய மாற்றங்களை கொண்டு வந்து விடவில்லை.
1988 போராட்டத்தில் ஆங் சாங் சூகி ஒரு முக்கிய பங்காற்றினார். இந்த சமயத்தில் தான் அவர் வேறு சிலருடன் சேர்ந்து தேசிய ஜனநாயக லீக் கட்சியை உருவாக்கினார். 1989 முதல் 2010ல் விடுதலை செய்யப்படும் வரை 15 ஆண்டுகள் வீட்டு காவலிலும் , சிறை காவலிலும் அடைக்கப்பட்டார். 1991ல் வீட்டு காவலில் இருந்த பொழுதே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் விடுதலைக்காக பல் வேறு நாடுகளும், மக்கள் இயக்கங்களும் குரல் கொடுத்தது நாம் அறிந்ததே. ராணுவ ஆட்ச்சியாளர்கள் மீது சர்வதேச நிர்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மீண்டும் 2007ல் "காவி புரட்சி" என்று சொல்லக்கூடிய, காவி ஆடை அணிந்த புத்த மதத்தவர்கள், எரிபொருள் விலைவாசி உயர்வை கண்டித்து துவங்கிய பெரும் போராட்டம், ராணுவத்திற்கு மேலும் நிர்பந்தங்களை கொடுத்தது. சீனத்தை அதிகம் சார்த்திருப்பதற்கு பதிலாக மற்ற நாடுகளிலுமிருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டிய நிர்பந்தமும், பொதுவான சர்வதேச நிர்பந்தங்களும் ராணுவ ஆட்சிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 2008ல் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியது. இதன்படி ஜனநாயக ரீதியாக தேர்தெடுக்கப்பட்ட அரசு வந்தாலும், ராணுவத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது. மொத்தத்தில் 25% உறுப்பினர்கள் ராணுவத்தால் நியமிக்கப்படுவர். அரசியலமைப்பு சட்ட திருத்தம் எதுவாக இருந்தாலும் 75% ஆதரவு இருக்க வேண்டும். மேலும் ராணுவ ஆதரவு கட்சியான யூனியன் சாலிடாரிட்டி மற்றும் வளர்ச்சி கட்சி ( Union Solidarity and Development Party) (USDP),வசம் உள்துறை, பாதுகாப்பு மற்றும் எல்லை பகுதி குறித்த அமைச்சகங்கள் இருக்கும். ராணுவ ஆதிக்கத்தை தக்க வைக்கும் வகையில்தான், தட்மடாவ் இந்த அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியது.
2010 நடந்த பொதுத் தேர்தலை அடுத்து பெயரளவிற்கான ஒரு ஜனநாயக நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு 2011ல் ராணுவ ஆட்சி பதவி விலகியது.
முதல் முறையாக நாடு தழுவிய அளவில், பல கட்சிகள் பங்கேற்கும் வகையிலான, சுதந்திரமான தேர்தலாக கருதப்பட்ட தேர்தல் 2015ல் நடந்தது. இந்த தேர்தலில் ஆங் சங் சூகியின் கட்சி பெரும்பான்மை பெற்றது. அரசியல் சாசனத்தின் படி ஆங் சங் சூகி, அவருடைய இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்கள் என்பதால், தலைமை பதவி வகிக்க முடியாது. எனவே தலைமையில் வேறு ஒருவரை நியமித்தாலும் இவரே மறைமுகத் தலைவராக செயல்பட்டார்.
2020ல் நடந்த தேர்தலில் ஆங் சங் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி மிகப்பெரும்பான்மை இடங்களை வென்றது. ராணுவ அதிகார வர்க்கத்திற்கு இது ஒரு பெரும் அடி மற்றும் அச்சுறுத்தல். மொத்தம் 476 இடங்களில் ராணுவ ஆதரவு USDP வெறும் 33 இடங்கள் மட்டுமே கிடைத்தது தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கு 396 இடங்களில் வெற்றி. இதை கண்டு அஞ்சிய ராணுவம் எங்கே தங்கள் ஆதிக்கம் தளர்ந்து விடுமோ என்ற அச்சத்தில், ஜனநாய ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செல்லாக்காசாக்கி ராணுவ ஆட்சியை மீண்டும் நிறுவி இருக்கிறது. நாட்டிற்கு ஆபத்து வரும் பொழுது ராணுவம் அந்த சூழலை போக்க தன வசம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்ற அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி, தேர்தல் முறையாக நடைபெறவில்லை (அங்கிருக்கும் தேர்தல் ஆணையமும் இது நியாயமாக நடந்த தேர்தல் என்றுதான் குறிப்பிட்டுள்ளது). என்ற காரணம் நாட்டிற்கு ஆபத்து என்று கூறப்பட்டு ராணுவம் ஆட்சியை மீண்டு தன வசம் ஆக்கிக்கொண்டுள்ளது.
50 வருடங்களுக்கும் மேலாக மியான்மரை ஆண்டுவந்த ராணுவத்தின் இரும்புக்கரங்கள், மீண்டும் ஒருமுறை அதிகாரத்தை இறுக்கிப் பிடித்தன,
தற்போது அதிகாரத்தைப் பிடித்திருக்கும் கலகக்கூட்டத்தின் தலைவரான சீனியர் ஜெனரல் மின் ஆங் லயிங் (Min Aung Hlaing) மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். வெளியுலகத் தொடர்பின்றிச் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் 75 வயதான ஆங் சான் சூகி, சமீபத்தில்தான் முதன்முறையாக ஒரு வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆஜராகியிருக்கிறார்
உலக நாடுகளின் நிலைப்பாடு :
ராணுவ சதியை கண்டிக்கும் வண்ணம் ஐ.நா. சபையின் தீர்மானத்தை தன்னுடைய வீட்டோ அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்து விட்டது. ஜி 7 என்று சொல்லக்கூடிய, பெரும் அளவில் பொருளாதார வலிமை கொண்ட கனடா,பிரான்ஸ், ஜெர்மனி ,இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஒன்றிய அமெரிக்கா விடுத்த கூட்டு அறிக்கையில், உடனடியாக ஜனநாயக ரீதியாக தேர்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் கொண்டுவரவேண்டும், அரசியல் கைதிகளை சிறையிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சீனாவின் நிலைப்பாட்டிற்கு காரணமாக சொல்லப்பட்டது, சர்வதேச நிர்பந்தங்கள் மற்றும் பொருளாதாரத் தடை போன்றவை நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதாகும். அனால் சீனா தொடர்ந்து மியான்மரை ஐ.நா.சபையில், ரோஹிங்கியா முஸ்லீம் மீதான ஒடுக்குமுறை பிரச்சனை உட்பட ஆதரித்த நிலைப்பாடுதான் எடுத்தது. ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் ராணுவ சதியை கண்டனம் செய்திருக்கின்றனர். தன்னுடைய நிலைப்பாட்டில் ஒரு தூரத்தை கடை பிடிக்கும் சீனத்தை போலல்லாது, மியான்மரின் நீண்ட நாள் ஆதரவாளரும், அங்கு அதிக மூலதனம் இட்டிருக்கும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகளால் தனிமை படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட மியான்மார், சீனத்ததுடன் ஆயுதங்கள் அதிகம் வாங்குவதை எதிர்த்து ஒரு சம நிலையை கொண்டுவரும் விதத்தில், வெறுமனே அங்கு பிப்ரவரிகுப்பிறகு ஸ்திரத் தன்மை அடைவது குறித்து கவலை தெரிவித்துள்ளது. மியான்மார் ராணுவத்துடனான ஒத்துழைப்பு என்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளது.
இந்தியா மியான்மரில் நடந்த ராணுவ சதியை கண்டிக்கவில்லை. "மியான்மரில் நடைபெறும் மாற்றங்களை நங்கள் ஆழ்ந்த கவலையுடன் கவனத்தில் கொள்கிறோம். ஜனநாயகம் மீண்டும் தோன்றுவதற்கான நிகழ்வுப் போக்கிற்கு எங்கள் முழு ஆதரவு. என்று கூறியிருக்கிறது. மியான்மரிலிருந்து ஓடிவரும் அதிருப்தியாளர்கள் யாரும் இந்தியாவில் நுழைந்துவிடாமல் எல்லை பகுதிகளை மூடுவது என்பது அரசின் மிக முக்கிய நோக்கமாக இருந்தது. மார்ச் 18 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சகம், அகதிகள் இந்தியாவிற்குள் வந்து விடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு மிசோரம், நாகாலாந்து அருணாச்சல பிரதேஷ் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. இந்தியா மியான்மார் எல்லைப் பகுதிகளில் உள்ள ஒரே இனக்குழுக்களை சார்ந்த வர்களுக்கு இந்தியர்கள் உதவி செய்யக்கூடாது என்பது முக்கியமான நோக்கம். பா.ஜ .க. கூட்டணியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி இதற்கு சில அதிருப்திகளை தெரிவித்திருக்கிறது.
உலகத்திலிருந்து மீண்டும் தனிமைப்படாமலிருக்க மியான்மரில் தேர்தல் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்பது தட்மடாவ் என்று சொல்லக்கூடிய ராணுவத்திற்கு நன்றாகத் தெரியும். ஆங் சங் சூசி மீண்டும் அதிக பலத்துடன் வெற்றி பெற்றால் தான் அரசாங்கத்தின் மீது ராணுவத்திற்கு இருக்கும் ஆதிக்கத்திற்கு துணை போகும் சட்டங்களை மாற்ற முடியும். கூடிய விரைவில் அங்கு மீண்டும் ஜனநாயகம் மலர உலகம் முழுவதிலுமுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் குரல் கொடுக்க வேண்டும்.
ரோகிங்கியா முஸ்லீம் மக்கள் மீது வன்முறை, வெளியேற்றம் நடந்த சமயத்தில் அமைதி காத்த ஆங் சங் சூகி நமது கண்டனத்திற்கு ஆளானார் என்ற போதிலும், ஜனநாயகம் மீண்டும் மலர போராடும் மக்கள் தேர்தல் ஜனநாயகத்தை அடைவது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், ரோகிங்யா மக்கள் போன்றோருடன் ஒற்றுமையை கட்டுவது, சமூக அரசியல் தளம் முழுவதையும் ஜனநாயகப் படுத்துவது ஆகிய லட்சியங்களுக்காகவும் போராட வேண்டும்.
இந்திய அரசாங்கம் மியான்மரிலுள்ள ராணுவ அமைப்பிடம் தனக்குள்ள தொடர்புகளை துண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு இந்திய மக்கள் மியான்மரில் ராணுவ சாதிக்கு எதிராக போராடும் மக்களுடன் நாம் ஒருமைப்பாடு காட்டி நிற்கவேண்டும்.