என் உடல் என் தேர்வு
எஸ்.குமாரசாமி
பெண்ணின் வாழ்க்கை குடும்ப பந்தத்தால் அடையாளம் பெறும். பிள்ளைப் பேறால் முழுமை பெறும். சில ஆயிரம் ஆண்டுகளாக இந்த குப்பை கருத்து பெண்களின் தலையிலும் நுழைக்கப்படுகிறது.
ஆபிரகாமிக் மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் 'சாரா' பற்றி பேசுகின்றன. 90 வயது சாரா அவள் கணவர் ஆபிரகாம் உடன் சேர்ந்து பிள்ளை பெறுவாள் என அவள் காதில் சொல்லப்பட, 'சாரா', அட இது என்ன வேடிக்கை என சிரித்தாளாம். அவளுக்கும் ஆபிரகாமுக்கும் பிறந்த குழந்தையே அய்சக். இறைவன் விருப்பம் என்பதால், ஆபிரகாம் அய்சக்கை பலி தர இருந்தார் எனவும், வேண்டாம் மானிட உயிர்பலி என்ற இறை வாக்கு காதில் ஒலிக்க, அய்சக் பிழைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த 90 வயது சாரா பிள்ளை பெற்று, குடும்ப கடமையை, தாய்மை கடமையை நிறைவு செய்து, பெண் இனத்திற்கே வழிகாட்டி விட்டாளாம்.
இருபத்தியோராம் நூற்றாண்டு கேரளத்தின் சாரா, பிள்ளை உருவானதை ரசிக்கவில்லை, தாய்மை பட்டத்தை, தியாகி பட்டத்தை அறவே விரும்பவில்லை என 'சாராவின்' திரைப்படம் பரந்துவிரிந்த பார்வையாளர்களிடம் ஒலி ஒளிக்காட்சிகள் மூலம் எளிதாக சொன்னது. 'சாராவின்' திரைப்படம் சாராவின் விருப்பங்களில், சாராவின் கனவுகளில், சாராவின் வாழ்க்கையில், சாராவின் உடல் தொடர்பான தேர்வுகளில் சமூக நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் எதிர்நீச்சல் போட்டு, சாரா வெற்றி பெறுகிறாள் என்ற கதையைச் சொல்லி உள்ளது. அந்த வகையில் அது வாழ்த்தி வரவேற்கப்பட வேண்டிய படமே.
உன் கனவு, உன் விருப்பம், உன் உடல், உன் தேர்வு என யோசித்தால், நீ சுயநலக்காரி என பெண்களுக்கு சொல்லப்படுகிறது. பாடுபட்டு பொருள் தேடி, வசதிகள் செய்து தந்து, உன்னை வாழவைக்கும் கஷ்டத்தில் ஆண் இருக்க, நீ மேக்கப் போட்டு, விரும்பியதை சாப்பிட்டு, விரும்பிய உடை அணிந்து, விரும்பியபடி திரிவது, குற்றம் குற்றம் என பெண்கள் தானாகவே கன்னத்தில் அறைந்து கொள்ள வேண்டும் என சமூகம் சொல்லித் தருகிறது.
ஆளுமை திறனுடன் பெண் இல்லாமல், அதிகபட்சம் அலங்கார பொம்மையாக, அழகு பதுமையாக ஆணுக்கு சாதகமான அதிகார சம நிலையைக் கேள்வி கேட்காமல் இருந்தால், ஆண் பார்த்துப் பார்த்து நல்லது செய்யும் போது, அதற்கு நன்றியோடு பெண் இருந்தால், யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்றுதான், ஆண் ஆதிக்க உலகம் சொல்கிறது.
சாரா என்ன வேலை செய்வது, என்ன தொழில் செய்வது, என்பதெல்லாம் தெரியாத பிள்ளைப் பிராயத்திலேயே, பிள்ளை பெற வேண்டாம் என யோசித்துவிட்டாள். சிறகு விரித்து பறக்க விரும்பிய அவள், 'குழந்தைகள் வேண்டாம் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு குழந்தைகளை கையாள தெரியாது. எனக்கு அவை அவசியமும் இல்லை' 'ஒருவரின் இறுதி லட்சியம் அவர் மறைந்த பிறகு, அவர் சமூகத்திற்கு தந்த பங்களிப்பிலிருந்து அவரை சமூகம் நினைவு கொள்ளவேண்டும் என இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகள் பெற்று அந்த குழந்தைகள் நினைவு கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்' என்பதாக அமையக் கூடாது என்கிறார்.
'சாராவின்' திரைப்படத்தில் பெண்கள் பெண்களின் எதிரியாகவும், ஆண்களே கூட்டாளிகளாகவும் காட்டப்படுவது, சங்கடமான விஷயமே. கூர்மை, முனைப்பு, தீவிரம் என முயன்று பெருந்திரள் பார்வையாளர்களை சென்று சேர்வதில் சிக்கல் வேண்டாம் என, இயக்குநர் கருதியிருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த திரைப்படத்தில் ஆண்மய்ய தாராளவாதம், மோசமான பெற்றோராய் இருப்பதைவிட, பெற்றோராக இல்லாமல் இருப்பதே மேல் எனவும், இயக்குனராக தனித் திறமை வேண்டும். ஆனால், பெற்றோராக அதற்கும் மேலான தெய்வீகமான திறமை வேண்டும் எனவும் சொல்லும்போது, பெற்றோராய் இருப்பது ஒரு மிகப்பெரிய தகுதி என்கிறது. இது படத்தின் மிகப் பெரிய பலவீனமே. ஜீவன், சாரா காதலித்து மணந்து கொள்ளும் ஆண். குழந்தை வேண்டாம் என காதலித்த காலத்தில் சாராவிடம் பேசும்போது, 'நம் வேலை, தொழில் வாழ்க்கை, நண்பர்களோடு நேரம் செலவழிப்பது, பயணம் செய்வது எல்லாவற்றையும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தால்தான், தன்னைப் பற்றியே நினைக்காமல் இருந்தால்தான், பெற்றோராக முடியும். என் தாய் தந்தை தலை முறையினர் போல் என்னால் அப்படி செய்ய முடியும் என்று தோன்றவில்லை' என்கிறார். அப்படியானால், பெற்றோராவதே சரியானவர்களின், பொறுப்பானவர்களின் வேலை, பெற்றோராகாமல் இருப்பது பொறுப்பற்ற செயல், பெற்றோராகாமல் இருப்பது சுயநலம் என்ற கருத்துக்கள் முற்போக்கான ஆண்கள் மூலம் முன்வைக்கப்படுகின்றன. சற்று உயர்ந்த இடத்திலிருந்து பிள்ளை பெற்றவர்கள், கொஞ்சம் தாழ்ந்த நிலையிலுள்ள பிள்ளை பெறாதவர்களை சகித்துக் கொண்டு, அனுசரித்து அரவணைக்கிறார்களாம்!
இது சிக்கலான கருத்துதானே. அதுவும் பெண்களுக்கு ஆபத்தான கருத்துதானே. எது சுயநலம்? தன் தோற்றம், தன் விருப்பம், தன் உடல், தன் தேர்வு என்று யோசிப்பதே சுய நலமா? அப்படி என்றால் வாழ்க சுயநலம் என பெண்கள் சொல்வார்கள். பிள்ளை பெறுவது, சமூக நலம் சார்ந்த பொறுப்பான செயல் என பெண்ணுக்கு போதனை செய்வது, 'தாய்மை' பீடத்தில் பெண்களை கட்டி போட்டு, அவள் கையையும் காலையும் தியாகி சங்கிலியால் கட்டிவிடுவதே ஆகும்.
சாரா, முட்டிமோதி தான் விரும்பும் வகை திரைப்படம் எடுக்கிறார். பெண் இயக்குநருக்கு 'உணர்ச்சிமய' அல்லது 'கலை மெருகூட்டப்பட்ட' படம் என்ற சட்டகத்தில் அவர் சிக்காமல், திடுக்கிட வைக்கும் திரில்லர் படம் எடுக்கிறார்.
சாரா, புகை பிடிக்கிறார், மது அருந்துகிறார், பள்ளிப்பருவ காலத்திலேயே, பையனுக்கு முந்திக்கொண்டு முத்தம் தருகிறார். காதலனிடம், அவன் கேள்விக்கு பதிலாக, ஆண் நண்பர்கள் எத்தனை பேர் என விரல்விட்டு எண்ணி கொண்டே போக, போதும் நிறுத்து என, ஜீவன் அலறுகிறார். பார்வையாளர்கள் பதட்டப்படவில்லை. சமூகம் மாறிவருகிறது. திரைப்படமும் சமூகம் மாற உதவுகிறது.
பெண்ணிடம் உன் உடல், உன் தேர்வு, உன் விருப்பம், உன் கனவு, உன் உரிமை என மனமார சொல்ல, சொன்னபடி பிறழாமல் நடக்க, ஆண்கள் கற்றுக் கொள்வோம்.