ஸ்டேன் ஸ்வாமி உயிரிழப்புக்கு
பாசிச மோடி ஆட்சியில் நிலவும்
நீதி பரிபாலன முறையே காரணம்
'ஒரு நாள் சுதந்திரம் மறுக்கப்பட்டாலும் அந்த ஒரு நாள் கூட பல நாட்கள்தான்' என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் குறிப்பிட்டார்.
84 வயதான, பார்க்கின்சன்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த ஸ்டேன் ஸ்வாமி பிணை கேட்டபோது, அவரது பிணை மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சமூகத்தின் கூட்டு நலன், மனுதாரரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமையை விட கூடுதல் முக்கியத்துவம் கொண்டது, அவரது மூப்போ, அவரது நலிவுற்ற உடல்நிலை என்று சொல்லப்படுவதோ அவருக்கு சாதகமாக அமைந்து விட முடியாது என்று சொன்னது. நான்கு முறை பிணை மறுக்கப்பட்டு அய்ந்தாவது பிணை மனு விசாரிக்கப்படும் முன்பு இந்திய ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கைகளும் இந்தியாவின் நீதி பரிபாலன முறையும் அவரை கொன்றுவிட்டன.
சங்கிகள் அகராதியில் அர்னாப் கோஸ்வாமி தேசப் பற்றாளர். ஸ்டேன் ஸ்வாமி நகர்ப்புற நக்சல்.
2018 ஜனவரி மாதத்தில் பீமா கொரேகானில் நடந்த ஒரு கூட்டத்தை ஒட்டி, சாதிய வன்முறையை தூண்டுவது, பிரதமர் மோடியை படுகொலை செய்யும் மாவோயிஸ்ட் சதி என்ற வழக்கில் மகாராஷ்டிரா காவல்துறை ஆகஸ்ட் 2018ல் ராஞ்சியில் உள்ள ஸ்டேன் ஸ்வாமியின் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தியது. அந்த சோதனைகளில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் என்று எதையும் காவல்துறையால் காட்ட முடியாததால், 2018 நவம்பர் மற்றும் 2019 பிப்ரவரி மாதங்களில் மகாராஷ்டிரா காவல்துறை சமர்ப்பித்த குற்றச்சாட்டுகளில் ஸ்டேன் ஸ்வாமி பற்றிய எந்த குறிப்பும் இல்லை. 2019 ஜ÷ன் மாதம் மீண்டும் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டபோதும் அவருக்கு எதிரான ஆதாரங்கள் என்று காவல்துறையால் எதையும் காட்ட முடியவில்லை.
2020 ஜனவரியில் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்குச் சென்றது. அதன் பிறகு, 2020 ஜ÷லை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு முறை விசாரணை, செப்டம்பரில் அழைப்பாணை, பின் அக்டோபரில் கைது, நேராக தலோஜா சிறை என அவர் அலைகழிக்கப்பட்டார். அவர் சிறை வைக்கப்பட்ட பிறகு அவர் உயிரிழக்கும் வரை அவரை ஒரு முறை கூட தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்யவில்லை. விசாரணை சிறைவாசிகள் அவர்கள் சாதாரணமாக வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள சிறையில் வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சிலவற்றை சுட்டிக்காட்டுகிற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர், ஸ்டேன் ஸ்வாமி அவரது வசிப்பிடமான ராஞ்சியில் இருந்து மும்பைக்கு சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது அவரை மென்மையாகக் கொல்வதாகும் என்கிறார்.
அக்டோபர் கடைசி வாரத்தில் ஸ்டேன் ஸ்வாமியின் பிணை மனு நிராகரிக்கப்படுகிறது. நவம்பரில் அவர் பிணை கேட்டு செய்த மனு 2021 மார்ச் மாதம் நிராகரிக்கப்படுகிறது. மும்பை உயர்நீதிமன்றத்தில் அவரது மனு மே 2021ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு தள்ளிப் போடப்பட்டு வந்தது.
இடைப்பட்ட காலத்தில் நெரிசலுக்கு பெயர் போன தலோஜா சிறையில் அவரது உடல்நிலை தீவிரமாக மோசமடைந்தது. தலோஜா சிறை மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவர்கள் மட்டுமே மூன்று பேர் உள்ளனர். அவர்களில் ஒருவர் பரிந்துரைத்த அலோபதி மருந்துகள் ஸ்டேன் ஸ்வாமிக்கு தரப்பட்டன. ஸ்டேன் ஸ்வாமியின் இருதய செயல்பாடும் ரத்த ஓட்டமும் சீராக இருந்தன என்று சிறை நிர்வாகம் சொல்கிறது. கொரோனா தாக்கியது. தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழாயுடனான குவளை அல்லது உறிஞ்சு குழாய் கேட்டு நீதிமன்றம் செல்ல நேர்ந்தது. தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழாயுடனான குவளை அல்லது உறிஞ்சு குழாய் உடனே கொடுங்கள் என்று உடனே சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக, இதற்கெல்லாம் நீதிமன்றம் தலையிட வேண்டுமா என்று கேட்பதற்குப் பதிலாக, நீதிமன்றம் அந்த வழக்கிலும் மூன்று வாரங்களுக்கு விசாரணையை ஒத்திப்போட்டது. (உறிஞ்சு குழாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுவ தில் என்ன சட்டச் சிக்கலை அந்த நீதிபதிகள் எதிர்கொண்டிருப்பார்கள்?)
கொரோனா காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் என்பதால் அவருக்கு பிணை தரக் கூடாது என தேசிய புலனாய்வு முகமை சொன்னது. வயது, உடல்நிலை என எந்த விவரமும் நீதிமன்றத்தின் காதுகளில் ஏறவே இல்லை. அவரது அய்ந்தாவது பிணை மனு மீதான விசாரணை நடக்கவுள்ள நிலையில், கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள் தீவிரமடைய, ஜ÷லை 5 அன்று, விசாரணை சிறைவாசியாக மருத்துவமனையில் ஸ்டேன் ஸ்வாமி உயிரிழந்தார்.
குற்றச்சாட்டுகள் வனையப்படாமல், விசாரணை எதுவும் நடத்தப்படாமல், ஸ்டேன் ஸ்வாமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று சொல்கிற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகுர், நமது நாட்டின் ஆட்சியாளர்கள் பரிவுடன், மனிதத் தன்மையுடன், கருணையுடன், கண்ணியத்துடன் இருப்பது சாத்தியமில்லையா, அல்லது, அனைவரும் ஆட்சியாளர்களால் கவுரவ குறைவுக்கும் கண்ணிய குறைவுக்கும் உட்படுத்தப்படுவோமா, பிணை வழங்கும் நீதிபரிபாலன முறையில், ஒரு முட்டுச் சந்துக்கு வந்துகொண்டிருக்கிறோமா என்று கேள்விகள் எழுப்புகிறார். மனசாட்சி என எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருந்தால் இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு முகமை, தலோஜா சிறை நிர்வாகம், விசாரணை கைதிகளுக்கான, சிறை வாசிகளுக்கான சாதாரண உரிமைகளையும் உறுதி செய்யத் தவறிய நீதிமன்றங்கள் என ஒட்டுமொத்த நிறுவனங்களும் சேர்ந்துதான் அவரது மரணத்துக்கு காரணம் என்று, ஸ்டேன் ஸ்வாமியின் உயிரிழப்பும் நிறுவனரீதியான படுகொலையே என்று நாட்டின் ஜனநாயக சக்திகள் வரையறுக்கின்றனர். ஸ்டேன் ஸ்வாமியின் மரணத்துக்கு இட்டுச் சென்ற காரணங்கள் அய்நா வரை கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளன.
அவர் பொய் வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றால் அவர் உயிருடன் இருந்திருப்பார். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தால் அவர் உயிருடன் இருந்திருப்பார். ஒரு சிறைவாசிக்கு கிடைக்கக் கூடிய அடிப்படை வசதிகளும் உரிமைகளும் மறுக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பார். இரண்டே இரண்டு பேரின் அதிகார ஆணவத்துக்கு பாதர் ஸ்டேன் ஸ்வாமி பலியாக்கப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்த ஜ÷லை 5, 2021 இந்திய நீதிபரிபாலன முறையின் இன்னும் ஒரு கருப்பு நாள்.
நீதியை பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறும் நீதிமன்றங்கள்
தேசிய மனித உரிமை ஆணையம் தருகிற விவரங்கள்படி 2021 துவங்கி 5 மாதங்களில் நாடு முழுவதும் 1,067 பேர் காவல் படுகொலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜ், ஸ்டேன் சுவாமி ஆகியோர் வர மாட்டார்கள். (ஜெயராஜ÷ம் பென்னிக்சும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, அந்த நீதிபதி அந்த சரியான நேரத்தில் சிகிச்சைக்கு உத்தரவிட்டிருந்தால் அவர்களும் கூட பிழைத்திருக்கலாம்).
தேசிய குற்றப் பதிவு அலுவலகம் 2019க்கு தரும் விவரங்கள்படி, நாட்டில் உள்ள 1350 சிறைகளில் 4,03,739 சிறைவாசிகள்தான் இருக்க முடியும். ஆனால், டிசம்பர் 31, 2019 வரை 4,78,600 சிறைவாசிகள் இருக்கிறார்கள். இவர்களில் 3,30,487 பேர் விசாரணை சிறைவாசிகள். மொத்தமுள்ள சிறைவாசிகளில் தற்கொலை உள்ளிட்ட இயற்கைக்கு மாறான காரணங்களால் 165 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். விசாரணை சிறைவாசிகள் பலருக்கு பிணை கோருவதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் இருப்பதில்லை. ஆயினும் நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 90,000, மாவட்ட நீதிமன்றங்களில் 1,96,000க்கும் மேல் என பிணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. என்று தணியும் இவர்களின் சுதந்திர தாகம்?
ஸ்டேன் சுவாமியையும் சேர்த்து பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில், வரவர ராவ் பிணை பெற்றுள்ளார். இதுவும் மூப்பு, உடல் நலிவு ஆகிய காரணங்கள் அடிப்படையில் அவரது குடும்பத்தினரின் கடுமையான சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு பெறப்பட்டது. மற்றவர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை.
பழங்குடி இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் நக்சல்கள் என்று சொல்லப்பட்டு கைது செய்யப்படுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால்தான் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக பிணை மனு மீதான விசாரணையின் போது ஸ்டேன் ஸ்வாமி சொன்னார்.
ஹத்ராஸ் சிறுமி பாலியல் வன்முறை, அதன் பின் காவல்துறையினரே பிணத்தை எரித்தது ஆகியவை தொடர்பாக அந்த கிராமத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் உத்தரபிரதேச சிறையில் இருக்கிறார். அவரது தாய் இறந்த போது கூட அவருக்கு பிணை மறுக்கப்பட்டது.
சக்திவாய்ந்தவர்களிடம் தங்கள் சாதாரணமான உரிமையை கூட பறி கொடுத்தவர்கள், பழிவாங்கல்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் நீதிமன்றங்களில் தங்களுக்கான நீதியை பெற்று விடலாம் என்று நம்புகிறார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போவேன் என்று நீதி மறுக்கப்பட்டவர்கள் ஆற்றாமையில் பேசுவதை கேட்கிறோம். பாசிச ஆட்சி நடக்கும் காலங்களில் நீதிமன்றங்களின் கதவுகள் நீதிக்கு திறக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களே அந்த கதவுகளை மூடிவைத்ததால்தான் ஸ்டேன் ஸ்வாமி இன்று உயிருடன் இல்லை.
ஸ்டேன் ஸ்வாமி உயிரிழப்பு பற்றி எழுதுகிற நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், ஏப்ரல் 2019ல் தேசிய புலனாய்வு முகமை எதிர் ஜாஹ÷ர் அஹமது ஷா வடாலி என்ற வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை மறுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவின் ஆபத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். பிணை விதியாகவும் பிணை மறுப்பு விதிவிலக்காகவும் இருக்க வேண்டும் என்ற நீதிபரிபாலன கோட்பாடு பின்தள்ளப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான மீதான ஆதாரம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அவர் குற்றமற்றவர் என்று பிறகு முடிவு வந்தாலும் விசாரணை காலம் முழுக்க குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. இந்த உத்தரவின்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பிணை மனுக்கள் வரும்போது, முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சரி என்று நீதிமன்றம் எடுத்துக் கொள்ள வேண்டும். தான் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரத்தை குற்றம் சாட்டப்பட்டவர் தந்தால் பிணை கிடைக்கலாம். கைது செய்யப்பட்ட ஒருவர் தனக்கான ஆதாரத்தை தேட முடியாது என்பதும் குற்றம் செய்யவில்லை என்று இல்லாத ஒன்றை மெய்ப்பிக்கவும் முடியாது என்பதும் உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் வராமல் போனதற்கு இன்றைய அரசியல் சூழல்தான் காரணம். நடக்கிற ஆட்சிக்கு எதிராக ஏதோ சொல்லிவிட்டார்கள், செய்துவிட்டார்கள், அவர்கள் அதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும், அவ்வளவுதான் என்கிறது இன்றைய நீதிபரிபாலன முறை.
பறவைகள் கூண்டிலடைக்கப்பட்டாலும் அவை பாடும்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2019 வரை 5,134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014ல் இந்த எண்ணிக்கை 2,833. 2019ல் மட்டும் 1948 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020, 2021 விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும்.
ஒடுக்குமுறை இருக்கும் இடத்தில் எதிர்ப்பும் இருக்கும். பீமா கொரேகான் வழக்கில் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுரேந்திர கட்லிங், சுதிர் தவாலே, ஷோமா சென், மகேஷ் ரவுட், ரோனா வில்சன், அருண் பெரேரா, வெர்னான் கன்சல்வஸ், சுதா பரத்வாஜ், கவுதம் நவலகா, ஆனந்த் டெல்டும்டே, ஸ்டேன் ஸ்வாமி, ஹனி பாபு, சாகர் கோர்கே, ரமேஷ் கய்சோர், ஜோதி ஜக்தீப் ஆகியோரை குறிக்கும் வகையில் பிகே 16 என்ற சொல்லாடல் உருவாகியுள்ளது.
பறவை கூண்டிலடைக்கப்பட்டாலும் அது பாடும் என்று தனது கைது பற்றி ஸ்டேன் ஸ்வாமி சொன்னார். அவரது உயிரிழப்புக்குப் பிறகு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக வலுவான கேள்விகள் எழுந்துள்ள பின்னணியில் ஆங்கிலேயர் காலத்து தேசத் துரோக சட்டப் பிரிவு இன்னும் இருக்க வேண்டுமா என்று உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000த்தின் பிரிவு 66 எ 2015லேயே ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில் காவல்துறையினர் இன்னும் கூட இந்தப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்கின்றனர். விசாரணை நீதிமன்றங்களில் விசாரணைகள் கூட நடக்கின்றன. அதாவது நீதிபதிகள் மட்டத்தில் கூட இந்த பிரிவு ரத்தானது இன்னும் தெரியவில்லை என்று இதை படிக்க வேண்டும். இன்னும் கூட 11 மாநிலங்களில் 745 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்தப் பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்பு 229 வழக்குகள் இந்தப் பிரிவில் நிலுவையில் இருந்தன. ரத்து செய்யப்பட்ட பிறகு 1307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. (வாட்சப், முகநூல் பதிவுகள் பற்றி புகார் என ஒன்று வந்தால், புகாருக்கு அடிப்படையான அந்த பதிவு 66 எ பிரிவின் கீழ் குற்றம்தான் என்று சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி 'கருதினால்' அவர் வழக்கு பதிவு செய்து பதிவு போட்டவரை கைது செய்யலாம்). வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தவுடன், உச்சநீதிமன்றமே அதிர்ச்சியை தெரிவித்த பிறகு, மாநில அரசாங்கங்களுக்கும் காவல்துறையினருக்கும் இந்த சட்டப் பிரிவு ரத்தானது பற்றி விழிப்புணர்வு வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்புகிறது.
கைது செய்வது, சிறையில் அடைப்பது, துன்புறுத்துவது, எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுவது ஆகியவை மோடி அரசின் நோக்கம் மற்றும் பொழுதுபோக்கு என்பதால், மனித உரிமைகள் மீறல், அரசியல்சாசன அடிப்படை உரிமைகள் மறுப்பு ஆகியவற்றில் ஆள்வோரை மகிழ்விக்க, அதிகாரம் படைத்தோர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். சமூகம் கண்காணிப்புகள் மற்றும் சமனப்படுத்துதல்களால் (செக்ஸ் அன்ட் பேலன்சஸ்) ஆனது. பறவைகள் கூண்டிலடைக்கப்பட்டாலும் அவை பாடும்.
ஸ்டேன் ஸ்வாமியின் உடல்நிலை நலிவடைய காரணமாக இருந்த
தலோஜா சிறை நிர்வாகம் மீது விசாரணை நடத்தப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பீமா கொரேகான் பெயரால் கைது செய்யப்பட்டுள்ள
மனித உரிமைப் போராளிகள் அனைவரும்
விடுதலை செய்யப்பட வேண்டும்.
கொலைகார சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்
ரத்து செய்யப்பட வேண்டும்.