COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, August 1, 2021

 திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆயின?


செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் முதல் 

செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்த நாள் வரை 

மாநிலம் தழுவிய பரப்புரை பயணம்


வெள்ளையனே வெளியேறு என, ஆகஸ்ட் 9, 1942 அன்று இந்தியா முழுவதும் முழங்கியது. 2021 ஆகஸ்ட் 9 அன்று நாடு மோடி வெளியேறு என முழங்கும்.
இந்தியாவுக்கு நேர்ந்த  செயற்கைப் பேரிடரான மோடி அரசு, இயற்கை பேரிடரான கொரோனாவை விடக்கொடியது.


மக்கள் ஒற்றுமைக்கு, சமூக இணக்கத்திற்கு, பன்மைத்துவத்திற்கு, ஜனநாயகத்திற்கு, தேச பாதுகாப்புக்கு, மக்கள் நலனுக்கு மோடி அரசு விரோதமானது.
பெகாசஸ், என்ற அதிநவீன ஒற்று ஊடுருவல், நாட்டின் இறையாளுமைக்கு, குடிமக்க ளின் அந்தரங்க உரிமை உள்ளிட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு வேட்டு வைக்கிறது.
ஸ்டான் சுவாமி பற்றி உயர்வாகப் பேசலாமா, டெல்லி மாணவர் ஓராண்டு அநியாய சிறைவாசத்தை பிணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்ததை ரத்து செய்ய முடியாது எனச் சொல்லலாமா என, அரசு வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுகிறார்கள்.
வரலாறு நெடுக, ஒரு கட்டத்தில் பேராதரவு பெற்றவர்கள், ஒரு கட்டத்தில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர். விவசாயிகள், மாநில உரிமை, மக்கள் உரிமைப் போராளிகள், ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை நேசிப்பவர்கள், தேசப்பற்றாளர்கள், 21ஆம் நூற்றாண்டு தேவைகளும் வேட்கைகளும் உள்ளவர்கள் அனைவருமாக, மோடிக்கு வரலாற்றின் குப்பைத் தொட்டியை தயார் செய்துவிட்டார்கள்.
மோடி அரசின் முடிவைத் துரிதப்படுத்த, தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியும் துடிப்போடு பங்களிக்கிறது.
திமுக அரசுக்கு மக்கள் சார்பு அரசியல் அடிப்படையில் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு, மக்கள் சார்பு அரசியல் அடிப்படையில், எதிர்ப்பைக் கட்டியமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எதிர்க்கட்சி பாத்திரம் வகிக்க வேண்டியவர்கள் கூட்டணி தர்மத்தால் கட்டுண்டு போயுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல் என, அவர்கள் காத்திருக்கலாம்; மவுனம் சாதிக்கலாம்,
கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பக்கம் நிற்கிறது. வாக்குறுதிகளில் ஏன் பின்வாங்குகிறீர்கள், ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்விகளோடு முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம், உழைப்பவர்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி என்ற ஜெயலலிதா - பழனிசாமி கால தொடர்ச்சியை அனுமதிக்க முடியாது, இதோ மக்கள் சாசனம், உடனே நிறைவேற்றுக என வலியுறுத்தி, செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் முதல் செப்டம்பர் 28 பகத்சிங் பிறந்த நாள் வரை மாநிலம் தழுவிய பரப்புரை பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜ÷லை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை தயாரிப்பு கூட்டங்கள் நடத்தவுள்ளது.
திமுக அரசு, டாஸ்மாக் கடைகளை திறந்தது, எழுவர் விடுதலையை துரிதப்படுத்தாதது, நீட் தேர்வில் விட்டுக் கொடுத்தது ஆகியவை ஏற்கத்தக்கவையல்ல.
நிதிச்சுமை, பழைய அரசே பொறுப்பு என்று புகார் சொல்லி புலம்பித் தப்பிக்க திமுக அரசை விட முடியாது. மனம் இருக்கிறது நிலம் இல்லை என்ற கருணாநிதியின் பழைய வசனம், இப்போது மு.க.ஸ்டாலினுக்கு கைகொடுத்து உதவாது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்
என்ன ஆயின?
பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 என்று வாக்குறுதி என்ன ஆனது?
சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வசதி பயிர்கடன் நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி 33, கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளிலிருந்து பாக்கிகளை வசூலித்துத் தரும் வாக்குறுதி 34 என்ன ஆயின?
வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 150 என உயர்த்துவதாக சொன்ன வாக்குறுதி 42 என்ன ஆனது?
அரசுத்துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது பற்றிய பரிசீலனை என்ற வாக்குறுதி 153 என்ன ஆனது?
அனைத்து வகை தூய்மைப் பணியாளர் நலன் காப்பது என்ற வாக்குறுதி 285 என்ன ஆனது?
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது என்ற வாக்குறுதி 309 என்ன ஆனது?
சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர் ஆக்குவது என்ற வாக்குறுதி 313 என்ன ஆனது?
3.5 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்புவது உள்ளிட்ட 5.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை பட்டியலிட்ட துறைகளில் நிரப்புவது என்ற வாக்குறுதிகள் 187 முதல் 191 வரை என்ன ஆயின?
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்குவது என்ற வாக்குறுதி 503 என்ன ஆனது?
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பது என்ற வாக்குறுதி 504 என்ன ஆனது?
வருவேன் தருவேன் என சொல்லி வந்து விட்டீர்கள். அப்போது தருவதாக நல்லெண்ணத்தில் சொன்னோம், இப்பொழுது முடியாது என தெரிகிறது என்று சொன்னால், மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் சொன்னதை செய்யுங்கள் என தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள். எமது பரப்புரை அதற்கு உதவும்,
கம்யூனிஸ்ட் கட்சியும், இடது தொழிற் சங்க மய்யமும், மக்களுக்கான இளைஞர்களும், மக்களுக்கான மாணவர்களும், பெண்கள் அதிகாரமும். ஜனநாயக வழக்கறிஞர் சங்கமும், கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதோடு நில்லாமல், மக்களுக்கான போராட்டங்களையும் துவங்கிவிட்டனர்.
தூய்மைப் பணியாளர் நலன் காக்க இடது தொழிற்சங்க மய்யம் வழிநடத்திய வேலை நிறுத்தப் போராட்டமே, புதிய அரசு எதிர் கொண்ட, சட்டப்பூர்வ அறிவிப்புடன் நடந்த முதல் வேலை நிறுத்தப் போராட்டமாக இருக்கக் கூடும். அடுத்து மதர்சன், சான்மினா தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள் காத்திருக்கின்றன.
மாநில உரிமைகளை காக்க, மக்கள் நல உரிமைகள் காக்க, ஜனநாயக உரிமைகள் காக்க, பெண் உரிமை காக்க, விவசாயம் விவசாயிகள் கிராமப்புற வறியவர் நலன் காக்க, தொழிலாளர் நலன் காக்க, மக்கள் கோரிக்கை சாசனத்தை நிறைவேற்றுக என வலியுறுத்தி, கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், அம்பத்தூர், திருபெரும்புதூர் என  செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 28 வரை பரப்புரைப் பயணம் நடத்த கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மய்யம், மக்களுக்கான இளைஞர்கள், மக்களுக்கான மாணவர்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், பெண்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
போராடும் எதிர்க்கட்சி, மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை, அதனோடு நேசமும் நெருக்கமும் உள்ள மக்கள் திரள் அமைப்புகளை, மக்கள் சார்பு அரசியலை பலப்படுத்த, பரப்புரை பயணம் உதவும். பரப்புரை பயணத்தை நன்கு திட்டமிட கண்ணும்  கருத்துமாய்ச் செயல்படுத்த ஊழியர் கூட்டங்கள் உதவட்டும்.

Search