சார்பட்டா பரம்பரை
ரோசமான ஆங்கில குத்துச்சண்டை
கே.பாரதி
தலித் அடையாள அரசியல், தலித் போராட்ட அரசியல் பற்றி பேசும் படங்கள், குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்கவையாக வெளிவந்துவிட்டன.
மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாளில் தென் தமிழ்நாட்டு தலித் மக்களுக்காக நியாயம் பேசுகிறார். கர்ணனில், துவக்கம் முதலே தலித் குரல், தலித் எதிர்ப்பு அறுதியிட்டு எழுந்தது. சாதிய எதிர்ப்பு அரசு அதிகாரத்தோடு நேர் கொண்டு போதும் போர் வரை, மாரி செல்வராஜால் எடுத்துச்செல்லப்பட்டது.
வெற்றிமாறன், அசுரனில் நிலவுடமை சாதி ஆதிக்கத்திற்கு எதிரான, காலாகாலமான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை, துணிச்சலை, வீரத்தை, வேட்கையை, நேர்த்தியாக காட்சிப்படுத்தினார். இந்த எல்லா திரைப்படங்களுமே, தலித் மக்கள் மட்டுமே கண்டுகளிப்பவை என்றில்லாமல், தமிழ்மக்களின் பரந்த பிரிவினரை சென்று சேர்வதிலும் வெற்றியடைந்தன. கார்த்தி, ரஜினிகாந்த், தனுஷ் என்ற மக்கள் திரளை ஈர்க்கும் நடிகர்கள் கூட, இந்த வெற்றிக்கு பங்களித்தார்கள். சூர்யா ஜெய்பீம் எனப் புறப்படுகிறார்.
இப்போது இந்த வரிசையில், ஆர்யாவுடன் சார்பட்டா பரம்பரையில், வானம் விடிஞ்சிடுச்சி, காச்சுடா மேளத்த எனக் கொட்டி முழங்கி புறப்பட்டுவிட்டார் ரஞ்சித்.
சார்பட்டா பரம்பரை:
ரோசமான ஆங்கில குத்துச்சண்டை
சில விவரங்கள்
படத் துவக்கமே, சுமை தூக்கும் தொழிலாளியான கபிலன் (ஆர்யா) குத்துச்சண்டை போட்டியை காண அவசரஅவசரமாக கிளம்புகிறார். 1970 காலகட்டத்தில் வட சென்னையில் பிரபலமான விளையாட்டான குத்துச் சண்டையை மய்யப்படுத்தியே இயக்குநர் ரஞ்சித்தும், எழுத்தாளர் தமிழ் பிரபாவும் கதை எழுதியுள்ளனர். குத்துச்சண்டை போட்டியில் சார்பட்டா, இடியாப்ப, சுண்ணாம்புகுளம், கரிகாலன் பாய், மிலிட்டரி பாக்சிங் ஆகிய பரம்பரைகள் போட்டியிடுகின்றன. இதில் சார்பட்டா, இடியப்ப பரம்பரைக்கும் தொடர் போட்டிகள் நடக்கின்றன. இடியாப்ப பயிற்சியாளராக துரைக்கண்ணு (சுந்தர்) சார்பட்டா பயிற்சியாளராக ரங்கன் (பசுபதி) நடித்துள்ளனர். இடியாப்ப பரம்பரையான வேம்புலி தொடர்ந்து மூன்று வருடங்கள் வெற்றி பெறுகிறார். அவரை எதிர்க்கும் சார்பட்டா அணியினர் தொடர்ந்து தோற்கின்றனர்.
கபிலன் தன்னுடைய மானசீக குருவான ரங்கன் இடியாப்ப பரம்பரையினரால் அவமானப்படுத்தப்பட்டதால், வேம்புலியை சண்டை போட அழைக்கிறார். வேம்புலிக்கு முன்னதாக டான்சிங் ரோசை அவர் வென்று வேம்புலியுடன் மோதுகின்றார். படத்தின் சிறப்பான காட்சிகளில் இது முக்கியமானது. வேம்புலியை வீழ்த்த முற்படும்போது சார்பட்டா அணியின் தனிகா (வேட்டை முத்துக் குமார்) அவர்களின் சூழ்ச்சியால் ஆடை கழற்றி, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப் படுகிறார். போட்டி நடைபெறும்போது, அவசர நிலை அறிவிக்கப்பட, ரங்கன் (திமுக செயல்பாட்டாளர்) கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் இருந்து வெளியே வரும்போது, கபிலன், அவருடைய மகன் வெற்றிச்செல்வன் (கலையரசன்) உடன் சேர்ந்து, சாராய தொழிலில் ஈடுபட்டு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தனிகாவை வெட்டிவிட்டு சிறைக்குச் சென்று திரும்ப வந்து உடல் தகுதியற்றவராக மாறிவிடுகிறார். மீண்டும் ரங்கனை இடியப்ப பரம்பரை அவமானப்படுத்த, கபிலன் மீண்டுவந்து வேம்புலியை வெற்றி பெறுவதுதான் கதை. ஆர்யா ரஞ்சித்தின் கபிலனாக, கடின உழைப்பை செலுத்தி சிறப்பாக நடித்துள்ளார். ரஞ்சித்தின் திரை மொழி அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய வைக்கிறது. கலை, காட்சித்தொகுப்பு, இசை பணிகள் சிறப்பாக அமைந்துள்ளன. கதைப்படி போட்டிகளில் சாதி வேறுபாடின்றி கலந்து கொள்ளமுடியும். கபிலன் ரங்கனின் நேரடி மாணவர் அல்ல, ரஞ்சித்தால் கபிலன் ஏகலைவனாக சித்தரிக்கப்படுகிறார். அவர் முதலில் வீழ்த்துவது சார்பட்டா பரம்பரை ராமனைத்தான் (சந்தோஷ் பிரதாப்).
படத்தில் அம்பேத்கர், பெரியார், புத்தர் படங்கள் வருகின்றன. நாயகன், நாயகிக்கு மகிழ்ச்சியோடு வாங்கித் தருவது மாட்டுக்கறி பிரியாணி. படத்தில் முதலில் வேம்புலி காங்கிரஸ் கொடியின் கலருடன் உள்ள மேலாடை யோடு வந்து, சார்பட்டா பரம்பரையின், திமுக சின்னத்துடனுள்ள மேலாடை அணிந்த வீரரை வீழ்த்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடைசியில் வேம்புலி சார்பட்டா அணியின் கபிலன் வீழ்த்துவது அரசியல் குறியீடு.
இந்திரா காந்தியின் அவசரநிலை, திமுக எதிர்ப்பு, திமுக பிரிந்து எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தது என, அந்த கால அரசியல் தொடப்பட்டுள்ளது. கபிலன் வேம்புலியோடு ஆடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத தனிகா, சாதி ஆதிக்க நபராக நடந்துள்ளார். அவர் கபிலனை நோக்கி பேசும், 'என் வீட்ல மாடு செத்துப் போனா சொல்றேன் வந்து எடுத்துட்டு போ' என்ற வசனம் அதற்கு உதாரணம். கபிலன் போன்றோர் தானாக எழவேண்டும், தடைகள் தகர்க்க வேண்டுமென படத்தின் பாடல் சொல்கிறது.
இயக்குநரின் பெண் கதாபாத்திரங்கள் அம்மா பாக்கியம், (அனுபமா குமார்) கபிலனின் மனைவி மாரியம்மாள், (துசாரா) வெற்றிச்செல்வனின் மனைவி லஷ்மி (சஞ்சனா நடராசன்) கவனம் பெறுகிறார்கள். இந்த கதாபாத்திரங்கள், ஆண் கதாபாத்திரங்களை சுற்றியே காட்டப்பட்டாலும், அவர்களின் தனித்தன்மை தெரிகிறது. தன் மகன், தனது அப்பா போல பாக்ஸிங் கற்று, ரவுடியாக மாறி கொலை செய்யப்படக்கூடாது என பாக்கியம் நினைக்கும் போதும், தன் கணவனை சரமாரியாக திட்டும் போதும், முகபாவனையில் தன் உணர்வுகளை மாரியம்மா வெளிப்படுத்தும் போதும், வெற்றிச்செல்வனின் எண்ணத்தை கோபத்துடன் லட்சுமி சொல்லும்போது, அவர்களின் தேர்ந்த நடிப்பு வெளிப்படுகிறது. இவர்கள் தவிர டேடி (கெவின்), தங்கதுரை, மாறன், மீரான் போன்ற துணை கதாபாத்திரங்களின் தேர்வும் கதைக்கு பொருந்துகிறது. சில நேரத்தில் மாரியம்மாளின் நடிப்பு அனைவரையும் தாண்டி விடுகிறது.
அவமானம், பாகுபாடு, சாதி ஆதிக்கம் இவற்றையெல்லாம் மீறி வெல்வதே கபிலனின், இயக்குனர் ரஞ்சித்தின் கதை. திரைப்படத்தின் இறுதியில் அரசியல் பிரமுகர் ஒருவர், கபிலனுக்கு கருப்பு, நீல உடை கொடுத்து 'இந்த வெற்றி உன்து மட்டும் இல்லப்பா, நம்ம ஜனங்களுக்கானது ஆடி ஜெயிச்சு வா என்பார்' கபிலனும் நீல கையுறை அணிந்து அடித்து வெற்றி பெறுவார். கருப்பு, நீலம் வெற்றி பெற வேண்டுமென்று ரஞ்சித்தின் விருப்பம் வெளிப்படுகிறது. ரஞ்சித் திரைப்படங்களுக்கு பிறகே அம்பேத்கரின் புகைப்படம் கம்பீரமாக திரையில் காட்டப்படுகிறது. இதற்கு பல வருடங்கள் கடக்க வேண்டியுள்ளது. ரஞ்சித்தின் திரை மொழி வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் வரும் வசனம் போல் தவிர்க்கமுடியாத வெற்றி. 'இது நம்ம காலம்! எழுந்து வா' எனச் சொல்லும் ரஞ்சித் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளார்.
சார்பட்டா பரம்பரையின் நாயகன் எளிய தலித் மனிதன், உணர்ச்சிமயமானவன், தன் தாயிடமும், மனைவியிடமும் பெருமதிப்பும், பேரன்பும் கொண்டிருந்தாலும், ஆணாதிக்கம் தலைதூக்க, முரட்டுத்தனமும் செய்தவன். சாதியாதிக்கத்தால் ஆடைகள் களையப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவன். சாராயம் காய்ச்சி, கத்தி எடுத்து, சண்டை செய்து சிறைக்கு சென்றவன். குத்துச்சண்டை குருவான, ரங்கனிடம் அளவற்ற மதிப்பு கொண்டவன். ஆனாலும், அவராலேயே கைவிடப்பட்டவன். இந்த வகையில், பரிமாணங்கள் பலவற்றைக் கொண்ட கபிலன், மக்களில் ஒருவன். வரலாறு நெடுக, மக்கள் எழுந்தது போல் இந்த கபிலனும் மீண்டு எழுந்தான். தன் மனசாத்தான்களையும், சமூக அநீதிகளையும் வென்றிட துணிந்தான்.
கபிலன் வேம்புலிக்கு எதிராக இறுதி வெற்றிகொள்வது, தலித் மக்களின் போராட்ட கொண்டாட்டமாகிறது.
ஆதிக்க கொலைகள் தொடர்கின்ற தமிழ்ச் சமூகத்தில், தீண்டாமை நீடிக்கின்ற தமிழ்ச் சமூகத்தில், தலித் மக்களுக்கு எதிராக, வன்மமும், வஞ்சகமும், வெறுப்பும், இன்னும் தொடர்கிற தமிழ்ச்சமூகத்தில், கபிலன் வேம்புலியிடம் வாங்குகிற ஒவ்வொரு அடியும், வேம்புலிக்கும், வேம்புலிக்கு பின்னால் இருக்கிற ஆதிக்கத்திற்கும், இரு மடங்கு பலத்த அடியாக திரும்ப விழ வேண்டும், என்ற விருப்பத்தின் பிரதிபலிப்பாகவும், சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமைந்துள்ளது.
களப்போராட்டங்களின் குறியீடுகளை, அழகு மிளிர காட்சிப்படுத்தியுள்ள ரஞ்சித், பவுத்த தத்துவம் வழிநின்றும், அம்பேத்காரின் அரசியலை முன்னிறுத்தியும், நீயே ஒளி, நீயே வலி, ஓயாதினி உடம்பே, நீயே தடை, நீயே விடை சூடாக்கிடு நரம்பே என, தனக்குள் ஒடுங்குபவர்களை, சுருங்குபவர்களை, தனக்கானவர்களாக மாறும்படி, சார்பட்டா திரைப் படம் மூலம் அழைக்கிறார்.
ஏற்கப்பட வேண்டிய அழைப்புதான்.