பெட்ரோல் டீசல் விலையும்
கொரோனா அலையும்
உமாமகேஸ்வரன்
பெட்ரோல் டீசல் விலைக்கும் கொரோனா அலைக்கும் அப்படி என்ன தொடர்பு? உலகையே புரட்டிப் போட்ட கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் கடந்த வருடம் 2020 ஜனவரியில் தொடங்கி அக்டோபர் வரை நீடித்தது.
இரண்டாவது அலை பற்றிய எச்சரிக்கை உலக சுகாதார அமைப்பு (ரஏஞ) தொடங்கி, உலகின் மிகச் சிறந்த தொற்று நோய் நிபுணர்கள் முதல் இந்திய மருத்துவ அறிஞர்கள் வரை எச்சரித்தனர். அவசரகால பயன்பாட்டிற்கான தொற்று நோய் தடுப்பூசிகளும் பலகட்ட சோதனைகளுக்குப் பின் மக்கள் பயன்பாட்டிற்கு பல நாடுகள் உற்பத்தியை துவக்கின. இந்தியாவில் இந்த இரண்டாவது அலை 2021 பிப்ரவரி மாதம் மெதுவாகத் தொடங்கி மார்ச் மாதம் வேகமெடுக்க தொடங்கியது. 5 மாநில தேர்தல் பிரச்சாரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மோடி - ஷா வின் ஒன்றிய அரசு குற்றமய அலட்சியத்துடன் தடுப்பூசி தயாரிப்பு, திட்டமிடல், மக்களுக்கு தடுப்பூசி குறைந்த கால அளவில் செலுத்துதல், கூடுதல் சுகாதார கட்டமைப்பு வசதிகளை இரண்டாவது அலை தொற்றின் தன்மைக்கு ஏற்ப கையாளுதல் ஆகிவற்றை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவு லட்சக்கணக்கானவர்கள் மருத்துவ மனைகளில் படுக்கை இன்றி, ஆக்சிஜன் இன்றி செத்து மடிந்தார்கள். இரண்டாவது அலையின் குறியீடாய் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தெருவில், மருத்துவமனை வாயிலில் மணிக்கணக்கில் காத்துக் கிடந்ததும், அதன் உச்சமாக இறந்து போனவர்களை கங்கையாற்றிலும் யமுனையிலும் வீசி எறிந்த மனித அவலம் உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கியது. உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை தனது அட்டைப் படத்தில் மயானத்தில் இடமின்றி மக்கள் பிணங்களை எரிப்பதையும் ஆற்றில் வீசி எறியப்படுவதையும் பிரசுரித்தது. மோடியின் ஒன்றிய அரசின் கையாலாகாத, நிர்வாக திறமையற்ற, குற்றமய அலட்சியத்தை தலையங்கம் எழுதிச் சாடியது. உலகின் பிரபலமான ஆங்கில அச்சு ஊடகங்களும், காணொளி ஊடகங்களும் செய்தி வெளியிட்டு இந்திய அரசின் அவமானகரமான மனித உரிமை மீறலை கண்டித்தது .
மோடி - ஷா மற்றும் பாஜக உயர் தலைவர்கள் இந்த காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான தேர்தல் பேரணியில் பரப்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். இந்தியா காலங்காலமாக கடைபிடித்து வந்த 'அனைவருக்கும் இலவச தடுப்பூசி' என்ற கொள்கையை மாற்றி தடுப் பூசிக்கு விலை நிர்ணயம் செய்ததுடன், மாநில அரசுகளுக்கு அதிக விலைக்கும் ஒன்றிய அர சுக்கு குறைந்த விலைக்கும் விற்பனை செய்ய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து இரட்டை விலை கொள்கையை உருவாக்கியது வெட்கக்கேட்டின் உச்சம்.
மோடி அரசின் இந்த நாசகர திட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதன் உண்மையான கார்ப்பரேட் விசுவாச கோரமுகத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட் டியது. அதன் விளைவாக உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து தடுப்பூசி கொள்கையை கண்டித்ததுடன், இது தொடர்பான முழு விவரத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இது போன்றதொரு நெருக்கடியின் காரணமாக மோடி அரசு 'அனைவருக்கும் இலவச தடுப்பூசி' என்னும் கொள்கை முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆயினும் 27.06.2021 வரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 5%க்கும் கீழாகவே உள்ளது. இந்த நிலையில் மீண்டும் மூன்றாவது அலை ஜ÷லையிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ தொடங்கும் என்றும், அது பெருமளவில் குழந்தைகளை தாக்கும் எனவும் பெருந்தொற்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மூன்றாவது அலையின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். குறைந்தது 60% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மூன்றாவது அலையின் பேராபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். ஆனால் தயாரிப்பு வசதிகளை அதிகரித்தல், அரசு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல், மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மக்களுக்கு பெருமளவில் நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே இது சாத்தியம்.
ஆனால் கார்ப்பரேட்டுகளால் கார்ப்பரேட்டுகளுக்குகாக நடத்தப்படும் கார்ப்பரேட் ஆதரவு மோடி ஆட்சியில் வேலையின்றி, வாழ்வாதாரமின்றி, தொழில்கள் நசிந்து, பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் மூடப்பட்டு, சிறு வியாபாரம் சில்லறை வர்த் தகம் அழிந்து போய் இருக்கக்கூடிய சூழலில் கூட, மோடி அரசு வலதுசாரி கொள்கை வழி நின்று வர்த்தகம், லாபம், முதலாளிகளின் நலன், சந்தைப் பொருளாதாரம் ஆகிய வரம்புக்கு உள் ளேயே நின்று கொள்கை முடிவு எடுப்பதுதான் மிகவும் குரூரமானது. இதுதான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்திலும் பிரதிபலிக்கிறது. நாடே எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை பற்றி சிறிதும் கவலை இன்றி முடிவெடுக்கிறார் .
பெட்ரோல் விலை இன்று நாடு முழுவதும் சதமடித்து ரூ.100க்கு மேல் இருக்கிறது. டீசல் விலை சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது, சமையல் எரிவாயு உருளை ரூ.1000அய் நெருங்குகிறது. மக்கள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து விலையேற்றம் நிகழ்கிறது மே மாதம் மட்டும் 16 முறை ஏற்பட்டிருக்கிறது. 5 மாநில தேர்தல் காரணமாக 18 நாட்கள் உயர்த்தப்படாமல் இருந்தது. பெட்ரோல் விலை உயர்வு என்பது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக உயர்த்தப்படவில்லை; மாறாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் வரி உயர்வால் (கலால், செஸ் மற்றும் மதிப்பு கூட்டு வரி இன்னபிற) விலையேற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 100% வரி விதிக்கப்படுகிறது. சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் மானியம் வெட்டிச்சுருக்கப்பட்டு வெறும் 24 ரூபாயாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் நடுத்தர, கீழ் நடுத்தர, சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் உதிரி தொழிலாளர்களை கடுமையாக பாதித்திருக்கிறது.
இந்திய பொருளாதாரம் அதலபாதாளத் துக்குச் சென்றுவிட்டது. பெட்ரோல் டீசல் விலையேற்றம் அனைத்துப் பொருள்களின் விலையேற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் 28.06.2021 அன்று இந்த அநியாய பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்ட அறை கூவல் விடுத்ததுள்ளது. இந்திய பெருமுதலாளிகளின் சங்கமான இந்திய தொழில்கள் கூட் டமைப்பு தலைவர், இந்த விலை உயர்வு, பொருளாதார மீட்புக்கு எதிரானது, அது மேலும் மக்களின் நுகர்வு சக்தியை குறைத்து பொருளாதாரத்தை சீரழித்து விடும் என்கிறார்.
அய்சிஆர்ஏ (ஐஇதஅ) எனும் இந்திய முதலீட்டாளர்கள் கடன் தர நிர்ணய முகமை நிறுவனத்தின் தலைவர், ஒன்றிய அரசு வருமான இழப்பு இல்லாமலேயே பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4.50 குறைக்க முடியும் என்கிறார். ரிசர்வ் வங்கி கூறியுள்ள சில்லறை வர்த்தக விலையேற்றத்தின் அளவு 6.3% (மே மாதத்தில்) தாண்டி மக்கள் வருமானம் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார். பெட்ரோல், டீசல் அதிக நுகர்வு காரணமாக அரசுக்கு சென்ற ஆண்டை விட சுமார் ரூ.40,000 கோடி அதிக வருமானம் வரும், அதை விலை குறைப்புக்கு பயன்படுத்தினால் ரூ.4.50 குறைக்க முடியும் என்கிறார். மோடி அரசு ஊதாரித்தனமான (ரூ.20,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகம், ரூ.2,500 கோடி செலவில் படேலுக்கு சிலை அமைப்பு மற்றும் விரிவாக்கத் திட்டம், ராமர் கோவில் போன்ற) செலவுகளை கட்டுப்படுத்தாமல் மக்கள் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல் டீசல் மூலம் மட்டும் ஒன்றிய அரசுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. வரிவிதிப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், மோடி ஆட்சியின் கடந்த 7 ஆண்டு கால பொருளாதார கொள்கை முடிவுகள் அனைத்தும் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை பேணுவதாகவும், அவர்களின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு உதவுவதாகவும் உள்ளது. பணமதிப்பகற்றம், தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் வெட்டி சுருக்கி நான்கு தொகுதிகளாக சட்டம் இயற்றியது, விவசாய விரோத 3 விவசாய சட்டங்கள், வரிவிதிப்பு கொள்கையில் அப்பட்டமான முதலாளித்துவ சார்பு தன்மை ஆகியவை கார்ப்பரேட் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டவை. கடந்த 7 ஆண்டுகளில் நேர்முக வரி (தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வருமான வரி, மூலதன லாப வரி மற்றும் செல்வ வரி) விகிதம் மொத்த வரி வருவாயில் குறைந்து கொண்டே போவதும், மறைமுக வரிகள் (ஜிஎஸ்டி, கலால் வரி, மதிப்புக்கூட்டு வரி மற்றும் செஸ் என்னும் பிரேத்தியேக வரி) விகிதம் அதிகரித்து கொண்டே போவதும் இதன் வெளிப்பாடுகளே. கச்சா எண்ணெய் சர்வதேசச் சந்தையில் குறைந்து கொண்டே வருகின்றபோது (ஒரு பீப்பாய் 20 அமெரிக்க டாலர்களுக்கும் கீழே வந்தபோது கூட) அதன் விலையை குறைக்காமல், அதை வரி உயர்வு மூலம் சரிக்கட்டி நிதி பற்றாக்குறையை வரவு செலவுக் கணக்கில் 4% குறைவாகவே நிலை நிறுத்துவது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளையும் அந்நிய முதலீடு செய்பவர்களை திருப்திப்படுத்த எடுக்கும் ஒன்றிய அரசு எப்படி பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும்? அப்படியானால் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கட்டுப்படுத்தவே முடியாதா? வியட்நாம் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் வெல்லப்பட முடியாத அய்க்கிய அமெ ரிக்காவை அடிபணிய வைக்கவில்லையா? அந்த ஒற்றைச் சிறுமி அமெரிக்க குண்டு மழை பொழிவுக்கு அஞ்சி, அம்மணமாக அலறி ஓடும் நிழல் படக்காட்சி உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி, அமெரிக்க மக்களே தெருவுக்கு வந்து போர் நிறுத்தம் கோரவில்லையா? மக்கள் எழுச்சியின் முன் மண்டியிட்ட மகத்தான பேரரசுகளை அய்ரோப்பிய வரலாற்றில் கண்டதில்லையா? ரஷ்யப் புரட்சியில் ஜார் மன்னன் ஓடவில்லையா? வெகுமக்கள் வரலாறுகளைப் புதுப்பிப்பார்கள், புதிதாக எழுதவும் செய்வார்கள்.
பெருந்தொற்று முதல் அலை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை புரட்டிப்போட்டது. இரண்டாவது அலை மூச்சுக்காற்றுக்கு அலைய விட்டு பிணக்குவியலை எரியூட்டக்கூட இடமின்றி கங்கை நதியில் வீச விட்டது. மூன்றாம் அலை வீட்டுக்கதவை உரக்கத் தட்டி உறுமிக் கொண்டிருக்கிறது. இவற்றை மனித இனம் அறிவியலின் துணைகொண்டு அடியோடு வீழ்த்தும். மக்கள் அலை மகத்தான வெல்லப்பட முடியாத சாம்ராஜ்யங்களை வீழ்த்தி இருக்கிறது. மோடி அரசையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். இரண்டாவது அலையில் அதன் அறிகுறிகளை உணர முடிகிறதல்லவா, அதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வெறும் சிறுபொறியே.
பெட்ரோல் டீசல் வரி ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
சமையல் எரிவாயு உருளை மானியத்தை 40% என மீண்டும் உயர்த்தி நேரடியாக மானியம் வழங்கி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்
ஆட்டோ, சிறுகுறு தொழில்கள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பெட்ரோல், டீசல் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும்.
கோரிக்கைகளை வென்றெடுக்க மக்கள்திரள் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.