COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

தலையங்கம்

கருணாநிதி இனி ஆண்டவர்தான்!

கருணாநிதி ஆட்டம் கண்டுவிட்டார். சர்க்காரியா நாயகனுக்கு தன்னை கறையற்றவர் என்று காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் தனக்கு பங்கு இல்லை என்று சொன்னால் நம்ப யாருமில்லை என்று தெரிந்தாலும் ஒப்புக்காவது அப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜெயலலிதா ஓயாமல் சொத்துக் கணக்கு கேட்கிறார். கருணாநிதியும் காட்டியுள்ளார்.


கோபாலபுரம் வீட்டைத் தவிர தனக்கு வேறு சொத்து ஏதும் இல்லை என்கிறார். (அதைக் கூட அவர் காலத்துக்கு, அவர் மனைவி காலத்துக்குப் பிறகு மருத்துவமனை கட்ட எழுதிக் கொடுத்துவிட்டார்). 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி சம்பாதித்ததை எல்லாம் நல்ல காரியங்களுக்கு செலவிட்டுவிட்டதாகவும், சன் தொலைக் காட்சி பங்கு ரூ.100 கோடியில் வரி கட்டியது போக, பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக, அறக்கட்டளைக்கு தந்தது போக, ரூ.5.65 கோடியும் இன்னுமொரு ரூ.35.90 லட்சமும் வங்கியில் வைத்துள்ளதாகவும் சொல்கிறார். (கலைஞர் தொலைக்காட்சி குழுமம் யாருடையது?)

நல்ல கதை. நல்ல வசனங்கள். நம்புபவர் நம்புவர்.

எப்படியாயினும் அவர் வாழ்க்கை நடத்த முதலமைச்சராக மாதாமாதம் பெறும் ஊதியம் போக வங்கி வட்டியாகவே பெரும்தொகை கிடைக்கும். அவர் சொல்லியுள்ள சொத்துக் கணக்குப்படி, மாதம் கிட்டத்தட்ட ரூ.40,000 வட்டி மட்டும் வரும். அவருக்கும் அவரது மனைவிக்கும் உணவு, மருத்துவம், இன்ன பிற.... இது போதும்.

இப்படியிருக்க என்ன கணக்கில் விவசாய தொழிலாளர் ஓய்வூதியம் ரூ.500 என்று அறிவித்தார்? இதற்கு தினத்தந்தி தலையங்கம் கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பதாக முரசொலி சொல்கிறது. சொல்லேர் உழவர், நெல்லேர் உழவருக்கு தருவதாகச் சொன்ன ரூ.500ல், மாதம் ரூ.20 கொடுத்து ரேசன் கடையில் 20 கிலோ அரிசி வாங்கி, இலவச எரிவாயு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு, இலவச வண்ணத் தொலைக் காட்சியை கண்டு களித்து, உடல் நலமின்றி போனால் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச சிகிச்சை பெற்று, மீதியை விருப்பம் போல் செலவு செய்து பெருவாழ்வு வாழலாம் என்கிறது.

இந்தக் கணக்கு ஒருவருக்கு சொல்லப்படுவது இல்லை. ஒரு குடும்பத்துக்கு சொல்லப்படுவது. தமிழக கிராமப்புறத்தில் ஒரு குடும்பமே ரூ.500ல் வாழ வேண்டும் என்கிறாரா கருணாநிதி? சொத்துக் கணக்கு காட்டியதுபோல், ஒருநாள் செலவுக் கணக்கும் காட்டினால் தமிழக கிராமப்புற வறியவர்கள் அந்த ரூ.500அய் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று வழிகாட்டியதாக இருக்காதா?

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தமிழ்நாட்டின் வறியவர் பற்றி ஒரு கணக்கு தருகிறது. தமிழ்நாட்டில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளன என்று அதன் 2002 வருடத்திய கணக்கீடு சொல்கிறது.

இந்த 36,32,119 குடும்பங்களில் 28,65,777 குடும்பங்கள் தற்காலிக வேலைகளை நம்பி வாழ்க்கை நடத்துகின்றன.

இவற்றில் 7,21,706 குடும்பங்களின் மாத வருமானம் ரூ.250க்கும் குறைவு. 14,10,008 குடும்பங்களின் மாத வருமானம் ரூ.250 முதல் ரூ.499. 12,14,304 குடும்பங்களின் மாத வருமானம் ரூ.500 முதல் ரூ.1499. மொத்தத்தில் 35,32,935 குடும்பங்களின் மாத வருமானம் ரூ.2500க்கும் குறைவு.

2010ல் இந்தக் கணக்கில் பெரிய மாற்றம் இருக்கப் போவதில்லை. நிலைமை தீவிரமடைந்திருக்குமே தவிர, மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தின் பெரும் பகுதி வறுமையில் உழல்கிறது.

கருணாநிதியோ வாக்குறுதிகள் தந்து தமிழ் மக்கள் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு துரோகம் மட்டும் இழைத்து தம் மக்களுக்கு மட்டும் பதவி, பொருள் அனைத்தையும் சேர்த்து.... இப்போது விஞ்ஞான ஊழல் வெளிப்பட்டுவிட, அரசியல் சாணக்கியம் பேசவும் விசயம் இல்லாமல் போக வெலவெலத்துப் போகிறார். யாரிடம் போய் மீண்டும் வாக்குகள் கேட்பார்? டாடாவிடமோ, அம்பானியிடமோ கேட்டு என்ன பயன்? கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தால்தான் கம்யூனிஸ்டா? நானும் கம்யூனிஸ்ட் என்று மீண்டும் சொல்லிப் பார்க்கிறார். எடுபடவில்லை.

வேலூர் கூட்டம் தெம்பளிக்கும் என்று பார்த்தார். அங்கும் அவருக்கு ஜெகத்ரட்சகன் வடிவத்தில் தொல்லையே வரவேற்றது. தமிழக மக்கள் கருணாநிதியை ஆண்டவராக பார்க்கிறார்கள் என்றார். இருக்கிற தாக்குதல் கள் போதாதென்று புதிதாக ஒன்றா? ‘கடவுள் மறுப்பு பேசிய பெரியாரின் சீடன் நான், என்னை ஆண்டவர் என்று அழைக்காதீர்கள், ஆள்பவர் என்று அழையுங்கள்’ என்றார்.

ஆண்டவர் என்பது கடவுளைக் குறிக்கும் சொல் என்பதைக் காட்டிலும் அது இறந்த காலத்தை குறிப்பதே கருணாநிதிக்கு முதன்மை பிரச்சனையாக இருந்திருக்கும். பெரியாரின் கொள்கைகளை என்றோ புதைத்து விட்டவர் அவர். ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு அறிவிப்பு அவரை உலுக்கியபோது, அது சாணக்கியம் என்று பேசப்பட்டபோது, கருணாநிதி சொன்னார்: ‘ஜெயலலிதா சொன்னதை பிரம்மாஸ்திரம் என்கிறார்கள். ராஜ தந்திரம் என்கிறார்கள். உண்மையில் அவர்கள் மோகனாஸ்திரத்தில் மயங்கிக் கிடக்கிறார்கள்’.

பெண்ணடிமைத் தனத்தை, பெண்ணடிமைக் கருத்துக்களை தீவிரமாக எதிர்த்தவர் பெரியார். குறைந்தபட்ச அரசியல் நாகரிகம் கூட இல்லாமல், ஜெயலலிதாவை, அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டுக்களை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள திராணியில்லாமல், அவரை பெண் என்ற தளத்தில் நிறுத்தி நிலப்பிரபுத்துவ கழிசடை கருத்து கொண்டு வீழ்த்திவிடலாம் என்று மூன்றாம்தர முயற்சி எடுக்கும் ஒருவர் எப்படி பெரியாரின் சீடராக இருக்க முடியும்?

கருணாநிதியைப் போலவே வலுவிழந்து வருகிற மருத்துவர் ராமதாசும் கருணாநிதிக்கு தூதுக்கு மேல் தூது விடுகிறார். இந்த முறை தானே நேரில் சந்திக்காமல் சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தும் சாக்கில் ஜி.கே.மணியை சந்திக்கச் செய்து உடல்நலம் விசாரித்திருக்கிறார். அடித்துக் கொண்டிருக்கும் அரசியல் புயலில் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று ராமதாஸ் எதிர்ப்பார்க்க எல்லா நியாயங்களும் உண்டு. முத்தமிழ் அறிஞர் பதில் சொன்னார்: ‘நான் உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உறவைப் பார்த்துக் கொள்ளுங்கள்’. மிகச்சரியான வேண்டுகோள். பாமக - திமுக உறவை பாமக பார்த்துக் கொண்டால், கருணாநிதிக்கு ஓரளவாவது நம்பிக்கை வரும் என்று இரு தரப்பிலும் எதிர்ப்பார்ப்பு இருக்கலாம்.

ஆனால், முழுக்க முழுக்க மக்கள் பிரச்சனைகளை புறந்தள்ளிய ஓர் அரசு, வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மறுத்த ஓர் அரசு, மக்கள் போராட்டங்களை ஒடுக்க மட்டுமே முன்வந்த ஓர் அரசு, மக்கள் திட்டங்களில் கொள்ளையடிப்பதை பரவலாக்கி இருக்கும் ஓர் அரசு, என்னதான் கூட்டணி அமைத்தாலும் மக்கள் சீற்றத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாது.

கருணாநிதியே அடுத்த முறையும் முதல்வராவார் என்று ஸ்டாலின் எல்லா கூட்டங்களிலும் சொல்லி வருகிறார். ஆனால், கருணாநிதியை தமிழக மக்கள் இனி எப்போதும் ஆண்டவராகவே வைத்திருப்பார்கள்.

Search