COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும்



இரண்டு அறிவிப்பாணைகள்
 
அய்முகூ அரசு சமீபத்தில் வெளியிட்ட இரண்டு அறிவிப்பாணைகள் நாடு முழுதும் கடுமையான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளன. ஒன்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் கூலி ரூ.100க்கு மிகக் கூடாது என மத்திய ஊரக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணை. மற்றொன்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட கடற்கரை ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பாணை 2010.


மகாத்மா என்ற பெயரை சேர்த்து விட்டால், அது எப்படி இருந்தாலும் மகாத்மியம் மிக்கது என்று மக்கள் நம்புவார்கள் என்ற அய்முகூ அரசின் எதிர்பார்ப்பில் தேசிய ஊரக வேலை உறுதி சட்டமும் திட்டமும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டமும் திட்டமும் ஆயின.

இவை, மக்கள் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவே என்றும், மக்கள் மீது அய்முகூ அரசு கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடு என்றும் காங்கிரசார் சொல்கிறார் கள். வேலை வாய்ப்பு கூலியை, அதன் பின் உணவை, வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

2005ல் சட்டம் வந்தது; திட்டம் வந்தது. 2010ல் விலை உயர்வு விண்ணைத் தொடும் போதும் திட்டத்தில் ரூ.100க்கு மேல் கூலி தரக்கூடாது என்று அய்முகூ அரசு சொல்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 6 (1) குறைந்தபட்ச ஊதிய சட்டத்துக்கு எதிராக, ஜனவரி 1, 2009 அன்று ரூ.100 என்று உச்சவரம்பு விதித்தது. ஊழலுக்கு, பதுக்கலுக்கு, கொள்ளைக்கு, சூறையாடலுக்கு உச்சவரம்பு இல்லாத நாட்டில் கூலிக்கு மட்டும் உச்சவரம்பு வந்துவிட்டது.

இந்த ரூ.100 பல மாநிலங்களில் இதே வேலைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட குறைவு. ஆந்திரா, ராஜஸ்தான் உட்பட 19 மாநிலங்கள் மத்திய அரசு சொல்வதை விட, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூடுதல் கூலி தருகின்றன. குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கூலி என்பதால் இது விலை உயர்வுக்கு ஏற்ப மீண்டும் மாற்றியமைக்கப்படும்.

குறைந்தபட்ச ஊதியச் சட்டம் வேறு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் வேறு என்றும் உச்சவரம்பு, உச்சவரம்பு தான் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் உறுதியாகச் சொன்னது. மனித முகம், பொருளாதார வளர்ச்சி என்ற வாய்வீச்சுக்கள் பொருளற்றவை என்பதை இந்த அலட்சியம் போதுமான அளவு தெளிவாக்குகிறது.

கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெயசிங், ஒருவர், குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியத்துக்கு வேலை செய்வாரேயானால் அது கட்டாய உழைப்பு என்றும் அரசியலமைப்பு சட்ட விதி 23 படி கண்டணத்துக்குரியது என்றும் சொல்கிறார். அய்முகூ அரசாங்கமே தான் தூக்கி, தாங்கி பிடிப்பதாக சொல்கிற அரசியலமைப்பு சட்ட விதிகளை, அவை மக்கள் சார்பு தன்மை கொண்டவை என்றால், மதிக்க தயாரில்லை.

ஆந்திராவில் உள்ள விவசாய விருத்திதருல சங்கம், ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு கூலி உச்சவரம்பு நிர்ணயிக்கும் மத்திய அரசின் அறிவிப்பாணையை நீக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்துக்குச் சென்றது. ஆந்திரா உயர்நீதிமன்றமும் மத்திய அரசின் உச்சவரம்பு ஆணைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

தேசிய ஆலோசனைக் குழு கூட்டத்தில் அருணா ராயும் ஜீன் ட்ரீசும் பிரச்சனையை எழுப்ப சோனியா காந்தி, வேறு வழியின்றி, குறைந்தபட்ச ஊதிய சட்டத்துக்கும் தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்துக்கும் பிணக்கு இருக்கக் கூடாது என்று சொல்லியுள்ளார்.

மத்திய அரசு உடனடியாக உரிய திருத்தங் கள் மூலம் இந்த பிரச்சனை தீர்க்க வேண்டும் என்றும், அந்தந்த மாநிலங்களில் தரப்படும் குறைந்தபட்ச ஊதியமே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் தரப்பட வேண்டும் என்றும், அதற்கேற்ப அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டும் என்றும் அய்முகூ அரசுக்கு பணித்திருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் பிரதிநிதிகளின் முத்தரப்பு கூட்டத்தில் கூலி மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தனது குறிப்புகளில் சொல்லியுள்ளார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2010 - 2011 காலத்துக்கு நவம்பர் 26 வரை ஆந்திராவில்தான் அதிக நாட்கள் வேலைகள் தரப்பட்டுள்ளன. ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பீஸ் ரேட்தான் தரப்படுகிறது.

ஆந்திராவில், ஆந்திரா ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான அரசாணையும் வேலையின், தன்மை, அளவு, அதற்கான கூலி ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும் என்றும், அந்தந்த வேலைகளில் நாளொன்றுக்கு ரூ.80ஆவது குறைந்தபட்சம் தொழிலாளர்கள் பெறும்படி கூலி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அடிப்படையில்தான் ரூ.100க்கு மேல் கூலி வழங்கப்படுகிறது. இப்படி இருந்தால் மட்டுமே ரூ.100க்கு மேல் கூலி பெற முடியுமே தவிர, அய்முகூ அரசின் பெருமைமிகு திட்டம் என்று சொல்லப்படுகிற தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டப்படி ரூ.100க்கு மேல் கூலி பெறுவது சாத்தியமில்லை.

காங்கிரஸ் ஆளும் மாநிலத்திலேயே இருக்கிற உரிமை பறிபோகும், அதை மீட்க நீதிமன்றம் போக வேண்டும் என்றால், பிற மாநிலங்களில் நிலைமைகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

இதே பீஸ் ரேட் முறையில்தான் தமிழக கிராமப்புறங்களில் ஊரக வேலை உறுதித் திட்ட வேலைகளுக்கு ரூ.40, ரூ.50 என கூலி தரப்படுகிறது. போராட்டங்கள் நடத்தப்படும் இடங்களில் மட்டுமே கூலி இந்த வரம்பை கொஞ்சம் தாண்டுகிறது. ரூ.100அய் எட்டுவது அரிதாகவே நடக்கிறது. தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் அட்டவணையிடப்பட்ட வேலை வாய்ப்புக்களில் விவசாயம் என்ற ஒன்று சேர்க்கப்படவே இல்லை.

மத்திய அரசு விதித்திருக்கும் குறைந்த பட்ச ஊதியத்துக்கான உச்சவரம்பே அதிகபட்ச கூலியாக தமிழ்நாட்டில் நின்றுள்ளது. இதில் உழைப்புக்கேற்ற ஊதியம் உழைத்தால்தான் சாத்தியம் என்று எதுகை மோனையுடன் ஏகடியம் வேறு பேசுவார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டமும் குறைந்தபட்ச ஊதியச் சட்டமும் குறைந்தபட்சமானவையே. குறைந்த பட்சங்களை நிறைவேற்றக் கூட அதிகபட்ச போராட்டங்கள் அவசியமாகின்றன.

இப்போது, திட்டத்தில் நடைபெறும் மஸ்டர் ரோல் முறைகேடுகளை தடுப்பது என்ற பெயரால் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் புதிய முயற்சி ஒன்றை எடுக்கிறது. அதன்படி, அரசு - தனியார் பங்கேற்புடன், திட்டம் தொடர்பான விவரங்கள் தொழில் நுட்பரீதியாக மின்னணு வடிவில் பராமரிக்கப் படும் என்கிறது. இதற்காக ரூ.2,162 கோடி ஒதுக்கியும் இருக்கிறது. உழைப்பவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100 கூலி என சொல்லும் அரசு, இந்தப் பெரிய தொகையை தனியார் கையில் கொடுக்க உள்ளது.

2006ல் வழங்கப்பட்ட வேலை அட்டை கள் 2011ல் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தப் புதுப்பித்தல் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கிறது அய்முகூ அரசு. மொத்த விசயமும் சிறப்பு அடையாள அட்டை, அங்க அடையாள வருகைப் பதிவேடு ஆகியவை அடிப்படையில் அமையும். 2011 வந்துவிட்டது. எவ்வளவு பேரை, எத்தனை நாட்களில் புதுப்பிக்க முடியும்? உண்மையில் புதுப்பித்தல் பணியை காலம் தாழ்த்துவது, இருக்கிற கொஞ்சம் வேலை வாய்ப்பையும் மறுப்பது என்பதாகவே இந்த முயற்சி முடியும் என்று, அருணா ராய், ஜீன் ட்ரீஸ் போன்றவர்கள் சொல்கின்றனர். உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அய்முகூ அரசின் திட்டங்கள் பொறுத்தவரை தனியார் கொழுக்கவே. பெருவாரியான உழைக்கும் மக்களை வெளியேற்றி தனியாரை உள்ளடக்கவே.

கடல் மீன்பிடி தொழில் (ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகம்) மசோதா, ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உரிமையை சாமான்ய மீனவ மக்களுக்கு மறுத்து, கடலை பெருந்தொழில் குழுமங்களுக்கு தாரை வார்த்தது. இப்போது, கடற்கரை சூழலை பாதுகாப்பது என்ற பெயரில் சாமான்ய மக்களை, கடல் சார்ந்து வாழும் மக்களை அந்தப் பகுதிகளில் இருந்து விரட்டுகிறது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2010.

அறிவிப்பாணைக்கு நாடெங்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கருணாநிதி கூட கடிதம் எழுதுகிறார். இப்போதுள்ள விதிகளில் மாற்றம் ஏதும் வந்தால், அது, மீனவ மக்களை பாதிக்கும் என்றும் சூழலை பயன்படுத்திக் கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சிலர் ஏற்படுத்தக் கூடும் என்றும், மக்களிடம் அறிவிப்பாணை பற்றி உள்ள அச்சம் நீங்கும் வரை தள்ளிப்போட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை கைவிட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் யாரும் இதுபற்றி பேசவும் இல்லை.

அசோக் சவானை மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகச் செய்த ஆதர்ஷ் குடியிருப்பு, கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளை வளைத்துத்தான் கட்டப்பட்டுள்ளது.

பாரதீப் துறைமுகத்தில் இருந்து வெறும் 12 கி.மீ தொலைவில் போஸ்கோ துறைமுகம் அமைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அங்கிருந்து 80 கி.மீ தொலைவில் டம்ராவில் துறைமுகம் அமைக்க டாடா தயாராகிறார்.

நீடிக்கத்தக்க விதத்தில் வளர்ச்சியை முன்செலுத்துவது அறிவிப்பாணையின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது. உலகமயத்தில் வளர்ச்சி யாருக்கு என்பது யாவரும் அறிந்ததுதான். 2010 அறிவிப்பாணை, 1991 அறிவிப்பாணை சொல்கிற 500 மீட்டர் இடத்தையும் தாண்டி, ஆபத்து பகுதி என்று வரையறுக்கப்படுகிற இடத்தையும், கடலுக்குள் 12 கடல் மைல் பகுதியையும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் என்று சொல்கிறது. கிட்டத்தட்ட சாமான்ய மக்கள் பயன்படுத்தும் கடலோரப் பகுதி இந்த எல்லைக்குள் வந்து விடும். அசோக் சவான், போஸ்கோ, டாடா அனைவருக்கும் வசதியாகப் போய்விடும்.

இந்தப் பகுதிக்குள் கடல்நீர் முகப்பு, கடலோர முகப்பு வசதி தேவைப்படுகிற புதிய ஆலைகள், அணுசக்தி ஆலைகள், மாசு ஏற்படுத்தாத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், குடியிருப்புகள், அரிதான கனிமங்களை எடுக்க சுரங்க நடவடிக்கைகள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதை கண்டறிதல், எடுத்தல், மரபுசாரா எரிசக்தி நிறுவனங்கள், நவி மும்பையில் பசுமை வெளி விமானதளம் ஆகியவை வரலாம்.

ரசாயன அமைச்சகத்திற்கு அழகிரி பொறுப்பேற்றதற்கு பொருள் வேண்டாமா? கடலூர் - நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் 2011ல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தயாராகிவிடும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் நாகார்ஜ÷னா எண்ணெய் கழகம் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்து ராம நாதபுரத்தில் திருவாடனையின் கடலோரப் பகுதியில் 25,783 ஹெக்டேர் நிலம் அடை யாளம் காணப்பட்டுவிட்டது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் அமைச்சருக்கு தனது திட்ட முன்வைப்பை தந்துவிட்டது.

எரிசக்தி உற்பத்தியில் ரூ.91,000 கோடி முதலீடு வருகிறது என்று சமீபத்தில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் பின் உள்ள தயாரிப்பு இதுதான். தமிழக கடலோரப் பகுதிகளில் தனியார் துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவை ஏற்கனவே வரத் துவங்கிவிட்டன.

அறிவிப்பாணையை தள்ளிப் போடுங்கள் என்று அய்முகூ அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, அழகிரி, ஸ்டாலின் மூலமும் கடலோரப் பகுதிகளை தனியாருக்கு தாரை வார்க்க எல்லா தயாரிப்புகளும் செய்துவிட்டார் கருணாநிதி. சாமான்ய மீனவ மக்களுக்கு அங்கே இடம் இருக்கப் போவதில்லை.

கடலோர குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிசை மறுவாழ்வு திட்டங்களை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என் கிறது அறிவிப்பாணை. மறுவாழ்வு நடவடிக்கை களின் மறுபெயர் வாழ்வுரிமை பறிப்பு என்று தான் இதுவரை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

அறிவிப்பாணை நகல் பற்றி தாங்கள் முன் வைத்த கருத்துக்கள் எவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அசல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதெனவும் இது கடலோர சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கும் எனவும், அறிவிப்பாணை கைவிடப்பட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்புகின்றனர். அய்முகூ அரசாங்கத்துக்கு பெருந்தொழில் குழுமங்களின் குரல் தவிர வேறெந்தக் குரலும் கேட்பதில்லை.

சோனியா காந்தி வேறு, அய்முகூ அரசு வேறு அல்ல என்பது அம் ஆத்மிக்கு, சாமானிய மனிதருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், எல்லா கொள்ளைகளும் எல்லா மக்கள்விரோத நடவடிக்கைகளும் கொள்கைகளும் சோனியா காந்தி ஒப்புதலுடன் அரங்கேறும்போது அவர் உழைக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டவர் போலவும் அய்முகூ அரசுக்கு அப்பாற்பட்டவர் போலவும் காட்ட முயற்சிக்கிறார்கள். குற்றங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று காட்டப்பட்ட மன்மோகன் இன்று குற்றம் சுமத்தப்பட்டு, இந்திய அரசு அவருக்காக நீதிமன்றத்தில் வாதாடுகிறது. அய்முகூ அரசின் அத்தனை மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கும் சோனியா காந்திக்கும் மன் மோகன் சிங்குக்கும் கருணாநிதிக்கும் எத்தனை நாட்கள் முகமூடிகள் போட முடியும்?

Search