COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

ஊழலோ ஊழல்

ராஜராஜனின் ராஜா


ராடியா (ஆல் இந்தியா ராடியா) ஒலிநாடாக்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த நேரடி பதிலும் இல்லை. கருணாநிதி குடும்பம் தேசத்தின் சொத்துக்களை சூறையாட துடியாய் துடித்ததாக அந்த ஒலிநாடாக்கள் சொல்கின்றன.

பெருந்தொழில் குழுமங்கள் - பெருந் தொழில் குழும ஊடகங்கள் - முதலாளித்துவ அரசியல்வாதிகள் கூட்டணி, அய்முகூ அரசாங் கத்தின் இரண்டாவது அவதார துவக்கத்தில் விசுவரூபம் எடுத்தது நாடறிந்த செய்தியாகி விட்டது. ஊழலில் ஊறித் திளைத்து, ஊதிப்பெருத்து, உடைந்து சிதறும் நிலையில் உள்ள திமுக தலைமை, ஆரிய - திராவிடப் போர், உழைக்கும் மக்களின் தோழன், உட்கட்சி ஒற்றுமையின் அவசியம் என்றெல்லாம் பேசுகிறது. ஆவேசப் போர்க்குரலுக்கு பதிலாக புலம்பல் சத்தமே கேட்கிறது.

ராசாவே ரூ.1,76,379 கோடி ஊழல் செய்த தாகப் புகாரா? அவர் யாரும் செய்யாததை செய்துவிட்டாரா? அவர் செய்யப் போவது பற்றி பிரதமரிடம் தெரிவித்துவிட்ட பின் அவரை எப்படி குறை சொல்வது? இப்படி யெல்லாம் சிலர் குதர்க்கமாகக் கேட்கிறார்கள்.

ராசாவுக்கு, ராசாவை இயக்குபவர்களுக்கு, கூட்டணி தர்மப்படி கூட்டணி கட்சிப் பிரமுகர்களுக்கு எவ்வளவு போய் சேர்ந்தது என குறிப்பான ஆதாரங்கள் இன்றளவில் கிடைக்கவில்லை.

அதனால்தான் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தவிர, உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் நீதித் துறை விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கருணாநிதி குடும்பத்துக்குள் நடந்த, நடக்கிற உள்குத்துக்கள் பூசல்கள் தாண்டி, தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடித்த நிறுவனங்கள், கஜானாக் கதவை திறந்து வைத்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கண்டறியப்பட்டு கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். கொள்ளைப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமூகநீதி கொள்கை பேசும் கூட்டம் கொள்ளையடித்துக் கொழுப்பது தடுக்கப்பட வேண்டும்.

2 ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) மகா மெகா ஊழல் குற்றச்சாட்டு ராசாவோடு நின்றுவிடாது. மன்மோகனும் பதில் சொல்லியாக வேண்டும். 25.10.2007 அன்று, ராசா கையாளும் முறைகளுக்கு எதிராக, உரிமம் வழங்குவதில், நுழைவுக் கட்டணம், தகுதி அடிப்படைகள் ஆகியவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும், ஏல முறை பின்பற்றப்படலாம், என தொலைதொடர்பு துறை செயலர் டி.எஸ்.மாதுர் மற்றும் நிதித்துறை உறுப்பினர் மஞ்சு மாதவன் கடிதம் எழுதினர். 01.11.2007 அன்று சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் பிரச்சனை யின் முக்கியத்துவம் கருதியும் சுட்டிக்காட்டப் பட்டுள்ள பல்வேறு மாற்றுக்களை கணக்கில் கொண்டும், முதலில் பிரச்சனை அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு முன்பு வைக்கப் பட்டு, இந்த இயக்கப்போக்கில் அட்டர்னி ஜெனரலின் சட்டபூர்வ ஆலோசனை பெறப்பட வேண்டும் என எழுதுகிறார்.

02.11.2007 அன்று, பிரதமர், ராசாவுக்கு, ‘எங்கெல்லாம் சட்டபூர்வமாகவும் தொழில் நுட்பரீதியாவும் சாத்தியப்படுமோ அங்கெல்லாம், வெளிப்படைத்தன்மையுடைய ஏல முறையை நுழைப்பதையும், தற்சமயம் உள்ள பழைய அலைக்கற்றை ஏலத்தொகையை அடிப்படையாகக் கொண்ட நுழைவுக் கட்டணத்தையும் உரிமத் தொகையையும் கணக்கில் கொள்ள வேண்டும்’ என எழுதினார்.

ராசா, 26.12.2007 தேதிய கடிதம் மூலம் தொலைபேசி கட்டணங்களைக் குறைக்க, தொலைபேசி பயன்படுத்துபவர்கள், குறிப்பாக, கிராமப்புறத்தவர் எண்ணிக்கையை உயர்த்த தம் முடிவே சரியானது என பிரதமருக்கு சொல்கிறார்.

தொலைதொடர்பு துறை நிகழ்வுகள் குறித்த ராசாவின் கடிதம் தனக்கு 03.01.2008 அன்று கிடைத்ததாக மன்மோகன் கடிதம் எழுதுகிறார். மன்மோகனின் கள்ள மவுனம், சந்தேக ஊசியின் முனையை அவர் பக்கமும் திருப்புகிறது.

மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கை குறிப்பிட்டது:

‘மிகவும் அரிதான, ஓர் அளவு மட்டுமே உள்ள தேசத்தின் சொத்தை மிகவும் நெளிவுசுளிவான தகுதி அளவுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றி அதன் உண்மையான மதிப்பைக் காட்டிலும் குறைவான மதிப்பில் சிலருக்கு வழங்குவதில், சட்ட மற்றும் நிதி அமைச்சக ஆலோசனைகளை புறக்கணிப்பதில் தொலை தொடர்பு ஆணைய பரிந்துரைகளை தவிர்ப்பதில், மாண்புமிகு தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு எந்த நியாயமான, தர்க்கரீதியான காரணமும் இல்லை என்பது வெளிப்படை. தனது பரிந்து ரைகள் புறக்கணிக்கப்பட்டபோது அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டபோது, ஒழுங்கு படுத்தும் நிறுவனமான டிராய் கையைப் பிசைந்து கொண்டு பார்வையாளராய் நின்றது.’

ராசா ராஜினாமாவுடன் பிரச்சனை முடிந்து விடவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட்டு அடுத்தடுத்து, ராசாவை ஏன் விசாரிக்கவில்லை, பிரதமர் அலுவலக பதில் என்ன எனக் கேட்பது நல்லதுதான். ஆனால் அலைக்கற்றை மெகா ஊழல் தொடர்பான மக்கள் மன்ற போராட்ட அலைகளின் வரிசைதான், உண்மையை வெளியே கொண்டு வரும். நாடாளுமன்ற முடக்கத்தால் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினப்படி வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளனர். குற்றவாளிகள் நீதிமன்றப் படிகள் ஏற வேண்டும். சிறைக் கம்பிகளை எண்ண வேண்டும். அதுவரை மக்கள் விடக் கூடாது.



ஆதர்ஷ் (லட்சிய) ஊழல்

அம்பானியின் புதிய அடுக்குமாடி வீட்டின் புதுமனை புகுவிழா கோலாகலமாய் முடிந்து விட்டது. மகாராஷ்டிரா வீட்டு வசதி ஊழல்கள் சந்தி சிரிக்கின்றன.

‘தேசபக்த’ உயர் ராணுவ அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள் கார்கில் போரில் ஈடுபட்டவர்களுக்கான வீடுகளை, எப்படி முறைகேடாக அபகரித்தனர் என புயல் வீசியது. காங்கிரஸ் முதல்வர் பதவி விலகினார். ஆதர்ஷ் (லட்சியங்கள்) வீட்டு வசதித் திட்டத்தில் வீடுகள் பெற்றவர்களில் 3 பேர் மட்டுமே கார்கில் போருடன் தொடர்புடையவர்கள்.

ராணுவ அமைச்சர் குற்றமய சதி நடந்துள்ளதாக சொல்கிறார். எல்லை தாண்டிய பயங்கரவாதமா? இடதுசாரி தீவிரவாதமா?

பதவி விலகிய சவான், தமக்கு ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் என்று சொல்லி, வதாவாவில் உள்ள பக்தி பார்க்கில் உள்ள வீனஸ் கட்டிடத்தில் அன்று சந்தை விலை ரூ.41 லட்சம் இருந்த ஒரு குடியிருப்பை (ஃப்ளாட்) வெறும் ரூ.3,66,969க்கு வாங்கினார்.

நலிந்த பிரிவினர்க்கு, முதலமைச்சர் ஒதுக்கீட்டில் வீடு ஒதுக்கப்படும் நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டம் 1976, இதற்கு வழிவகை செய்கிறது. இவ்வாறு மலிவு விலையில் ஒதுக்கப்படும் வீடுகளை 5 வருடங்களாவது விற்கக் கூடாது என்பது விதி. கடந்த பத்தாண்டுகளில் மலிவு விலையில் ஒதுக்கப்பட்ட 3993 அடுக்குமாடி குடியிருப்புகளில் 1008 வீடுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. இவற்றில் 138 வீடுகள் 5 ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டு விட்டன. 5 அரசியல்வாதிகள் குடிபுகுந்த அன்றே சந்தை விலையில் விற்றுவிட்டனர்.

5 ஆண்டுகளுக்குள் சந்தை விலையில் விற்று லாபம் சம்பாதிப்பதில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரே மாதிரிதான் செயல்பட்ட னர். குற்றவாளிகள் பட்டியலில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பரத்குமார் ரவுத்தின் மகன் ஓம், பாஜக அதிகாரபூர்வ பேச்சாளர் பிரகாஷ் ஜவடேகர் மகன் அஷ÷தோஷ், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தாவின் சகோதரி காமினி கன்னா போன்றோர் உள்ளனர். ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சமிதியின் சிதிர் ஷிண்டேயும் சந்தை விலையில் வீட்டை விற்ற பிரபலம்தான்.

இப்போது, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலை விசாரிக்கும் மத்திய புலனாய்வு துறை, குடியிருப்பு தொடர்பாக கேட்ட முக்கியமான ஆவணங்கள் சில காணாமல் போய்விட்டன என்கிறது மகாராஷ்டிர மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை. நல்லவேளை, தீ விபத்தில் எரிந்து சாம்பலாகிவிட்டன என்று சொல்லாமல் காணவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.



ஈயம் பித்தளையைப் பார்த்து இளித்ததாம்!

ஊழல் எதிர்ப்பில் காங்கிரஸ் காட்டும் பாதையை எதிர்க்கட்சிகள் பின்பற்ற வேண்டும் என அன்னை சோனியா அருள்வாக்கு சொல்லியுள்ளார். ஏற்கனவே பின்பற்றுகிறார் கள் என்பது அன்னைக்கு தெரியாமலா இருக்கும்?

அதனால்தான் 2010 சிறப்பு ஊழல்கள் நீங்கலாக, 2009 வரையிலான கணக்குப்படி, உலகமயம், தாராளமயம், தனியார்மயம் துவங்கிய 1992 முதல் நாட்டில் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.73 லட்சம் கோடி. இந்தத் தகவலை அவுட்லுக் பத்திரிகை சொல்கிறது. ஆதர்ஷ் (லட்சிய) ஊழலில் பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு மிகவும் நெருக்க மான பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான அஜய் சஞ்செட்டி உறவினருக்கும் தொடர்பு உள்ளது.

நிலக்கரி, ரயில், மின்சாரம், உள்கட்டுமான தொழிலதிபர் சஞ்செட்டி, நிதின் கட்காரியின் பினாமி என்றும் அவரே அர்ஜ÷ன் முண்டாவை ஜார்க்கண்ட் முதல்வராக்கும் பேரங்களில் ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

காங்கிரசைக் கேள்வி கேட்கும் பாஜகவை, கர்நாடக தாமரை எடியூரப்பா பற்றி கேட்டுத் திணறடிக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் ஊழலுக்கு பாஜக ஊழல் பாதுகாப்பு. பாஜக ஊழலுக்கு காங்கிரஸ் ஊழல் பாதுகாப்பு. இரண்டு பேருக்கும் எம்பிரான் அமெரிக்கா பாதுகாப்பு.

கர்நாடகா நிலஉரிமை மாற்றுதல் தடுப்புச் சட்டம் 1991க்குப் புறம்பாக, எடியூரப்பா தன் மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோஹன் குமார் ஆகியோருக்கு விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றித் தந்துள்ளார் என்ற ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். சவப்பெட்டி ஊழல், சுரங்க ஊழல் என ஊழல் பட்டியல் பாஜக வகையிலும் நீளும்.



அங்க ரெண்டு கொடும ஜிங்குஜிங்குன்னு ஆடுச்சாம்!



சென்னை நகரின் சாமான்ய மக்கள், கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும ஜிங்குஜிங்குன்னு ஆடுச்சாம் என்று சொல்வார்கள். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒரு டசனுக்கும் மேற்பட்டவர்கள் ஊழல் பேர் வழிகள் என்று உச்சநீதி மன்றத்தில் சொன்ன தற்காக, கனம் கோர்ட்டார் ஆவேசமாய் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். முன்னாள் சட்ட அமைச்சரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான சாந்தி பூஷன், என் மகன் சொன்னது சரிதான், நானும் அதையே சொல்கிறேன், முடிந்தால் என் மீதும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புங்களேன் என்று சவால் விடுத்துள்ளார்.

வழக்கு தொகையை தம் சொந்தக் கணக்கில் போட்டதற்காக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்ற விசாரணை யில் உள்ளது. நீதிபதி தினகரன் மீது நில மோசடி ஒழுங்கீனப் புகார் உள்ளது.

இப்போது, என்ன பேசுவார், என்ன செய் வார் என்று சொல்ல முடியாத உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜ÷, நீதிபதி கியான் சுதா மிஸ்ராவுடன் சேர்ந்து ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார். லக்னோ நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வரும் ஒரு சொத்து தொடர்பான வழக்கை அலகாபாத் நீதிமன்ற அமர்வம் விசாரித்து இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘நீதி வழங்குதலுக்கு அப்பாற்பட்ட வேறு ஏதோ காரணம் இருப்பதாக’ கட்ஜ÷ அங்கலாய்த்துக் கொள்கிறார்.

கடுமையான தீர்ப்பு எழுதி எல்லா உயர்நீதிமன்ற பதிவாளர்களும் தலைமை நீதிபதிகள் முன் அந்தத் தீர்ப்பை வைக்கச் சொல்லியுள்ளார். திருந்தவே திருந்தாத நீதிபதிகளை இடமாற்றம் செய்யச் சொல்லி யுள்ளார். (அங்கு போய் விட்டதை தொடரலாமா?)

‘இந்த வழக்கு காட்டுவதுபோல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஏதோ அழுகிப் போயுள்ளது. அலகாபாத் நீதிபதிகள் சிலரின் நேர்மை பற்றி புகார்கள் வந்துள்ளது எங்களை வருத்தப்பட வைக்கிறது. சில நீதிபதிகளின் மகன்கள், மகள்கள், நெருங்கிய உறவினர் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளனர். தொழில் துவங்கிய குறுகிய காலத்திலேயே அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆடம்பர கார், பிரம்மாண்ட பங்களாக்கள், வங்கிக் கணக்கில் பெரும்தொகை என ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர்.’ நீதிபதிகள் நியமனம், சொத்துக் கணக்குகள் தொடர்பாக பொதுமக்களிடம் விவரம் தெரிவிக்க மறுத்து தனக்கெதிரான வழக்கை தானே விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.





ஊழலின் தோற்றுவாய்



முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் அதிகார நெருக்கத்திற்கும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கும் தனிச் சொத்திற்கும் பிரிக்க முடியாத உறவு எப்போதும் உண்டு. அமெரிக்கா முதல் இந்தியா வரை இதேதான் கதை. கூடாநட்பு முதலாளித்துவம் (இழ்ர்ய்ஹ் இஹல்ண்ற்ஹப்ண்ள்ம்) காலத்தின் கட்டாயம். மகா ஊழல்கள் தொடரும். கண்ணீர் இல்லாத வளர்ச்சியை ஊழலற்ற பொது வாழ்க்கையை, கற்பனை செய்பவர்கள், முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்பவர்கள். பளபளப்பு, மினுமினுப்பு மேல் தோலை விலக்கினால், ஊழல் முடை நாற்றம் மூச்சைத் திணறடிக்கும்.

இந்திய மக்களின் ஆயுள் காப்பீட்டு பணமும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்து விட்டனர் என்று செய்தி வந்து விசாரணை நடக்கிறது.

கருணாநிதி, காங்கிரஸ், பாஜகவுக்கு எவ்விதத்திலும் குறைந்தவரல்ல ஜெயலலிதா என்ற செய்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட், தனது டிசம்பர் இயக்கத்தில் தமிழக மக்களிடம் துணிச்சலோடு சொல்லுமா?

தமிழ் திரை உலக விழா நாயகன் கருணா நிதிக்கு அவருடைய ஆஸ்தான கவிஞர் வைர முத்து எழுதிய ‘ஆழமான’ பொருள் கொண்ட ஒரு திரைப்படப் பாடலை கொஞ்சம் மாற்றி, ஆரிய ஊழல்கள் உன்னது, திராவிட ஊழல்கள் என்னது, ஆரியம், திராவிடம் இரண்டும் இருக்கட்டுமே என்று பாடிக் காட்ட வேண்டியுள்ளது.

அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் ஆரியம், திராவிடம் என்று சொல்லிக் கொள்பவை, சொல்லப்படுபவை எல்லாமே ஊழலிலும் அதன் தோற்றுவாயான முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் ஜோதியிலும் கலந்து சங்கமமாகிவிடும்.

Search