COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

உழைக்கும் மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!



ஊழல், துரோக திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
 
ரூ.1,76,379 கோடி அலைக்கற்றை ஊழல் நாடு முழுதும் கடும் அதிர்ச்சி அலை களை உருவாக்கி உள்ளது. அலைஅலையாய் வந்து திமுகவை தாக்கி வருகிறது. எதிர்க் கட்சிகளை, குறிப்பாக, ஜெயலலிதாவை உற்சாகமடையச் செய்துள்ளது. கருணாநிதிக்கு பெரும் பின்னடைவு. திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சோதனைக் கட்டம். அடுத்த ஆண்டு கோடைக் காலத்தில் நடைபெற வேண்டிய தேர்தலுக்கான முன்தயாரிப்பு இப்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது.


நாடாளுமன்ற உச்சகட்ட அமளிக்கு இடையிலும், ராசா, நான் பதவி விலக மாட்டேன் என்றார். எல்லாம் பிரதமருக்கு தெரிந்தே (அனுமதியுடன்) நடந்திருக்கிறது, ராசா பதவி விலகத் தேவையில்லை என்றார் கருணாநிதி. மாலை இப்படிச் சொன்ன கருணாநிதி, இரவு பதவி விலகு என்று சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிட்டார். ‘பொட்டல் காட்டில் பூத்த (ஊழல்) புரட்சி மலர்’ ஆ.ராசா பதவி விலகிக் கருகிவிட்டது. ஆ...ஆ...ஆ...ராசா! என்று மன்மோகன் சிங், ராசாவை முதுகில் தட்டிப் பாராட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் முடங்கக் கூடாது, ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் அரசாங்கத்துக்கு தர்ம சங்கடம் ஏற்படக் கூடாது என்ற கரிசனத்தாலும் ராசாவை பதவி விலக அறிவுறுத்தியதாக திமுக தலைவர் சொன்னார்.

ராசாவின் விலகலுக்குப் பிறகும் நாடாளு மன்றம் செயல்படவில்லை. அவசரப்பட்டு விட்டோமே என்ற வருத்தத்தை வேலூர் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். கருணாநிதிக்கு சோனியா தரப்பில் இருந்தும் ஜெயலலிதா தரப்பில் இருந்தும் நெருக்கடி. கிரிக்கெட், காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு ஊழல்களில் காங்கிரஸ் 2 அமைச்சர்களையும் 1 முதலமைச்சரையும் இழக்க வேண்டியிருந் தது. திமுக மட்டும் இழக்காமல் இருந்தால் அது கூட்டணி தர்மமாகுமா? 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் ‘தரத் தயார்’ என்று ஜெயலலிதா வெளிப்படையாக வலிந்து போய் சொன்னதில் ஆடிப்போன கருணாநிதி ஓடிப்போய் பதவி விலகச் சொல்லிவிட்டார்.

ஆச்சாரியாருக்கு (டி.டி.கிருஷ்ணமாச்சாரி) ஒரு நீதி, ஆதிதிராவிடருக்கு ஒரு நீதியா என்று கருணாநிதி சீறுகிறார். நாட்டின் அரிய வளம், மக்கள் சொத்து ரூ.1,76,379 கோடி சூறையாடப்பட்டிருப்பது பற்றி அவருக்கு கவலை இல்லை. நாட்டின் தொலைதொடர்பு துறை விழுங்கப்பட்டிருப்பது பற்றி அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதைப் பற்றி முதலமைச் சருக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை.

ஒரு வரியில் சொல்வதானால், ராசா மட்டும் குற்றவாளி அல்ல. திரு.கருணாநிதியும் தான். குற்றத்தை நியாயப்படுத்துகிறவர்களும் குற்றவாளிகளே. இதுதான் பொது நியதி.

கருணாநிதியின் மனச்சாட்சியான மாறன், நவதாராளவாத சீர்த்திருத்தங்களின் சிற்பிகளில் ஒருவர். தகவல் - தொடர்பு - ஊடக - கேளிக்கை துறையில் கொட்டிக் கிடக்கும் வானளாவிய வாய்ப்புக்கள் இவர்களிடம் மாபெரும் கனவை தூண்டியுள்ளன.

சன் குழுமத்தின் மூலம் ஊடகத் துறையில் பெருந்தொழில் கு(ழு)டும்பமாக எழுந்து நிற்கும் இவர்களுக்கு தொலை தொடர்பு துறை மீது ஒரு கண். தொலை தொடர்பு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறைகள் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டனர். இது ஒரு தொலைநோக்குத் திட்டம்.

தயாநிதி மாறன் பதவி விலகியதை அடுத்து ஆ.ராசாவிடம் வரும்படி பார்த்துக் கொண்ட னர். ராசா விலகிய பிறகு திமுகவுக்கே திரும்பி வரும் என்று எதிர்ப்பார்த்தனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஊழல் நடந்திருப்பதிலும் தலித் ராசாவுக்காக சூத்திரர் கருணாநிதி வரிந்து கட்டிக் கொண்டு வாதாடு வதிலும் ஆச்சரியம் இல்லை.

பெருமுதலாளிகள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கத்தினர் கூட்டணியிடம் நாடு சிக்கியிருக்கிறது என்பது மிகவும் அபாயகர மான நிலைமை. தகரப் பெட்டியுடன் திருட்டு ரயிலேறி சென்னைக்கு வந்த கருணாநிதியும் அவரது குடும்பமும் பெருமுதலாளிகள் - அரசியல்வாதிகள் - அதிகார வர்க்கம் ஒன்று கலந்த பிரதிநிதியாக எழுந்து நிற்கிறது. இதுதான் திராவிட தேசத்தின் மாபெரும் பங்களிப்பு. கருணாநிதியின் மகாமகா சாமர்த்தியம்.

ராசாவை நீக்குங்கள், திமுக ஆதரவை விலக்கிக் கொண்டால், 18 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுத் தந்து ஆட்சி கவிழாமல் காப்பாற்றுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தது சாணக்கிய அரசியல் என்று பேசப்படுகிறது. அவர் அவ்வாறு சொன்னதால்தான் ராசா பதவி விலகி வேண்டி வந்தது என்றும் சொல்லப்படுகிறது. இருக்கலாம். இது ஒன்றும் புதிதல்ல. பாஜக ஆட்சிக்கு தந்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்ட மறுநிமிடமே கருணாநிதி ஆதரவு தந்து தேஜமு ஆட்சி கவிழாமல் பாதுகாத்தார் கருணாநிதியிடம் கற்ற விளையாட்டைத்தான் ஜெயலலிதா விளையாடிப் பார்க்கிறார். அதுதான் கருணாநிதியின் அச்சமும் கூட.

அலைக்கற்றை ஊழல் நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்த நேரம், ‘அடிக்கரும்பு’ (அடிக்கம்பு) அழகிரி வீட்டுத் திருமணம் மதுரையை ஸ்தம்பிக்கச் செய்து கொண்டிருந்தது. திருமணத்தில் கலந்துகொண்ட பிரணாப் முகர்ஜி ‘கூட்டணி’ தொடரும் என்று கூறி கலங்கிப் போயிருந்த கருணாநிதிக்கு தெம்பூட்டினார். ‘இந்தக் கூட்டணி நாட்டுக்கு நிறைய செய்திருக்கிறது’ என்றார். ‘இன்னும் செய்யும்’ என்றார். அலைஅலையாய் ஊழல், அமெரிக்க அடிமைத்தனம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைஉயர்வு, விவசாயிகள் தற்கொலை, பட்டினிச் சாவு, விவசாய நெருக்கடி... இப்படி நிறைய செய்துள்ளது.

கருணாநிதிக்கு தொல்.திருமா வேறு விதமாக தெம்பூட்டினார். இது பெரியார் தேசம், பெரியார் தேசத்தை பங்கு போட்டுக் கொள்ள பெரியார் பேரன்களுக்கு உரிமை உண்டு என்றார். பெரியார் தேசத்துக்குள் (தமிழ்நாட்டுக்குள்) இந்தியாவே வந்துவிட்டதோ? பெரியார் பேரன்கள் இந்தியாவையே பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பஞ்ச் டயலாக் ரஜினிகாந்த், கருணாநிதிக்கு இரண்டு சொத்துக்கள், ஒன்று திமுக, இன்னொன்று ஸ்டாலின், அழகிரி (கனிமொழி, செல்வியை விட்டுவிட்டார்); இது அதைக் காப்பாற்ற வேண்டும், அது இதைக் காப்பாற்ற வேண்டும் என்றார். ஆட்சியை யார் காப்பாற்றுவார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டார்.

இறுதியில் பேசிய கருணாநிதி திருமண நிகழ்ச்சி கூட்டணியின் ஒற்றுமையைக் காட்டுகிறது என்றார். ஆம். ஊழலில் கூட்டணி, ஒற்றுமை; துரோகத்தில் கூட்டணி, ஒற்றுமை.

பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் வெற்றி பற்றி தேர்தல் முடிவுகள் முழுமையாக வரும் முன்னரே ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பினார். வலுவான எதிரிகளை நிதிஷ் அடித்து நொறுக்கியதுபோல் தானும் நொறுக்க முடியும் என்று தனக்குத் தானே தெம்பூட்டிக் கொண்டார்.

முடிவு வந்து இரண்டு நாட்கள் கழித்து முரசொலி, வளர்ச்சித் திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்றது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, நிதிஷ் மீது பெரும் ஊழல் பிரச்சனை எழுப்பப்பட்டது, அது வெற்றியை பாதிக்கவில்லை, வளர்ச்சித் திட்டங்கள்தான் எல்லாம், அதுதான் அபார வெற்றியை அளித்தது என்றது. திமுக செய்து ள்ள வளர்ச்சித் திட்டங்கள் ஏராளம், அது ஆறாவது முறையும் திமுகவுக்கு வெற்றி தேடித் தரும் என்று வளர்ச்சி அரசியல் பேசுகிறது.

27 லட்சம் குடும்பங்களுக்கு 55 லட்சம் ஏக்கர் நிலம் என்று சொல்லி நான்கரை ஆண்டு களில் வெறும் 2 லட்சம் பேருக்கு 1 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே தந்து, மனமுண்டு, நிலமில்லை என்று சொல்லி 2 ஏக்கர் நில வாக்குறுதிக்கு மூடுவிழா நடத்திவிட்டார் கருணாநிதி. 2 ஏக்கர் நிலம் என்று சொல்லி, 2 சென்ட் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் ரூ.200 கோடி வரை மோசடி நடந்துள்ளது. வசதி படைத்தவர்களும், நிலமுள்ளவர்களும் பயனாளிகள் பட்டியலில் இடம்பெற்று வறிய வர்களுக்கு வர வேண்டிய நிலத்தை அபகரித்துக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது; நிலம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் இருந்தது. மக்கள் போராடி நிலத்தை மீட்டனர். கருணாநிதியின் மக்கள் திட்டங்கள் இவ்வளவுதான்.

திமுகவை, ராசாவை தீவிரமாக எதிர்த்து வரும் ஜெயலலிதா மிகக் கவனமாக காங்கிரசைத் தாக்குவதை தவிர்த்து வருகிறார். பிரதமர் அறிவுரையை மீறி ராசா செயல்பட்டி ருக்கிறார் என்று கூறி பிரதமரை நல்லவராகக் காட்டுகிறார். அமெரிக்க தாசரும் அரசியல் தரகருமான சுப்ரமணியம் சாமி கூட பிரதமர் கறையில்லாதவர் என்கிறார்.

இவ்வளவு பெரிய ஊழல் நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் ஏன் எதுவும் செய்யவில்லை? எதுவும் செய்ய முடியாதவராக பிரதமரை கருத முடியாது. அமெரிக்காவுடன் அணு ஆற்றல் ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக ஏதேதோ செய்தார்.கூட்டுப் பொறுப்பு அடிப்படையில் இயங்கும் அமைச்சரவைக்கு பொறுப்பேற்கும் பிரதமர் இதற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

திமுக எதிர்ப்பில் நிற்கும் ஜெயலலிதா வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு இல்லை. ஊழல் குற்றத்துக்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப் பட்ட ஜெயலலிதா, ஊழல் எதிர்ப்புப் போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொள் கிறார். இரட்டை அணுகுமுறை மேற்கொள்கிறார். நாட்டையே ஊழல் போக்கில் திருப்பி விட்டுவிட்ட காங்கிரசை எதிர்க்காமல் ஊழலு க்கு எதிராக எந்தப் பொருள்ள எதிர்ப்பையும் காட்ட முடியாது. ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாகத் திகழும் நவதாராளவாத கொள்கையோடு ஜெயலலிதாவுக்கு எவ்வித பிணக்கோ, மோதலோ இல்லை. நவதாராளவாத கொள்கைப் போக்கை எதிர்க்காமல் ஒருபோதும் ஊழலை எதிர்க்க முடியாது.

காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவுக் கரம் நீட்டிய அதிமுக நிலை கண்டு முதலில் உடனடியாக கருத்துக் கூற மறுத்துவிட்ட ராமகிருஷ்ணனது மார்க்சிஸ்ட் கட்சி செயற் குழு, அதிமுக மேற்கொண்டிருந்த நிலைக்கு இது (காங்கிரஸ் ஆதரவு) முரண்பாடானது என்று அறிக்கை விடுத்தது.

இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்றபோது எந்தவிதமான காங்கிரஸ் எதிர்ப்பு உத்தரவாதமும் தரவில்லை. ஜெயலலிதாவிடம் காங்கிரஸ் எதிர்ப்பு உத்தரவாதம் இல்லை என்று தெரிந்துகொண்டே அவருடன் சேர்ந்து நின்றனர்.

காங்கிரசுக்கு தூது விடுகிறார் என்று தெரிந்ததும் இககமா தலைவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து மக்கள் பிரச்சனைகளில் கூட்டுப் போராட்டம் நடத்தலாம் என அழைப்பு விடுத்தனர். பார்க்கலாம் என்று கூறி தட்டிக் கழித்துவிட்டார். அப்போதே இடதுசாரிகள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். மாறாக சேர்ந்தே நின்றனர். வழக்கம் போல் தேர்தல் கூட்டணி இல்லை, தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறிவிட்டு ஜெயலலிதாவுடனான சந்திப்பை தொடர்ந்தனர்.

ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு அறிக்கை ஜெயலலிதாவிடம் உள்ள முரண்பா ட்டை காட்டுகிறது என்பதைவிட இடதுசாரிகளிடம் உள்ள முரண்பாட்டையே காட்டுகிறது. இடதுசாரிகள் தனித்துவிட்டவர்கள் போல் உணர்கின்றனர். காங்கிரசோடு இருக்கும் திமுகவிடம் போக முடியாது. காங்கிரசிடம் கரம் நீட்ட தயாராக இருக்கும் ஜெயலலிதாவுடன் கரம் கோர்ப்பது அரசியல் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். அதிமுகவோ, திமுகவோ இல்லாமல் தேர்தலில் தனித்து நிற்க முடியுமா என்று கவலையில் உள்ளனர். து.ராஜா உள்ளிட்ட தலைவர்கள், அவரது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர்.

ஜெயலலிதாவின் நிலை காங்கிரஸ் - பாஜக எதிர்ப்பு நிலை இல்லை. நவதாராளவாத எதிர்ப்பு நிலை இல்லை. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை இல்லை. எனவே, காங்கிரஸ் - திமுக கூட்டணி எதிர்ப்பில் ஜெயலலிதா உறுதியான சக்தியாக ஒருக்காலும் இருக்க முடியாது. ஜெயலலிதா தனது நிலையை தெளிவுபடுத்திவிட்டார். இடதுசாரிகள்தான் தங்கள் நிலையை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

2 ஏக்கர் நிலம், வீட்டு மனை, அதற்குப் பட்டா, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் இணைக்கப்படுவது, உணவுப் பாதுகாப்பு, 200 நாட்கள் வேலை, ரூ.200 கூலி, விவசாயத் தொழிலாளர்க்கு அனைத்தும் தழுவிய சமூகப் பாதுகாப்பு சட்டம், கவுரவம் என தமிழக கிராமப் புறங்களில் ஒலிக்கும் குரலே நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளற்ற விவாதங்களை பின்தள்ளி முன்வர வேண்டும். முதலாளித்துவ ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கு மாற்றாக, மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான போராட்டங் கள் முன்னெழ வேண்டும்.

அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தமிழக கிராமப்புற வறிய மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி, உரிமைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள மாநாடு முழங்குகிறது:

உழைக்கும் மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!

ஊழல், துரோக திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

Search