வாருங்கள்!
நாட்டை புதிய பாதையில் அழைத்துச் செல்வோம்!
- வினோத் மிஸ்ரா
தோழர் வினோத் மிஸ்ரா நினைவாக
மார்ச் 8, 1996 அன்று டில்லியில் நடந்த உரிமைப் பேரணியில் தோழர் வினோத் மிஸ்ரா ஆற்றிய உரையில் இருந்து.
இன்று நமது நாடு ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட குறுக்குவெட்டு பாதையில் நின்று கொண்டிருக்கிறது; அங்கிருந்து ஒரு புதிய பாதையை தேடுகிறது. ஒரு வேளை, இதுவே இந்த நாடாளுமன்றத்தின் இறுதி நாளாக இருக்கலாம். இந்த நாளில் நாடு முழுதும் இருந்து தொழிலாளர்களும் விவசாய பெருமக்களும் டில்லி வீதிகளில் அணிவகுத்துள்ளார்கள்.
அவர்கள் இந்த நாடாளுமன்றத்தின் முன் ஒரு பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்: கடந்த அய்ந்து ஆண்டுகளாக இந்த நாடாளுமன்றம் என்னதான் செய்தது? தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நாடாளுமன்றத்தில் என்னதான் செய்தார்கள்? இந்த கேள்விக்கு இந்த நாடாளுமன்றத்திடம் பதில் இல்லை.
கடந்த அய்ந்து ஆண்டுகளாக, பிற கட்சிகளிடம் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, ஒரு சிறுபான்மை அரசாங்கம், பெரும்பான்மை அரசாங்கமாக மாறியுள்ளதை நாம் பார்க்கிறோம். இந்த அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் ஹவாலா வழக்கில் சிக்கியுள்ளனர்; அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அவர்களில் சிலர் இப்போது சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள்.
நண்பர்களே, ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது: மொத்த அமைச்சரவையும் ஊழலில் ஈடுபட்டிருக்கும்போது, அதன் பிரதமர் மட்டும் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும்?
விசாரணைகள் நடக்கின்றன; மத்திய புலனாய்வு துறையின் விசாரணைகள் ஊழல்களின் உண்மையான தலைவனுக்கு எதிராக திருப்பப்பட வேண்டும். மற்றவர்கள் மீதெல்லாம் விசாரணை நடக்கும்போது, இந்த மொத்த ஊழல் அமைச்சரவையின் தலைவனை மட்டும் ஏன் விட்டுவிட்டார்கள்? இந்தக் கோரிக்கை இந்தப் பேரணியிலும் இப்போது எழுப்பப்பட்டுள்ளது.
ராவ் அவர்களை ஒரு விசயத்துக்காக நான் பாராட்டுகிறேன்: அவருடைய நட்சத்திரம் மேகங்களில் மறைவதைக் கண்ட அவர், ‘நான் மூழ்கி விடலாம்; ஆனால் உங்கள் அனைவரையும் என்னுடனே இழுத்துச் செல்வேன்’ என்றார்.
ஆக, மிகப் பெரிய அரசியல் கட்சிகள் - ஆளும் வர்க்கக் கட்சிகள் - இதில் சிக்கிக் கொண்டுள்ளன; அவர்கள் அனைவரும் குளியலறையில் ஆடையின்றி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
எனவே, நமது நாட்டின் முன் ஒரு புதிய சவால் எழுந்துள்ளது: இந்தச் சூழலில் நமது நாடு எந்தப் பாதையில் செல்லும்?
இன்று நமது நாட்டுக்கு ஒரு புதிய பாதையும் புதிய சக்திகளும் தேவை என்று நான் கருதுகிறேன். நமது தலை மீது இருக்கும் இந்த எல்லா பழைய சக்திகளின் சுமையை நாம் இறக்க வேண்டும்; அதைக் குப்பைத் தொட்டியில் தூக்கியெறிய வேண்டும். இந்தியாவில் உள்ள புதிய சக்திகள், நாட்டின் ஆட்சிக் கடிவாளத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள தங்கள் முன்முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். இதற்காகத்தான் நமது கட்சி இந்தப் பேரணியை நடத்துகிறது.
இந்தப் பேரணிக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவு, நமது நாடு புதிய பாதையில் செல்ல விரும்புகிறது என்பதை மெய்ப்பிக்கிறது என்று நான் சொல்ல வேண்டும். இப்போது, நாட்டு மக்களுக்கு தலைமை தாங்குவது, நமது பொறுப்பு; இடதுசாரிகளின் பொறுப்பு.