COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, December 10, 2010

மக்கள் பணத்தில் தனியார் கொழுக்க பார்த்திருக்கும் திமுக அரசு


மத்திய அரசின் திட்டங்களானாலும் மாநிலங்கள்தானே அமலாக்க வேண்டும்? எல்லா புகழும் இரண்டு அரசுகளுக்கும் என்கிறார் கருணாநிதி. காங்கிரசை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் குரல் தாழ்ந்துதான் இருக்கிறது.


108, உயிர் காக்கும் கருணாநிதி வாகனம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பரங்கள் கருணாநிதி குடும்ப தொலைக்காட்சி குழும சேனல்களில் மட்டுமே வெளியிடப்படுகின்றன. சிரிப்பு டிவி, சிறுவர் டிவி, செய்தி டிவி, சினிமா டிவி, சீரியல் டிவி, பாட்டு டிவி என வகைவகையான சேனல்களுக்கு, கருணாநிதி குடும்பத்துக்கு மக்கள் பணத்திலிருந்து விளம் பரம் என்ற பெயரில் பெரும் தொகை மிகவும் நேராக ஒளிவுமறைவின்றி போகிறது.

நெல்லுக்குப் போகும் நீர் புல்லுக்குக் கசிவதுபோல், நோயுற்ற தமிழர்கள் சிலரும் பயன்பெற்றுவிட்டனர். முதலமைச்சர் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் இது வரை 3,80,840 பேருக்கு உதவி யுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த 17,000 உயிர்களைக் காப்பாற்றி உள்ளதாகவும் தமிழக அரசின் சுகாதார அமைச்சக கொள்கை அறிக்கை சொல்கிறது.

இதுவரை, மாநிலம் முழுதும் 2,100 பிரசவங்கள் இந்த அவசர சிகிச்சை வாகனங்களுக்குள்ளேயே, மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே நடந்துள்ளன என்று அதிகாரி ஒருவர் சொல்கிறார் (டெக்கான் கிரானிகிள், 28.10.2010).

பிரசவம் பார்க்கும் தகுதி பெற அய்ந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு, பின் ஓராண்டு பயிற்சி, பின் சிறப்புப் படிப்பு, அனுபவம் ஆகியவை வேண்டும்.

ஆனால் 108 வாகனங்களில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த 2100 பிரசவங்களை பார்த்தவர்கள் 10 + 2 படித்தவர்கள். அதிகபட்சம் இளங்கலை பட்டம் பெற்றவர்கள். மருத்துவம் சார்ந்த கல்வி ஏதும் பெறாதவர்கள். வாகனத்தில் ஓட்டுநர், உதவியாளர் என்று பெரும்பாலும் ஆண்களே வருகின்றனர். இவர்கள் 45 நாட்கள் பயிற்சி பெற்றவர்கள் என்று அதே அதிகாரி சொல்கிறார்.

ஆறாண்டு கால படிப்பும் பயிற்சியும் பெற்றவர்களே சில நேரத்தில் குழம்பிவிடும் போது 45 நாட்கள் பயிற்சி பெற்றோர் கையில் தமிழக வறியவர்கள் உயிரை ஒப்படைப்பதுதான் தமிழக அரசின் உயிர் காக்கும் வாகனத்தின் பின்னுள்ள நடைமுறையா? இதைத்தான் பொறுப்பான அரசாங்கம் என்று தமிழக அரசின் சுகாதார அமைச்சக கொள்கை அறிக்கை சொல்லிக் கொள்கிறதா?

கருணாநிதி கைப்பணத்தில் இருந்து ஆம்புலன்ஸ் விட்டிருப்பதைப்போல் அரசு விளம்பரங்கள் காட்ட முற்படுகின்றன. அது அரசு - தனியார் பங்கேற்பில் 15 மாநிலங்களில் அமலாகிற மத்திய அரசின் திட்டம். தேசிய ஊரக மருத்துவ திட்ட நிதியுதவியுடன் தமிழ் நாட்டிலும் அமலாகிறது.

கலைஞர் உயிர் காக்கும் திட்டத்தில் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் கொழுப்பதுபோல், 108 திட்டத்தில் அய்தராபாதைச் சேர்ந்த எமர்ஜன்சி மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற தனியார் நிறுவனம் கொழுக்கிறது.

அரசுத் திட்டத்தில், அரசு செலவில் ஓடும் அவசர சிகிச்சை வாகனங்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கும் எடுத்துச் செல்கின்றன.

விளம்பரங்களில் காட் டப்படுவது, அதிகாரிகள் சொல்வது ஆகியவற்றுக்கு அப்பால் 108 பற்றியும் திட்டத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பவர்கள் பற்றியும் விவரங்கள் கேட்டு குடிமக்கள் இதழியல் படைப்பாளிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்தனர். கிடைத்த விவரங்கள், திட்டத்தில் வேலை செய்யும் ஓட்டு நர்களும் முதலுதவிப் பணியாளர்களும் கொத்தடிமைகளாக உள்ளனர் என்கின்றன.

தமிழக தொழிலாளர்க்கு, தமிழக மக்களுக்கு தோழன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் ஆட்சியில் தனியார் - தன் குடும்ப நலன் காக்கவே எந்தத் திட்டமும் அமலாகிறது. இப்போது கருணாநிதி பலவீனமாக உள்ளார். உழைக்கும் மக்கள் போராட்டம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

Search