COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, June 23, 2013

மார்ச் - (1-15) ~ 7

களம்

திருட்டைக் கட்டுப்படுத்தக் கோரி மாலெ கட்சி தலைமையில் சாலை மறியல்

அம்பத்தூரில் 85வது வார்டுக்கு உட்பட்ட எம்கேபி நகர், அன்னை சத்தியா நகர், சிவகாமி நகர், ஆசிரியர் காலனி போன்ற பகுதிகளில் அடிக்கடி கொள்ளையும், திருட்டும் நடைபெறுகிறது. இதைக் கட்டுப்படுத்தக் கோரி பொது மக்களோடு சேர்ந்து மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் பசுபதி காவல் நிலையத்தில் புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. 17.02.2013 அன்று இரவு 7.30 மணியளவில் எம்கேபி நகரில் சிலர் திருட வந்ததால் மக்கள் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். தப்பிவிட்டனர். தோழர் பசுபதி ஆயிரக்கணக்கா னோரை அணிதிரட்டினார். காவல்துறையில் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுக்க சிடிஎச் சாலையில் அம்பேத்கார் சிலை முன் மக்கள் கூடினர். இரவு 9 மணி முதல் 10 மணி வரை மறியல் நடைபெற்றது. மாலெ கட்சி சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன் காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பினார். அவரோடு தோழர் பசுபதி, தோழர்கள் ஜீவானந்தம், ஸ்ரீதர், ஜோதிபாசு, தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். நீண்ட நேரம் போக்குவரத்து தடைபட்டதால் போராட்டக்காரர்களை கலைக்க அம்பத்தூர் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

திருட்டில் இருந்து பாதுகாப்பு கேட்டுப் போôராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து மாலெ கட்சி சுவரொட்டி வெளியிட்டது. புகார் கொடுக்க காவல் நிலையத்துக்கு வருபவர்களை அச்சுறுத்தி திருப்பி அனுப்புவது, அவர்கள் மீதே குற்றம் சுமத்துவது என்பதாகவே காவல்துறை அணுகுமுறை உள்ளது. காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர் பாரதி, முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், வேணுகோபால், பசுபதி, தேவகி, மற்றும் தோழர்கள் ஸ்ரீதர், அல்லிமுத்து ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உதவி ஆணையர் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 24.02.2013 அன்று பிற்பகல் பகுதியில் திருட வந்தவர்களை பொது மக்கள் விரட்டிப் பிடித்தனர். காவல்துறையில் ஒப்படைத்தனர்.

தொகுப்பு: மோகன்

பிப்ரவரி 20, 21 வேலை நிறுத்தத்தில் வெகுமக்கள் அமைப்புக்கள் ஊக்கமான பங்கேற்பு

பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாட்களும் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மாலெ கட்சி, ஏஅய்சிசிடியு, அவிதொச, அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புக்கள் ஊக்கமுடன் பங்கேற்றன.

தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் நோக்கிய தயாரிப்புக்களில் மாலெ கட்சி, ஏஅய்சிசிடியு, அவிதொச, அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஆகிய அமைப்புக்கள் நடத்திய பொதுக்கூட்டம்தான் ஆகப் பெரிய அணிதிரட்டலைக் கொண்டிருந்தது. இது, சில நாட்களுக்குப் பிறகு அதே இடத்தில் நடந்த அனைத்து சங்கக் பொதுக் கூட்டத்தில் இருந்த அணிதிரட்டலை விட மூன்று மடங்கு கூடுதல். மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத் தயாரிப்பில் 2000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு

பிப்ரவரி 20, 21 தேதிகளில் சென்னை, கோவை, நெல்லை, நாமக்கல், சேலம், குமரி, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, கரூர், திருச்சி, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுதந்திரமாகவும் பிற மய்ய சங்கங்களோடு இணைந்தும் ஏஅய்சிசிடியு ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.

ஆட்டோமொபைல் மற்றும் என்ஜினியரிங் ஆலைத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பொது விநியோகத் திட்டத் தொழிலாளர்கள், நகரத் துப்புரவுப் பணியாளர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோவையில் வணிகர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கிகளின் சுமை தூக்கும் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்ததால், திருநெல்வேலி, திருப்பூர், கோபிச்செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் பல கிட்டங்கிகள் மூடப்பட்டன. மாநில அரசின் மற்றொரு நிறுவனமான கோ ஆப்டெக்சின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் மாநிலம் முழுவதும் பல ஷோ ரூம்கள் மூடப்பட்டன.

திருவள்ளூரில் நூற்றுக்கணக்கான வெங்காய கூடை முடைவோரும், சுமை தூக்குவோரும் தஞ்சையில் ஆயிரக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களும் நாகையில் துப்புரவுத் தொழி லாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர்.

நாட்டுப்புற தொழிலாளர் பங்கேற்பு

புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், நாகை - தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் பல ஊராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலைகளைப் புறக்கணித்து அவிதொச தலைமையில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.

பிற கிராமப்புற தொழிலாளர்களும் வறிய விவசாயிகளும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த ஆதரவில் சாதிகளுக்கு அப்பால், வர்க்க ஒற்றுமையைக் காண முடிந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டையில் உள்ள நான்கு முந்திரி தொழிற்சாலைகளிலும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது. நான்கு ஆலைகளின் தொழிலாளர்களும் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததால் ஆலைகள் மூடப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில், இயங்கிக் கொண்டிருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று ஏஅய்சிசிடியு மற்றும் அவிதொச தலையீட்டால் இரண்டு நாட்களும் மூடப்பட்டது.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் ஆதரவு ஆர்ப்பாட்டம்

நெல்லையில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் ஏஅய்சிசிடியுவோடு இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்தது. பிப்ரவரி 21 அன்று திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்து இடிந்தகரை போராட்டப் பந்தலுக்கு ஏஅய்சிசிடியு தோழர்கள் சென்றனர். அங்கு ஏஅய்சிசிடியு மாநில துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய போராட்டக் குழு தலைவர் திரு.எஸ்.பி.உதயகுமார், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளித்து வரும் 100 கட்சிகளில் முதன்மையானதாக இகக (மாலெ) விடுதலையைப் பார்ப்பதாகவும், நாட்டின் இருண்ட அரசியல் சூழலில் இகக(மாலெ) விடுதலை ஒளிக்கீற்றாய் விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தம்

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள்  20.02.2013 அன்று தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள வேலை நிறுத்த அழைப்பை ஆதரித்தும், தேர்தல் வாக்குறுதிப்படி மடிக்கணினி வழங்கக் கோரியும், 2013 - 2014 கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் அனைத்து கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், நூலகம், ஆய்வகம், கழிப்பறை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றை உறுதி செய்யவும், அனைத்து கல்லூரிகளில் தேர்தல் நடத்த சட்டம் இயற்றவும், படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்தவும், வேலை கிடைக்காதோர் உதவித் தொகை ரூ.5000 வழங்கவும் வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பற்றி அறிந்த காவல்துறை மாணவர்களை கைது செய்து சிறையிலடைப்பதாக மிரட்டி வகுப்பறைக்கு உள்ளே அனுப்பியது. தோழர் பாரதி, (புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர்) தோழர் விஜய், (ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர்) தோழர் மலர்விழி (அய்சா மாநிலத் தலைவர்) கல்லூரிக்கு நேரில் சென்று காவல்துறையை அணுகி நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்ய உரிமை இருக்கும் போது மாணவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க எவருக்கும் உரிமையில்லை என்று விளக்கியதுடன், மாணவர்களை மிரட்டினால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதன் பின் காவல் துறையினர் தாங்கள் மாணவர்கள் போராட்டத்தை தடுக்க மாட்டோம் என தெரிவித்தனர். சம்பவத்தை அறிந்த கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கல்லூரி நிர்வாகம் ஆதரவளித்தது. வகுப்பறையில் நுழைந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி கல்லூரி வாயிலில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். புரட்சிகர இளைஞர் கழக தேசிய துணைத்தலைவர் தோழர் பாரதி, பி.காம். கூட்டுறவு துறை மாணவர் கண்ணன் உரையாற்றினர்.

கல்லூரி பேராசியர்கள் இஸ்லாமிய மாணவிகளை, குறிப்பாக பர்தா அணிந்த மாணவிகளை பார்த்து பர்தா அணிந்த இஸ்லாமிய சமூகத்து பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடலாமா என்று கேட்டனர். பர்தா அணியும் மாணவிகள் போராடக் கூடாது என்று இஸ்லாமிய மதம் சொல்லவில்லை என தெரிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டு நாட்களும் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இரண்டு ஷிப்டுகளிலும் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவில்லை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அய்சாவின் தோழர் பீமராவ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை யில் விடுதி மாணவர் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டதன் விளைவாக அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து தேர்வு எழுதி முடித்து பள்ளியை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

*********************************************************************************************

 

 

 

 

 

 

 

Search