COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, June 30, 2018

அமித் ஷாவும் 
அந்த அய்ந்து நாட்களும்

பணமதிப்பகற்றம் என்ற பெயரில் இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் மீது பொருளாதார போர் ஒன்று தொடுக்கப்பட்டு,
அவர்கள் நிலைகுலைந்துபோய், எங்கு செல்வது, என்ன செய்வது, என்னவென்று கேட்பது என்று தெரியாமல் அலைகழிந்து கொண்டிருந்த, முற்றிலும் இருள் சூழந்துவிட்டது போல் இருந்த அந்த அய்ந்து நாட்களில்..... பாஜக தலைவர்களின், முக்கியமாக மோடியின் வலது இடது கரங்களாக, இதயமாக, மூளையாகச் செயல்படுகிற அமித் ஷாவின் துணையுடனும் ஆசியுடனும் கருப்பு வெள்ளையாகிக் கொண்டிருந்தது. உழைத்த பணம் அவசரத்துக்குக் கிடைக்காமல் சாமான்ய மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை நாடு பார்த்தது.
பணமதிப்பகற்ற அறிவிப்பு நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது; நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் கருப்புப் பணம் மீண்டும் உள்ளே வருவதை தடுப்பதாகச் சொல்லி, நவம்பர் 14க்குப் பிறகு, அதாவது அய்ந்து நாட்களுக்குப் பிறகு, செல்லாத தாள்களை கூட்டுறவு வங்கிகள் வாங்கக் கூடாது எனச் சொல்லப்பட்டது. அது வரையில் 5 நாட்களுக்கு செல்லாத தாள்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்டன.
அமித் ஷா இன்றும் இயக்குநராக இருக்கிற அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமதிப்பகற்றம் அறிவிக்கப்பட்ட அந்த 5 நாட்களில் ரூ.745.59 கோடி பெறப்பட்டுள்ளது. குஜராத்தின் விஜய் ரூபானி அமைச்சரவையின் வித்தல்பாய் ரடாதியா தலைவராக இருக்கும் ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் இந்த 5 நாட்களில் ரூ.693.19 கோடி செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள பாஜக தொடர்புடைய 11 கூட்டுறவு வங்கிகள் இந்த அய்ந்து நாட்களில் ரூ.3,118.51 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் இந்தத் தகவல்களைத் தந்துள்ளார்.
நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இந்த 5 நாட்களில் பெறப்பட்ட தொகை ரூ.22,270.80 கோடி. இதில் ரூ.14,293.71 கோடி செல்லாத தாள்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெறப்பட்டுள்ளன.
ரூ.745.59 கோடி செல்லாத நோட்டுகளை 1.60 லட்சம் வாடிக்கையாளர்கள் செலுத்தினர் என நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் சொல்கிறார். அமித் ஷா இயக்குநராக இருக்கிற அந்த வங்கிக்கு அய்ந்து நாட்களில் 1.60 லட்சம் வாடிக்கையாளர்கள் வந்து செல்லாத பணத்தை செலுத்தினார்கள் என்றால் நாளொன்றில் 32,000 பேர் வங்கிக்கு வந்து பணம் செலுத்தியிருக்கிறார்கள். இது சாத்தியமா? சராசரி பார்த்தால் கூட ஒருவர் ரூ.46,625 செல்லாத பணத்தை மாற்றியிருக்கிறார். நாளொன்றில் ரூ.149.2 கோடி மாற்றப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியமா? மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்து வங்கிகளில் பணம் இல்லாமல் சோர்ந்து திரும்பியவர்கள் கதைகள்தானே இந்த அய்ந்து நாட்களில் நாடு முழுவதும் நிறைந்திருந்தன. இந்த குறிப்பிட்ட வங்கியில் 31.03.2017 வரை இருந்த மொத்த பணமே ரூ.5,050 கோடிதான். இதில் 25% பணம் வெறும் அய்ந்து நாட்களில் வந்தது. குஜராத் மாநில கூட்டுறவு வங்கியில் ரூ.1.11 கோடிதான் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன. அப்படியானால் ஒரு மாவட்ட வங்கிக்கு எப்படி 700 மடங்குக்கும் மேற்பட்ட அளவு செல்லாத பணம் வந்தது?
இந்தக் கேள்விகளுக்கு பாஜக ஆட்சியாளர்களிடம் பதில் இருக்காது. கேட்டால் நேருவை விமர்சனம் செய்வார்கள். ஊழலே இல்லாத ஆட்சி நடத்துவதாகச் சொல்வார்கள். அமித் ஷா மகன் சொத்துக்கள் மிகக் குறுகிய காலத்தில் பல நூறு மடங்குகள் பெருகியது எப்படி என்ற கேள்விக்கு இன்னும் மக்கள் ஏற்றுக் கொள்ளும் பதிலை அவர்களால் தர முடியவில்லை. கேள்விகள் எழும்போது, இசுலாமியரையோ, தலித்தையோ, ஒரு பெண்ணையோ படுகொலை செய்துவிடுகிறார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பணமதிப்பகற்றம் கருப்புப் பணத்தை ஒழிக்க என்று சொன்னது பொய், பாஜகவுக்கு வேண்டியவர்களிடம் இருந்த கருப்பை வெள்ளையாக்கும் நடவடிக்கை என்று எழுந்த குரல்தான் உண்மை என்று அம்பலமாகியுள்ளது. மோடி, தனது கட்சிக்கு வேண்டியவர்கள் வைத்திருந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்க எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. தனது தாயை வங்கி வாசலில் வரிசையில் நிற்க வைத்து நிழற்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிட்டது நமக்கு நினைவில் இருக்கிறது.
இப்போதும், நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர், நடந்த பண பரிமாற்றங்களில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என சொல்லப் பார்க்கிறார். இது பற்றி செய்தி வெளியிட்ட நியூஸ் 18, டைம்ஸ் நவ், பர்ஸ்ட் போஸ்ட், நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய செய்தித் தளங்கள் பின்னர் அந்தச் செய்தியை நீக்கிவிட்டன. பாஜகவுக்கு ஆதரவாக ஊடகங்களை விலைக்கு வாங்குவது, சில ஊடக நிறுவனங்களும் அதற்குத் தயாராக இருப்பது பற்றி கோப்ராபோஸ்ட் போதுமான அளவுக்கு உண்மையை வெளியே கொண்டு வந்துவிட்டது.
அதிகாரம், ஊடகங்கள், காலி கும்பல்கள் உதவி கொண்டு, நடவடிக்கைகள் எடுத்து, கருத்து பரப்பி, வன்முறையை தூண்டி, வன்முறையை நிகழ்த்தி, தனது கார்ப்பரேட், பாசிச நிகழ்ச்சிநிரலை அனைத்துவிதங்களிலும் முன்னகர்த்தும் முயற்சிகள் பாசிச சக்திகளுக்கு தற்காலிக வெற்றியை தரலாம். இந்த நடவடிக்கைகளால், நாடு நாசமாவதை, மக்கள் நீண்ட காலத்துக்கு அனுமதிக்க மாட்டார்கள். இறுதி வெற்றி மக்கள் போராட்டங்களுக்கே.

Search