COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, June 30, 2018

எடப்பாடி பழனிச்சாமி அரசின் காவல்துறையும் 
வருவாய்துறையும் நடத்தும் காட்டாட்சி

சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அகில இந்திய மக்கள் மேடை யின் குழு சந்தித்தது.
பாதிக்கப்படும் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் பற்றி அகில இந்திய மக்கள் மேடையின் குழுவினரின் அறிக்கையில் இருந்து சில பகுதிகள் தரப்படுகின்றன.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை அமைப்பதனால் மக்களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்து பற்றி ஏற்கனவே நாம் அனைவரும் அறிந்ததே. இந்த சாலைக்காக நிலம் கையகப்படுத்த மக்களின் அனைத்து சனநாயக உரிமைகளையும் காலில் போட்டு நசுக்கும் வண்ணம் எடப்பாடி பழனிச்சாமி அரசின் காவல்துறை நடத்தும் காட்டாட்சி கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இது தொடர்பாக மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி அவர்கள் தெரிவித்த கருத்துகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் குப்பனூர் கிராôமத்தின் கந்தசாமி: ‘கடந்த பத்து வருஷமா பாத்தீங்கன்னா இங்க ஒரு குற்றம் கூட நடந்ததில்லை. நாங்க அண்ணன் தம்பின்னு 10 குடும்பங்கள் இங்கு வாழ்கிறோம். எங்க ஊர் ரெண்டு பக்கமும் மலை சூழ்ந்த ஊர். இங்க பல்லுயிர் சார்ந்த இயற்கை. எங்க நிலத்தை எடுத்துக் கொண்டு எங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கிறது மட்டும் பிரச்சனை இல்லை. எங்க வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் அழிந்துவிடும். எங்களை இங்கிருந்து விரட்டினால் எங்க கூட்டு குடும்ப வாழ்க்கை சிதறிவிடும். ஏற்கனவே அரிதாகி இருக்கிற கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் அழிக்கப்படும். எங்களுக்கு முக்கிய வருமானமே பால் மாடு வைத்திருப்பதால்தான். இந்த ஒரு ஊரில் மட்டும் இன்சூரன்ஸ் பண்ணின மாடு மட்டும் 600 மாடு இருக்கின்றன. இது தவிர ஒரு 1000 ஆடுகள் இருக்கின்றன. நிலத்திலி ருந்து எங்களை விரட்டினால் கால்நடை தீவனத்திற்கு கூட வழி இல்லாமல் நாங்கள் சாக வேண்டியதுதான். எங்களை வெளியே விரட்டினால் நாங்கள் பிழைப்பது எப்படி? பால் மற்றும் மலர் சாகுபடியும்தான் எங்கள் வாழ்வாதாரம்’.
‘ரோடு போடுவதால் இரண்டு பக்கமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இடங்கள் பாதிக்கும் என்று சொல்கிறார்கள். நிலமிருப்பவர்கள் கூட இங்கே விவசாயம் செய்ய முடியாமல் போகும். போக்குவரத்து அதிகரிப்பதால் காற்று மாசு அதிகரித்து மலர் விவசாயத்தில் மலர்கள் கருகிப் போகும். எங்க ஊருக்கு அரசாங்கம் தண்ணி வசதி கூட செய்யவில்லை. எங்கள் கிணற்றில் நாங்களே எடுத்து கொள்கிறோம். நாங்க கேக்கிறத செய்து தராத அரசாங்கம் நாங்கள் வேண்டாம்னு சொல்ற ரோடை மட்டும் போட்டுதான் தீருவோம்னு பிடிவாதமா இருக்காங்க. இது அரசாங்க நிலம். நீங்க விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நாங்க நிலத்தை எடுத்துப்போம்னு சொல்றாங்க’.
‘வருவாய்த்துறை அதிகாரிகளும் போலீசும் தொடர்ந்து எங்களை மிரட்டுகிறார்கள். மாவட்ட ஆட்சியரை கேட்டால் உங்கள் கருத்தை சொல்லுங்க என சொல்கிறார். ஆனால் எங்கள் நிலத்தை நாங்கள் விடமாட்டோம் என்ற எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறார். இந்த சாலைக்காக மொத்தம் வெறும் 6,000 மரங்கள் மட்டுமே வெட்டுவோம் என்று அரசாங்கம் பொய் சொல்கிறது. எங்கள் குப்பனூர் கிராமத்தில் மட்டும் 1,300 மரங்கள் இருக்கின்றன. நாங்கள் சர்வே எடுத்து போட்டோ எடுத்து வைத்திருக்கிறோம். ஒரு கிராமத்தில் மட்டும் இவ்வளவு மரங்கள் வெட்டப்படும்’.
சேலம் மாவட்டம் அடிமலைப்புதூரைச் சேர்ந்த 66 வயது உண்ணாமலை என்ற பெண், ‘கணவனை இழந்து 22 ஆண்டுகளாக ஒற்றை ஆளாக கட்டிக் காத்து வந்த சொத்து இது. எனது மூன்று பிள்ளைகளும் அவர்களுடைய குழந்தைகளும் இங்கு வசிக்கிறோம். கல்யாண வயது நிரம்பிய 8 பேரப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு தனியாக வாழ்க்கையோடு போராடுகிறேன். கரும்பு, வாழை, நெல், பப்பாளி, குச்சிக்கிழங்கு, திராட்சை போன்ற பல பயிர் போடறோம். எங்களுடைய அந்தரை ஏக்கர் நிலமும் கிணறு மூலம் விவசாயம் பண்ணுறோம். பல்வேறு வகையான பயிர் செய்துள்ள எனது நிலத்தை வெறும் கொள்ளு விளையும் நிலம் என்று கூறி என்னை கைது செய்து நிலத்தை அளவிட்டு சென்று உள்ளனர். நாங்க அளக்கக்கூடாது என்று சொன்னதுக்கு, அதோ அங்கே தாசில்தார் இருக்கிறார். அவரிடம் வந்து சொல்லுங்கள் என்று கூறி, எங்கள் குடும்பத்தில் உள்ள 8 பேரை போலீஸ் தூக்கிட்டுப் போய்ட்டாங்க. 66 வயசான என்னை 10  போலீஸ் கூட்டிக்கிட்டு போனாங்க. நிலம் அளந்து முடிந்த பின் எங்களை திருப்பி கொண்டுவந்து விட்டாங்க, வீடு, நாலரை ஏக்கர் நிலம் எல்லாத்தையும் அரசாங்கம் எடுத்துக்கிட்டா நாங்க என்ன பண்றது. இந்த வீட்டையும் காட்டையும் விட்டு எங்களை துரத்தினா நாங்க ரோட்லயா சோறாக்கி திங்க முடியும்? என் நிலத்திற்கு அடுத்த நிலமான அரசியல் பிரமுகரின் நிலத்தை அளக்கவில்லை. மேலும், அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை, கல்லூரி, குவாரிகள் ஆகியவற்றை ஒதுக்கி வளைந்து வளைந்து செல்லுமாறு சாலையை அமைக்கின்றனர். பைபாஸ் ரோடுன்னாலே நேராகப் போறதுதானய்யா?’ என்றார்.
தருமபுரி மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் நிலம் அளவிடப்படும் என்பதை செய்தித் தாள் விளம்பரத்தின் வாயிலாக அறிந்த பின் ஊர்க் கூட்டம் போட்டு விவசாயிகளின் கருத்துக்களை அறிய அரங்கக் கூட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவெடுத்தனர். அதற்கு முறையான அனுமதியினை காவல் நிலையத்திலும் பெற்றனர். அருகில் உள்ள கிராம மக்கள் சுமார் 800 பேர் மே 24 அன்று ஒன்று திரண்டு வந்தபோது திடீரென கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
ஜ÷ன் 4 முதல் 8 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனுவைக் கொடுக்கலாம் என்று காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் ஜ÷ன் 4 அன்று பல்வேறு வாகனங்களில் மக்கள் சென்ற போது பாதி வழியிலேயே காவல்துறை பெரும்படையுடன் வந்து வழி மறித்து வாகன ஓட்டிகளை மிரட்டி திருப்பி அனுப்பினர். இதனால் விவசாயிகள், மூதாட்டிகள், வயதானவர்கள், சிறார்கள் ஆகிய அனைவரும் 6 கி.மீ. நடந்தே சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடைந்தனர். நாள் முழுவதும் அங்கு அவர்கள் காத்திருந்த பின், பொது மனுவாக பெற முடியாது, தனித்தனியாக மனு தர வேண்டும் என்று மாவட்ட வருவாய் துறை அதிகாரி வலியுறுத்தி, விவசாயிகளை ஜ÷ன் 6 அன்று வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஜ÷ன் 6 அன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த பின் அலுவலகத்தில் ஆட்சியர் இல்லை என்றும், ஜ÷ன் 7 அன்று வாருங்கள் என்றும் கூறிவிட்டனர். விவசாயிகள் ஜ÷ன் 7 அன்று சென்ற போது மாவட்ட ஆட்சியர் ஜ÷ன் 8அன்று விவசாயிகளின் கிராமங்களுக்கு நேரில் வருவதாகக் கூறினார். விவசாய நிலங்களை வந்து பார்வையிட்ட பின்னர் அரசாங்கத்திடம் இயன்ற வரை இழப்பீடு அதிகமாக வாங்கித் தர முயல்கிறோம், ஆனால் திட்டம் கைவிட வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டு சென்றார்.
நிலங்களை அளவிட வந்த அதிகாரிகளிடம் எந்த முன்னறிவிப்பும் இன்றியும், முறையான அனுமதியின்றியும் பட்டா நிலத்தில் எப்படி நீங்கள் பூட்சு கால்களுடன் நுழைகிறீர்கள் என்று கேட்டதற்கு அரசு நிலத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள் எங்களை யாரும் தடுக்க முடியாது என்று கூறி அதிகாரிகள் முட்டுக்கல் நட்டுவிட்டுச் சென்றுள்ளனர். சந்திரகுமார் என்ற விவசாயி என்ன ஆனாலும் என் நிலத்தை அளக்க விடமாட்டேன் என்று குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற பின் அவரது நிலத்தை அளக்காமல் சென்றனர்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் கருப்புக் கொடி காட்டுவது, முட்டுக்கல்லை நீக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தேசியப் பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று காவல்துறை அதிகாரிகள் மிரட்டுவதாகவும், நாள்தோறும் தனித்தனியாக விவசாயிகளை சந்தித்து உளவியல்ரீதியான அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவதாகவும் கூறினார்கள்.
இதைப் போல், எண்ணற்ற விவசாயிகள் தங்களது அவல நிலையை கண்ணீர் மல்க கூறி கதறி அழுதனர்.
அரசாங்கத்தின் கணக்கீட்டின்படி 6,400 மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், விவசாய அமைப்பின் கணக்கீட்டின்படி பல லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என்று தரவுகளுடன் உறுதிப்படுத்துகிறார்கள்.
நில ஆர்ஜித சட்டம் 2013ன் கீழ் 2015ல் மாற்றியமைக்கப்பட்ட சட்டவிதிகளின்படி உணவுப் பாதுகாப்பு பிரிவின் கீழ், கையகப் படுத்தப்படும் விவசாய நிலத்திற்கு இணையான நிலம், நிதி உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. மேலும், விவசாய நிலங்களை இயன்ற வரை குறைந்த விகிதாச்சார முறையிலேயே கையகப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
விவசாய நிலங்கள் பெரும்பாலும் நஞ்சை நிலங்களாக உள்ள போதும் புஞ்சை என்றே வகைப்படுத்தி இந்த திட்டத்தின் கீழ் கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
நில அளவீட்டின்போது அரசியல் பிரமுகர்கள், பணக்காரர்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் நிலங்களை விட்டு விட்டு ஏழை விவசாயிகள், நாதியற்றவர்களின் நிலங்களையே கையகப்படுத்துகின்றனர் என்றும் ஏழைக்கொரு நியாயம், பணம் இருப்பவருக்கு ஒரு நியாயம் எனும் பாரபட்சமான கண்ணோட்டத்தில் அரசு அதிகாரிகள், திட்ட வல்லுநர்கள் மீண்டும் மீண்டும் நடந்து கொள்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இழப்பீடு என்று அரசு கூறும் வழிமுறைகளை, தொகைகளை மக்கள் ஏற்க மறுக்கின்ற னர். காரணம் என்னவென்றால், இதற்கு முன்பு 4 வழிச்சாலைகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடுகளை இன்றளவும் அரசு வழங்கவில்லை. நெய்வேலி அனல்மின் நிலையம், சேலம் இரும்புத் தாது ஆலை ஆகிய நிறுவனங்களும் பல ஆண்டுகள் சென்றபின்பும் இழப்பீடோ நிறுவனத்தில் பணியோ மாற்று வாழ்விடங்களோ இதுவரை வழங்கவில்லை எனப் பல முன்னுதாரணங்களை விவசாயிகள் முன் வைக்கின்றனர்.
மக்களின் ஒருமித்த கருத்து
சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மக்கள் முழுமையாக நிராகரிக்கிறார்கள். எனவே மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக அந்த நிலத்துடனான உறவை, விவசாயிகள் தங்களது உணர்வாகவும், கலாச்சாரமாகவும், ஆன்மாவாகவும் கருதுகிறார்கள். நிலத்தை வெறும் பொருளாதாரப் பண்டமாக மாற்றி, இழப்பீடு பெறும் மனநிலையில் அவர்கள் இல்லை. அரசு இதை கருத்தில் கொள்ள வேண்டும். இழப்பீடு, மாற்று ஏற்பாடு ஆகியவற்றை அவர்கள் முழுமையாக மறுக்கிறார்கள்.
தங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலத்தை இந்தத் திட்டத்திற்காக இழத்தல் என்பது உடமையிழத்தல் மட்டுமல்ல, தண்ணீரிலிருந்து தூக்கி எறியப்பட்ட மீனைப் போன்ற உயிரிழத்தலே ஆகும் என்கின்றனர். சொந்த நாட்டிலேயே, மாநிலத்திலேயே அகதிகளாக்கப்படுவோம் என்றே மக்கள் அஞ்சுகின்றனர் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
மக்களின் உண்மையான இழப்புகளை கணக்கில் கொள்ளாமல், மிகவும் தவறான புள்ளி விவரங்கள் அரசு அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். தங்கள் இழப்பின் உண்மையான விவரங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை எனும் விவசாயிகளின் கோரிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
நில அளவீடு பற்றி முறையாக மக்களுக்கு அறிவிக்காமலும், அவர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமலும் நில அளவீட்டுப் பணிகள் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படுவதும், முட்டுக்கற்கள் நடப்படுவதும் பெரும் கொந்தளிப்பை, சட்டம் ஒழுங்கு சிக்கலை உருவாக்குகிறது என்பதை நிர்வாகம்  கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிலத்தை அளவீடு  செய்யும்போது விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வருவாய்த் துறை அதிகாரிகள் காவல்துறையின் துணையுடன் மக்களை அச்சுறுத்தல், அதிகார வரம்பு மீறுதல், அளவிட ஒத்துழைக்க மறுப்போரை வலுக்கட்டாயமாக அகற்றிச் சென்று மண்டபத்தில் வைத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவதும், முட்டுக்கற்கள் நட்ட பின் அவர்களை திரும்ப அனுப்புவதும் மக்களிடம் மிகுந்த அச்சத்தையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. எனவே, இத்தகைய சட்டத் திற்கு புறம்பான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சேலம் - விழுப்புரம் சாலை, சேலம் - வாணியம்பாடி, சேலம் - கிருஷ்ணகிரி - சென்னை போன்ற தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தினாலே பயண தூரம், பயண நேரம் நன்றாகவே குறையும். இதன் சாத்தியப்பாடு குறித்து ஒரு நிபுணர் குழுவை அமைத்து அதை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படைப் பேச்சுரிமை, கருத்துரிமை, கண்ணியமான  முறையில் உயிர் வாழ்வதற்கும், தொழில் செய்வதற்குமான உரிமை, அமைதியான முறையில் தங்கள் கருத்துகளை, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை ஆகிய உரிமைகளை குடிமக்களுக்கு உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

Search