COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 31, 2018

மோடி அரசாங்கத்துக்கு எதிராக 
நாடாளுமன்ற வீதிகளில்
விவசாயிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்

ஜுலை 20 அன்று நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை பிரதமர் மோடியின் அரசாங்கம் தோற்கடித்து வெற்றி பெற்றது.
நாடாளுமன்றக் கணக்கு பற்றியும், முடிவு என்னவாக இருக்கும் என்பது பற்றியும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, நாட்டு மக்கள், இந்த உலகம் என அனைவரும் முன்னமே அறிந்ததுதான். எனவேதான் அரசாங்கம் வெற்றி பெறுமா, தோல்வியடையுமா என்பதை விட, நாடாளுமன்றத்துக்குள் நடந்த விவாதங்கள், எதிர்கட்சிகள் எழுப்பிய முக்கியப் பிரச்சனைக ளுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என்பதில்தான் கவனம் குவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே, நாடாளுமன்ற வீதிகளில், இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயி கள், இந்த அரசாங்கம் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத அரசாங்கம் என தங்கள் குரல்க ளை உயர்த்தியெழுப்பி மற்றுமொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். நீங்கள் நாடாளுமன்றத்துக்குள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்திருக்கலாம், ஆனால் எங்களால் வீதிகளில் நிறைவேற்றப் பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 2019ல் உங் களை ஆட்சியிலிருந்து தூக்கியெறியும் என்று அறிவித்தார்கள்.
அகில் பாரதீய கிசான் சங்கர்ஷ் சமன்வாய் சமிதி என்ற பதாகையின் கீழ் 200 விவசாயிகளின் அமைப்புகள் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகளின் இயக்கங்களை உயிர்ப்புடன் வைத்திருந்து நாடு முழுவதும் முன்னெடுத்தும் செல்கின்றன. இந்த இயக்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகள், நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரலாக மாறின.
நாடாளுமன்ற விவாதத்தில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் விவசாயிகள் பிரச்சனைகளை எழுப்பினார்கள். ஆனபோதும், வீதிகளில் நடக்கும் விவசாயப் போராட்டங்களின் பிரதிநிதியாகவும், நாடாளுமன்றத்தில் மகாராஷ்டிரா மாநில சுயேட்சை உறுப்பினராகவும் இருக்கும் ராஜு ஷெட்டி தவிர வேறு யாரும், அரசாங்கத்தின் மீது பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் நம்பிக்கையின்மை பற்றி நாடாளுமன்றத்துக்குள் பேசவில்லை. அகில் பாரதீய கிசான் சங் கர்ஷ் சமன்வாய் சமிதியால் தயார் செய்யப்பட்டு ராஜு ஷெட்டியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட, விவசாயிகளுக்கு  கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருளுக்கு லாபகரமான விலை என்ற இரண்டு தனி நபர் மசோதாக்களும் ஜுலை 20 அன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலின் அங்கமாக இருந்தன. இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா, திரிணாமூல், ஆர்எல்டி, ஆர்ஜேடி இன்னும் பிற கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் இந்த இரண்டு மசோதாக்களுக்கும் ஆதரவு தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர்.
நாடாளுமன்ற வீதிகளில் விவசாயிகள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பின்வரும் முக்கிய பிரச்சனைகள் எழுப்பப்பட்டன.
1. சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி யான குறைந்தபட்ச ஆதார விலையைத் தரத் தவறிவிட்டதன் மூலம் மோடி அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கைக்கு, வாக்குறுதிக்கு துரோகமிழைத்துவிட்டது. மோடி அரசாங்கம் தற்போதைய கரீப் பருவ பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலையை இந்த மாதம் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கிறது. விவசாய இடுபொருள் விலை சி2 முறைப்படி கணக்கிடாமல், குறைந்தபட்ச ஆதாரவிலை  அறிவிக்கப்பட்டது ஏமாற்று நடவடிக்கையே.
2. நிதி நெருக்கடி என காரணம் சொல்லி வறட்சியின் போதும் அழிவின் போதும் விவசாயிகளுக்கு நிவாரணம் தராத மோடி அரசு, விவசாயக் காப்பீடு என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்ட மறைமுகமாக உதவி செய்கிறது.
3. 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்து தல் சட்டத்தைக் கிடப்பில் போட்டு பெசா சட்டம், மற்ற சில நிலம் சம்பந்தமான விதி களை மாநில அரசாங்கத்துடன் தொடர்புப் படுத்திவிட்டு, பல பெரும் திட்டங்களுக்கு கட்டாயமாக நிலப்பறி செய்யப்படுகிறது. பழங்குடி விவசாயிகளின் நீர், வனம், நிலம் ஆகியவை கட்டாயமாக பறித்தெடுக்கப்பட்டுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரமும் இருத்தலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது.
4. மோடி அரசு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தள்ளுபடி என்ற பெயரில் கார்ப்பரேட்களுக்குத் தருவதால் அவர்கள் கோடிக்கணக்கான ரூபாயை லாபமாக சம்பாதிக்கிறார் கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பவந்தர் திட்டம் போன்ற திட்டங்கள் வியாபாரிகள் லாபத்தை கூட்ட மட்டுமே பயன்படுகின்றன.
5. விவசாயிகளுக்கு முறையான வருமானம் கிடையாது. அவர்கள் உழைப்புக்கு மரியாதையும் கவுரவமும் கிடையாது. கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  நாடு தழுவிய கோரிக்கைக்குப் பிறகும் கூட மொத்தக் கடன் தள்ளுபடி இதுவரை செய்யப்படவில்லை. மோடி அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை, ஏமாற்று என்பதால் மோடி அரசாங்கத்தின் அனைத்து விவசாய விரோத நடவடிக்கைகளையும் கணக்கில் கொண்டு நாட்டின் விவசாயிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள்.
முதல்முறையாக ஏஅய்கேஎஸ்சிசி நாடாளுமன்றத்தில் விவசாயிகள் மசோதாவுக்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருந்தார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான விவசாயிகள் கருப்புக் கொடி, கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வீதி நோக்கி அணி வகுத்துச் சென்று கூடிய விவசாயிகள் மத்தியில் அங்கு உரையாற்றிய  அரசியல் கட்சி பிரதிநிதிகளில் இகக(மா லெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் சரத் யாதவ், ஆர்எல்டி தலைவர் திரிலோக் சந்த் தியாகி, சிவசேனா தலைவர் அர்விந்த் சாவந்த், ஜேடிஎஸ் தலைவர் டோரிஷ்கலி, ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி அன்வர் ஆகியோர் அடங்குவர்.
ஏபிகேஎஸ்எஸ்எஸ் அமைப்பாளர்களான விஎம் சிங், யோகேந்திர யாதவ், பிரேம்சிங் கேக்வாட், குருநாம் சிங் டாக்டர் தர்ஷணன் பால், ஜக்மோகன் சிங், அடுல் குமார் அன்ஞன், அஷிஸ் மிட்டல், மேதா பட்கர், கவிதா குரு காந்தி, டாக்டர் தனிலம், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு ஷெட்டி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மோடி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினர். விவசாயிகளுக்கு துரோகமிழைத்த மோடி அரசாங்கத்தை தூக்கி எறிய உறுதி ஏற்றனர்.

தமிழில்: தேசிகன்

Search