வருகிற காலங்கள், பெரிய போராட்டங்களின் காலங்கள்
மட்டுமல்ல
பெரிய வெற்றிகளின் காலங்கள்
கூட
ஒன்ஸ் பிட்டன் ட்வைஸ் ஷை
என்று சொல்வார்கள். ஒரு முறை பட்டுவிட்டதால்
அடுத்த முறை எச்சரிக்கையாக இருப்பார்கள்
என பொருள்.
‘மோடியே
திரும்பிப் போ’ என்ற ட்விட்டர்
செய்தி ஏப்ரல் 12 அன்று உலக அளவில்
முதலிடம் பெற்றது. ஜுலை 9 அன்று அமித்
ஷா சென்னை வந்தபோது
‘அமித் ஷாவே திரும்பிப் போ’
என்று ட்விட்டரில் செய்தி வெளியிட தமிழக
சமூக ஊடக வாசிகள் முடிவு
செய்தனர். இந்திய அளவில் முதலிடத்தை
அடைந்தது அந்தச் செய்தி.
காலை எட்டு மணிக்கு துவங்கிய
இந்த பிரச்சாரத்தில் மதியம் 2 மணியளவில் 1,11,000க்கும்
மேல் ‘அமித் ஷாவே திரும்பிப்
போ’ என்ற செய்தி ட்விட்டரில்
பதிவாகி இருந்தது. அந்த நேரத்தில் 11,000 ட்வீட்டுகள்
இருந்த மும்பை மழை என்ற
செய்தி முதலிடத்திலும் 1,11,000 ட்வீட்டுகள் இருந்த ‘அமித் ஷா’
செய்தி இரண்டாவது இடத்திலும் இருந்தன! ஒரு ட்வீட்டுக்கு
ரூ.100 வங்கியில் போடப்படுகிறது, அதனால்தான் இவ்வளவு வேகம் என்று
சங்கிகள் சொல்ல, அதையும் சேர்த்து
செய்தியாக்கி செய்தியின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தனர். 1,34,000 ட்வீட்டுகளுடன் இந்திய
அளவில் முதலிடம் பெற்ற பிறகு
சில நிமிடங்களில் அந்தச் செய்தியே வரிசைப்பட்டியலில்
இருந்து மறைந்தது. சமூகஊடக எதிர்ப்பைக் கூட
நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள் தமிழ்நாட்டில் என்ன குழப்பம் உருவாக்கக்
கூடினார்களோ? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மறுபக்கம்
அவர்களது அடிமை ஆட்சி அவர்கள்
விரும்பும்படியே நாளொரு கைது, பொழுதொரு
பொய் வழக்கு என்று நடந்துகொண்டிருக்கிறது.
நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி காவிரியில்,
கல்வியில் தமிழக மக்களின் உரிமைகளை
பலி கொடுத்தவர்கள், நீதிமன்ற தீர்ப்புகள் கொண்டே
மக்களை கொல்லும் நாசகர திட்டங்களை
கொண்டு வந்துவிட முடியும் என
முயற்சி செய்கிறார்கள்.
அதிகாரபூர்வ
கணக்கின்படி 13 பேரை சுட்டுக்கொன்ற பிறகு,
ஸ்டெர்லைட்டை மீண்டும் நடத்த சட்டபூர்வமாக
எடுக்கப்படும் முயற்சிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சமூகவிரோதிகள்
என ஒருவரைப் பேச
வைத்துவிட்டு அதன் பிறகு அடுத்த
கட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டது போல், இப்போது, ஒரு
ஸ்டெர்லைட் போதாது, ஒன்பது தேவை
என ஒருவரைப் பேச
வைத்திருக்கிறார்கள். கொலைகார நிறுவனம், ஆலை
மூடப்பட்டதால் நாட்டுக்கு பேரிழப்பு, மக்கள் வாழ்வாதாரம் போனது
என்ற பொய் மூட்டையுடன் நீதிமன்ற
கதவுகளை தட்டுகிறது. மின்இணைப்பு வேண்டும் என்கிறது. ஆலை
இயங்க அனுமதி வேண்டும் என்கிறது.
ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை வேண்டும்
என்ற மக்கள் கோரிக்கைக்கு பழனிச்சாமி
அரசு சவம்போல் பதில்வினையாற்றுகிறது.
கர்நாடகத்தில்
வெள்ளத்தைத் தவிர்க்க காவிரி நீர்
தமிழ்நாட்டுக்கு வருகிறது. சட்டப்படி வர வேண்டிய தண்ணீர்
வரவில்லை. நீதிமன்றத்தை மீண்டும் அணுகப் போவதாகச்
சொல்லும் கர்நாடக அரசுதான் தமிழ்நாட்டுக்கு
தண்ணீர் திறக்கும் அதிகாரத்தை இன்னும் வைத்துள்ளது. முழுமையான
துரோகம் இழைக்கப்பட்ட பிறகும், தமிழக ஆட்சியாளர்கள்,
காவிரி கனடாவில் பாயும் நதி
என கருதுவது போல்
தெரிகிறது.
நீட் வேண்டாம் என்று தமிழ்நாடு
சொல்லும்போது, ஆண்டில் இரண்டு முறை
தேர்வு என்று மோடி அரசு
சொல்கிறது. மோடி அரசின் அடிமை
ஆட்சியாளர்கள் ஒரு முறைதான் நடத்தப்பட
வேண்டும் என்று நாங்கள் சொல்வோம்
என்கிறார்கள். ஒரு முறை கூட
வேண்டாம், உயிர்ப்பலி கொள்ளும் நீட் வேண்டவே
வேண்டாம் என்று இன்னும் எப்படிச்
சொன்னால்தான் அந்தக் கேளாச் செவியர்களுக்குக்
கேட்கும்? சற்றும் அவமான உணர்வு,
கூச்ச உணர்வு எதுவும் இல்லாமல்
ஓர் அரசாங்கத்தை நடத்த முடியும், மானமும்
அறிவும் மனிதர்க்கு அழகு என்பதை மனிதரால்
மறந்துவிட முடியும் என்பதை பழனிச்சாமி
அரசாங்கம் எவ்வளவு தெளிவாகக் காட்டுகிறது?
கூடங்குளம்
தமிழ்நாட்டுக்குக் காத்திருக்கிற பேராபத்து. தீவிரமான மக்கள் போராட்டங்கள்
ஒடுக்கப்பட்டு அங்கு அணுஉலையை அமைத்தார்கள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்
மிஸ்ரா மக்கள் மத்தியில் நன்கு
பிரசித்தி பெற்ற நீதிபதியாகிவிட்டார். அவரது
தலைமையிலான அமர்வு, கூடங்குளம் அணு
உலை மூடப்பட வேண்டும் என
பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கை ஜுலை 2 அன்று விசாரித்து
வழங்கியுள்ள தீர்ப்பு அணுக்கழிவை வெளியேற்றும்
தளங்களை வேறு இடத்தில் உருவாக்க
இன்னும் நான்காண்டுகள் கால அவகாசமும் தந்துள்ளது.
2013ல் உச்சநீதிமன்றத்தில் அய்ந்தாண்டுகள் கால அவகாசம் தரப்பட்டது.
2022 வரை விபத்து நேர்ந்தால் உச்சநீதிமன்றம்
பார்த்துக் கொள்ளும் என நாம்
நம்ப வேண்டும்.
2019 வரையோ,
2021 வரையோ அதற்கு மேல் ஆட்சி
இல்லை, இயன்றவரை சுருட்ட வேண்டும்
என்ற தெளிவில் இருப்பதால் தமிழக
மக்களை ஆபத்திலும் இருளிலும் தள்ளுவது பற்றி அக்கறையற்ற
ஆட்சியாளர் காலத்தில் ஊழல் ஒழிப்புக்கான சட்டம்
நிறைவேறுவது தமிழக மக்களுக்கு நேரும்
கொடுமை. விவாதம், கருத்து கேட்பு
எதுவும் இல்லை. சட்டம் நிறைவேறிவிட்டது.
புதிய பேருந்து பழுதாகி நிற்கிறது.
சத்துணவு முட்டையில் ஊழல் மூட்டை பொதிந்துகிடக்கிறது.
திருடன் முழுவதுமாக திருடிய பிறகு வீட்டை
பாது காப்பாக பூட்டிவிட்டுச் செல்வதுபோல்
இருக்கிறது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, கூடங்குளம்
என எங்கும் காசு
பார்க்கும் கூட்டத்தின் கைகளில் ஊழல் ஒழிப்புச்
சட்டம்! தவறான புகார் அளித்தால்
ஓராண்டு சிறை. ரூ.1 லட்சம்
அபராதம். இந்த ஒரு பிரிவு
போதாதா அடிமை ஆட்சியாளர்களுக்கு?
எட்டு வழிச்சாலைக்கு பச்சைக் கொடி காட்டிவிட்ட
எதிர்க்கட்சித் தலைவர், ஊழல் ஒழிப்புச்
சட்டத்துக்கு பல் இல்லை என்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என ஓய்வெடுக்கும் மனநிலையில்
முக்கிய எதிர்க்கட்சி இருப்பதாகவே தெரிகிறது.
தமிழக மக்கள் அப்படி யாருக்கும்
காத்திருக்கவில்லை. அவர்களது போராட்டம் தொடர்கிறது.
போராட்டங்களை ஒடுக்குவது புதிய சகஜ நிலை
என்றால் போராட்டங்களை தீவிரப்படுத்துவதும் புதிய சகஜ நிலை
என்கிறார்கள். எட்டுவழிச்சாலை அரசாணை எரிப்புக்காக இககமாலெ
தலைவர்கள் சந்திரமோகன், வேல்முருகன், அய்யந்துரை, விஸ்வநாதன், ஜெயராமன் உள்ளிட்டார் சிறை
வைக்கப்பட்டனர். பிணையில் வெளியானவர்கள் அடுத்தகட்ட
போராட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய மக்கள்
மனநிலை. தோழர் சாரு மஜும்தார்
சொல்வதுபோல், வருகிற காலங்கள், பெரிய
போராட்டங்களின் காலங்கள் மட்டுமல்ல. பெரிய
வெற்றிகளின் காலங்கள் கூட.