“ஏழை என்றால் உயிர் வாழக் கூடாதா....?”
அது என்ன வேலை? அண்ணாநகரின்
மற்ற குடும்பங்களின் நிலை என்ன? வார்த்தைகளில்
முழுவதுமாக விளக்குவது சற்று சிரமம் என்றே
படுகிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி)
‘என்னத்ததான்
சொல்றது...? விவசாயம் இல்லை... வேலை
இல்லை.... ஓஎன்ஜிசி வந்து தண்ணி
வீணாப் போச்சு... எந்த வருமானமும் இல்ல...
வறும கோட்டுக்கு கீழதான் எங்க வாழ்க்க...
எப்படி வாழறதுன்னே தெரியல...
நாலு புள்ளங்கள வச்சுருக்கேன்...
ரேசன் அரிசி ஒரு வாரத்துக்குதான்
வரும்... வேலை இல்லாம 6 மாசமா
குழு கடன் கட்டல... ஒரு
வாரமா என்ன யாரும் வேலைக்கு
கூப்புடல... எனக்கு வேற வேலையும்
கெடக்கல... இந்த பழையாறும் இல்லன்னா
நாங்க எல்லாரும் சாக வேண்டியதுதான்...’ குமுறிக்
கொட்டினார். அவர் பெயர் வள்ளல்.
அவரைப் பெற்றவர்கள் என்ன நினைத்து அவருக்கு
அந்தப் பெயர் வைத்தார்களோ... கொடுக்க
அவரிடம் எதுவும் இல்லை. இனியும்
இருக்க வாய்ப்பில்லை. அவருக்கு 50 வயது இருக்கலாம்.
போட்டுக்கு
(படகில் கடலுக்கு) போவதாகச் சொன்னார். அண்ணாநகரில்
அய்ந்து குடும்பங்களில் இருந்து போட்டுக்குச் செல்கி
றார்கள். மீன் பிடிக்க கடலில்
செல்லும் மீனவர் களுக்கு உதவியாக
இவர்கள் செல்கிறார்கள். ஒரு முறை போய்
வந்தால் ரூ.500 வரை கிடைக்
கும் என்கிறார். இவர்களுக்கு மீனவர்களுக்கான பதிவு கிடைப்பதில்லை. அவர்களுக்கான
சலுகைகள் கிடைப்பதில்லை. வேலை மட்டும் மீனவர்
வேலை போல் ஆபத்து நிறைந்தது.
அவர் குடிசையில் மண் சுவர் கூட
இல்லை. அண்ணாநகரின் பெரும்பாலான குடிசைகளில் கீற்றுச் சுவர்கள்தான் இருக்கின்றன.
இவரிடம்
என்ன செலவாகிறது நாளொன் றில் என்ற
கேள்வியைக் கேட்கவே தயக்கமாக இருந்தது.
அவரது தோற்றம், அவரது குடிசை,
அவரது பிள்ளைகளின் தோற்றம் ஆகியவற்றை பார்த்தாலே
வேறு வார்த்தைகள் வரவில்லை. அடுத்த குடிசைக்கு நகர்ந்துவிட
நேர்ந்தது.
அண்ணாநகரில்
பெண்கள் கட்டுமானப் பணிகளுக்குச் செல்வதில்லை. கட்டுமானப் பணியில் பெண்களின் கவுரவம்
கேள்விக்குள் ளாக்கப்படுகிறது என்று கருதுகிறார்கள். எனவே
அந்த வழியில் சுத்தமாக வருமானம்
இல்லை. ஒரே ஒரு குடும்பத்தில்
மட்டும் கணவர் கட்டுமானப் பணிக்குச்
செல்கிறார்.
அய்ந்து
குடும்பங்கள் செங்கல் சூளையில் வேலை
பார்க்கின்றன. அவற்றில் இரண்டு குடும்பங்கள்
திரும்பியுள்ளன. திரும்பிய குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் ஆண்
நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். செங்கல் சூளை சென்றால்
நோய் வந்துவிடுகிறது என்கிறார்கள். குழந்தைகளின் படிப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது. குழந்தைகளை விட்டுவிட்டு
அந்த வேலைக்குச் செல்ல முடியாது என்பதால்,
குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அங்கு கல்வி வசதி
இல்லாததால், குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுவிடுகிறது.
நான்கைந்து ஆண்டுகள் கழித்து திரும்பி
வரும்போது, அந்தக் குழந்தைகள் பள்ளி
செல்லும் வயதைக் கடந்து விடுகின்றன.
இதுபோன்ற ஒரு குடும்பத்தில் 4 வயதில்
செங்கல் சூளைக்கு பெற்றோரோடு சென்ற
குழந்தை 9 வயதில் திரும்பியிருக்கிறது. படிப்பு
இனி இல்லை.
கல்லறுக்கச்
சென்று திரும்பிய இன்னொரு குடும்பத்தில் கணவர்
உயிருடன் இல்லை. ஒரு மகளுக்கு
சர்க்கரை நோயால் கண் பார்வை
போய்விட்டது. மனைவி இல்லப் பணியாளர்.
கண் பார்வையற்ற மகளுக்கு சிகிச்கை அளிக்க
வேண்டுமானால், மருத்துவக் காப்பீடு அட்டை வேண்டும்
என்று சீர்காழி அரசு மருத்துவமனையில்
சொன்னதால், அந்த அட்டைக்காக அலைகிறார்.
ஒரு முறை அதற்காக சம்பந்தப்பட்ட
அலுவலகத்துக்குச் சென்று வர வேண்டுமென்றால்,
பேருந்துக்கே பெரும் செலவாகிற நிலையில்,
கடைசியாக போனபோது, ஒரு சிறிய
கையடக்க புத்தகத்தை கொடுத்து அனுப்பி விட்டிருக்கிறார்கள்.
கல்வியறிவு இல்லாததால், அதுதான் மருத்துவக் காப்பீட்டுக்கான
அட்டை என்று அவர் நம்பிக்
கொண்டிருக்கிறார். அது மருத்துவ காப்பீடு
தொடர்பான விவரங்கள் உள்ள கையேடு. இது
காப்பீட்டு அட்டை இல்லை என
விளக்கி, காப்பீட்டு, அட்டைக்கு விண்ணப்பித்ததற்கான சீட்டு எதுவும் வைத்திருக்கிறீர்களா
என்று கேட்டபோது, அது என்ன என்று
கேட்டார். அதையும் விளக்கியபோது, வெடிக்கத்
துவங்கினார். தனது மகளுக்கு சர்க்கரை
நோய்க்கு அரசு மருத்துவமனையில் மருந்துகள்
வாங்குவதாகவும், அரசு மருத்துவமனையில் தங்களைப்
போன்ற வறியவர்களை சற்றும் மதிப்பதில்லை என்றும்
மிகவும் இழிவாக நடத்துவதாகவும் சொன்னவர்,
‘நாங்கள் என்ன செத்துப்போய் விட
வேண்டுமா, ஏழை என்றால் உயிர்
வாழக் கூடாதா’ என்று கேட்டார்.
மருத்துவக் காப்பீட்டு அட்டைக்காக காத்திருக்கும் அவருக்கு அதை வாங்க
உதவி செய்ய முடியும். அதற்குப்
பின் அவர் அரசு மருத்துவமனைக்குச்
சென்று அங்கு உதாசீனப்படுத்தப்பட்டு, அவமானங்களைச் சுமந்து
பிறகு தனது மகளுக்கு சிகிச்சை
பெறலாம்.
மகளுக்கு
மருந்து வாங்க சீர்காழிக்குச் சென்று
வரும் நாட்களில் பேருந்து கட்டணச் செலவு
இருப்பதுடன் வேலைக்குச் செல்ல முடியாததால் கூலி
கிடைப்பதில்லை என்றார். ரேசன்
அரிசி 10 நாட்கள் வரும், அதற்கு
மேல் அதே ரேசன் அரிசியை
வெளிச்சந்தையில் கிலோ ரூ.18க்கு
20 கிலோ வரை வாங்க வேண்டும்,
இதற்கு மேல் எந்த செலவுக்கும்
அக்கம் பக்கம் கடன் வாங்க
வேண்டும் என்றார். அவருக்கு எந்த
விதத்திலும் நம்பிக்கை தர முடியும் என்று
நம்பிக்கை வரவில்லை. எதிரில் இருள்.
அடுத்த குடிசையில் ஒரு பெண்ணும் அவரது
தம்பியும் இருக்கின்றனர். தம்பி மாற்றுத் திறனாளி.
ஒரு கை இயங்காது. அந்தப்
பெண் இறால் தடவி கிடைக்கும்
வருமானத்தில் இரண்டு பேரும் பிழைக்கிறார்கள்.
மூன்று வேளை உணவு, தேநீர்
என்ற எதுவும் அவர்களுக்கு சாத்தியமில்லை.
இரண்டு வேளை உணவு கூட
மாதம் முழுவதும் கிடைப்பது சந்தேகம்தான்.
இவரிடம்
பேசிக் கொண்டிருந்தபோது பக்கத்து குடிசையில் இருந்த
ஒரு பெண், ‘பழையாறு போய்
பாருங்கள். அப்போதுதான் எங்கள் மக்கள் ஒரு
150 ரூபாய்க்காக எந்த அளவுக்கு துன்பப்படுகிறார்கள்
என்று தெரியும். நீங்கள் வெறுமனே சென்று
வந்தால் கூட உங்கள் மீது
வீச்சம் அடிக்கும். உடல் அரிக்கும். சிலர்
காலையில் ஆறு மணிக்குக் கூட
போய் விடுகிறார்கள். உடல் சக்திக்கேற்ப சிலர்
இரவு பத்து மணி வரை
கூட வேலைசெய்கிறார்கள். அந்த வேலைக்கேற்ப ரூ.150
முதல் ரூ.500 வரை கூலி
கிடைக்கும். அது கிடைத்தால்தான் எங்களுக்கு
சாப்பாடு... அதுவும் இல்லன்னா நாங்க
சாக வேண்டியதுதான்... விவசாய வேல இல்ல...
அதனால எங்கெங்க இருந்தோ மக்க
வருதுக... அதுக்கும் போட்டியா போச்சு...’ அந்தக்
குரலின் ஏற்ற இறக்கங்களில் அவர்கள்
தினமும் படும் துன்பம், வேதனை
தெரிந்தது. மறுநாள் பழையாறு சென்று
பார்த்தபோது, அந்த வேதனை உருக்கொண்டு
பழையாறு துறைமுகம் முழுவதும் வியாபித்து இருந்தது.
பழையாற்றில்
உள்ள மீன்பிடி துறைமுகம் அண்ணாநகர்
மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறது.
பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும்,
அல்லது ஆண் மட்டும் இங்கு
வேலை செய்கிறார்கள். பலவிதமான வேலைகள் அங்கு
நடந்துகொண்டிருந்தன. படகில் உதவியாளர்களாகச் செல்பவர்கள்
தவிர, படகு துறைமுகத்துக்கு வந்ததும்,
அதில் இருந்து மீன் களை
கீழே இறக்கும் வேலை, இறக்கிய
பிறகு அவற்றை பதப்படுத்த அய்ஸ்
பிளான்டுக்கு பெட்டிகளில் எடுத்துச் செல்லும் வேலை, பெட்டிகளை
வண்டிகளில் ஏற்றும் வேலை, அய்ஸ்
பெட்டிகளுக்கு வெல்டிங் செய்யும் வேலை,
மீன்களில் வேதிப்பொருள் எதையோ கலக்கும் வேலை,
சிறிய வகை மீன்களை கீறி
காய வைத்து, அதைத் திருப்பிப்
போட்டு கருவாடாக மாற்றும் வேலை....
இப்படி திரும்பும் திசையெல்லாம் தலை காய்ந்த மனிதர்கள்,
அழுக்கு உடைகளுடன், ஒட்டிய வயிறுகளுடன், காய்ந்துபோன
தோலுடன், கையுறைகள் காலுறைகள் எதுவும் இல்லாமல் இன்னும்
சிலர் காலுக்கு செருப்பு, தலைக்கு
பாதுகாப்பு என எதுவும் இல்லாமல்
சுண்ணாம்பு, விதவிதமான மீன்கள் ஆகியவற்றுக்கு இடையில்
குறுக்கும் நெடுக்குமாக மிகவும் வேகவேகமாக இயங்கிக்
கொண்டிருந்தார்கள். எவ்வளவு வேகமாக வேலை
செய்கிறார்களோ அதற்கு ஏற்ற கூலி.
பீஸ் ரேட். தினமும் அவர்கள்
தங்களுடனேயே போட்டி போட வேண்டும்.
இங்கும் வேலை வாய்ப்புக்கு கடுமையான
போட்டி இருப்பதால் கூலி குறைத்து வழங்கப்படுகிறது
என்றும் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம்
61 நாட்கள் இருந்தது. அந்த நாட்களில் மிகவும்
துன்பம் என்றார்கள். மழை வந்தால் இந்தப்
பிழைப்பும் போய் விடும், மாதத்தில்
15 நாட்கள் இந்த வேலை கிடைக்கும்
என்றார்கள்.
இறால் பிடித்து விற்பது என
அதில் ஒரு ரூ.50 முதல்
ரூ.100 கிடைக்கலாம். வேலி கட்டுவது, பிற
வேலைகள் என அவ்வப்போது கிடைக்கும்,
ரூ.150 வரை கூலி கிடைக்கும்
வேலைகள் வந்தால் செய்கிறார்கள். வேலை
வராதா என காத்துக் கிடக்க
வேண்டும். நூறு நாள் வேலை
கிடைத்தால் ஓரளவு சமாளிக்கலாம் என்பது
அவர்கள் பொதுவாக வெளிப் படுத்தும்
கருத்து. கோரிக்கை. குறைந்தபட்ச எதிர்ப்பார்ப்பு.
பழையாறு
துறைமுகம் இவர்கள் வாழ்வில் வகிக்கும்
பங்கு பற்றி தனியாக ஒரு
படிப்பு அவசியம்.
அருகில்
உள்ள மளிகை மற்றும் பிற
கடைகளில் ரூ.2,000 முதல் ரூ.2,500
வரை வருமானம் தரும் சில
வேலைகள், கேரளாவுக்குச் சென்று பிழைப்பு, இரண்டு
குடும்பங்களில் மாதம் பத்து நாட்களுக்கு
ரூ.500 வரை வருமானம் செய்யும்
இரண்டு தச்சர்கள், சென்னை உணவு விடுதியில்
வேலை செய்து குடும்பத்துக்கு மாதம்
ரூ.3,000 அனுப்பும் ஒருவர், திருப்பூரில் வேலை
செய்யும் ஒருவர் கொண்ட ஒரு
குடும்பம் என பகுதியில் உள்ள
74 குடும்பங்களில் சிலர் உள்ளனர். இந்த
வருமானம் அவர்களது வாழ்க்கை யில்
எந்த பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்
தந்துள்ளதாக தெரியவில்லை. வாகன ஓட்டுநர், உணவு
விடுதி வேலை என்று சென்னைக்குச்
சென்று விட்ட சிலர், தங்கள்
செலவுகள் போக பணம் அனுப்புகிறார்கள்
என்றால் அது எந்த அளவுக்கு
இருக்கும் என யூகித்துக் கொள்ளலாம்.
பகுதி மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லில்
உள்ள ஏற்றுமதி ஆடை உற்பத்தி
நிறுவனத்துக்கு 15 வயது சிறுமி ஒருவரை
வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று
கொண்டிருந்தார்கள். ரூ.3,000 சம்பளம் என்றார்கள்.
ஏற்கனவே திண்டுக்கல்லில் இது போன்ற வேலைக்குச்
சென்று திரும்பிவிட்ட ஒரு பெண், அங்கு
ஒன்றும் பிரச்சனை இல்லை, எல்லாம்
நன்றாகவே இருக்கும் என்றார். இப்படித்தான் சொல்ல
வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்களா
என்று கேட்டபோது மவுனமாக இருந்தார். ஏழைச்
சிறுமி.... வேறு வழியில்லை.
கடைசியாக,
அண்ணாநகரின் புதுத்தெருவில் பார்த்த ஒரு குடும்பம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன்
இருக்கும் என்று தெரி யவில்லை.
கணவன், மனைவி, நான்கு குழந்தைகள்
உள்ள அந்த குடும்பத்தில் கணவன்
எலக்ட்ரீஷியன் வேலைக்குச் செல்வதாகச் சொல்கிறார். சென்னை போன்ற இடங்களில்
எலக்ட்ரீஷியன் வேலை செய்பவர்களுக்கு தினமும்
வேலை இருக்காது. கொள்ளிடத்தில் மூலை யில் இருக்கும்
ஒரு கிராமத்தில் எலக்ட்ரீஷியனுக்கு என்ன வேலை கிடைக்கும்?
‘அப்பப்ப எதாவது வேலை கெடைக்கும்...
50... 100... கெடைக்கும்... மாசத்துல
ஒரு 10 நாள் இப்படி எதாவது
வேலை கெடைக்கும்....’ இதில் என்ன சொல்ல
இருக்கிறது? குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் மதிய உணவு
கிடைக்கும். மனைவி எந்த வேலைக்கும்
செல்லவில்லை. அவரும் எலும்பு மற்றும்
தோல் என்றுதான் இருந்தார். வேறு வேலை கிடைக்க
வாய்ப்பிருப்பதாகத் தெரியவே இல்லை. வாகனங்கள்
வேகமாகச் செல்ல எட்டு வழிச்சாலை
என்று பேசும் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும்
இது போன்ற குடும்பங்களைப் பற்றி
அறிவார்களா?
ஒரு நாளைக்கு என்ன செலவு
செய்கிறீர்கள் என்று கேட்டால், என்ன
செலவாகும் என்பதாக அந்தக் கேள்வியை
புரிந்துகொண்டு, மீன் குழம்பு வைக்க
ரூ.100 செலவாகும் என்று துவங்குகின்றனர். மீன்
குழம்புதான் அவர்களது அதிகபட்ச சிறப்பு
உணவு. ஆட்டுக் கறியை மறந்துவிட்டார்கள்.
பருப்பு அவர்கள் உணவில் பெரிய
அளவில் இல்லை. காய்கறிகள் குழம்பில்
போட்டால் ஆளுக்கு ஓரிரண்டு துண்டுகள்
கிடைக்கலாம்.
நீங்கள்
சொல்லும் செலவுக்கும் வரவுக்கும் பொருந்திப் போகவில்லையே என்று கேட்கும் போதுதான்,
இருக்கறப்ப மீன் குழம்பு ஒண்
ணும் இல்லன்னா கஞ்சி என்கிறார்கள்.
இங்கும் மூன்று வேளை உணவு
உண்ணும் நடைமுறை இல்லை. வசதி
இல்லை. குறை உணவு உண்பது
பழக்கமாகி விட்டிருக்கிறது. வேலை இல்லா நாட்களில்
அக்கம்பக்கம் கைமாற்று வாங்கி ஏதாவது
செய்ய வேண்டும் என்கிறார்கள்.
அவர்கள்
சொல்லும் செலவுகளுக்கே கூட நாளொன்றுக்கு ஒருவருக்கு
ரூ.20க்கும் குறைவாகத்தான் செலவாகும்.
இது அவர்கள் சொல்லும் செலவு.
ஆனால் அவர்கள் இந்த செலவு
செய்யும் அளவுக்குக் கூட அவர்களுக்கு வருமானம்
இருப்பதில்லை. அந்த எலக்ட்ரீஷியன் குடும்பத்தின்,
கல்லறுக்கப் போய் உழைப்பவரை இழந்த
குடும்பத்தின் நிலைமைகளில் இருந்து இதை புரிந்துகொள்ள
முடியும். அவர்கள் சொல்வதற்கும் மிகமிகக்
குறைவாகவே அவர்கள் நாளொன்றில் செலவு
செய்கிறார்கள்.
இங்கும்
எல்லா குடும்பங்களும் குழு கடன் வாங்கி
அதற்கு அசல், வட்டி தவணை
செலுத்துகிறார்கள். அது பெரும் சுமையாக
அழுத்திக் கொண்டே இருக்கிறது. தொடரும்
தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டியிருப்பதால்
குழு கடன் வாங்குவதில் இருந்து
மீளவே முடியாது என்கின்றனர்.
சில பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்திராகாந்தி
வீட்டு வசதித் திட்ட வீடுகள்
இடிந்துவிழும் நிலையில் உள்ளன. அவற்றுக்குள்தான்
வசிக்கிறார்கள். அவற்றை செப்பனிட வசதி
இல்லை.
தலித் வன்கொடுமைச் சட்டத்தில் புகார் ஒன்றை அவர்கள்
எழுப்பியிருப்பதால் அவர்கள் தெருவுக்கு நலத்திட்டங்கள்
எவையும் வருவதில்லை என்று சொல்கிறார்கள். (புகார்
தரும் துணிச்சல் இருந்தால் கூட அந்த வாய்ப்பையும்
தட்டிப் பறிக்கும் வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது).
வருமானம்
என்று அவர்கள் சொல்வதில் பாதியைத்தான்
உண்மையான வருமானமாகக் கருத முடியும். ரூ.5,000
வருமானம் என்று சொல்கிறார்கள் என்றால்
அது ரூ.2,500 முதல் ரூ.3,000
வரை மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.
திட்டவட்டமான வேலைவாய்ப்பு என ஒன்று இல்லாததால்,
இதுதான் வருமானம் என்று திட்டவட்டமாக
அவர்களால் சொல்ல முடிவதில்லை. அவர்கள்
சொல்கிற செலவு கணக்கில் இருந்துதான்
அவர்கள் பெறும் ஒரு நாள்
வருமானம் பற்றி மேலும் கேட்டு
தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள்
சொல்கிற அந்த ஒரு நாள்
வருமானத்தையும் மாதம் முழுவதும் அப்படியே
தொடரும் என எடுத்துக் கொள்ள
முடியாது. 10 முதல் 15 நாட்களுக்கு வரும்
வருமானமாகவே அது இருக்க வாய்ப்பு.
செலவுகளை கூடுதலாகவும் வருமானத்தை குறைத்தும் சொல்வதால் எந்த பெரிய ஆதாயமும்
அவர்களுக்கு கிடைத்து விடப் போவதில்லை.
குறைத்துச் சொன்னால் அரசு சலுகைகள்
இன்னும் சற்று கூட கிடைத்து
விடாதா என்ற ஆதங்கம், இரண்டு
வேளை உணவுக்காவது ஆகும் செலவை அதிகமாகச்
சொல்வதால் வேலை ஏதாவது கிடைக்க
ஏற்பாடு நடந்து விடாதா என்ற
எதிர்ப்பார்ப்பு ஆகியவைதான் அவர்கள் சொல்வதில் வெளிப்படுகின்றன.
மத்திய,
மாநில அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள்
அனைவருக்கும் சென்று சேரவில்லை. மிகச்
சிலருக்கு தரப்படுவதால், மற்றவர்கள் தங்களுக்கும் கிடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். இதே
ஆட்சி தொடர்ந்தால்தான் அந்தப் பலன்கள், சலுகைகள்
கிடைக்கும், வேறு ஆட்சி வந்தால்
கிடைக்காது என்று கருதி அதே
கட்சிக்கு வாக்களிக்கும் போக்கு இருக்காது என்று
சொல்ல முடியாது. ஆடு, மாடு என்று
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில்
இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த
கிராமத்தில் அப்படி எதுவும் வாழ்வாதாரம்
இல்லை. கிடைக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும். தெரிந்த
வேலையைச் செய்ய வேண்டும்.
தாண்டவன்குளத்தில்
ஏப்ரல் 1 2018 முதல் ஜ÷ன்
26 2018 வரை நூறு நாள் வேலைத்
திட்டத்தில் 1,220 வேலை நாட்கள் உருவாக்கி
இருப்பதாகவும், தலித்துகள் இதில் 8.52% வேலைகள் பெற்றுள்ளனர் என்றும்,
ரூ.3.82 லட்சம் கூலி தந்திருப்பதாகவும்
அதிகாரபூர்வ விவரங்கள் தெரிவிக்கின்றன. திருமுல்லைவாசலில் இந்த காலகட்டத்தில் 2,696 வேலை
நாட்கள் உருவாக்கி இருப்பதாகவும், தலித்துகள் இதில் 20.36% வேலைகள் பெற்றுள்ளனர் என்றும்
ரூ.7.82 லட்சம் கூலி தரப்பட்டுள்ளதாகவும்
சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கிராமங்களிலும்
உள்ள தலித்துகள் நூறு நாள் வேலை
கிடைத்து ஆண்டு ஒன்று ஓடிவிட்டது
என்கிறார்கள். மோடியும் பழனிச்சாமியும் விளக்கம்
தர வேண்டும்.
விவசாயம்
இல்லாத பகுதியில்தான் நிலைமைகள் இப்படி விவசாயம் நடக்கும்
பகுதியில் நிலைமைகள் சற்று மேலானதாக இருக்கும்
என்ற எதிர்ப்பார்ப்பில் சீர்காழியில் விவசாயம் நடக்கும் நெம்மேலி
கிராமத்துக்கு குழு சென்றது. கிணற்றுப்
பாசனத்தில் விவசாயம் நடக்கிறது. தலித்துகள்
சிலர் நிலம் வைத்திருந்தாலும் விவசாயம்
கட்டுப்படியாகாததால் அதை தரிசாகப் போட்டுவிட்டு
கிடைத்த வேலைக்குச் செல்கிறார்கள். வேலை இல்லை என்றால்
பட்டினி கிடக்கிறார்கள். விவசாயம் செய்பவர்களும் சொந்த
பயன்பாட்டுக்கு அரிசி வைத்துக் கொள்வதில்லை.
வயலில் இருந்து அப்படியே போய்விடும்,
நாங்கள் ரேசன் அரிசி, கடையில்
விற்கும் ரேசன் அரிசி ஆகியவற்றைத்தான்
நம்பியிருக்கிறோம் என்கிறார்கள். இங்கும் குழு கடன்கள்,
பிற வகை வட்டிக்கு வாங்கப்படும்
கடன்கள் என தெருவெங்கும் கடன்
துன்பக் கதைகள் நிறைந்துள்ளன. நூறு
நாள் வேலை கிடைத்தால் ஓரளவு
சமாளிக்கலாம் என்கிறார்கள். குறைந்தது இரண்டு வேளைக்கு குறைந்தபட்ச
உணவாவது கிடைக்கும் என அதற்கு பொருள்
கொள்ள வேண்டும். கவுரவமற்ற வாழ்நிலைமைகளில் இருந்து மீள முடியாது.
தொகுத்துச்
சொல்வதானால்,
விவசாய வேலைகள் இல்லை. நூறு
நாட்கள் வேலை இல்லை. கிடைக்கும்
வேலைகளுக்குச் செல்கிறார்கள். கிடைக்கும் கூலியை வாங்கிக் கொண்டு
திரும்புகிறார்கள். கையில் காசு இருந்தால்
சாப்பிடுகிறார்கள். இல்லை என்றால் பட்டினி
கிடக்கிறார்கள். அதிகபட்ச சிறப்பு உணவு
மீன் குழம்பு. மண்சுவரும் கீற்றுச்
சுவரும் கொண்ட குடிசை வீடுகளில்
வசிக்கி றார்கள். (இவற்றை வாழ்விடங்கள் என்று
சொல்ல முடியாது). ஏதாவது வேலை கிடைக்க
வேண்டும் என காத்திருக்கிறார்கள். கேரளா,
சென்னை, செங்கல் சூளை என்று
வேலை தேடிப்போய் தொலைந்து போகிறார்கள். நாள்
ஒன்றில் ரூ.20க்கும் குறைவாக
செலவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள்.
அய்முகூ
ஆட்சியில் 2011 - 2012ல், கிராமப்புறத்தில் நாளொன்றில்
ரூ.27க்கு மேல் செலவு
செய்யும் ஒருவர் வறுமைக் கோட்டை
தாண்டியவர் என சொல்லப்பட்டபோது நாடு
கொந்தளித்தது. வளர்ச்சி பேசிய பாஜக
2014ல் ஆட்சியைப்
பிடித்த பிறகு, 2014 ஜ÷லையில்
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நாளொன்றில் ரூ.32க்கு மேல் செலவு
செய்யும் ஒருவர் வறியவர் இல்லை
என்றது. இந்த அறிக்கைப்படி வறுமைக்
கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை
35% அதிகரித்தது. நல்ல நாட்கள் வந்துவிட்டதாகச்
சொல்லும் மோடி அரசு இந்த
அறிக்கையை அதன் பிறகு கண்டுகொள்ளவே
இல்லை. மோடி ஆட்சியில் நாட்டில்
உள்ள வறியவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நான்கு
ஆண்டுகளாகியும் இறுதி செய்யப்படவில்லை.
குறைந்தபட்சம்
இந்த கிராமங்களில் இருப்பவர்களை உடனடியாக அந்த்யோதயா திட்ட
வரையறைகளுக்குள்ளாவது கொண்டு வருவது பட்டினிச்
சாவுகளை, பட்டினி வாழ்வுகளை கட்டுப்படுத்தும்.
(அப்போதும் மூன்று வேளை உணவு
உத்தரவாதமாகாது). இதற்கு மேல் அவர்கள்
வாழ்வாதாரம் பற்றி நமக்கு ஒரு
பெரிய பட்டியல் கோரிக்கைகள் உள்ளன.
ஏனென்றால் அவர்களுக்கு எதுவுமே இல்லை.
வாழ்க்கை
என்று கருத முடியாத அளவுக்கு
மிகமிகக் கொடூரமான வாழ்க்கை இது.
என் வீட்டுக்கார் செத்துப் போயி நாலு
வருசமாயிடுச்சி... இன்னும் எனக்கு விதவை
பென்சன் கெடைக்கல... மூனு பொட்டப் புள்ளைங்கள
காப்பத்தனும்... ஒண்ணுமே சமாளிக்க முடியல...
யாரும் எங்கள வந்து பாக்கறது
இல்ல... இந்த பென்சன் வாங்கக்
கூட எனக்கு யாரும் உதவி
செய்யல.... (இதற்கு விளக்கம் தேவையில்லை).
இளங்கலை
பட்டம், முதுகலை பட்டம் பெற்ற
ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு
அடுத்து என்ன செய்வது என்று
தெரியவில்லை. வழிகாட்டுவோர் யாரும் இல்லை. முதல்
தலைமுறை பட்டதாரி உதவித்
தொகை பெற்று பட்டம் பெற்ற
ஒருவர் அடுத்து ஆசிரியர் பயிற்சி
சேர வேண்டும் என திட்டமிடுகிறார்.
தமிழ்நாட்டின் அரசு நடத்தும் ஆசிரியர்
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற
பிறகும் ஆசிரியர் பணி கிடைக்காமல்
பலர் இருப்பதையும், இந்தத் தேர்வில் தேர்ச்சி
பெற்றுவிட்டதாலேயே பணி வழங்க வேண்டும்
என்ற கட்டாயம் இல்லை என்று
கல்வித் துறை அமைச்சர் சட்டமன்றத்திலேயே
அறிவித்ததையும் அவருக்குச் சொன்னபோது அதிர்ச்சியுற்றார். முதுகலை பொறியியல் பட்டதாரி
ஒருவர் வங்கிப் பணி தேர்வுக்கான
தயாரிப்புகளில் இருக்கிறார். முதுகலை பொறியியல் பட்டம்
பெற்றவர்களுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன
என்று அவர்களுக்கு தெரியவில்லை. தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள்
இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் தெரியப்படுத்த வேண்டிய
இடத்தில் இருக்கும் அரசாங்கங்கள் அந்தக் கடமையில் தவறுவதும்தான்
பிரச்சனை என்பதை பின்னுக்குத் தள்ள,
தெரிந்துகொள்ள வேண்டியதுதானே என்று மிகவும் புத்திசாலித்தனமாக
கேள்வி கேட்கலாம்.
பத்தாம்
வகுப்பில் 435 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி
பெற்ற மாணவியின் தாய், என் மகள்
மருத்துவராக வேண்டும், என்ன செய்ய வேண்டும்
என்று கேட்டார். நாமெல்லாம் மருத்துவராக முடியாது என்று சொன்னபோது,
ஏன் என் மகள் நன்றாகப்
படிக்கிறாள், இன்னும் கொஞ்சம் நன்றாக
பயிற்றுவித்தால், இன்னும் நல்ல மதிப்பெண்
பெறுவாள், நீட் தேர்விலும் நல்ல
மதிப்பெண் பெறுவாள் என்றார். நிலைமையை
விளக்கியபோது, எங்கள் வீட்டுப் பிள்ளைகள்
மருத்துவராக வாய்ப்பில்லையா என்ற அவரது கேள்விக்கு
இல்லை என்பதுதான் இன்றைய பதில்.