COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 31, 2018

குத்தகையாளர்களுக்கே 
நிலம் சொந்தமாக வேண்டும்!

என்.குணசேகரன்

சாணியைச் சுட்டு சாம்பலாக்கி, வாயில் போட்டு சிவசிவா எனச் சொல்லும் பண்டார சன்னதிகளுக்கு ஒண்ணேகால் லட்சம் ஏக்கர் நிலம் ஏன்
என்று நமது மறைந்த தோழர் டிகேஎஸ் அவர்கள் அனைத்து மேடைகளிலும் முழங்கினார். ஆம். மடாதிபதி என்னும் தண்ட சோறுண்ணும் சாமியார்களுக்கு பூசிக் கொள்ள சாம்பலும், பசிக்கு பட்டை சோறும்  போதும். ஆனால் அவர்கள் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டு  கொண்டு (திருப்பனந்தாள் மடம் 1,500 வேலி, தருமை ஆதீனம் 12,000 வேலி, திருவாடுதுறை மடம் 22,000 வேலி) அந்த நிலத்தில் குத்தகை விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 9 கலம் நெல் என நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுரண்டிக் கொழுத்து வருகிறார்கள். குத்தகை விவசாயிகள் உழைக்கும் நிலத்தில் உரிமை அவர்களுக்கு இல்லாமல் பாடுபடும்போது, மடாதிபதிகள் தங்கள் உறவினர்கள், எடுபிடிகள், ஏஜண்டுகள் மத்தியில் மொத்த வருவாயையும் பங்குபோட்டு தின்று கொழுத்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.  இந்தப் பின்னணியில் குத்தகை விவசாயிகள் தொடர்ந்து சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி அறிய அவிமச, அவிகிதொச குழு தஞ்சை திருப்பனந்தாள் மடத்துக்குட்பட்ட திருப்பனந் தாள் வடக்குத் தெரு, மேல சூரியனார்கோ வில், உக்குடி, இடையானூர், மணிக்குடி, கீறங்குடி,  தத்துவாஞ்சேரி, உக்கடை, விள்ளாங்குழி, திருலோகி, நெருந்திடல் உள்ளிட்ட கிராமங்களுக்கும்  சீர்காழி கோவிலான் தெரு, காருகுடி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று  அங்குள்ள குத்தகை விவசாயிகளை சந்தித்து அவர்களது பல்வேறு பிரச்சனைகள் பற்றி அவர் களுடன் உரையாடியது. தோழர்கள் பாலசுந்தரம், இளங்கோவன், கண்ணையன், குணசேகரன் ஆகியோருடன் பகுதி தோழர்களும் இந்தக் குழுவில் இடம் பெற்றனர்.
சிவன் சொத்து குல நாசம்
திருலோகி ஊராட்சியில் ஓர் இளைஞரிடம் பேசியபோது, ‘சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வது உண்மை. இதோ பாருங்கள் என தங்கள் தெருவில் உள்ள ஓலை குடிசைகளை காட்டி இவர்கள் எல்லாம் கோயிலுக்கு குத்தகை அளக்காததால்தான் இப்படி ஏழ்மையில் உள்ளனர்’ என்றார். ‘சிவன் சொத்தை தின்பவன் நாசமாக போவது உண்மையெனில், வயலை உருவாக்காத, வயலில் உழைத்து உற்பத்தியில் ஈடுபடாத பயிர் செய்யும் நிலம் கிழக்கே உள்ளதா, மேற்கே உள்ளதா என்று கூடத் தெரியாத மடாதிபதிகளும், அவரைச் சார்ந்த ஒட்டுண்ணி கூட்டமும் எப்படி மாட மாளிகையில் வாழ முடிகிறது? எப்படி பல கோடி மதிப்பிலான கட்டிடங்களை கட்ட முடிகிறது? எப்படி பலநூறு கோடி ரூபாய் சொத்து சேர்த்து கொள்ள முடிகிறது? சொகுசு வாழ்க்கை எப்படி வாழ முடிகிறது?’ இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்டபோது, சற்றே நிதானித்து, ‘ஏன் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்?’ என்று நம்மிடமே திருப்பிக் கேட்டார். மடாதிபதிக்குச் சொந்தம் என்று சொல்லப்படும் நிலத்தில் நாம் உழுது பயிரிட்டு விளைந்த பொருளை, தடையேதும் இல்லாமல் அவர்களுக்கு கொட்டி கொடுத்து விட வேண்டும். அப்படி கொட்டி அளப்பது எந்த காரணத்துக்காகவும் தடைபட்டுவிடக் கூடாது. அதற்காக நம்மை அச்சுறுத்தவே அப்படிச் சொல்லப்பட்டது. உண்மையில் குல நாசம் ஆக வேண்டிய கூட்டம் கொழுத்து திரிகிறது; உழைத்துக் கொடுக்கும் நாம் கடனிலும் வறுமையிலும் உழல்கிறோம். இந்த நிலை மாற நாம் மாற்றி யோசிக்க வேண்டும் என்று விளக்கியபோது அந்த இளைஞர் தன்னை நம் கட்சியில் சேர்த்துகொள்ள வேண்டும் என்றும், தன் ஊரில் உள்ள பிற குத்தகைதாரர்களையும் கட்சியில் சேர்ப்பதாகவும் சொன்னார்.
சீர்காழியின் தருமை ஆதீனத்திற்குற்பட்ட குத்தகை விவசாயி பன்னீர்செல்வம் விளக்கிய ஒரு மகா கொள்ளை
சீர்காழியில் உள்ள சட்டநாதசாமி பெரிய கோயிலுக்கு 3 தேர்கள் உள்ளன. அதில் பெரிய தேரும், நடுத்தேரும் சுமார் 40 ஆண்டு களாக பழுதுபட்டதால் ஓடவில்லை என்றும் அப்படி ஓடாத தேர் பற்றிய விபரம் தருமை மடாதிபதிக்கே கடந்த 6 மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. ஆனால் 40 ஆண்டுகளாக தேர் ஓடியதாக பொய் கணக்கு எழுதி பல  லட்சங்கள், கோடிகள் சுருட்டப்பட்டுள்ளன. மோசடி நடந்துள்ளது. மறுபுறம் இதுபோன்ற கொள்ளையை தெரிந்தே கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடக்கிறது. மடாதிபதிகள் அடிக்கும் கொள்ளையை எடுபிடிகள் கண்டுகொள்ளக் கூடாது. எடுபிடிகள் செய்யும் மோசடியை மடாதிபதி கண்டும் காணாமல் இருப்பார். இருவருக்கும் இடையில் அப்படி ஓர் எழுதப்படாத ஒப்பந்தம்.  மடாதிபதிகளும், அவரது எடுபிடிகளும் உழைக்கும் குத்தகையாளர்களை மிரட்டுவது, வசூல் செய்வது, குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பறிப்பது ஆகியவற்றில் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர்.
நெடுந்திடல் கிராமத்தின் குத்தகையாளர்களின் குமுறல்
‘எங்கள் ஊரின் மடத்து விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பம்பு செட்  வைத்திருக்கும் வசதி படைத்தவரிடம் மணிக்கு ரூ.100 வீதமும், டீசல் பம்பு உள்ளவர்களிடம் மணிக்கு ரூ.150 வீதமும் பணம் கொடுத்து பருத்தி சாகுபடி செய்தோம். அதிலும் நிலத்தடி நீர் மிகவும் குறைந்ததால் பருத்தி விளைச்சல் பாதித்து கடனாளி ஆகும் நிலைமை உள்ளது. மடத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களை கேட்காமல் எப்படி பருத்தி போடலாம் என்று கேட்டு, அதற்காக 1 ஏக்கருக்கு ரூ.6,000 பகுதி கட்ட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்’.
இந்த பிரச்சனைகள் தீர ஒரே வழி நிலத்தை குத்தகை விவசாயிகளுக்கே சொந்த மாக்குவதுதான், அதற்காக ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சொன்னபோது ‘நியாயமான  கோரிக்கைதான், ஆனால் இந்த விவசாயிகள் எப்படி ஒன்று சேர்வார்கள், யாரை நம்பி சேர்வது, ஏதாவது ஓர் அமைப்பு  நம்பிக்கையாக தெரிந்தால் நிச்சயம் சேரலாம்’ என்றார். ‘இப்படி ஏதாவது சங்கம் வைக்க துவங்கினால் மடத்து நிர்வாகம் செய்தி அறிந்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிறது, அல்லது பழைய குத்தகை பாக்கி கேட்டு கோர்ட் மூலம் நோட்டீஸ் அனுப்புகிறது’ என்றார். இதே கருத்தை பல கிராமங்களில் குத்தகை விவசாயிகள் முன்வைத்தனர்.
குத்தகை உரிமை பதிவை
மாற்ற மறுக்கும் மடத்து நிர்வாகம்
குத்தகை உரிமை பதிவு (ரிகார்ட் ஆஃப் டெனன்சி ரைட்ஸ் - ஆர்டிஆர்) முறையாக இல்லை. 50 அல்லது 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்துவரும் விவசாயிக ளுக்கு தரப்படும் குத்தகை ரசீதில், குத்தகை செலுத்துபவரது பெயருக்கு பதில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் பதிவு செய்யப்பட்ட பாட்டன் அல்லது முப்பாட்டன் பெயரில், அவருக்காக இப்போது பகுதி செலுத்துபவர் குத்தகை செலுத்துவதாக அவரது பெயரை குறித்து ரசீது தரப்படுகிறது. இறந்து போனவருக்காக தற்போது இருப்பவரின் பெயரில் ரசீது போடுவதை மாற்றி, அதா வது ஆர்டிஆர் உரிமையை, சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுகளின் பெயருக்கு ரசீது மாற்றித் தரப்பட வேண்டும் என்று கோரினால், 35 வருடங்களுக்கு உள்ள பழைய குத்தகை பாக்கி தொகை கட்டினால்தான் ரசீது மாற்றி தரப்படும் என்று மடாதிபதிகள் சொல்கின்றனர். இது தொடரும் பிரச்சனையாக உள்ளது. மூன்று ஏக்கர் சாகுபடி செய்யும் நிலத்தில் பழைய குத்தகை பாக்கி சுமார் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5. லட்சம் வரை செலுத்த நேரும். இந்த அளவு பெரிய தொகை செலுத்த நேரும் என்பதாலேயே பல குத்தகையாளர்கள் ஆர்டிஆர் மாற்றி கொள்ளும் எண்ணத்தையே இழந்து விட்டார்கள். குத்தகை விவசாயிகள் நிலவரி கட்டினால், குத்தகைதாரர்களுக்கு நிலஉரிமை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் நில வரியை மடத்து நிர்வாகம் செலுத்தி விடுகிறது. ஆர்டிஆர் மாற்றம் கோரியோ அல்லது பம்பு செட் வைக்க தடையில்லா சான்று கோரியோ மடாதிபதிகள் அல்லது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்க ளையோ (கட்டளைச் சாமி) சந்திக்க நேர்ந்தால் சாமியார்களுக்கு முன்னால் நெருஞ்சாண் கிடையாக விழுந்து வணங்க வேண்டும். இதை சகித்துக் கொள்ள முடியாத உக்குடி விவசாயி ஒருவர் சுயமரியாதையை இழந்து இன்றுவரை எதற்காகவும் யார் காலிலும் தான் விழவில்லை என்று பெருமிதத்தோடு சொன்னார்.
திருப்பனந்தாள் பேரூராட்சி வடக்கு தெருவில் உள்ள குத்தகை விவசாயிகள்
திருப்பனந்தாள் மடத்துக்கு நஞ்சை, புஞ்சை உள்ளிட்டு 1,500 வேலி நிலம் இருப்பதாகவும், அந்த நிலம் தங்கள் மூதாதையர்  உழைப்பால் உருவானது என்றும் காடுமேடான இந்த பகுதியை விவசாயத்திற்கு பயன்படும் அளவிற்கு விளைநிலங்களாக அவர்களது பாட்டன்மார்கள் மாற்றி அமைத்ததாகவும், ஆனால் அந்த நிலங்கள் இப்போது வசதி படைத்தவர்கள், அல்லது மடாதிபதிகளுக்கு நெருக்கமானவர்கள் வசம் உள்ளதாகவும் சொன்னார்கள்.
திருப்பனந்தாள் காவல் நிலையம், வருவாய் அலுவலர்கள் அலுவலகம் எல்லாம் மடத்து நிலத்தில்தான் உள்ளதாகவும், ஓய்வு பெற்ற தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் போன்ற அதிகாரிகளை மடத்துப் பணியில் அமர்த்திக் கொண்டு அவர்கள் துணையுடன் அரசு புறம் போக்கு, பஞ்சமி நிலம் போன்ற நிலங்களையும் மடத்து நிர்வாகம் வளைத்து போட்டு எல்லா நிலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் திருப்பனந்தாள் விவசாயிகள் தெரிவித்தனர். குத்தகை விவசாயிகள் பம்பு செட் அமைக்க மடாதிபதிகளிடம் தடையில்லா சான்று (என்ஓசி) பெற வேண்டும் எனும் நிபந்தனை இருக்கிறபோது, 35 வருட பழைய பாக்கிகளை செலுத்த வேண்டும் என்று காரணம் காட்டி தடையில்லா சான்று மறுக்கப்படுகிறது. மின்வாரிய வைப்புத் தொகையாகவே ரூ.2.5 லட்சம் வரை விவசாயிகள் செலுத்த வேண்டும்  என நிர்ப்பந்திப்பதால் நீர்ப்பாசனத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். மடத்து நிர்வாகம் நிபந்தனையின்றி என்ஓசி வழங்கவும், மின் இணைப்புக்கான வைப்புத் தொகை எனும் நிபந்தனையை தளர்த்தவும் ஏற்பாடு செய்தால் தண்ணீர் பாசனத்திற்கு உதவும் எனச் சொல்கின்றனர்.
பயிர் காப்பீடு எனும் பகல் கொள்ளை
குத்தகை விவசாயிகள் முதல் பிற  விவசாயிகள் வரை சந்திக்கும் மற்றுமொரு பிரச்சனை பயிர் காப்பீடு இதுவரை கிடைக்கவில்லை என்பதே. எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பிறகும் கூட காப்பீட்டு நிறுவனங்கள் எங்களுக்கான தொகையை இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்வதை அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். கடும் வறட்சி, மழை வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயம் அழிந்து போய் அந்த  நஷ்டத்திற்காக பயிர் காப்பீட்டு முறை கொண்டு வரப்பட்டதாக ஆட்சியாளர்கள் சொன்னாலும் இந்த திட்டத்தில் பயனடைந்தது பெரிய பெரிய காப்பீட்டு நிறுவனங்கள் என்பதே யதார்த்தம்.
மொத்தம் 17 பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பொதுத்துறை நிறுவனங்கள் 5. தனியார் நிறுவனங்கள் 12.
2017 - 2018ல் காப்பீட்டு நிறுவனங்கள் பெற்ற காப்பீட்டு தொகை ரூ.17,796 கோடி. விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கிய தொகை ரூ.2,767 கோடி. காப்பீட்டு நிறுவனங்களிடமே தங்கி விட்ட பயிர் காப்பீட்டு தொகை ரூ.15,029 கோடி. இந்தத் தொகை அந்த நிறுவனங்களின் லாபம்.
2016 - 2017ல் காப்பீட்டு நிறுவனங்கள் வசூல் செய்த காப்பீட்டு தொகை ரூ.15,735 கோடி.விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு ரூ.8,862 கோடி. நிறுவனங்களிடமே தங்கிவிட்ட பயிர் காப்பீட்டு தொகை 44%.
பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கானதல்ல, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுப்பதற்காகவே என்பதை இந்த விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
குத்தகை விவசாயிகளின் கோரிக்கைகள்
1. குத்தகை உரிமை பதிவு தற்போது விவசாயம் செய்யும் விவசாயிக்கே மாற்றி தரப்பட வேண்டும். பல  பத்தாண்டுகளாக செலுத்த வேண்டிய குத்தகை பாக்கியை செலுத்தினால்தான் உரிமையை மாற்ற முடியும் என்ற  மடாதிபதிகளின் நிபந்தனை கைவிடப்பட வேண்டும்.
2. குத்தகைதாரர்கள் பம்புசெட் வைத்துக் கொள்ள மின்வாரியத்துக்கு முன்பணம் கட்ட வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். பம்பு செட் வைத்துக் கொள்ள வேண்டுமானால் குத்தகை பாக்கியை செலுத்த வேண்டும் எனும் நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.
3. சிறுகுறு குத்தகையாளர்களை ஒருங்கிணைத்து சமுதாய போர்வெல் முறை உருவாக்கப்பட வேண்டும்.
4. குத்தகையாளர், மடாதிபதிகள் அல்லது முகவர்களை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ நடைமுறை குற்றவியல் சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
5. பல பத்தாண்டுகளாக குத்தகை எனும் பெயரில் நிலத்தின் மதிப்புக்கும் மேல் பெரிய தொகையை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டதால் கோயில், மடம், அறக்கட்டளை நிலங்கள் அனைத்தும் குத்தகை விவசாயிகளுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும்.
6. டீசல் பம்புசெட்டுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்பட வேண்டும்.
7. கோயில், மட, அறக்கட்டளை, கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மறுசர்வே செய்து உண்மை நிலை வெளியிடப் பட வேண்டும். நிலஉச்சவரம்பில் விதிவிலக்குகள் நீக்கப்பட வேண்டும்.
8. விவசாயிகளின் குத்தகை மற்றும் கடன் பாக்கிகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
9. மடம், கோயில், குடியிருப்பு மனைகளுக்கு பட்டா வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வீட்டுமனைகள் வேண்டும்.
10. கரும்பாலைகள் பிடித்தம் செய்துள்ள தொகை குத்தகை விவசாயிகளுக்கே நேரடியாக வழங்கப்பட வேண்டும்.
11. நிலவரி செலுத்தும் உரிமை குத்தகையாளர்களுக்கே வேண்டும்.
தீர்வுக்கான பாதையில் ஒன்றுபடுவோம்
உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று கம்யூனிஸ்ட்களை பார்த்து காப்பி அடித்த காங்கிரஸ் ஆண்டபோதும், ஏரோட்டும் உழ வரெல்லாம் ஏங்கி தவிக்கையிலே தேரோட்டம் ஏனோ தியாகராஜா என்று அடுக்கு மொழி பேசியவர்கள் ஆண்ட போதும், நிலக் குவிமானத்தை தகர்த்து நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கவில்லை. பல பத்தாண்டுகளாக குத்தகை சங்கிலியால் பிணைக்கப்பட்ட எந்த குத்தகையாளர்க்கும் நிலம் சொந்தமாக்கப்படவில்லை. ஆட்சிகளின் துரோகம் ஒரு பக்கம் என்றால், குத்தகை விவசாயிகள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது, நிலவுரிமைக்கான இயக்கத்தில் இணைந்துவிட கூடாது எனும் நோக்கில், குத்தகை விவசாயிகளை சுரண்டுவது, அவர்களை பிளவுபடுத்தி, அச்சமூட்டுவது என்பதாக மடாதிபதிகள் தங்கள் அதிகாரத்தை கட்டமைத்து வருகின்றனர். மடாதிபதிகள் மக்களை பிளவுபடுத்துவதில்தான் நீடிக்கிறார்கள் என்றால், நாம் நிலத்தை சொந்தமாக்கும் அரசியலை முன்னெடுத்து அறியாமையிலும் அச்சத்திலும் உழலும் குத்தகை விவசாயிகளை ஒன்று சேர்ப்பதில்தான் தீர்வு  உள்ளது. நிலம் நம்முடையது, அதை நமதாக்கும் தொடர் இயக்கங்கள் தேவை. விவசாயிகளை, குத்தகை விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை அரசியல்படுத்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். வெற்றி பெறுவோம்.
(குறிப்பு: 1 குழி = 144 சதுர அடி. 100 குழி = 1 மா. 3 மா = ஒரு ஏக்கர். 6 தீ ஏக்கர் = 1 வேலி).

Search