குடிமக்களை
கொலை செய்யும் குடியரசு
வெறுப்பையும்
வன்முறையையும்
வளர்த்துவிடும்
மத்திய அமைச்சர்கள்
2002 குஜராத்தில்,
தன்னை விட்டுவிடுமாறு இரண்டு கைகளையும் கூப்பி
கண்களில் நீர் வர கெஞ்சிய
முகம் மோடியின் குஜராத்தில் நடந்த
மனிதப் படுகொலையின் அடையாளமாக வரலாற்றில் நின்றது.
குஜராத் மனிதப்
படுகொலையின் கொடூரத்தை அவரது படம் வார்த்தைகள்
இன்றி விளக்கியது. அன்று அவர் கொல்லப்படவில்லை.
உயிர் தப்பித்தார். அந்தப் படத்தையே மானுட
சமூகத்தால் சீரணிக்க முடியவில்லை. இன்று
யோகியின் உத்தரபிரதேசத்தில் ஹபூரில் கொலை கும்பல்
ஒன்று தன்னால் கொல்லப்பட்ட இசுலாமியர்
ஒருவரின் உடலை, காவல்துறையினர் முன்னே
செல்ல அவர்களது பாதுகாப்புடன் இழுத்துச்
செல்வது பாசிசத்தின் கொடூர முகம் எந்த
அளவுக்கு விகாரமானது என்பதை காட்டியுள்ளது. மாட்டுக்
கறி வைத்திருந்தார் என வெறும் புரளி
கிளப்பிவிட்டு ஜ÷ன்
19 அன்று காசிம் என்பவரை அடித்துக்
கொன்று அவர் உடலை அவர்கள்
இழுந்து வந்தார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிற இந்துத்துவ பாசிச
ஆட்சி அந்த கொலை கும்பலுக்கு
அந்தத் துணிச்சலைத் தந்துள்ளது.
அடுத்த பத்து நாட்களில் ஜுன் 29 அன்று ஜனநாயக
குடியரசு எனச் சொல்லப்படும் இந்த
நாட்டில் அரசியல்சாசனத்தின் பெயரால் பதவி ஏற்றுக்கொண்ட
மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா
அதுபோன்ற கொலை பாதகர்களுக்கு துணிச்சல்
தரும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
ஜார்க்கண்டின்
ராம்கரில் 2017, ஜுன்
29 அன்று அலிமுதீன் அன்சாரி என்ற மாட்டுக்
கறி வியாபாரி பசுப்பாதுகாப்பு கொலைவெறி
கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். கறி
வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த
அவரை வழிமறித்த 100 பேர் கொண்ட பசு
பாதுகாப்பு கும்பல் அவரை அடித்துக்
கொலை செய்தது; அவரது வாகனத்தையும்
தீ வைத்து எரித்தது.
ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்ட விரைவு
நீதிமன்றத்தில் 2018 மார்ச் 21 அன்று 11 பேருக்கு ஆயுள்
தண்டனை வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் உள்ளூர் பாஜக
தலைவர். விரைவு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு
தண்டனை அறிவிக்கப்பட்டு அவர்கள் சிறை சென்றபோது,
ஆகச்சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்தி அவர்களை விடுதலை
செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்
என ஜெயந்த் சின்ஹா
அறிவித்தார். கொலைவெறி கும்பலின் தாக்குதலுக்கு
அன்சாரி இரையான அதே நாளில், ஜுன் 29 அன்று,
2018ல் கொலையாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை
பெற்றவர்களில் எட்டு பேர் பிணையில்
விடுவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மாலையணிவித்து கவுரவித்தார் மத்திய அமைச்சர் ஜெயந்த்
சின்ஹா. கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு இன்னும் மேலான
பதவி, மேலான சலுகைகள், அதிகாரங்கள்
கிடைக்க தீவிர முயற்சிகள் எடுத்துக்
கொண்டிருப்பதை அவரது நடவடிக்கையில்
இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. மதம் மாறி திருமணம்
செய்து கொண்ட இசுலாமியர் கடவுச்
சீட்டு பெற சட்டப்படி உதவி
செய்ததால் சொந்த கட்சியினராலேயே, சங்
படையினராலேயே மத்திய வெளியுறவு அமைச்சர்
சுஷ்மா ட்விட்டரில் வேட்டையாடப்பட்டார். அவர் மீது பாய்ந்த
அந்த ட்வீட்டுகள் சரியா என்று ட்விட்டரில்
தன்னை தொடர்பவர்களிடம் அவர் ஒரு கருத்துக்
கணிப்பு நடத்தியபோது 53,000 பேர் சரியே என்றனர்.
அமைச்சரே ஆனாலும் சங் படை
விடாது. மோடி வேடிக்கை பார்த்தார்.
ஆக, ஜெயந்த் சின்ஹாவுக்கு கட்சிக்குள்
ஆட்சிக்குள் பெரிய வாய்ப்புகள் காத்திருக்கலாம்.
ஜெயந்த்
சின்ஹா குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்றதற்கு
கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகும் அவர்
தனது பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
தனது வீட்டுக்கு அவர்கள் வந்ததாகவும் அவர்களுக்கு
வாழ்த்து தெரிவித்ததாகவும் கும்பல் படுகொலைகளை தான்
எதிர்ப்பதாகவும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட
வேண்டும் என்றும் குற்றம் செய்யாதவர்கள்
விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களிடம்
அவர் சொன்னார். இப்போதும், அவர்கள் குற்றம் செய்யவில்லை
என்றே, அன்சாரி கொல்லப்பட்டது குற்றம்
அல்ல என்றே அவர் சொல்ல
வருகிறார்.
அன்சாரி
கொல்லப்பட்ட காவி வெறி கும்பல்
படுகொலை நிகழ்வில்தான் முதன் முதலில் தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. அவர்களைத்தான் ஆகச்சிறந்த வழக்கறிஞர்கள் வைத்து இப்போது பிணையில்
வெளியே கொண்டு வந்திருக்கிறார் ஜெயந்த்
சின்ஹா. மோடி, அமித் ஷா,
மாயா கோட்னானி எல்லாம் விடுவிக்கப்பட்டதுபோல்,
இவர்களும் விடுவிக்கப்படலாம். மதவெறி வெறுப்பை, நஞ்சை
வளர்க்கும் தனது நடவடிக்கையை ஜெயந்த்
சின்ஹா நியாயப்படுத்திய சில நாட்களிலேயே ஹபூர்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்
பிணையில் வந்துவிட்டார். 2018 ஜுன்
19 அன்று காசிம் கொல்லப்பட்ட வழக்கில்,
11 பேர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
முக்கிய குற்றவாளியான யுதிர்ஷ்ட் சிசோடியா ஜுலை
9 அன்று பிணையில் வெளியே வந்துவிட்டார்.
ஏழு பேர் இன்னும் கைது
செய்யப்படவில்லை.
சாலையில்
வாகனம் ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனையால் கொல்லப்பட்டதாகத்தான்
உள்ளூர் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
பசுப் பாதுகாப்பு கும்பல் செய்த படுகொலை
என வழக்கு பதிவு
செய்யப்படவில்லை. காசிம் குடும்பத்தினரையும் காவல்துறை
மிரட்டியுள்ளது. மாட்டுக் கறி புரளியால்தான்
காசிம் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது நாடு முழுவதும்
மக்கள் மத்தியில் வேகமாகப் பரவிய வீடியோ
பதிவுகளில் தெளிவாக உள்ளது. இருப்பினும்
குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் வந்து விட்டார்.
யுதிர்ஷ்ட் சிசோடியாவால் தங்களுக்கு ஆபத்து நேரலாம் என
காசிம் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
மற்றுமொரு
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,
பீகாரில் ராமநவமி கொண்டாட்டங்கள் என்ற
பெயரில் கலவரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டவர்களை சிறைக்குச் சென்று சந்திக்கிறார். இதில்
என்ன தவறு என்று பாஜக
தலைவர்கள் கேட்கிறார்கள். தனது தொகுதிக்குச் சென்றவர்
அங்குள்ள சிறையில் இருப்பவர்களை சந்தித்தது
குற்றமா என்று கேட்கிறார்கள்.
வாழ்வாதார
உரிமைகளுக்காக போராடும் சாமான்ய மக்களை
சமூகவிரோதிகள் என்று சொல்லி சுட்டுத்தள்ளும்
ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிற்கும்
பாஜக அமைச்சர்கள், உண்மையான சமூக விரோதிகளை,
கொலைகாரர்களை ஆராதிக்கிறார்கள். ஊட்டி வளர்க்கிறார்கள். அதன்
மூலம் பாசிச பிளவுவாத வெறுப்பு
அரசியலுக்குக் களம் அமைத்துத் தருகிறார்கள்.
மோடி தலைமையிலான புதிய இந்தியா குடிமக்களை
கொலை செய்யும் குடியரசாக்கப்பட்டுவிட்டது. இந்துத்துவ வெறுப்பையும்
வன்முறையையும் வளர்த்துவிடுவதே மத்திய அமைச்சராக தொடர்வதற்கான
அடிப்படை தகுதி என்றாகிவிட்டது.