COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, July 17, 2018


மோடியின் புதிய இந்தியாவில்
காப்பீட்டு நிதி, கல்வி நிதி எல்லாம்
 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே

எல்அய்சி நிறுவனத்தில் உள்ள மக்கள் பணத்தை அபகரித்துவிட மோடி அரசு திட்டமிட்டுவிட்டது. வாராக்கடன்கள் அதிகம் இருக்கும் அய்டிபிஅய் வங்கியின் 51% பங்குகளை எல்அய்சி நிறுவனம் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது
. எல்அய்சியில் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி ப்ரீமியம் தொகை வருவதாகவும் அதில் அய்டிபிஅய் வங்கியின் 51% பங்குகளை ரூ.13,000 கோடிக்கு வாங்குவது ஒரு பெரிய விசயமில்லை என்றும் மோடி அரசு சொல்கிறது. 2018 மார்ச் முடிந்த நிதியாண்டில் மட்டும் மக்கள் பணம் ரூ.3.18 லட்சம் கோடி எல்அய்சிக்கு வந்துள்ளது. மார்ச் 31, 2018 நிலவரப்படி, பாலிசிதாரர்கள் கணக்கில் ரூ.26 லட்சம் கோடி உள்ளது. இது 25 கோடி இந்திய மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த பணம்.
அய்டிபிஅய் வங்கியின் வாராக்கடன் மதிப்பு மார்ச் 2018 நிலவரப்படி ரூ.55,588 கோடி. கடந்த ஓராண்டில் இது ரூ.11,000 கோடி அதிகரித்துள்ளது. வாராக் கடன்கள் மதிப்பில் அய்டிபிஅய் வங்கிக்குத்தான் முதலிடம். வங்கியின் மொத்த கடன் ரூ.1.99 லட்சம் கோடி. இதில் ரூ.55,588 கோடி கடன் வாராக் கடன் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டுக்கு ரூ.26,902 கோடி கடன் வராமல் போகலாம் என்பதற்கும் வங்கி இடம் வைத்துள்ளது. ஆக மொத்த வாராக்கடன் இந்த நிதியாண்டு இறுதியில் ரூ.80,000 கோடியைத் தாண்டிவிடலாம்.
நட்டமாகிக் கொண்டிருக்கிறது என்று நன்றாகத் தெரிகிற ஒரு தொழிலில் முட்டாள் கூட இறங்குவதில்லை. 56 இன்ச் மோடி அரசு, கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு வங்கியில் மக்கள் பணத்தை போடுகிறது என்றால் அதை முட்டாள்தனம் என்றா சொல்ல முடியும்? கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை சாமான்ய மக்கள் தலையில் கட்டும் அதி மேதாவித்தனமான முடிவு அது.
தனியார் நிதி நிறுவனங்களில் சேமிப்பு வைத்தால் ஏமாற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில்தான் அரசு நிதி நிறுவனங்களில் மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள். அதுவும் நாளை அவசர காலத்தில் தேவைப்படும் என்பதால் சேமிக்கிறார்கள். அரசாங்கத்தையும் நம்ப முடியாது என்பதுதான் மோடியின் புதிய இந்தியா. வங்கிகளில் உள்ள மக்கள் பணத்தை வாராக்கடன்களால் மூழ்கும் வங்கிகளை மீட்க எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றிவிட்ட மோடி அரசு, காப்பீட்டு நிறுவன மக்கள் நிதியை அந்த வங்கிகளை மீட்டெடுக்க பயன்படுத்துகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விழுங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தப்பித்துவிட, அவர்கள் வாங்கிய கடனில் சாமான்ய மக்கள் மூழ்கி தத்தளிக்கப் போகிறார்கள்.
பறித்தெடுத்தல் மூலமான மூலதனக் குவிப்பு நடந்துகொண்டிருக்கும்போது, அரசு கருவூலத்தில் இருந்து மக்களுக்குச் சென்று சேர வேண்டிய நிதியையும் பல்வேறு வழிகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சேர்த்துவிடும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்படுகின்றன.
நாட்டின் மிகப் பழமையான பல்கலை கழகமான பாட்னா பல்கலை கழகத்தின் நூற்றாண்டு விழாவில் 2017 அக்டோபரில் பேசிய மோடி, 10 அரசு பல்கலை கழகங்கள், 10 தனியார் பல்கலை கழகங்கள் என 20 சிறந்த பல்கலை கழகங்கள், ஒரு நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு ரூ.10,000 கோடி நிதி அய்ந்து ஆண்டுகளில் தரப்படும் என்றார்.
இப்போது பல்கலை கழக மான்யக் குழுவின் அதிகாரங்களைப் பறித்து, உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை முடக்க வழி செய்யும் மசோதா தயாராகிவிட்டது. இது பற்றி எதிர்ப்பு எழுந்துகொண்டிருக்கும்போதே, சிறப்பு தகுதி நிறுவனங்கள் என்ற பெயரில் முகேஷ் அம்பானி உள்ளே நுழைந்துவிட்டார்.
மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தில் உயர்கல்வி பிரிவின் செயலாளராக 2016 வரை இருந்த வினய் ஷீல் ஓபராய் இப்போது ரிலையன்ஸ் பவுண்டேசன் ஜியோ இன்ஸ்டிடியுட்டில் வேலை செய்கிறார். ரிலையன்ஸ் பவுண்டேசன் ஜியோ இன்ஸ்டிடியுட், புதிதாக கல்வி துவங்கும் நிறுவனங்கள் என்ற வகையினத்தில் சிறப்பு தகுதி பெற்ற பல்கலை கழகம்  ஆக விண்ணப்பித்தது. முகேஷ் அம்பானி தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழு இதற்கான அதிகாரம் அளிக்கப்பட்ட, முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையிலான, நிபுணர் குழுவில் முன்வைத்தது. இந்தக் குழுவில் ஒருவராக ஓபராயும் இருந்தார். 2016 நிதிநிலை அறிக்கையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓபராய் அரசின் துறை செயலாளராக இருந்தார். 2017ல் திட்டத்துக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன. 2018 பிப்ரவரியில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஏப்ரலில் இந்த முன்வைப்பு தகிடுதத்தங்கள் நடந்தன.
சர்வதேச தரத்திலான கல்வி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் அந்த தனியார் கல்வி நிறுவனம் ரூ.200 கோடி நிதி வைத்திருக்க வேண்டும் என்ற விதி பிறகு ரூ.60 கோடி என மாற்றப்பட்டது. ரூ.500 கோடி நிதி உதவி என்பது ரூ.1,000 கோடியாக மாற்றப்பட்டது. புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடியும் ஏற்கனவே இயங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடியும் தரப்படும் எனச் சொல்லப்பட்டது.
இப்போது ஜுலை 9 அன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆறு நிறுவனங்கள் சிறப்பு தகுதிக்கான நிறுவனங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஒவ்வொன்றுக்கும் ஆண்டில் ரூ.1,000 கோடி வரை நிதியுதவி தரப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அந்த ஆறு நிறுவனங்களில் ஒன்று முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஸ்டிடியுட். மகாராஷ்டிராவில் 800 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கல்வி நிறுவனம் வரும். இனிமேல்தான் கட்டப்போகிறார்கள். இல்லாத பல்கலை கழகத்துக்குத்தான் ரூ.5,000 கோடி தரப் போகிறது மோடி அரசு. சமையல் எரிவாயு மானியம், ஒரு ரூ.200க் கூட விட்டுத்தரக் கேட்டவர்கள் கூச்சம் கொஞ்சமும் இன்றி மக்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள்.
மக்களுக்குத் தர வேண்டியதை, அவர்கள் பட்டினியில் சாக நேரிடும்போதும் வெட்டிச் சுருக்கி, அதற்கு ஆதார், ஸ்மார்ட் அட்டை என்று ஏதோதோ பெயர்கள் சொல்லிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசின் நிதியை அள்ளித் தருவதை இது வரையிலான சுதந்திர இந்தியா காணாத அளவில் துரிதமாகவும் தீவிரமாகவும் மோடி செய்கிறார். ஆட்சிக் காலம் முடிவதற்குள் கருவூலத்துக்கு வரும் நிதியை எந்த அளவுக்கு அதிகமாக கார்ப்பரேட் பைகளில் சென்று சேர்க்க முடியுமோ அந்த அளவுக்குச் சேர்த்து விட ஓயாமல் உழைக்கிறார். இதைப் போன்ற ஓர் இசைவான அரசாங்கம் இனியும் வருமா என்ற சந்தேகம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே கூட வரலாம்.
பாஜகதான் அதிக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றுள்ள கட்சி, பாஜகதான் மிகப்பெரிய அலுவலகம் வைத்திருக்கிற கட்சி, பாஜகவின் பொருளாளர் யார் என்ற விவரம் வெளிப்படையாக இல்லை என்றெல்லாம் வரும் செய்திகள் உண்மை என ஜியோ இன்ஸ்டிடியுட்டும் எல்அய்சியும் போதுமான அளவுக்கு தெளிவுபடுத்துகின்றன.

Search