COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, December 15, 2018

2018 சட்டமன்றத் தேர்தல்களில்
பாசிசத்துக்கு படுதோல்வி

கார்ப்பரேட் மதவெறி பாசிச பாஜக, சட்டிஸ்கரில் மரண அடி வாங்கியது. ராஜஸ்தானில் பின்னடைவைச் சந்தித்தது. மத்தியப் பிரதேசத்தில் செல்வாக்கை இழந்தது.

நோட்டாவை விடக் குறைவான வாக்குகளை வாங்கி சாதனை படைத்த தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை, இந்த சட்டமன்ற முடிவுகளை ‘வெற்றிகரமான தோல்வி’ என்றார். அதிபுத்திசாலியான தினமலர், மத்திய பிரதேசத்தில் பாஜக ஒருகோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 980 வாக்குகள் பெற்றுள்ளது; காங்கிரஸ் ஒரு கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 153 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது; பாஜக, காங்கிரசை விட 0.1%, அதாவது 47,827 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது என்று  சொல்கிறது. நோட்டா 1.4% என 4,42,295 வாக்குகள் பெற்றுள்ளது என்கிறது. விவரங்கள் மத்தியபிரேதேசத்தில் இப்படி இருக்க, ராஜஸ்தானில் வெறும் 0.5% வாக்குகள் மட்டுமே கூடுதலாகக் காங்கிரஸ் பெற்றிருக்க (ராஜஸ்தானில் நோட்டா 1.3%), பாஜக தோல்வி என வீணாகப் பேசாதீர்கள் என வக்கிரம் பேசுகிறது. இது வெறுமனே குப்புற விழுந்தவர்கள் மீசையில் மண் ஒட்டவில்லை எனச் சொல்வதல்ல. இது திட்டமிட்ட விதத்தில் பொய்ச் செய்தி (ஃபேக் நியூஸ்) பரப்புவதாகும்.
தமிழிசையும் தினமலரும் சொல்லும்
பொய்ச் செய்தி என்ன?
இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் எவ்வளவு என்பதல்ல பிரச்சனை. மத்தியபிரதேசத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 54% வாக்குகள் பெற்ற பாஜக 2018ல் 41%, அதாவது 13% வாக்குகள் குறைவாக வாங்கி உள்ளது. 2013 சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைவிட 4% குறைவாகப் பெற்றுள்ளது. 2013ல் மத்தியபிரதேசத்தில் 165 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 2018ல் 109 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. 2013ல் 58 இடங்கள் வென்ற காங்கிரஸ் 2018ல் 114 இடங்கள் வென்றுள்ளது. ராஜஸ்தானில் 2013ல் 163 இடங்கள் வென்ற பாஜக 2018ல் 73 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. ராஜஸ் தானில் 2013ல் 21 இடங்களை வென்ற காங்கிரஸ் 2018ல் 99 இடங்கள் வென்றுள்ளது.
தமிழிசையும் தினமலரும் 1 முதல் 1000 வரை திரும்பவும் சரியாக எண்ண முன்வந்தால், 165, 109 ஆவதும், 163, 73 ஆவதும் தோல்வி, 58, 114 ஆவதும் 21, 99 ஆவதும் வெற்றி என்று புரியும்.
2013ல் இந்த மூன்று மாநிலங்களில் 377 இடங்கள் வென்ற பாஜக, 2018ல் 197 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சரி பாதி இழந்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது, 2014ல் 65 நாடாளுமன்றத் தொகுதிகளில் 62அய் வென்ற பாஜக, 2018 இறுதியில் கெட்ட காலம் நோக்கிச் செல்வது தெளிவாகப் புலப்படவில்லையா?
மாநில அரசுகள்தான் தோற்றன
மோடி எங்கே தோற்றார்?
இதுவும் சங் பரிவார் பக்தர்கள் எழுப்பும் ஒரு வாதமாகும். மோடி, ஷா, யோகி ஆகிய மூவரும் இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர். ராமன் கோயில், ஊர்களின், ரயில் நிலையங்களின் இசுலாமியப் பெயர்கள் மாற்றம் (அவை இந்தியப் பெயர்கள், அவற்றை இசுலாமியப் பெயர் எனச் சொல்வதே தவறு), இசுலாமியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பிரியாணி சாப்பிடும் பயங்கரவாதிகள், அலி வேண்டுமா பஜ்ரங் பலி அனுமார் வேண்டுமா, நகர்ப்புற நக்சல்கள் என்றெல்லாம் நீட்டி முழக்கிய மோடியும் ஷாவும் யோகியும் இப் போது மாநில அரசாங்கங்கள் மீது பழி போட்டு விட்டுத் தப்பிவிட முடியுமா? மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர், தெலுங்கானாவில் யோகி ஆதித்யநாத் 74 பொதுக் கூட்டங்களும், அமித் ஷா 56 பொதுக் கூட்டங்களும், நரேந்திரமோடி 31 பொதுக் கூட்டங்களும் பேசினார்கள் என்ற உண்மையை அவ்வளவு எளிதாக மறைத்து விட முடியுமா?
பாஜக ஏன் தோற்றுப் போனது?
விவசாய நெருக்கடியும் வேலையின்மையும் பாஜகவைத் தோற்கடிப்பதில் பெரும் பங்காற்றின. பணமதிப்பகற்றுதல், ஜிஎஸ்டி, பசுவின் பெயரால் கும்பல் படுகொலைகள் ஆகியவையும், காவலன் கள்வனாக மாறியதை (சௌகிதார் சோர் ஹை) மக்கள் உணர்ந்ததும் தோல்வியை உறுதிப்படுத்தின.
2014ல் இந்தியா ஒளி வீசுகிறது என மக்கள் துன்பத்தில் இருந்தபோது பாஜக விளம்பரம் செய்தது, அதன் தோல்விக்குப் பங்களித்தது. இந்த முறை மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போனசை மறுத்து, மன்ட்சார் துப்பாக்கிச் சூட்டில் 6 உயிர்களைப் பலி வாங்கி, ‘மகிழ்ச்சியான விவசாயி, வளமையான தேசம்’என்ற பிரும்மாண்டமான தேர்தல் பிரச்சார பதாகையை வைத்ததை மக்கள் வெறுத்தனர். 3 மாநிலங்களிலும் பாஜக விவசாய விரோதியாகக் காணப்பட்டது.
காங்கிரஸ், தந்திரமாக, விவசாய கடன் தள்ளுபடி, விவசாய மின்கட்டணக் குறைப்பு, விவசாய விளைபொருளுக்கு நல்ல கொள்முதல் விலை என வாக்குறுதிகள் தந்தது. சட்டிஸ்கரில் சாராயம் ஒழிக்கப்படும் என்றது.
விளைவாக, 2013ல் மத்தியபிரதேச கிராமப்புறங்களில் 55 இடங்கள் வென்ற காங்கிரஸ் 2018ல் 98 இடங்களும் ராஜஸ்தான் கிராமப்புறங்களில் 2013ல் 18 இடங்கள் வென்ற காங்கிரஸ் இந்த முறை 83 இடங்களும், 2013ல் சட்டிஸ்கரில் 35 இடங்கள் வென்ற காங்கிரஸ் இந்த முறை 56 இடங்களும் வென்றது. பாஜகவுக்கு மத்தியபிரதேசத்தில் 122, 88 ஆகவும், ராஜஸ்தானில் 131, 57 ஆகவும், சட்டிஸ்கரில் 41, 16 ஆகவும் குறைந்தது.
விவசாயத்தை விட்டு வெளியே போ எனப் பேசியதும் பால் விற்பது பீடா கடை வைப்பது வேலையில்லையா என புதிய வேலைகள் உருவாக்காமல் வக்கிரம் பேசியதையும் மக்கள் விரும்பவில்லை. வளர்ச்சி தாகத்திற்கு தொண்டை நனையாமல் வறண்டு கொண்டே போனதால், இந்துத்துவ மோகம் எடுபடவில்லை.
காங்கிரஸ் தப்புக் கணக்கு போடுகிறது
பாஜக இந்துத்துவா, காங்கிரசாகிய நாம் இந்துயிசம் அதாவது நன்னெறி இந்து மதம் என, தான் ஒரு நிலை எடுத்ததால் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கருதுகிறது. சில ஊடகங்கள் அப்படியே விளக்குகிறார்கள். ராகுல் கோவில் கோவிலாகப் போனார். பூணூலைக் காட்டினார். கவுல் பிராமணர், தாத்தரேய கோத்ரம் என அக்மார்க் பார்ப்பனராகத் தம்மை நிறுத்திக் கொண்டார். சமஸ்கிருதத்தை முன்னேற்றுவோம், ராமன் 14 ஆண்டுகள் நடந்த பாதையை ராமர் பாதையாக  வளர்த்தெடுப்போம், வேத கலாச்சார கல்வி வாரியம், பசு மேய்ப்பு வளர்ச்சி வாரியம் அமைப்போம் என காங்கிரஸ் மென்மையான இந்துத்துவாவை முன்வைத்ததால் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. மென்மையான இந்துத்துவா சரணடைவதன் மூலம் வன்மையான இந்துத்துவாவைப் பலப்படுத்த மட்டுமே செய்யும்.
மக்கள் வெல்வார்கள்
விவசாய சீற்றத்திற்கு ஒன்றுபட்ட மேடை வழங்கிய விவசாய இயக்கங்கள், மதவெறி பிளவுவாத வெறுப்பு அரசியல், தலித் விரோத பெண்கள் விரோத வன்முறை, மக்கள் உரிமை செயல்பாட்டாளர்களை நகர்ப்புற நக்சல்கள் எனச் சித்தரித்து வேட்டையாடியது ஆகியவற்றிற்கு எதிரான விடாப்பிடியான தளராத இயக்கங்களே, பாஜகவின் தோல்விக்குக் களம் அமைத்தன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, மதவாத வெறுப்பை வன்முறையை, பொய்ச் செய்திப் பிரச்சாரத்தை பாஜக தீவிரப்படுத்தும். ஆனபோதும்,
மக்கள் பாசிசத்துக்கு எதிராகப் போராட முடியும்.
மக்கள் பாசிசத்துக்கு எதிராகப் போராடியாக வேண்டும்.
மக்கள் பாசிசத்துக்கு எதிராக வென்றே தீர்வார்கள்.
2018 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இகக, இககமா, இகக(மாலெ) சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இககமாவின் தோழர் பல்வான் பூனியா, அனுமன்கர் மாவட்டம் பத்ரா தொகுதியில் 41.22%, 81,655 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தோழர் கிர்தாரிலால் மஹியா 41.4%, 72,376 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இரண்டு தோழர்களையும், 28 இடங்களில் 4,32,001 வாக்குகள் பெற்ற இககமாவையும் வாழ்த்துகிறோம். பாரதிய பழங்குடியினர் கட்சி இரண்டு  இடங்கள் வென்றதும், வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதே.

Search