கூகுள் தொழிலாளர்களின் உலகம் தழுவிய பேரணி
நாடுகளின் எல்லைகளைக் கடந்த
பன்னாட்டு ஒருமைப்பாடு விரல் நுனியில் சாத்தியமானது
அக்டோபர் 25, 2018 அன்று வெளிவந்த நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை கூகுள் நிறுவன உயரதிகாரிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை அந்த நிறுவனம் எப்படிக் கையாண்டது என்பது பற்றி அம்பலப்படுத்தியது.
ஆன்ட்ராய்ட் மென்பொருளைவடிவ மைத்த அன்டி ரூபின் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் செய்யப்பட்டபோது அந்த நிறுவனம் அவருடன் ரகசியமாக ஓர் உடன்பாட்டுக்கு வந்து அவருக்கு 90 மில்லியன் டாலர் பணம் கொடுத்து அவரிடம் ராஜினாமாவைப் பெற்றுக் கொண்டு அவருக்கு பிரிவு உபச்சார விழாவும் நடத்தியது. இதுபோல் இன்னும் இரண்டு முதுநிலை அதிகாரிகளையும் சமரசம் செய்து கூகுள் விடுவித்ததாக நியுயார்க் பத்திரிகைச் செய்தி அம்பலப்படுத்தியிருந்தது. சன்மானம் எதுவும் தராமல் வேலை நீக்கம் செய்ய சட்டத்தில் இடமிருந்தும் கூகுள் நிறுவனம் விசயத்தை மூடி மறைத்து பெரும் தொகையை அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. கூகுள் நிர்வாகம் குற்றவாளிகளுக்கு தண்டனை தருவதற்குப் பதிலாக சன்மானம் தந்ததால் கூகுள் ஊழியர்கள் சீற்றமுற்றனர்.
கூகுள் ஊழியர்களுக்கு சங்கம் இல்லை. கூகுள் நல்ல சம்பளமும் தருகிறது. அய்க்கிய அமெரிக்க கூகுள் தொழிலாளர்கள் பெறும் சராசரி ஆண்டு ஊதியம் 1,61,409 டாலர். இது அய்க்கிய அமெரிக்க தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் தரப்படும் ஊதியத்தில் அதிகமானது. அதனால் சங்கமாக அமைப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேவையை அவர்கள் உணரவில்லை.
இந்தப் பிரச்சனை வெளிவந்த ஓரிரு நாட்களில் முதலில் தொழிலாளர்கள் மட்டுமே போராட்ட ஆயத்த வேலைகளில் ஈடுபட்டனர். கூகுள் தலைமையகமான கலிபோர்னியாவில் இந்த விசயத்தில் வெளிநடப்பு செய்து போராட வேண்டும் என ஊழியர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. பிரத்தியேக வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன; உலகம் முழுவதும் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் வாட்ஸ்அப், ஈமெயில், அலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். உலகம் முழுவதிலுமிருந்து கோரிக்கை மீது கருத்துக்கள் வந்து குவிந்தன. 5 கோரிக்கைகள் இறுதிப்டுத்தப்பட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டன. நவம்பர் 1, 2018 போராட்ட தினமாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பணியிடங்களிலிருந்து வெளிநடப்பு செய்வது என முடிவானது.
உலகம் முழுவதுமுள்ள 400 கூகுள் அலுவலகங்களிலிருந்து, சிங்கப்பூரிலிருந்து சிகாகோ வரை, ஹைதராபாத்திலிருந்து லண்டன் வரை பணியிலிருந்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்து பேரணிகளில் பங்கேற்றனர். பாலியல் துன்புறுத்தல் புகார் மீதான கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறைக்கு எதிராக உலகம் தழுவிய ஊழியர்களின் பேரணி நிதர்சனமானது. ஒரு வார காலத்திற்குள்ளாகவே ஒரு வரலாறு படைக்கப்பட்டது.
உலகம் இதுபோன்ற நிகழ்வை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. மரபுவழி தொழிற்சங்கம் என்று ஒன்று அங்கு இல்லை. அப்படி ஒரு தேவையும் அவர்களுக்கு எழவில்லை. இந்தத் தொழிலாளர்கள் தொழில்நுட்ப தொழிலாளர்களிடையே மேல்தட்டுப் பிரிவாக இருப்பதால் உலகம் முழுவதும் 40 பெருநகரங்களிலுள்ள தொழிலாளர்களை திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைக்கவும், ஒரே நேரத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடச் செய்யவும் முடிந்தது. தொழிலாளர்களை அமைப்பாக்குவது புதிய வடிவங்களைப் பெற்றிருக்கிறது.
இந்த நடவடிக்கையால் ஆடிப்போன கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை மன்னிப்புக் கோரினார். நிறுவனத்தின் கடந்த கால நடவடிக்கைகளுக்காகவும் அதனால் ஊழியர்கள் அனுபவித்த வலிகளுக்காகவும் மன்னிப்பு கேட்டார். அவரும் நிறுவனத்தின் துணைத் தலைவர் அய்லீன் நாக்டானும் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான கொள்கை உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டது. கடந்த 2 வருடங்களில் முதுநிலை மேலாளர் மற்றும் அதற்கு மேல் நிலையிலிருந்த 13 அதிகாரிகள் உட்பட 48 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்களுக்கெல் லாம் பணமுடிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இந்தக் கடிதம் மட்டுமே ஊழியர்களை திருப்திபடுத்துவதாக இல்லை. வேறு வழியில்லாமல் கூகுள் நிர்வாகம் ஊழியர்களின் வெளிநடப்பு அறிவிப்பை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது.
போராட்ட தினம் விடிந்தபோது கிழக்கின் சிங்கப்பூரிலிருந்து முதல் பேரணி புறப்பட்டது. அடுத்தடுத்து மேற்கு நோக்கிய நகரங்களிலிருந்தும் பேரணிகள் துவங்கி எல்லாம் நேரடி ஒளிபரப்பில் இணைக்கப்பட்டன. யு டியூப் இணையத்தில் பேரணி நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் நேரடியாக பார்த்து கொண்டிருந்தனர். நாடுகளின் எல்லைகளைக் கடந்த பன்னாட்டு ஒருமைப்பாடு விரல் நுனியில் சாத்தியமானது.
ஆண்களும் பெண்களும் தோளோடு தோள் சேர்ந்து பேரணியில் அணிவகுத்தார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடந்த இந்தப் போராட்ட ஒற்றுமையில் ஆண், பெண் வேறுபாடு கரைந்து போனது. அது பெண்கள் பிரச்சனையாக மட்டும் இருக்கவில்லை. ஆண்களும் சமமாக களத்தில் நின்றார்கள். இது ஒரு வர்க்கம் ஒன்றாக நின்றதன் வெளிப்பாடு. இது சங்கம் என்பதற்கே, டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சங்கமாகுதல் என்பதன், ஒன்று பட்ட உறுதி என்பதன் வெளிப்பாடு என்று புதிய அடையாளத்தைக் கொடுத்தது. கூகுள் நிறுவனத்தில் அந்த நிறுவன ஊழியர்களால் வடிவமைக்கப்பட்ட தகவல் பலகைகள் தொடர்பு மற்றும் செய்தி பரிமாறிக் கொள்ளும் செயலிகள், மற்ற சமூக வலைத்தலக் கருவிகள் ஆகியவை ஊழியர்கள் தங்களுக்குள் அமைப்பாக்கிக் கொள்வதற்கான கருவிகளாக பயன்பட்டன. பெருவாரியான இந்த கூகுள் நிறுவன ஊழியர்கள் 20லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களிடம் பொதுவாக வேலைக்கு அணிந்து செல்லும் பேண்ட், சர்ட், டை ஆகிய வற்றைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் மங்கிப்போன ஜீன்ஸ் பேண்டும் சர்ட்டும் அணிந்திருந்தார்கள். ஆனபோதிலும் அவர்கள் நிறுவனத்திற்கு வலுவான செய்தியைச் சொன்னார்கள்: ‘நேரம் வந்துவிட்டது’.
அவர்களது கோரிக்கைப் பட்டியலில், பாலினப் பாகுபாடு, துன்புறுத்தல் விசயங்களில் சமரசம் பேச நிர்ப்பந்திக்கக் கூடாது, ஊதியம் மற்றும் வாய்ப்பளிப்பதில் உள்ள சமமற்ற தன்மைக்கு முடிவுகட்ட வேண்டும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வெளிப்படையான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும், பாதுகாப்பாகவும், பெயர் வெளியிடாமலும், பாலியல் சீண்டல் குறித்து பதிவு செய்ய தெளிவான, ஒருபடித்தான, உலகம் முழுவதையும் உள்ளடக்கிய பொறியமைவு தேவை, தலைமை நிர்வாகிகளுக்கு நேரடியாக பதில் சொல்ல, இயக்குனர் குழுவிடம் நேரடியாக பரிந்துரைக்க அதிகாரமுள்ள தலைமை அதிகாரி பதவி உருவாக்கப்பட வேண்டும், இயக்குனர் குழுவில் ஊழியர் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும், ஊதியத்தில் பாலினப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
சமீபத்தில் பிபிசி நிறுவனத்தின் பெண்கள் பற்றவைத்த சம ஊதிய கோரிக்கை இங்கேயும் பற்றிக் கொண்டுவிட்டது.
நேரம் வந்துவிட்டது. பணியிடத்திலுள்ள அதிகார கட்டமைப்பை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு கீழுள்ள இளையோரை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் அதிகாரிகளுக்கு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. இது 21ஆம் நூற்றாண்டு தொழிலாளர் இயக்கத்தில் புதிய அத்தியாயமாகும்.
(தோழர் சிவராமன் எழுதி டெய்லிஹன்ட் ஆங்கில இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் இருந்து. தமிழில் தேசிகன்)