பிரான்சில் பரவும் மஞ்சள் நெருப்பு
அன்பு
பிரான்சின் நவம்பர் போராட்டம்
அய்ரோப்பிய ஒன்றிய ஆலோசனைப்படி சூழல் மாசு தடுப்பு நடவடிக்கையாக 2040 முதல் பெட்ரோல் டீசல் கார்களே சாலையில் ஓடக் கூடாதென்றும், அதற்கேற்ப வரிகளை உயர்த்தி கட்டணத்தை உயர்த்தவும் பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்தது.
ஜனவரி 2019ல் 27% உயர்வு வரும் என சென்ற ஆண்டு முடிவு செய்தது. இந்த முடிவுக்கெதிராக அக்டோபரில் ஆன்லைன் வீடியோ எதிர்ப்பு உருவாகிப் பரவியது. எதிர்ப்பாளர்கள் திடீரென நவம்பர் 17 அன்று பிரான்ஸ் நெடுக ஒளிரும் மஞ்சள் அங்கிகளுடன், அரசு அலுவலகங்கள் முன் சாலை சந்திப்புகளில், சாலைகள் பிரியும் இடங்களில் கூடுவதென முடிவெடுத்தனர். சாலை விபத்தில் வண்டியை விட்டு வெளியே சாலைக்கு வரும் ஓட்டுநர், எங்கும் மஞ்சள் அங்கியுடன் வெளியே வரவேண்டும் என்பது, பிரான்ஸ் நாட்டு சட்டம். எரிபொருள் விலை ஏற்றத்தால் தங்கள் பயணங்களே இனி இல்லாமல்போகும் ஆபத்தை உணர்ந்த, 3 லட்சம் பேர் வரை 17.11.2018 அன்று 2034 மய்யங்களில் ஒளிரும் மஞ்சள் அங்கிகளுடன் அணிதிரண்டனர்.
ஏன் இவ்வளவு தீவிரம்?
டிசம்பர் 10, 2018 அய்நா மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி பிரான்ஸ் மக்கள் தொகை 6,52,33,261. பிரான்சில் உள்ள பயணிகள் வாக னங்கள் சுமார் 3,21,00,000. பிரான்சின் மய்யமான நகரப் பகுதிகளிலிருந்து தள்ளி வசிப்பவர்களுக்கு, நல்ல ஒருங்கிணைந்த உள்கட்டுமான வசதிகளோ பொது போக்குவரத்தோ இல்லை. அவர்கள் கார்களைச் சார்ந்தே உள்ளனர். டீசலில் ஓடும் கார்களை, 61% பிரான்ஸ் மக்கள் சார்ந்துள்ளனர். பிரான்சின் ஒரு கோடியே எழுபது லட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் நகராட்சிப் பகுதிக்கு வெளியே காரில் போய் வேலை செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை வேலைக்குச் செல்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதிகளாகும். 80% பேர் தங்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். எரிபொருள் வரி உயர்வு மக்கள் சீற்றத்தை உடனடியாகப் பற்ற வைத்தது. மஞ்சள் நெருப்பு பரவியது. பிரான்ஸ் குடியரசுத் தலைவரான மன்னர் போல் தம்மை நினைத்துக் கொண்டு, தயங்காமல் விட்டுக்கொடுக்காமல், கடினமான முடிவு எடுப்பேன் என்று சொன்ன, செயல்பட்ட இம்மானுவேல் மேக்ரன், எரிபொருள் நிரப்பும் போது மீட்டரைப் பார்க்கும் மக்களுக்கு, கொஞ்சம் கூட நியாயம் இல்லாமல், தமது முகமே நினைவுக்கு வருகிறது என்றார்.
மக்களின் துயரங்களும் கோரிக்கைகளும்
பிரச்சனை எரிபொருள் விலை தொடர்பானது மட்டுமல்ல. பிரான்ஸ் மக்களின் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்து விட்டது. ஆல்ப்ஸ் மலைகளில் உள்ள ஒரு கடிகார ஆலையில் பணியாற்றும் 28 வயதான ஜெசிகா மொனியே, நாங்கள் பசித்திருக்கிறோம், எங்களுக்கு அலுத்து சலித்துவிட்டது என்கிறார். தனது மாத வருமானம் 970 யூரோ (ஒரு யூரோ ரூ.81.58) என்றும் பில்களைக் கட்டி முடித்த பின்பு பசியே மிஞ்சி இருப்பதாகவும் விஷயம் அவ்வளவுதான் என்றும் வெடிக்கிறார். சில போராட்டக்காரர்கள், அரசின் சுற்றுச் சூழல் வாதங்களை விமர்சனம் செய்யும் வகையில், அவர்கள் உலகின் முடிவு பற்றி பேசுகிறார்கள், நாங்கள் மாதக் கடைசி பற்றிப் பேசுகிறோம் என்கிறார்கள். பிரான்சின் சாமான்ய மக்கள் இப்போதெல்லாம் வாங்கும் சம்பளம் கொண்டு மாதத்தின் நடுப்பகுதியைத் தாண்டுவது கடினமாகவிவிட்டது, குறைந்த சம்பளத்தில் குழந்தைகளுக்கு நிறைவான உணவு தர முடியவில்லை, ஒரு சினிமாவுக்குப் போகக் கூட முடியவில்லை என்கிறார்கள். நாங்கள் மடையர்கள் அல்ல, எங்களைக் கால்நடைகள் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆவேசப்படுகிறார்கள். குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்து, கிராமப்புற தபால் அலுவலகங்களைக் கொண்டுவா, கிராமப்புற மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்களை நியமனம் செய், வாங்கும் சக்தியை உயர்த்து, சிக்கன நடவடிக்கைகள் வேண்டவே வேண்டாம், நல்ல சமூகப் பாதுகாப்பு வெட்டின்றி தொடர வேண்டும் என்று கோருகிறார்கள். கோரிக்கை மேக்ரன் பதவி விலக வேண்டும், டிசம்பர் 25 தான் கெடு என்றும் சொல்கிறது.
போராட்டத்தின் இயல்பு
இதனை தீவிர வலதுசாரி செல்வாக்குள்ள, அல்லது தீவிர இடதுசாரி சக்திகளின் போராட்டம் என்று சித்தரிப்பதோ, இது பெண்களுக்கு, சுயபால் ஈர்ப்பாளர்களுக்கு எதிரான போராட்டம் என்று சொல்வதோ, அரசு ஆதரவு வாதங்களாகவே முடியும். ‘பெண்கள் இணைந்து நிற்கிறோம்’ என்ற முழக்கத்துடன் போராட்டம் நவம்பர் 24 நடந்தபோது, இதே போராட்டக்காரர்கள் அவர்களை சூழ்ந்து நின்று கொண்டு, அவர்களுக்கு கவுரவமும் செய்தார்கள். இந்த போராட்டத்தில் முதன்மை சங்கங்கள் இல்லை கட்சிகள் இல்லை என்பது, 5+3=8 எனக்கண்டு பிடித்துவிட்டது போல் ஆகும். ஒன்று நிச்சயமாகச் சொல்ல முடியும். தீவிர வலதுசாரியான மரைன் லீ பென் ஆதரவாளர்கள், இந்தப் போராட்டத்தில் செல்வாக்கு செலுத்தவும் குடியேறுபவர்களுக்கு எதிராக உசுப்பிவிடவும் முயன்றார்கள். ஆனால் எடுபடவில்லை. அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற இடதுசாரி கட்சியின் செயல்வீரர்கள் பலரும் இதனை ஆதரிக்கின்றனர். போராட்டம் பாரிஸ் தாண்டி, நகரங்கள் தாண்டி கிராமங்களிலும் கிராம நகரங்களிலும், பிரான்சின் கடல் கடந்த பகுதிகளுக்கும் பரவியது. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் நுழைந்து அய்ரோப்பிய ஒன்றியத்திடம் மூக்கை நறுக்குவேன் என்றது.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற முழக்கங்கள் எழுந்த போராட்டம் பாரிசில்தான் நடந்தது. பாஸ்டில் சிறை உடைப்பும் பாரிசில்தான் நடந்தது. மகத்தான தொழிலாளர் புரட்சியான கம்யூனும் பாரிசில்தான் நடந்தது. பாரிஸ் மற்றும் பிரான்ஸ் கூட்டுணர்வில், தடுப்பரண் அமைப்பது, தடுப்பவர்களுடன் மோதுவது, எதிரே நிற்கும் அரசு அலுவலகங்களுடன் அரச படையினரிடம் சண்டையிடுவது, இயல்பானதாகும். இதனைக் குறை கூறுபவர்கள், மக்கள் போராட்டங்கள் பக்கத்தில் கூட வராமல் இருப்பது நல்லது. கடந்த காலத்தின் தொடர்ச்சியுடனும் அதிலிருந்து மாற்றத்துடன் வரும் தனிப்பண்புகளும் கொண்ட இந்த போராட்டத்தில், கட்டமைக்கப்பட்ட அமைப்பு இல்லை. அதனால் கட்டமைப்புடன் வழிநடத்தும் தலைமையும் இல்லை. திசைவழியில் தெளிவின்மை என்ற சங்கடம் இருந்தாலும், சுய வேலை செவிலியர்கள், கைவினைஞர்கள், வீடு வந்து கவனித்துக் கொள்பவர்கள் என்ற சங்கமற்ற, பாதுகாப்பற்ற, பாதகமான பணிநிலைமை கொண்டுள்ள மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்களைக் இணைக்கும், உள்ளாற்றலைக் கொண்டுள்ளது. விவசாயிகள் டிராக்டர்கள் கூட களத்தில் உள்ளனர். சிஜிடி, அமைப்பாக்கப்பட்ட சங்கம் துவக்கத்தில் எதிர்த்தது. பின் ஆதரித்தது. நல நடவடிக்கையிலிருந்து, நலப் பயன்களிலிருந்து அரசின் சமூக கடமைகளில் இருந்து அரசு பின்வாங்கும்போது, அதை எடுக்காதே, இதை எடுக்காதே அதை விட்டு விடு இதை விட்டு விடு என தற்காப்பு கோரிக்கைகள் வைக்காமல், அரசின் கொள்கை முடிவை மாற்று, புதிய சலுகைகள் உரிமைகள் வேண்டும் என்று தாக்குதல் தன்மை கொண்டுள்ளது இந்தப் போராட்டம்.
கடல் கடந்த இங்கிலாந்திலிருந்து
சில குரல்கள்
தொழிலாளர் கட்சி மாநாட்டில் அதன் தலைவர், மக்கள் சார்பு சோசலிச சார்பு அரசியலுடைய கோர்பின், பணக்காரர்கள் வரி குறைப்பு, வரிச் சலுகை, வரிகள் தள்ளுபடி வரி சொர்க்கம் அனுபவிக்கும் காலம் இருந்தது, எழுதி வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் காலம் முடிவடைகிறது என்கிறார். அவரது நிழல் நிதி அமைச்சர், மக்கள் தொகையில் 10% உள்ள வசதி படைத்தவர்களிடம், 4 ஆயிரம் பில்லியன் பவுண்ட் செல்வம் உள்ளது, இதில் 20% வரி போட்டால் 800 பில்லியன் பவுண்ட் வசூலாகும், நிதிப் பற்றாக்குறை உருவாக்கியவர்களை நெருக்கடிக்குப் பொறுப்பாக்கி, நெருக்கடியில் இருந்து வெற்றிகரமாக வெளியே வரலாம் என்றார். இங்கிலாந்தின் மூலதனச் சந்தைகளும், முதலீட்டாளர்களும், அய்யோ என்ன அநியாயம், நாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை எல்லாம் பிடுங்கப் பார்க்கிறார்களே எனக் கூப்பாடு போடுகிறார்கள்.
பிரான்சின் முதலாளித்துவ நெருக்கடி
பிரான்ஸ் தொழில்மயமாக தனது காலனி நாட்டு மக்களை, மலிவு உழைப்பிற்காக குடியேற்றியது. அரபுகளை ஆப்பிரிக்கர்களை, ‘பெருந்தன்மையாய்’ சகித்துக் கொண்டது. 1980களில் அரசு பிரும்மாண்டமாய் வளர்ந்து, நல நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. மான்யங்கள், சலுகைகள் சமூகத்தின் முக்கியப் பகுதிகளாயின. இவை தானமாக அல்லாமல் சமூகம் தழைக்க தேவையாய் இருந்தன. சிக்கன நடவடிக்கையும் சலுகைப் பறிப்பும் செலவு குறைப்பும் துன்பத்தை துயரத்தை விதைக்கின்றன. நெருக்கடியிலிருந்து மீள மக்கள் மீது சுமை திணிக்கும் முயற்சிகள், நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளன. சீற்றத்தை விளைச்சலாகக் கொண்டு வந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தியை மாற்றாமல், துணிச்சலாக செல்வங்களையும் வருமானங்களையும் மக்கள் சார்பாக மறுபங்கீடு செய்யும் கொள்கை வராமல் பிரான்ஸ், மக்கள் கிளர்ச்சியிலிருந்து தப்பிக்க முடியாது. நெருக்கடியை உருவாக்கும் கூட்டத்திற்கு மேக்ரன் அள்ளித் தந்தால், பாதிப்புகளை தேசத்தின் மேல் திணித்தால், மேக்ரன் சீக்கிரம் காணாமல் போவார்.
அரசு ஒரே நிலையில் இருந்ததா?
மஞ்சள் ஒளிர் அங்கிப் போராட்டத்தை, 70%க்கும் மேற்பட்ட மக்கள் ஆதரிப்பது அரசுக்குத் தெரியும். தேசத்தின் ஒற்றுமை முன் எந்த ஒரு வரியும் அவ்வளவு மதிப்புக்குரியதல்ல எனச் சொன்ன பிரான்ஸ் பிரதமர், 6 மாதங்கள் எரிபொருள் வரி உயர்வு இருக்காது என்றார். மேக்ரன், எதிர்ப்பு நியாயம்தான் ஆனால், வாய்ச்சொல் வீச்சு வடிவத்தை நான் ஏற்க மாட்டேன் என்றார். இப்போது திங்கள் கிழமை இரவு (11.12.2018) 2 கோடியே 10 லட்சம் மக்களிடம், தொலைக்காட்சி மூலம் வருத்தம் தெரியும் தோற்றத்தில், தொனியில் பேசினார். வீதிகளின் சீற்றம் நியாயமானது, மக்களின் பலருடைய சமூக அந்தஸ்து சரிந்து விட்டது, நாம் அதற்குப் பழகிவிட்டோம், நாம் அவர்களை மறந்து விட்டோம், எனக்கு வேறு அக்கறைகள் முன்னுரிமைகள் உள்ளன என்ற உணர்வையே உங்களிடம் நான் உருவாக்கி உள்ளேன், எனது சொற்கள் உங்களில் சிலரது உணர்வுகளைக் காயப்படுத்தி உள்ளன என்றார்.
வருத்தம் தெரிவிக்கும் உரையோடு சில சமரசங்களை முன்வைத்தார். அ) பணவீக்கத்துடன் உயர்வது போல் குறைந்தபட்ச கூலி 120 யூரோ வரை உயர்த்தப்படும். ஆ) மிகை நேரப் பணி வரி அகற்றப்படும். இ) 2000 யூரோவுக்கு குறைவாகப் பெறுவோரின் ஓய்வூதியம் மீதான வரி திரும்பப் பெறப்படும். ஈ) வருடக் கடைசியில் ஒரு முறை தரும் போனசுக்கு வரிச் சலுகை உண்டு.
வரிச் சலுகைகள் மற்றும் இதர சலுகைகள் பொருளாதாரச் சுமை என வலதுசாரிகளும் அய்ரோப்பிய ஒன்றியமும் கருதுகின்றன. ஏற்கனவே கிறிஸ்துமஸ் வியாபாரம், கிறிஸ்துமஸ் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால், போராட்டம் தற்காலிகமாக நிற்க வாய்ப்புண்டு. ஆனால் மக்கள், பணக்காரர்கள் மேல் கை வைத்து கிடைக்கும் தொகையில், தங்களை வாழ விட வேண்டும் என்பதற்காகப் போராடக் காத்திருக்கிறார்கள்.
நோபல் பரிசு வென்ற மக்கள் இலக்கியவாதி கலைஞர் ஜான் பில்கர் சொல்கிறார்: மேற்கத்திய நாட்டு மக்கள் மத்தியில் ‘ஜனரஞ்சகவாதம்’ பிற்போக்கானது என தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறது. ஆனால், அது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியையும், எப்படி எதிர்ப்பது என்பதில் திசைவழி இல்லாமையையும் கொண்டுள்ளது. இது நிச்சயம் மாறும். ஆனால் சாமான்ய மக்களின் சக்தி பற்றிய சக்தி வாய்ந்தவர்களின் அச்சம் மட்டும் எப்போதும் மாறாதது.
சக்தி வாய்ந்தவர்களை, மக்கள் சக்தி அடக்கட்டும்.