இசுலாமியர்கள் பயங்கரவாதத்தை
எதிர்க்க வேண்டிய முறை
மனுஷ்ய புத்திரன்
25.04.2019
மாலை 5.49
யாரோ கொலை செய்கிறார்கள்
யாரோ ரத்தம் சிந்துகிறார்கள்
ரத்தம் சிந்துபவர்களுக்கான நானும் கண்ணீர் சிந்துகிறேன்
ரத்தம் சிந்த வைப்பவர்களை நானும் சபிக்கிறேன்
நீ ஒரு இசுலாமியனா
வெளியே வந்து பதில் சொல் என
வீட்டிற்கு வெளியே யாரோ கூச்சலிடுகிறார்கள்
கதவுகளையும் ஜன்னல்களையும் வேகமாக தட்டுகிறார்கள்
நான் அப்போது என் தொழுகைப் பாயில் இருந்தேன்
நான் இன்னும் என் இரவு உணவை அருந்தவில்லை
என் குழந்தைகள் பயப்படுகிறார்கள்
என் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு
வெளியே வருகிறேன்
என்னிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை
நான் தினமும் நிரூபிக்க வேண்டியிருந்தது
மேலும் ஒரு வெள்ளைக் கொடியை நான்
தூக்கிப்பிடித்துக் கொண்டு வெளியே வருகிறேன்
அந்தக் கொடியை தினமும் துவைத்துப் போட்டு
தயாராக வைத்திருக்கிறேன்
ஒரு சமாதானப் புறாவை
பறக்கவிட்டப்படியே வெளியே வருகிறேன்
அதற்காகவே நிறைய வெண்புறாக்களை
வீட்டில் வளர்க்கிறேன்
ஒரு இசுலாமியனாக பிறப்பது மிகவும் சிக்கலானது
எப்போதும் ஒரு ஆயத்த நிலையில்
இருக்க வேண்டும்
நீதான் அந்தக் குண்டுகளை வெடித்தாயா? என்கிறார்கள்
இல்லை என்கிறேன்
நீ அவர்களுக்கு தங்குமிடம் அளித்தாயா? என்கிறார்கள்
இல்லை என்கிறேன்
அவர்களுக்கு பணம் கொடுத்தாயா? என்கிறார்கள்
இல்லை என்கிறேன்
அவர்களைப் பார்த்திருக்கிறாயா? என்கிறார்கள்
இல்லை என்கிறேன்
இந்தக் கொலைகளை ஆதரிக்கிறாயா? என்கிறார்கள்
இல்லை என்கிறேன்
உன் மதம் அதை ஆதரிக்கிறதா? என்கிறார்கள்
இல்லை என்கிறேன்
நீ வணங்கும் கடவுளைத்தான்
கொலைகாரர்களும் வணங்குகிறார்களா? என்கிறார்கள்
எனக்கு தெரியாது என்கிறேன்
நீ பின்பற்றும் மதத்தைத்தான் கொலைகாரர்களும்
பின்பற்றுகிறார்களா? என்கிறார்கள்
எனக்குத் தெரியாது என்கிறேன்
கொலைகாரர்கள் ஏன் உன்னை போலவே
தாடி வைத்திருக்கிறார்கள்? என்கிறார்கள்
எனக்கு தெரியாது என்கிறேன்
நீ அந்தக் கொலைகாரர்களை கண்டிப்பாக
உரத்துச் சொல்ல முடியுமா? என்கிறார்கள்
நான் இந்தக் கொலைகள் நடப்பதற்கு முன்பே
இந்தக் கொலைகளை கண்டித்துவிட்டேன்
நான் தினமும் அய்ந்து வேளை தொழுகிறேன்
ஆனால் தினமும் பத்துமுறை
பயங்கரவாதிகளை கண்டிக்கிறேன் என்றேன்
நீ கண்டித்த பிறகும் அவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால்
நீ அவர்களை சரியாக கண்டிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?
என்கிறார்கள்
நான் வேண்டுமானால் பத்து முறைக்குப் பதில்
இனி நூறு முறை கண்டிக்கட்டுமா? என்கிறேன்
நீயும் நாளை ஒரு இசுலாமிய பயங்கரவாதியாக மாறமாட்டாய்
என்று என்ன உத்தரவாதம் என்கிறார்கள்
எனக்கு ரத்தத்தைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கும்
மேலும் உயிரோடு இருப்பதை தவிர
வாழ்க்கையில் எனக்கு வேறு எந்த இலட்சியமும் இல்லை என்கிறேன்
நீ இந்தக் கொலைகளுக்கு ஏன்
பொறுப்பேற்றுக் கொள்ள மறுக்கிறாய் என்கிறார்கள்
எனக்கு நிறைய குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன
என் குழந்தைகளுக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்
என் வேலைக்கு பொறுப்பாக இருக்கிறேன்
என் நோய்களுக்கு பொறுப்பாக இருக்கிறேன்
என் துயரமான தலைவிதிக்கு பொறுப்பாக இருக்கிறேன்
மேலும் இந்த தேசத்திற்கு வேறு பொறுப்பாக இருக்க
வேண்டியிருக்கிறது.
இதில் நான் கொலைகளுக்கு எங்கே பொறுப்பேற்பது?
என்கிறேன் விரக்தியோடு
இவ்வளவு கொலைகளுக்குப் பிறகு
நீயும் உன் கடவுளும் இசுலாமியர்களாக
இருக்கத்தான் வேண்டுமா? என்கிறார்கள்
இருவரும் அதைப்பற்றி விரைவில்
பேசி ஒரு முடிவெடுக்கிறோம்
என்று வாக்குறுதி அளிக்கிறேன்
பிறகு அவர்கள் என் ஆடைகளை களைந்து சோதிக்கிறார்கள்
நான் ஒரு இசுலாமியன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும்
நிர்வாணமாக ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள்
அங்கே இன்னும் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள்
பயங்கரவாதத்திற்கு எதிரே கத்தும்படி கட்டளையிட்டார்கள்
நான் ஏற்கனவே கத்திவிட்டதைச் சொன்னேன்
மறுபடி கத்து என்றார்கள்
கத்தினேன்
சத்தம் ஒழுங்காகவே வரவில்லை
என்று தலையில் அடித்தார்கள்
நான் இன்னும் சத்தமாக கத்தினேன்
பயங்கரவாதிகளுக்கு கேட்கும்படி கத்து என்கிறார்கள்
இயற்கையாகவே நான் மென்மையான குரல் உடையவன்
என் தொண்டை கிழியும் படி கத்தினேன்
எல்லோரும் சேர்ந்து கத்தினோம்
அந்தக் காட்சி பயங்கரமானது
அந்தக் காட்சி பயங்கரமானது
இந்த உலகத்தில்
சமாதானத்தைக் கொண்டுவரும் பொறுப்பு
எங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது
விடிய விடிய கத்திக் கொண்டே இருந்தோம்