COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

முப்பது நாட்களை கடந்துவிட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்

ஏ.கோவிந்தராஜ்

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், 2015ல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த 20% கூலி உயர்வு வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும்போது
, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் செயல்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில், 01.04.2019 முதல் குமாரபாளையம், காவேரி நகர், பெறாந்தர் காடு, சி.என்.பாயைம், பாலிக்காடு, குளத்துக் காடு பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூலி உயர்வு பிரச்சனை தீர ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கம் கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கும்போது, 26.04.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சி தலைவர், அமைச்சர் தங்கமணி ஆகி யோருடன் கூலி உயர்வு கோரிக்கை மீது தலையிட கோரி 70 பெண்கள் உள்பட 200 பேர் கொண்ட சாலை மறியல் நடத்தப்பட்டது.
கைது செய்ய வந்த பெண் காவல் ஆய்வாளரிடம் மறியலில் ஈடுபட்ட பெண்கள் தேர்தல் முடிந்த பிறகு எங்களுக்கு கூலி உயர்வு வாங்கி தருகிறேன், வேலைக்கு செல்லுங்கள் என்று கூறினீர்களே, கூலி உயர்வு வாங்கி தராமல் ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று மாலை விடுதலை செய்ய வந்த காவல் ஆய்வாளரை  மீண்டும் பெண்கள் முற்றுகையிட்டு ஏன் எங்கள் கூலி உயர்வு பிரச்சனையை தீர்க்கவில்லை என்று கேட்டார்கள். ஆய்வாளர் பதில் அளிக்கவில்லை.
அடப்புத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையில் 26.04.2019 அன்று குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவராக இருந்த திமுக மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டது. கூலி உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சிபிஅய்எம்எல்லுக்கு அழைப்பு இல்லை.
காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதாக சொல்லப்பட்டது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டனர். முதலில் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த அடப்புத்தறி உரிமையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தனர். அவர்கள் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட 20% கூலி உயர்வை 10% என குறைத்து ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக ஒப்பந்தம் போட வைத்தனர்.
ஒப்பந்தம் போட்டு முடித்துவிட்டு சர்வ கட்சிகள், தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்காத, போராடாத தொழிற்சங்கத்தையும் அழைத்து சர்வ கட்சியையும்  தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்துக்கு தலைமை தாங்குகிற ஏஅய்சிசிடியுவையும் அழைத்தார்கள்.
சர்வ கட்சி என்று சொல்லிக் கொள்பவர்கள் முன் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அமர்ந்தது. சர்வ கட்சியின் சார்பாக திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ்.சேகர் பேசினார். அரசு தலையிடாத சூழ்நிலையில், ஆளும் கட்சி தலையிடாத நிலையில் நாங்கள் இந்த முயற்சி எடுத்தோம், அடப்பு தறி உரிமை யாளர்களுடனும் ஜவுளி உற்பத்தியாளர்களிடமும் பேசியதன் முயற்சியாக பள்ளிபாளையத்தில் போட்ட 10% இங்கேயும் போடலாம்  என அடப்புத் தறி உரிமையாளர்கள் கேட்டதால் ஜவுளி உற்பத்தியாளர்களும்  ஒப்புக்கொண்டு 10% கூலி உயர்வு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்றார். தொழிற்சங்கமும் அடப்புத் தறியாளர்களும் இனி சுமுகமாக பேசிக் கொள்ளுங்கள் என்றார்கள்.
20% என இருந்த கூலி உயர்வை 10% என ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து உள்ளதை சர்வ கட்சி தலைமையில் உள்ள தொழிலாளர்களும் போதும் என நினைக்கிறார்களா என்று ஏஅய்சிசிடியு கேள்வி எழுப்பியபோது,  போதாது என்றார். சர்வ கட்சியும் சேர்ந்து ஏன் 20% வாங்க முடியவில்லை என்று கேட்ட போது, ஜவுளி உற்பத்தியாளர்களை 10% என்ற மட்டத்துக்கு கொண்டு வருவதே கஷ்டமாக போய்விட்டது என்றார்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த முறை கூலியை குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள், அந்த முடிவுக்கு சர்வ கட்சியும் வேலை செய்து உள்ளது என்று கூறினோம். சர்வ கட்சியின் செயல்பாடு தொழிலாளியின் கூலியை குறைத்து விட்டது, இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஏஅய்சிசிடியு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கமும், கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கமும் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் தாங்கள் பெறும் கூலியை அடிப்படையாகக் கொண்டு 10% கூலி உயர்வு பெறுகிறோம், தொழிலாளர்களுக்கு அவர்கள் பெறும் கூலியை அடிப்படையாகக் கொண்டு 10% தருகிறோம் என்றார்கள்.
தொழிலாளர்களின் பொது பேரவையில் 20% கூலி உயர்வு பெற வேண்டும் என்று முடிவு இருக்கும்போது, 10% என்று நாங்கள் ஒப்பந்தம் போட முடியாது, பொதுப் பேரவையை கூட்டி தொழிலாளர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று ஏஅய்சிசிடியு தரப்பில் சொல்லப்பட்டது.
29.04.2019 அன்று காலையில் நடந்த பொதுப் பேரவையில், 20% கூலி உயர்வு என்ற கோரிக்கையில் இருந்து பின்வாங்க முடியாது என தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இந்த 20% உயர்வு நாளொன்றுக்கு தறி ஒன்றுக்கு ரூ.14 முதல் ரூ.17 என்ற அளவில்தான் நிற்கும். கொத்தடிமை முறை, சிறுநீரக விற்பனை, கரு முட்டை விற்பனை என்று கழியும் விசைத்தறி தொழிலாளர் வாழ்க்கையில் குழந்தைகள் விற்பனை என்று அவர்கள் நகர்ந்துள்ள இன்றைய நிலைமைகளில் இந்த அற்பமான உயர்வு கூட இல்லாமல் வாழ்க்கை நடத்தவே முடியாது என்பதால்தான் 30 நாட்கள் கடந்தும் விடாப்பிடியான போராட்டத்தில் தொழிலாளர்கள் இறங்கியுள்ளார்கள். பொதுப் பேரவைக்குப் பிறகு தொழிலாளர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவேதும் எட்டப்படவில்லை. சர்வ கட்சியினர் பெயரால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏஅய்சிசிடியு தலைமையிலான சங்கம் மறுத்துவிட்டது.
மே 4 அன்று விசைத்தறி தொழிலாளர்கள் தனித்தனியாக கோட்டாட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.
மே 19 வரை தேர்தல்கள் நடக்கவுள்ளன. நாடெங்கும் தொழிலாளர்கள் வேலை இழப்பது, குறை கூலியில் நசுக்கப்படுவது, சங்கம் துவங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்படுவது (மிகச் சமீப நிகழ்வாக சென்னை மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் ஆறு பேர் சங்கம் வைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்கள் அவர்கள் மீண்டும் பணிக்கு எடுக்கப்பட வேண்டும் என வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர்), 24 மணி நேர வேலைக்கு உட்படுத்தப்படுவது என கொடூரமான நிலைமைகளில் தொழிலாளர்கள் துயருரும்போது, இவற்றுக்கெல்லாம் நேரடி காரணமான மோடியும் பழனிச்சாமியும் மே தின வாழ்த்து சொல்வார்கள் என்பது நமக்கு நேரப் போகும் கொடுமை.
மே தினத்தன்று விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துடன் மே தினத்தை அனுசரிக்க உள்ளார்கள். 19ஆம் நூற்றாண்டு வேலை நிலைமைகளை இனியும் ஏற்க மாட்டோம் என்று குரல் எழுப்ப உள்ளார்கள். அவர்களது வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும். கேளாச் செவியர் களான மோடி, பழனிச்சாமி அரசுகளுக்கு  எச்சரிக்கை விடுக்கட்டும்.

Search