COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

பாலியல் வன்முறை குற்றங்களால் பாலியல் வன்முறை தொழிலால் 
தமிழக ஆட்சிக்கு தலை குனிவு

கவுரவ வேந்தர் சபைதன்னில் அறங்கண்டவர் யாவரும் இல்லையோ? ..... அங்கு சாத்திரம் செத்துக் கிடக்குமோ?
மாதவிடாய் காலத்தில் இருக்கும் பாஞ்சாலியை அழைத்து வரச் சொல்லும் துரியோதனனின் அவை பற்றிய பாரதி வரிகள் இவை. இன்றைய தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இது பொருந்துகிறது. மாநிலத்தின் எட்டுத் திசைகளில் இருந்தும் பாலியல் வன்முறை தொழில் செழித்து நடந்து வருவது பற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. கொடுங்குற்றமான பாலியல் வன்முறை குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கறாராக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் விடாமல் எழுப்பப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்நாட்டில் அந்த பாலியல் வன்முறையே ஒரு தொழிலாக, ஆட்சியாளர்கள் ஆசி பெற்று, காவல்துறையினர் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொழில் தொடர்பான விசாரணையை பழனிச்சாமி அரசாங்கம் மத்திய புலனாய்வுத் துறையிடம் பாதுகாப்பாக தள்ளிவிட்டது. நமக்கு நிச்சயம் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இல்லை. சமூக ஆர்வலர்கள் சிலர் முன்வந்து நடத்தும் விசாரணை சில உண்மைகளை வெளியே கொண்டு வந்து நிறுத்தலாம். மக்கள் மத்தியில் கொந்தளிப்பும் அதிர்ச்சியும் ஏற்படுத்திய பொள்ளாச்சி பிரச்சனை ஊடேயே, அந்த கொந்தளிப்புக்கு சரியான பதில் சொல்லாமல், பொருத்த மான நடவடிக்கை எடுக்காமல் மக்களவை தேர்தலை, இடைத் தேர்தல்களை சந்தித்து முடித்துவிட்ட அடிமை பழனிச்சாமி அரசாங்கம், பெரம்பலூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இப்போது எழுந்துள்ள அதே போன்ற பாலியல் வன்முறை தொழில் புகார்களுக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை.
பெரம்பலூரில் மணமான பெண்கள், கல்லூரி மாணவிகள் என 20க்கும் மேற்பட்டோர், ஏமாற்றப்பட்டு அழைத்துச்  செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, படம் பிடிக்கப்பட்டு, அதைக் காட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்டு, அல்லது மீண்டும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, புகார் எழுப்புவது தடுக்கப்பட்டு.....
இங்கும் அஇஅதிமுகவைச் சேர்ந்த ஒருவர்தான் இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். போலி பத்திரிகையாளர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார். அவர்தான் படம் பிடித்துள்ளார். இந்தக் குற்றங்களுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக வழக்கறிஞர் அருள் பெரம்பலூர் அனைத்து பெண்கள் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். ஆளுங்கட்சியின் நிர்ப்பந்தம் வந்து விசாரணையை முறையாக நடத்துவார்களா எனதான் சந்தேகிப்பதாக வழக்கறிஞர் அருள் சொல்கிறார். பொள்ளாச்சி பிரச்சனையில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்ட துணைசபாநாயகரையோ, வேறுவேறு இளம்பெண்களுடன் வெவ்வேறு நிழல் படங்களில் தோன்றும் அவரது மகனையோ எந்த சட்டமும் ஒழுங்கும் இது வரை தொட முடியாமல் போனாலும், குற்றத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட அஇஅதிமுககாரர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அது போன்ற ஒன்றைக் கூட இந்த விசயத்தில் ஆளுங்கட்சி செய்யவில்லை. ஈரோட்டில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி மிரட்டி வந்தவரை, நான்கு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தந்த பிறகு இப்போது கைது செய்துள்ளார்கள். சட்டம், ஒழுங்கு காப்பவர்கள் என்ன செய்கிறார்கள்?
திண்டுக்கல்லில் +2 மாணவன் ஒருவன் 12 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி பிறகு அந்தச் சிறுமியின் மூக்கிலும் வாயிலும் மின்கம்பிகள் செருகி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளான். பாலியல் வன்முறை குற்றமாக, கொலை குற்றமாக அல்லாமல், வேறு காரணம் காட்டி பிரச்சனையை முடித்துவிட காவல்துறை செய்த முயற்சியை மீறி பகுதி மக்கள் போராட்டத்தால் பாலியல் வன்முறை குற்றம் வெளியே வந்துள்ளது. குற்றத்தில் மூன்று பேருக்கு தொடர்பு இருக்கலாம் என பகுதி மக்கள் சொல்கிற நிலையில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சியில் அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா என்ற குரல் கேட்டோம். இந்தக் குழந்தை அண்ணா கரண்ட் வெக்காதீங்கண்ணா எனக் கதறினாள் என கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சொல்கிறான்.
இந்தக் குற்றத்தில் போக்சோவில் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதற்கும் சேர்த்து பகுதி மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற குற்றங்கள் நடப்பதைத் தடுப்பதை விட, அவற்றின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டவே ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் கூடுதலான முனைப்பு காட்டுகிறார்கள்.
அஇஅதிமுக ஆட்சிக் காலங்கள் பெண்கள் மீதான வன்முறைகளால் நிறைந்த காலங்கள். 1992ல் சிதம்பரம் பத்மினியும் வாச்சாத்தி பெண்களும் காவல்துறையினரால் வதை செய்யப்பட்டனர். 1998ல் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு, அதனால் பலத்த காயமுற்று சரிகா ஷா உயிரிழந்தபோது, அதை சாலை விபத்து என்று சொல்லி அன்றைய ஜெயலலிதா ஆட்சியின் காவல்துறை பிரச்சனையை மூடப் பார்த்தது. மக்கள் எதிர்ப்பால் அது கொலை வழக்கானது. பாலியல் சீண்டலைத் தடுக்க சட்டம் போடும் நிர்ப்பந்தமும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2015 வரை மட்டும் திராவக வீச்சு நிகழ்வுகள் 200 நடந்துள்ளன. அவற்றில் 70% பெண்கள் மீது நடத்தப்பட்டவை. (1991ல் சந்திரலேகா மீது திராவகம் வீசப்பட்டது வேறு கதை). அடுத்தடுத்த அஇஅதிமுக ஆட்சிகளில், காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது, பின் தொடர்ந்து கொலை செய்வது என வேறுவேறு வடிவங்களில் பெண்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடக்கின்றன. சரிகா ஷா உயிரிழந்ததை அடுத்து போடப்பட்ட சட்டம், திராவக வீச்சு பெரும்பிரச்சனையானபோது, திராவக விற்பனைக்கு கட்டுப்பாடு, நிர்பயா கொல்லப்பட்டதை ஒட்டி, மக்களை ஏமாற்ற பெயரளவில் போடப்பட்ட 13 அம்ச பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் என இந்த மூன்று நடவடிக்கைகள் தவிர, பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்த எந்த பொருளுள்ள நடவடிக்கையும் அஇஅதிமுக ஆட்சிகளில் எடுக்கப்படவில்லை. அம்மா வழியில் இன்று ஆட்சி நடத்துபவர்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடையும்போதும் அவர் மேற்கொண்ட ஒப்பனை நடவடிக்கைகள் கூட எடுக்காதது மட்டுமின்றி, குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கின்றனர்.
பாலியல் வன்முறை குற்றங்களால், பாலியல் வன்முறை தொழிலால் தமிழக ஆட்சியாளர்கள் தலை நிமிர முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலைமைகளுக்குக் காரணமான ஆட்சியாளர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

Search