COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

இலங்கையில் ஈஸ்டர் தின குண்டு வெடிப்புகள்
எழுப்பும் கேள்விகள்

அன்பு 

ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளில், இலங்கையின் கொழும்பு நிகொம்பு மட்டக்களப்பில்
பல தேவாலயங்களில் உயர்மட்ட உணவு விடுதிகளில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் பற்றி பல புலனாய்வு முகாமைகள் முன்னரே தகவல் தந்துள்ளனர். முன்தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். தமிழ் பேசும் இசுலாமியர்கள். உயிர்க் கொலை பற்றிய உறுத்தலோ கேள்வியோ இல்லாமல், இறைப் பணியில் இசுலாத்திற்கான புனிதப் போரில், அச்சுறுத்தவும் மதிக்க வைக்கவும் பழிவாங்கவும், தாக்குதல் அவசியம் என நம்பியவர்கள். வசதியானவர்கள். அவர்களில் பலர் உயர்படிப்பு முடித்தவர்கள். மேலான வாய்ப்பு உள்ளவர்கள். உலகெங்கும் நடக்கும் புனிதப் போரில் தங்களை ஒரு பகுதியாகக் கருதுபவர்கள். இப்போது தேடுதல் வேட்டை நடக்கிறது. 15 பேர் பலியாகி உள்ளனர். 70க்கும் மேற்பட்ட தற்கொலை குண்டு வெடிப்பாளர்கள் குண்டுகளுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வழக்கம் போல் தேடுதல் வேட்டையில், வரம்பற்ற அத்துமீறல்கள், விளைவாக பயங்கரவாதம் நோக்கி கூடுதல் இளைஞர் செல்வது என்ற விஷச்சுற்று தொடர்கிறது. இலங்கைக்கும் தென் இந்தியாவுக்கும் தூரம் அதிகம் இல்லை.
குண்டு வெடித்து உயிர்ப்பலியும் பெரும் துயரமும் வாட்டி வதைத்த சமயம், ஸர்மிளா ùஸய்யித் கள்ள மவுனத்திலிருந்தே உருவாகியுள்ளன வெடிகுண்டுகள் என எழுதினார். அவர் தமிழ் இந்துவில், பயங்கரவாத நோய் தீர விரும்பினால் இசுலாமியர் ஒவ்வொருவரும் சிகிச்சை பெற்றே ஆக வேண்டும், பயங்கரவாத நோயைக் கண்டறிந்து குணப்படுத்தியாக வேண்டும் என எழுதினார். இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு எழுத்தாளர் பாத்திமா மாஜிதா, அதே நாள் அதே நாளேட்டின் அதே பக்கத்தில், பயங்கரவாதத்தை, அது உருவெடுத்து வளர்வதை, இசுலாமியர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதுதான் இசுலாமிய சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானது எனவும் இசுலாமிய சமூகம் சுய பரிசீலனை செய்தாக வேண்டும் என்றும் எழுதினார்.
விசயம் அவ்வளவு எளிமையானதா? இசுலாமியர் மத்தியில் இருந்து, அவர்கள் கள்ள மவுனத்தில் இருந்துதான், வெடிகுண்டுகளும் பயங்கரவாதமும் தோன்றுகிறதா? பிரம்மாண்டமான கருத்து மறுஉற்பத்தி, இசுலாமியர்கள் ஒவ்வொருவரும் உள்ளார்ந்த ஓர் பயங்கரவாதி என்ற கதையாடலை கட்டமைத்துள்ளது.
முதல் இரண்டு உலகப் போர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் என்ன தொடர்பு? உலக முதலாளித்துவ பொருளாதாரம் பிழைத்திருக்க, நீடிக்க ஆயுதங்கள், ஆயுத தளவாட உற்பத்தி ஒரு முன்நிபந்தனை அல்லவா? ஆயுதப் போட்டியும் சாவு வியாபாரமும் ஏகாதிபத்தியத்தின் உடன் விளைவுகள் அல்லவா? உலகின் மிகப் பெரிய முதன்மையான பயங்கரவாத சக்தியான ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தை காணத் தவறுவதோ, குறைத்து மதிப்பிடுவதோ சரியா?
ஸர்மிளா ùஸய்யித், பாத்திமா மாஜிதா மற்றும் இதே அலைவரிசை பொது புத்தி கருத்து கொண்டவர்களுக்கு, இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டிய முறை என்ற மனுஷ்ய புத்திரன் கவிதை சரியாகவே பதில் சொல்கிறது. (கவிதை பக்கம் 20ல்)
சமகால உலகில் ஏகாதிபத்தியம் இசுலாத்தை சாத்தான்மயமாக்கி இசுலாமிய பயங்கரவாத எதிர்ப்புப் போரை ஏவி உள்ளது. ஆப்கனிஸ்தான், இராக், லிபியா மற்றும் அரபு உலகம், இசுலாமிய உலகம் நெடுக தாக்குதல் மேல் தாக்குதல் தொடுக்கிறது. உலகெங்கும் அதிதீவிர பிற்போக்கு வெள்ளை இனவெறி நிறவெறி, இசுலாமியர்க்கும் குடி பெயர்பவர்களுக்கும் எதிரானது.
இசுலாமிய எதிர்ப்பு என்பதை பாகிஸ்தான் எதிர்ப்பாக்கி, தேசத்தை பாதுகாத்தால் தான் வளர்ச்சி நல்வாழ்க்கை எல்லாமே முடியும் என, இந்தியாவில் மோடி பேசுகிறார். பாப்ரி மசூதியைத் தகர்த்த, மசூதிகளில் ரயில்களின் குண்டு வெடித்து உயிர்ப்பலி பற்றி கொஞ்சமும் யோசிக்காத சாத்வி பிரக்யா சிங், இந்து மதத்தைச் சேர்ந்த பெண் சாமியர் பாஜகவின் போபால் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஓர் அடையாளமாக நிறுத்தி உள்ளோம் எனப் பேசுகிறார் மோடி.
அச்சம், பீதி, அரச பயங்கரவாதம், அரசியலில் மதக் கலப்பு, வன்முறைத் தாக்குதல்கள், பலியானவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நினைப்பிலிருந்து, அந்த நினைப்பை ஏற்படுத்தும் நிலைமைகளிலிருந்து, பயங்கரவாதம் உருவாகிறது. கள்ள மவுனத்தில் இருந்து அல்ல.
தாலிபான், அல்கொய்தா, அல்நுஸ்ரா, அய்எஸ்அய்எஸ் ஆகியவற்றுக்கு பின்னால் ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதையும் அய்க்கிய அமெரிக்காவும் இஸ்ரேலும் சவுதி அரேபியாவின் மிகப் பெரிய நண்பர்கள், கூட்டாளிகள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இசுலாமிய சமூகத்தில் இருந்து உருவான மனிதர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களில் ஏகப்பெரும்பான்மையினர் இசுலாமியர்கள்தான் என்பதும் கொடூரமான யதார்த்தம்.
இந்தியாவில் இசுலாமியர்கள், கும்பல் படுகொலைகளுக்கு ஆளாகும்போது, முத்தலாக்குக்கு சிறைத் தண்டனை என்ற அநீதி இழைக்கப்பட்டுள்ளபோது, மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 எ ஆகியவற்றை நீக்குவது மூலம் காஷ்மீர் மக்கள் மீதான போர் தீவிரப்படுத்தப்படும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் பேசும்போது, சிறுபான்மை இசுலாமியர் மீது எந்த திணிப்பு நடந்தாலும் நாம் அதனை எதிர்த்தாக வேண்டும். அவர்கள் சுருக்கப்படுவதற்கு, ஒடுக்கப்படுவதற்கு அவர்களை விரட்டும் துரத்தும் நிலைமைகளை உணர்ந்து கொண்டு, அவர்களைப் பொதுவான ஜனநாயக நீரோட்டத்திற்குக் கொண்டுவருவது என்ற கடினமான பாதை மட்டுமே நம் முன் உள்ளது.
சமகால உலகம், கடுமையான பொருளாதார நெருக்கடி, நிரந்தரமான உலகளாவிய போர், வளரும் சுற்றுச்சூழல் பேரிடர் என்ற பேரழிவு பயணப் பாதையில் செல்கிறது. ஏகாதிபத்திய தலையீடு மற்றும் பயங்கரவாதம் என்பது ஒரு நச்சு சுழலேணியாக உள்ளது.
ஏகாதிபத்தியம் என்றால் போர் என தெளிந்து அறைந்து சொன்ன தோழர் லெனின், ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற அழைப்பு விடுத்ததும், அழைப்பு ஏற்று மக்கள் வெற்றி பெற்றதும் வரலாறு சொல்லும் பாடம்.
இசுலாமியரையும் பயங்கரவாதத்தையும் பிரித்து நிறுத்தி, ஏகாதிபத்திய பயங்கரவாதத்தையும் அரச பயங்கரவாதத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, மற்ற அனைத்து வகை பயங்கரவாதத்தையும் தனிமைப்படுத்தி எதிர்த்தாக வேண்டிய காலங்களில் நாம் வாழ்கிறோம்.
மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை போன்றவற்றை நிறுவ, நீடிக்க வைக்க ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படுவது முன்நிபந்தனையாகும். ஏகாதிபத்திய தலையீடு முதன்மையான ஆபத்து என உணர்ந்துகொண்டு, ஏகாதிபத்தியத்தை வீழ்த்தப் போராடும்போதே அனைத்து வகை மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்த்திடுவோம்.

Search