COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

நினைவில் நிழல்....

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்துவரும் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கைக்கான வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக
நேற்று தடையை மீறி சாலை மறியல் போராட்டம் நடந்தது. தங்கள் வாழ்வாதாரத்திற்கான போராட்டக்களத்தில் ஒன்றுபட்ட கொந்தளிப்போடு பல நூறு பேர் பங்கேற்றனர். பெண்களும் ஆண்களுமாக 200 தொழிலாளர்களுக்கு மேல் கைதாகினர்.
மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக நானும் தோழர் செல்வமும் சேலம் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தோம். மத்திய சிறையைக் கடக்கும்போது என் நினைவு அடுக்கில் மூக்கை நுழைத்து அந்த கிளி ஒரு சீட்டை உருவி வெளியே எறிந்தது.
1987ல் ஒரு நாள் முதன் முதலாக விசைத்தறி தொழிலாளர்கள் சினம் கொண்டெழுந்தார்கள். அப்போது பழைய மாடல் ஒற்றைத் தறிதான். தொழிலாளர்கள் விழிப்புற்று கூடுதல் கூலி கேட்கவில்லை. கொடுத்து வந்த கூலியிலிருந்து திடீரென்று 20 பைசா குறைத்து முதலாளிகளே அவர்களை விழிப்படைய வைத்தார்கள். ஒட்டுமொத்த தொழிலாளர்களும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கானோர் தெருவில் திரண்டனர். சந்தைத் திடல் கூடுகைக்கான களமாயிற்று.
கிட்டத்தட்ட ஒரு வாரம் தொடர்ந்த போராட்டத்திற்கு தீர்வு காண கையாலாகாத அன்றைய மக்கள் திலகம் அரசு, தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் சிதைக்க தனது சீருடைப் படையை கொண்டு திட்டமிட்டு வன்முறையை திணித்து சாத்விகமான போராட்டக்களத்தை போர்க்களமாக்கியது. இரு தரப்பிலும் குருதிக் காயங்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை விரட்டி விரட்டி கைது செய்தனர். அதில் நானும் ஒருவன்.
குண்டாந்தடியால் அடித்து, சட்டையைப் பிடித்து தூக்கி வேனில் எறிந்தார்கள்.எல்லா இருக்கைகளிலும் துப்பாக்கியுடன் காக்கிகள் உட்கார்ந்திருக்க, கைது செய்யப்பட்ட நாங்கள் சீட்டுக்கு அடியில் திணிக்கப்பட்டோம். இரவோடு இரவாக சங்ககிரி காவல் நிலையத்தில் கூட்டமாக தள்ளப்பட்டோம். ஒவ்வொருவரும் வரும்போதும் போகும்போதெல்லாம் பிரம்பால் அடித்து விடியும் வரை ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்கள். விடியலுக்கு பின் அங்க அடையாளம் பெயர், முகவரி பட்டியல் எடுத்தபோது காவலர்கள் என்னைப்பார்த்து கேலியாக சிரித்தார்கள். அப்போதுதான் உணர்ந்தேன். என் சட்டையில் கையும், காலரும்தான் தொங்கிக் கொண்டிருந்தது. அது நான் ஆசையாக தைத்துப் போட்டிருந்த புதிய கருப்பு நிறச் சட்டை, அந்த மீதி துணுக்குகளை அங்கேயே உதறிவிட்டு, 48 நாட்கள் மேலாடை இல்லாமலே சிறை வளாகத்தில் சுற்றித் திரிந்தேன்.
அந்த 27 வயது வாலிபமும், தினசரி ஜிம் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சியுமாக பாதுகாத்து வைத்திருந்த உடல் செருக்கும், அரசியல் துணிவும் அதை பெரிதாக பொருட்படுத்த தோன்றவில்லை. விடுதலைக்கு 2 நாள் முன்புதான் வெளியிலிருந்து தோழர் ஒருவர் எனக்கான சட்டை ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்.
அந்த காலகட்ட அரசியல் சூழல், தொழிலாளர்-தொழில் நிலைமைகள், இந்த ஊரின் காவிரிக்கரை வாழ்வியல் என் குடும்பம், எனது தனிப்பட்ட முயற்சிகள் செயல்பாடுகள், புதிய பன்முக நண்பர்களின் அணி சேர்க்கை, தனி முயற்சியில் தொழில்முறை ஓவியனாக என்னை தகவமைத்துக் கொண்டது. இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது.
ஒரு காட்சிப்புள்ளி எத்தனை  சலனங்களை ஓடவிடுகிறது?
88ல் திருமணம் குடும்பம், குழந்தைகள், விபத்து... தொழில்நசிவு... உடல் நலிவு... வறுமை நெருக்கடி... வெட்டு  சாவு... மீண்டும் உயிர்த்திருத்தல்... ஓட்டம்... பிள்ளைகள் வளர்ப்பு... திருமணங்கள்... பேரக்குழந்தைகள்... தனிமை... என கடந்து வந்ததில், என் தனி  வாழ்வோடு, பொது வாழ்வையும் இணைத்தே பயணித்திருக்கிறேன் என்றாலும், சில தருணங்களில் யோசிக்கும்போது பொது வாழ்வில் எனது வீரியமும், துணிவும் சற்றே நீர்த்து போயிற்றோ? என்று என்னிடம் நானே வினவிக் கொள்கிறேன்.
வாழ்க்கைதானே மிகச் சிறந்த ஆசான்? கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.
27.04.2019, கதிரவன், குமாரபாளையம்

Search