COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, May 3, 2019

பொன்பரப்பியும் பொன்னமராவதியும்
சாதிவெறியர்களும் சங்கிகளும் சங்கமிக்கும் இடங்களும்

ஜி.ரமேஷ்

வழக்கமான தேர்தல்களை விட இந்தத் தேர்தல் வித்தியாசமானதாக மாற்றப்படும் சங் பரிவார் கும்பல்களால் என எல்லாரும் எதிர்பார்த்ததுதான் என்றாலும்
மதவெறியும் சாதி வெறியும் அப்பட்டமாக இப்போது வெளியே உலா வருகின்றது. என்னை மட்டும் திருடன் என்று சொல்லவில்லை என் சாதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரையுமே திருடன் என்கிறார்கள் என்று நாட்டின் பிரதமரே பேசுகிறார். மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்தானா என மாயாவதி கேள்வியெழுப்ப, நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இல்லை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்கிறார் மோடி மீண்டும். அப்படிச் சொல்லிவிட்டு உங்கள் சாதி விளையாட்டிற்கு நான் தயார் இல்லை என்கிறார். சாதியைப் பற்றி வெளிப்படையாகவே ஒரு பிரதமர் பேசி ஓட்டுச் சேகரிக்கிறார். ஆனால், தேர்தல் விதி மீறல் வழக்கு எதுவும் வெளிப்படையாக வெறிப் பேச்சு பேசும் மோடி மீது பாய்வதில்லை.
தமிழ்நாட்டில், ஏப்ரல் 18 அன்று தேர்தல் நடைபெற்றது. எடப்பாடி அரசு மீது புகார்களை அள்ளி வீசிய ராமதாசும் அன்புமணியும், அண்ணா திமுக, பாஜக கூட்டணியில் அய்க்கியமானார்கள். அது முதலே அவர்கள் சாதி ஓட்டைக் கைப்பற்ற சதித் திட்டங்களில் இறங்கிவிட்டார்கள். அன்புமணி ராமதாஸ் திருப்போரூர் கூட்டத்தில், உள்ளேயும் வெளியேயும் நாம மட்டுமே இருந்தா அப்புறம் என்ன நடக்கும், நாம் மட்டுமே பூத்திற்குள் இருப்போம் புரிகிறதா என்று வெளிப்படையாகவே வாக்குச் சாவடியைக் கைப்பற்ற அழைப்பு விடுத்தார்.
தேர்தல் நாள் அன்று, சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் பொன்பரப்பியில், பாமகவினர் சாதிவெறியாட்டம் ஆடினார்கள். ஆற்றின் பள்ளமான பகுதியில் இருந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஆட்டைப் பார்த்து, நான் குடிக்கும் தண்ணீரை ஏன் கலக்குகிறாய் என்று மேடான பகுதியில் நின்று கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நரி கேட்டதாம். நான் கீழேதானே இருக்கி றேன் நான் எப்படி நீ குடிக்கும் தண்ணீரைக் கலக்க முடியும் என்று ஆடு கேட்க நீ இல்லை என்றால் உன் அப்பன் கலக்கியிருப்பான் என்று கீழே நின்ற ஆட்டின் மீது பாய்ந்ததாம் நரி. அதைப் போல, விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர், தலித் சமுதாயத்தினர் பானை சின்னத்திற்கு வாக்குச் சாவடிப் பக்கத்தில் நின்று கொண்டு வாக்கு கேட்டார்கள் என்று சொல்லி ஊருக்கு வெளியே இருக்கக் கூடிய தலித் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கினார்கள் பாமகவினரும் இந்து முன்னணியின ரும். வெறும் 360 சொச்சம் வீடுகளே உள்ள தலித் சமுதாயத்தினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்களும் பிற சமுதாயத்தினரும் வாழும் ஊருக்குள் உள்ள பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு அருகில் நின்று பானையைக் காட்டினார்கள் என்று கூறுவது ஆட்டைத் தாக்க நரி காரணம் சொன்ன கதைதான். பானைச் சின்னத்திற்கு ஓட்டு விழக் கூடாது, தலித்துகள் ஓட்டுப் போடவே வரக்கூடாது என்கிற முடிவோடு, எடப்பாடியின் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்க, மதவெறி பிடித்த இந்து முன்னணியினரும் சாதி வெறி பிடித்த பாமகவினரும் தலித் சமூகத்தினரின் வீடுகளைச் சூறையாடினார்கள்.
நாமெல்லாம் இந்து எல்லாரும் ஒன்று என்று இந்துக்கள் ஓட்டுக்காகப் பிரச்சாரம் செய்யும் இந்து முன்னணி, பாஜக சங்கிகள் எப்போதும் துணை நிற்பது ஆதிக்க சாதியினர் பக்கம்தான். தேர்தல் கூட்டணி என்ற பெயரால் மட்டும் பாமக, பாஜகவினர் ஒன்று சேர்ந்து பொன்பரப்பியில் தலித் மக்கள் வீடுகளைச் சூறையாடவில்லை. இந்தியா, இந்தி, இந்து என்று இந்து தேசிய வெறியூட்டும் பாஜக சங்கிகள் இஸ்லாமியர்களை, தலித் மக்களையும் அடித்துக் கொல்வது அவர்களது அன்றாட இயல்பான நடவடிக்கை. திருநெல்வேலியின் பாட்டப்பத்திலும் அதுதான் நடந்தது.
சலவைத் தொழிலாளர் சமுதாயச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் கழகத் தோழர் மாரியப்பனை, கோனார் சமுதாயத்தைச் சேர்ந்த சமூக விரோதிகள் வெட்டிக் கொல்வதற்கு கொம்பு சீவி விட்டவர்கள் இந்து முன்னணியினர். இந்து தேசியம், தமிழ்த் தேசியம் என்று வெறியூட்டு பவர்கள் எல்லாரும் எப்போதும் நிற்பது ஆதிக்க சாதியினர் பக்கம்தான். இதுதான் பொன்பரப்பியிலும் நடந்தது. தெளிவாகத் திட்டமிட்டு தலித் மக்கள் வீடுகளைச் சூறையாடியது, வாகனங்களைத் தீக்கிரையாக்கியது மட்டுமின்றி, அவர்களை வீடுகளை விட்டே விரட்டி அடித்து விட்டனர். எண்பது வயதுப் பாட்டியின் கைகூப்பி கெஞ்சும் படமும் சுற்றி ஓடுகள் நொறுங்கிக் கிடக்க ஒரு ஓட்டுச்சில்லை கையில் வைத்துக் கொண்டு நிற்கும் நான்கு வயதுச் சிறுமியின் படமும் நல்ல உள்ளங்களின் மனங்களை நடுங்கச் செய்கின்றன.
பொன்பரப்பி மட்டுமின்றி பல வாக்குச் சாவடிகளில் பாமகவினரும் பாஜகவினரும் சேர்ந்து கொண்டு வாக்குச் சாவடிகளுக்குள் சென்று மாற்று கட்சியினருக்கு வாக்களிக்க வந்தவர்களை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். இவ்வளவையும் பாஜக, பாமகவினர் செய்திருக்க, வன்முறைக்கு காரணம் தலித் மக்கள்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வன்னியர் சமுதாயத்தினர் மீது நடவடிக்கையா என அறிக்கை விடுகிறார் ராமதாஸ்.
சாதிக் கலவரம் என்று சித்தரிக்கப் பார்க்கிறார்கள் சிலர். இரு பக்க மோதல்கள் இல்லவே இல்லை இதில். தலித் மக்கள் தாக்கப் பட்டு வீடுகளும் உடமைகளும் சூறையாடப்பட்டிருக்க, தலித் மக்கள் தங்கள் வீடுகளிலேயே குடியிருக்க முடியாத நிலையிருக்க, அவர்கள் பதில்வினையாற்றாத நிலையில், அப்படியே பதில்வினையாற்றியிருந்தாலும்கூட இது சாதிக் கலவரம் அல்ல. ஆதிக்க சாதி வன்முறை.தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அராஜகமான தாக்குதல்.
ஆற்காடு கீழ் விஷாரத்திலுள்ள வாக்குச் சாவடியில், முன்னாள் அமைச்சர் வேலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் ஆகியோர் அத்துமீறி நுழைந்து சென்றதால் ஏற்பட்ட கலாட்டாவை துப்பாக்கிச்சூடு நடத்தித்தான் கலைத்துள்ளனர். பாப்பிரெட்டிப் பட்டி, நத்தமேடு வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். இப்படி கொஞ்சமும் தயக்கம் இன்றி வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியது மட்டுமின்றி, தலித் மக்கள் ஓட்டுப் போடவே வர விடாமல் கலவரம் செய்துள்ளனர்.
பொன்பரப்பியில் தலித்துகளின் வீடுகளைத் தாக்கும் வன்னியச் சிறுவர்கள் இளைஞர்கள் முகங்களைப் பார்க்கும்போது சாதி வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் கையில் பிடித்திருக்கும் கொடிகளும் கட்டியிருக்கும் கலர் துணியும் கலர் கயிறுமே அவர்களின் சாதியை அடையாளம் காட்டுகிறது. இல்லாமையின் அடையாளம்தான் அவர்களிடம் காணப்படுகிறது. அன்றாடம் உழைத்தால்தான் அடுத்த நாளுக்குக் கஞ்சி என்று வாழும் உழைக்கும் மக்களிடத்தில் சாதி வெறியூட்டி தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள் மோடி எடப்பாடி ராம்தாஸ் வகையறாக்கள்.
எட்டு வழிச் சாலைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவன் நான் என்று பெருமை பேசிக் கொண்டு,  எட்டு வழிச்சாலை திட்டம் எப்படியும் வரும் என்று தீர்மானமாகச் சொல்லும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பக்கம் வெட்கமில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்த ராம்தாஸ், தான் செய்துள்ள துரோகத்தை மறந்துவிட்டு வன்னியர்கள் வாக்குகளுக்காக சாதி வெறியை தூண்டுகிறார்.
பொன்பரப்பியில் தலித் மக்கள் தாக்கப்பட்டு அவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டது என்றால், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், தேர்தலை முன்னிட்டு, முத்தரையர் சமுதாய மக்களை அதுவும் குறிப்பாக பெண்களை இழிவுபடுத்திப் பேசுகிறார்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இருவர். இதைக் கண்டித்து முத்தரையர் சமுதாய மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். புதுகை மாவட்ட இகக(மாலெ), பெண்களை இழிவாகப் பேசிய கயவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தியது. முத்தரையர் சமூகத்தில் இருந்தே, சிலர் இதனைச் செய்துள்ளனர் என இப்போது வழக்கு மாறியுள்ளது. ஆனால், இந்த மாற்றம் முத்தரையர் சமூகத்தின் நிலையையோ அவர்கள் அனுபவிக்கிற இழிவுகளையோ மாற்றி விடாது. இந்தத் தகவலை, முத்தரையர் சமூகத்தவர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தவோ, ஆதிக்க சக்திகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்ளவோ, பயன்படுத்த விடக்கூடாது.
இந்தக் கும்பல்கள் அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க திட்டங்களை வகுத்துக் கொடுத்து செயல்படுத்திக் கொண்டே, மறுபுறம் அதை எதிர்க்கும் விவசாயிகள், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்திடாமல் பார்த்துக் கொள்ள மதவெறி, சாதி வெறி, தேச வெறியைத் தூண்டி விட்டு மக்களைப் பிளவு படுத்தும் வேலையைச் செய்தும்  மாடுகளுக்கு கீதையை வாசித்துக் காண்பிப்பது, மாட்டு மூத்திரத்தை சர்வரோக நிவார ணியாக்குவது என்று மக்களை முட்டாள் களாக்குவதும் வேட்மனு தாக்கல் செய்யப் போகும்போது சாலைகள் முழுவதையும் நல்ல தண்ணீர் கொண்டு கழுவிவிட்டு ரோஜா மலர்களைக் கொண்டு தூவி வரவேற்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய்களை வீணடித்து ஆடம்பரத்தின் பக்கம் மக்களைத் திசை திருப்புவது போன்றவற்றைச் செய்தும் தன் கார்ப்பரேட் கனவான்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இந்து மதவெறிச் சங்கிகளும் சாதி வெறி மருத்துவர்களும் ஊழல் அடிமை எடப்பாடிகளும் வீழ்த்தப்பட வேண்டியதுதான் நாளைய இந்தியாவிற்கு நன்மையாகும்.

Search