ராஜஸ்தான், மகாராஷ்டிரா
தலித்துகள்
மீதான வன்கொடுமைகள்
டெல்டும்ப்டே
நேர்காணல், திருமாவளவன் அழைப்பு
(சில விஷயங்களை, சற்று முன்னும் பின்னும் மாறி மாறியும் சொல்லும் விதத்திலேயே இந்தக்
கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
மத்தியில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி உள்ளபோது, மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனை ஆட்சி உள்ளபோது, தலித்துகள் மீது நடந்த வன்கொடுமைகள் பற்றிய விவரங்கள்,
26.06.2015 பிரண்ட்லைனில் இருந்து தரப்பட்டுள்ளன. அதனோடு,
26.06.2015 தேதிய பிரண்ட்லைனில் வெளியான ஆனந்த்
டெல்டும்ப்டே நேர்காணல் தரப்பட்டுள்ளது. அதனுடன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி அதிகாரப் பகிர்வு நோக்கி நடத்திய கருத்தரங்கில் பேசப்பட்ட விஷயங்களை
ஒப்பிட்டு நமது கருத்துக்கள் தரப்பட்டுள்ளன)
ராஜஸ்தான்
சுற்றுலா நகரமான புஷ்கரிலிருந்து 59 கிலோ மீட்டர் தாண்டி நாகுவார் மாவட்டத்தின் டங்கவாஸ் கிராமம்
இருக்கிறது. அங்கே மே 14 அன்று மெகவால் என்ற பட்டியல் சாதியைச்
சேர்ந்த ஒரே குடும்பத்தின் 5 பேர் ஜாட் ஜாதியினரால்
கொல்லப்பட்டனர். தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை மேல் சாதியினர்
அபகரித்தனர். சட்டப்படியும் நியாயப்படியும் தமக்குச் சொந்தமான நிலத்தை தலித்துகள்
திரும்ப எடுத்துக்கொள்ள முயன்றனர். டங்க வாஸ் கிராமத்தில் இருக்கிற 2,500 குடும்பங்களில் ஜாட் குடும்பங்கள் 1,200 உள்ளன. தலித் குடும்பங்கள் 130 இருந்தன.அவை மெகவால் என்ற தலித் துணைப் பிரிவைச் சேர்ந்தவை.
ராஜஸ்தானின் தலித் பிரிவினர்களிலேயே இவர்கள்தான் சற்று மேல்நிலையில் உள்ளனர்.
அறுதியிடவும் செய்கின்றனர்.
மே 14 அன்று 200க்கும் மேற்பட்ட ஜாட்டுகள் ஒன்று
திரண்டு நிலத்தின் பாத்யதை கோரிய ரத்னராம் மெகவால் குடும்பத்தின் மீது தாக்குதல்
நடத்தினர். அந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயம் பட்டவர்கள் மீது
ட்ராக்டரை ஏற்றினார்கள். ரத்னராம், பொக்கா ராம், பஞ்சராம், கண்பத் மற்றும் கணேஷ் ராம் என்ற
தலித்துகளோடு ராம்பால் கோசைன் என்ற தலித் அல்லாதவரும் கொல்லப்பட்டார்.
படுகொலைக்கு முன்பாகவே பல புகார்கள்
இருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் சம்பவம் நடந்தது. சம்பவத்திற்கு
6 நாட்களுக்குப் பிறகுதான் முதல் தகவல்
அறிக்கையிலிருந்த 12 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்திற்குப் பிறகும் 144 தடை உத்தரவையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜாட் மகா பஞ்சாயத்துக்கள்
பக்கத்துக் கிராமத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தானிலிருந்து பாஜகவிற்கு
இருக்கிற 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 7 பேர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 200 பேர் இருக்கிற சட்டமன்றத்தில் 36 பேர் ஜாட்டுகள்.
மகாராஷ்ட்ரா
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 2001 முதல் 2012 வரை மகாராஷ்ட்ராவில் தலித்துகள் மீது
நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக 3,210 வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.
வன்கொடுமைகள் விஷயத்தில் மகாராஷ்ட்ரா 9ஆவது
இடத்திலுள்ள மாநிலம். 26,378 வழக்குகளுடன் உத்தரபிரதேசம்
முதலிடத்தைப் பிடித்துள்ளது. 10,845 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாமிடத்தில்
உள்ளது.
மே 16 அன்று சகர் ஷெஜ்வால் என்ற தலித் செவிலியர் படிப்பு மாணவர் படுகொலை
செய்யப்பட்டார். அவர் உடல் சிதைக்கப்பட்டது. அவர் அலைபேசியின் ரிங் டோன், ‘நீங்கள் வேண்டுமளவுக்கு உங்கள் குரலை உயர்த்தலாம், பீமின் கோட்டை வலுவாகவே உள்ளது’ என்று பாடியது. பாடல், பீம்ராவ்
அம்பேத்கர் தலைமையிலான ஒருமைப்பாட்டை, அறுதியிடலை
குறிக்கிறது. சாகர் தொலைபேசியை அணைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அவர்
தாக்கப்பட்டார். நினைவிழந்த நிலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்
பட்டு உடலெங்கும் சிதைக்கப்பட்டு வனப் பகுதியில் கொல்லப்பட்டார். ஆடைகளை
அகற்றியிருந்தனர். உடலெங்கும் நொறுக்கப்பட்டிருந்தது. தாக்கப்பட்ட இடத்திலிருந்து 2 நிமிடங்களில் சென்றுவிடக் கூடிய இடத்தில் இருந்த காவல் நிலையம்
சும்மா இருந்தது. தாக்குதல் பற்றி இரண்டாவது முறை தெரிவிக்கப்பட்ட பிறகும் காவல்
ஆய்வாளர் அதனை பெரிதுபடுத்தவில்லை.
மது விடுதி சண்டை காதல் பிரச்சனை என
எப்போதுமே வன்கொடுமைகளை திசை திருப்புகிறார்கள்.
கயிர்லாஞ்சி வழக்கைக் கூட நீதிமன்றம்
வன்கொடுமை வழக்காக ஏற்கவில்லை.
ஏப்ரல் 3, 2014 மனோஜ் கசாப் என்ற பஞ்சாயத்து தலைவர் மராத்தா சாதியைச்
சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டார்.
ஏப்ரல் 25, 2014ல் உமேஷ் அகாலெ என்ற தலித், மேல் சாதி
பெண்ணுடன் உறவு இருந்ததென கொல்லப்பட்டார்.துவக்க தயக்கத்திற்கு பிறகே வன்கொடுமை
வழக்கு பதியப்பட்டது.
ஏப்ரல் 28 அன்று நித்தின் அகே என்ற தலித் இளைஞர் மராத்தா பெண்ணுடன்
பேசியதற்காக அடித்து கழுத்து நெரிக்கப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார். கொலையாகவும்
வன்கொடுமையாகவும் வழக்கை பதிய மறுத்த காவல்துறை பிறகு தன் நிலையை மாற்றிக்
கொண்டது. அம்பேத்கர் ஜெயந்திக்கு திட்டமிட்டிருந்த மானிக் உதாகே மே 1, 2014 அன்று கற்களால் அடித்துக் கொல்லப்பட்டார். வன்கொடுமை வழக்கு பதிவு
செய்ய ஒரு வருடம் ஆனது.
மே 14, 2014 அன்று சஞ்சை கோப்ரா கடே என்ற 40 வயதான இருந்த தலித் செயல் வீரர், புத்த விகாருக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை மேல் சாதியினர்
அபகரித்ததை எதிர்த்ததால் எரித்துக் கொல்லப்பட்டார். மரண வாக்கு மூலத்தில் ஒரு
பொவார் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, பின்னர் அவர் மனைவிக்கு வேறு ஒருவரிடம் உறவு இருந்தது என்று சொல்லி
விடுதலை செய்துவிட்டது.
அக்டோபர் 21, 2014 அன்று சஞ்சை ஜாதவ் அவர் மனைவி ஜெயஸ்ரீ அவரது மகன் சுனில்
மிருகத்தனமாக கொல்லப்பட்டனர். மேல் சாதிப் பெண்ணோடு சுனிலுக்கு உறவு இருந்தது
என்பதற்காக கொலை நடந்தது. பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த இறந்தவரின்
மருமானே குடும்பத் தகராறால் கொலை செய்தார் என போலீசார் வழக்கை மாற்றிவிட்டனர்.
வன்கொடுமை வழக்கும் காலியானது.
ஜனவரி 1, 2013 அன்று சுத்திகரிப்பு தொழிலாளரான சந்திப் தன்வார், சச்சின் தாரு, ராகுல் கந்தாரே ஆகியோர் பிரகாஷ்
தரந்தாலே என்ற மராத்தா ஒருவரின் வீட்டு செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த
அழைக்கப்பட்டனர். இருவர் உடல் சிதைக்கப்பட்டும் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டும்
உடல் சிதைக்கப்பட்டும் கொல்லப்பட்டனர். மேல் சாதி பெண்ணுடன் காதல் என்பதால் கவுரவ
கொலை நடந்தது.
ஆனந்த் டெல்டும்ப்டே ஓர் எழுத்தாளர்.
மனித உரிமைச் செயல்பாட்டாளர். தலித் பிரச்சனைகள் பற்றி நிறைய எழுதிய உள்ளார்.
இன்றைய சூழலில் இடதுசாரி அரசியலும் தலித் அறுதியிடலும் இணைந்து பயணம் செய்ய
வேண்டும் என வலியுறுத்துபவர். அம்பேத்கரை, பாதுகாப்பாக
அரசியலமைப்புச் சட்ட வரையறைக்குள் நிறுத்துகிற தலித் அரசியலை, நாடாளுமன்ற சட்டமன்ற இடங்களைப் பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு
செயல்படுகிற தலித் அரசியலை, (சமூக மாற்ற) உள்ளீடற்ற தலித் அரசியலை,
சாடுகின்ற முற்போக்கு ஜனநாயக சிந்தனையாளர்.
அவர் பிரண்ட்லைனுக்கு தந்த நேர் காணலுக்குச் செல்வோம்.
கேள்வி: கடந்த 12 மாதங்களில் மகா ராஷ்ட்ராவில் குறைந்தபட்சம் சாதியரீதியான 7 தலித் படுகொலை நிகழ்வுகள் நடந்துள்ளன. இது, மகாராஷ்ட்ரா ஒரு தாராளவாத அரசு என்பது பற்றி என்ன சொல்கிறது?
பதில்: மகாராஷ்ட்ரா தவறாக ஒரு தாராளவாத
முற்போக்கு மாநிலம் என்ற பிம்பத்தை பெற்றுள்ளது. ஒடுக்குமுறைக்கான அதன் அவப்புகழ்
குறிப்பிடத்தக்கது. அதுதான் இந்துத்துவா கருத்தியலை உருவாக்கிய பூமியாகும்;
அதன் பல கருத்தியலாளர்கள் இங்குதான் பிறந்தனர்.
இந்த மாநிலத்தின் உள்ளார்ந்த ஒடுக்குமுறைக்கு பதில்வினை என்பதாகவே இங்கு ஜோதிராவ்
பூலே மற்றும் பி.ஆர்.அம் பேத்கர் பிறந்ததை காண முடியும். அதற்கு முன்பு நடந்த
சாதிய தாக்குதல்களுக்கு ஒரு பதில்வினையாகத்தான், 1970களில் தலித் பேந்தர்ஸ் இயக்கம் பிறந்தது. சாதிய ஒடுக்குமுறைகள்
என்பதைப் பொறுத்தவரையில் மகா ராஷ்ட்ரா அதிகபட்சம் ஒரு சராசரி மாநிலமே.
கேள்வி: மாநிலத்தில் தலித்துகள் மீதான
ஒடுக்குமுறை வழக்குகளில் தண்டனை விகிதம் எப்படி உள்ளது?
அது பற்றி எனக்கு தெரியவில்லை; ஆனால் அது மிகமிக தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். இது குறித்து
மிகவும் துல்லியமான கணக்குகள் இல்லை.இருக்கிற கணக்குகள் பாரதூரமாக
மாறுபடுகின்றன.எப்படி இருப்பினும்
தண்டனை விகிதம் என்பது சரியாக விவரிக்கப்பட வேண்டும்.உதாரணமாக கீழமை நீதிமன்றம்
தண்டனை வழங்கி, உயர்நீதிமன்றம் விடுதலை செய்யலாம்.
சாதிய ஒடுக்குமுறைகளின் இயங்காற்றலை
புரிந்துகொள்ள வேண்டும். பொது வெளியில் பெரிதும் பேசப்படும் வழக்குகள் மட்டுமே
விவாதிக்கப்படுகின்றன. நான் கயிர்லாஞ்சியில் ஆய்வு செய்த வரையில், உண்மைக் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர்; சம்பந்தம் இல்லாதவர்கள் குற்றவாளிகள் போல் நிறுத்தப்படுகின்றனர்.
மக்கள் கவனம் இருக்கும் வழக்குகளில், இது
போன்றவர்களுக்கு கீழமை நீதிமன்றங்கள் தவறாமல் கடும் தண்டனை வழங்குகின்றன; புலன் விசாரணை விவரங்கள் அடிப்படையில் இத்தகைய தண்டனை, சட்டப்படி பொருத்தமில்லாமல் இருக்கும். வழக்கு, மேல் முறையீட்டிற்கு போன பிறகு தண்டனை ரத்தாகிவிடும்.
கயிர்லாஞ்சியிலும், இந்த இயக்கப்போக்கின் சில அம்சங்களை
குறிப்பிட முடியும். இத்தகைய நடைமுறை இன்னும் தெளிவாக பீகாரின் பதானி தோலாவில்
தலித்துகளை ரன்வீர்சேனா கொன்று குவித்த வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய
சமீபத்திய தீர்ப்பில் வெளிப்படுகிறது. இந்த புதிய வகை சாதிய வன்கொடுமைகளின் முதல்
வெளிப்பாடான, தமிழ்நாட்டின் கீழ் வெண்மணி
வழக்கிலிருந்து, தலித்துகளுக்கு நியாயமே கிடைக்கவில்லை.
வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் தீவிரத்தை, நிலவுகிற அமைப்பு முறை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது.
கேள்வி: இந்த 7 நிகழ்வுகளிலும் தாக்கியவர்கள் மராத்தா அல்லது இதர பிற்படுத்தப்பட்ட
சாதியை (ஓபிசி) சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த போக்கை விளக்க முடியுமா? சாதிய கட்டமைப்பில் இவர்கள் தலித்துகளை விட ஒரு படி மட்டுமே ‘உயர்ந்தவர்கள்’; அந்த வகையில், இயற்கையாக புரிந்து கொள்ளுதல் இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லையே.
இந்த கோபம், தலித்துகள் தங்களை முன்னேற்றிக் கொள்ள
ஒரு வெற்றிகரமான முயற்சி எடுக்கிறார்கள் என்பதோடு தொடர்புடையதா?
பதில்: தலித்துகளுக்கு எதிராக
வன்முறைகளை நிகழ்த்துபவர்களாக, எப்போதுமே பிற்படுத்தப்பட்டவர்கள் இதர
பிற்படுத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இது தலித்துகளை விட ஒரு படி மேல் என்பது
மட்டுமல்ல. அந்த ஒரு படி என்பதுதான் சாதிய படிநிலை வரிசையில் இருக்கிற அடிப்படை
பிழையை (ஊஹன்ப்ற்ப்ண்ய்ங்) குறிக்கிறது. அதுவே சாதி சாதியில்லாமல் இருத்தல்,
தீண்டப்படுபவர்கள் தீண்டத்தகாதவர்கள் பிளவை
உருவாக்குகிறது. பார்ப்பனர்கள் போன்ற மேல் சாதிக்காரர்களோடு உள்ளதைக் காட்டிலும்
தலித்துகளுக்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளோடு உள்ள
உறவுகள்/ஊடாடல்கள் ஆகியவையே முக்கியமானவையாகும். புலேயின் காலத்தில் கூட அவர் கட்ட
முயன்ற சூத்திரர் ஆதி சூத்திரர் இணைப்பு எடுபடவில்லை. அதுவே ஒரு தனித்த தலித்
இயக்கம் தோன்றுவதற்கான அடிப்படை காரணமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய சில
பத்தாண்டுகளில் விவசாய அரங்கத்தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள் பொருளாயத
நிலைமைகளில் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான வேறுபாட்டை
தீவிரப்படுத்தியுள்ளது.
நான் எனது எழுத்துக்களில் இந்த இயக்கப்
போக்கை போதுமான அளவில் விளக்கியுள்ளேன்; கீழ்வெண்மணியும்
அதற்குப் பின் நிகழ்ந்த வன்கொடுமைகளும் ஏன் நிகழ்ந்துள்ளன என்று விளக்கியுள்ளேன்.
மத்திய ஆளும் வர்க்கத்திற்கு கூட்டாளியாக கிராமங்களில் பணக்கார சாகுபடியாளர்கள்
வர்க்கம் ஒன்று உருவாகும் வகையில் நிலச் சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன;
விவசாயத்தில் ஒரு முதலாளித்துவ போர்த்தந்திரமான
பசுமைப் புரட்சி ஒருபுறம் இந்த வர்க்கத்தை செழிப்படைய வைக்கிற அதே நேரம், சாதிய அமைப்பில் உள்ளார்ந்திருக்கிற மரபார்ந்த பாதுகாப்புகளையும்
(ஒஹய் ஒஹம்ண் நஹ்ள்ற்ங்ம்) தலித் துகளிடமிருந்து பறித்தெடுக்கிறது. தலித்துகளுக்கும்
சூத்திர சாதி பணக்கார சாகுபடியாளர்களுக்கும்
இடையிலான வர்க்க முரண்பாடுகள் நன்கறியப்பட்ட சாதிய மோதல்கள் என்ற வடிவம்
பெறுகின்றன. ஒவ்வொரு சாதிய வன்
கொடுமை நிகழ்வும் மேலே குறிப்பிடப்பட்ட சமன்பாட்டை வெளிப்படையாக அம்பலப்படுத்தாது;
ஆன போதும் இவையே பிரச்சனையின் மூலவேராக ஏதோ ஒரு
வழியில் இருக்கும். 1960களுக்குப் பிந்தைய அரசியல் தொடர்பான
அனைத்து விஷயங்களையும் இந்த அரசியல் பொருளாதார வரையறையில் இருந்து விளக்க
முடியும்.
ஆனந்த் டெல்டும்ப்டேயின் கருத்துக்களோடு,
09.06.2015 அன்று மமக, இகக, இகக (மா), மதிமுக, தமாகா, கட்சிகளை அழைத்து நடத்திய கருத்தரங்கில் திருமாவளவன் பேசிய
கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். (11.06.2015 தேதிய தீக்கதிரிலிருந்து விவரங்கள் எடுத்துள்ளோம்.)
“அதிகாரத்தில் கூட்டணி என்பது இறுதியான
தீர்வு அல்ல என்றாலும், ஓர் எளிய தீர்வாகும்.”
“தேர்தல் வெற்றி தோல்வி தற்காலிகமானது;
கோட்பாட்டில் வெற்றிதான் நிலையானது.”
“எப்போதோ வெற்றி பெறப் போகிற
தத்துவத்திற்காக, இப்போது தோற்கத் தயாராவோம்.”
“பன்மைத்துவ ஜனநாயகம் மேலோங்க வேண்டும்;
எளிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சிகள் ஆட்சியில் கூட்டு சேர்ந்தாக வேண்டும்.”
திருமாவளவன் நாடாளுமன்றம் தவிர்த்த
பாதையிலிருந்து, நாடாளுமன்ற/சட்டமன்ற தேர்தல் பங்கேற்பு
பற்றிப் பேசுகிறார் என வசதியாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். அப்படி எனில்,
அவர் முன்வைக்கும் கோட்பாடு சார்ந்த
நிலைப்பாட்டிற்கும், அவர் நடைமுறைப்படுத்தப் பார்க்கும்
தேர்தல்/கூட்டணி செயல்தந்திரத்திற்கும் பொருத்தம் உள்ளதா?
எளிய மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்றால், சமூகரீதியாக சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்திட வேண்டும். தலித்துகள்
பக்கம் நிற்க வேண்டும்.கூடவே, கிராமப்புறங்களில் உள்ள பழைய புதிய வகை
நிலப்பிரபுக்கள், ஆதிக்க நிலையில் உள்ள பணக்கார
விவசாயிகள்/சாகுபடியாளர்கள்/குலக்குகள் ஆகியோருக்கு எதிராகவும், பெரும் தொழில் குழும ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கு எதிராகவும் நிற்க
வேண்டும். இந்த இலக்கணப் படி, எளிய மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என திருமாவளவனே நிச்சயம் அஇஅதிமுகவை திமுகவை
குறிப்பிட மாட்டார் என நம்புவோம். தர்மபுரி மரக்காணத்திற்குப் பிறகு, பாமகவும் இந்த வரையறைக்குள் நுழையவே முடியாது. மதிமுக, சங்பரிவாரோடு திமுக அஇஅதிமுகவோடு எப்போது வேண்டுமானாலும் கூட்டு
சேரக் கூடிய கட்சி. சாதி ஆதிக்கத்திற்கு துணை போகுமே தவிர, ஒரு போதும், தலித்துகள் பக்கம் தயக்கமோ தடுமாற்றமோ
இல்லாமல் நிற்காது.தமாகா, மேற்கில் கவுண்டர்கள் தெற்கில்
முக்குலத் தோர் வடக்கில் வன்னியர்கள் தரப்பிலிருந்து வருகிற மூர்க்கமான கவுரவக்
கொலைகள் உள்ளிட்ட வன்கொடுமைகளில், சாதி ஆதிக்கம் பக்கமே நிற்கும்.
ஜி.கே.மூப்பனார் ஜி.கே.வாசன் கட்சி, கோபால கிருஷ்ண
நாயுடுவின் கட்சி தானே! அது மட்டுமல்லாமல், பெரும்தொழில் குழும ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட காங்கிரசில்
எப்போதும் சேர்ந்து கொள்ளக் கூடிய கட்சியாகவே தமாகா உள்ளது. ஆக, கோட்பாட்டு நிலையில் நின்று கொண்டு, திருமாவளவன் மதிமுக தமாகா ஆகியவற்றுடன் எப்படி கூட்டணி வைத்து
எப்படி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்?
வேறொரு அரசியல் சங்கடமும் உண்டு. இந்து
ஆங்கில நாளேட்டில் ஒரு பத்தி எழுத்தாளர் சுட்டிக்காட்டியபடி, மதிமுக தமாகா வகை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து திருமாவளவன் குறைந்த வாக்குகளையே
பெற முடியும். இது, நாளை, அவர், திமுக அஇஅதிமுக போன்ற கட்சிகளோடு பேரம்
பேசும் ஆற்றலையும் குறைத்து விடும். தலித் அடையாள அரசியல் என்ற அளவிலான அறுதியடலும்
பலவீனப்படும். இதே விஷயங்கள், இடதுசாரி கட்சிகளுக்கும்
பொருந்தும்தானே!
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், இகக, இககமா மற்றும் மத அடிப்படைவாதத்தில் முடங்காத சிறுபான்மை மக்கள்
மத்தியில் பணியாற்றும் சக்திகள், “தேர்தல் வெற்றி தோல்வி தற்காலிகமானது
கோட்பாட்டின் வெற்றிதான் நிலையானது”, பிற்காலத்தில்
வெற்றி பெறப் போகிற கருத்துக்காக இப்போது தோற்றாலும் பரவாயில்லை என்பதற்கேற்ற
தேர்தல் தந்திரத்திற்கும், மக்கள் போராட்டங்களை முன் எடுக்கும்
கடமைகளுக்கும் தேர்தல் அணி சேர்க்கைகளைக் கீழ்ப்படுத்த வேண்டும் என்பதற்கும்
தயாராக வேண்டும் என்பதுதான் திருமாவளவன் அழைப்பு தொடர்பான, புரட்சிகர இடதுசாரிகளின் நிலைப்பாடாக இருக்க முடியும். தமிழ்நாட்டின்
அரசியல் சமன்பாட்டை, எளிய மக்கள் நலன் காக்கும் அரசியல்
கட்சிகளுக்கு ஆதரவாக மாற்றுவதோடு கூட்டணி ஆட்சி அதிகாரப் பகிர்வு ஆகிய
கருத்துக்களை நெருக்கமாய்ப் பிணைப்பது மட்டுமே சரியாக இருக்கும்.