COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


அவசர நிலையின் காலடிச் சத்தம்

தான் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை மேம்படும் என்று மோடி  மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். நல்ல நாட்கள்என்ற  வாக்குறுதியின் யதார்த்த நிலை என்ன? மோடி அரசாங்கம் பணக்காரர்களின் அரசாங்கமாக, சாமான்ய மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக இருக்கிறது. 2014 பொதுத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகளையும் யதார்த்த நிலைமைகளையும் ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

விலை உயர்வு
வாக்குறுதிகள்

             பணவீக்கத்தை கட்டுப்படுத்த 2011ல் அய்முகூ ஆட்சியாளர்களிடம் பாஜக கொடுத்த அறிக்கையை அமல்படுத்துவோம் என பாஜக தேர்தல் அறிக்கை சொன்னது.
             அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்றது.
             விலை உயர்வு தாக்குதலை தடுத்து நிறுத்த விலைக் கட்டுப்பாட்டு நிதியம் உருவாக்கப்படும் என பாஜக அறிக்கை உத்தரவாதம் கொடுத்தது.
யதார்த்த நிலை
             விலைக் கட்டுப்பாட்டு நிதியம் உருவாக்கப்படவில்லை.
             பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியா வசிய பொருட்கள் விலை இது வரை இல்லாத அளவு  உயர்ந்துள்ளது. பருப்பு வகைகள் கிலோ ரூ.100, ரூ.110 என உயர்ந்துள்ளன. 2014ல் கிலோ ரூ.15க்கு விற்ற வெங்காயம் இப்போது ரூ.35க்குத்தான் கிடைக்கிறது.
             கிட்டத்தட்ட எல்லா சேவைகளின் சேவை வரியும் உயர்த்தப்பட்டுவிட்டது.
             ரயில் கட்டண, எரிவாயு கட்டண உயர்வு மோடி அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் சில.
             டீசல் விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு வீட்டு உபயோகப் பொருட்கள், சிறுவியாபாரம், விவசாயம், சாலை போக்குவரத்து, போக்கு வரத்துக் கட்டணம் என அனைத்து விலையும் உயர்ந்தது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ரூ.115ல் இருந்து குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
             சர்க்கரை இறக்குமதி வரியை 15%ல் இருந்து 40% என உயர்த்துவது என்ற அரசின் முடிவை ஒட்டி மொத்த வியாபாரத்திற்கான சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.33.40 ஆனது. அதிலிருந்து சர்க்கரையின் சில்லறை விலையும் ரூ.2 உயர்ந்து கிலோ ரூ.39 - ரூ.40 ஆனது.

நிலம், வாழ்வாதாரம், தொழிலாளர் உரிமைகள், உணவுப் பாதுகாப்பு

வாக்குறுதிகள்

             நியாயமான குறைந்தபட்ச இழப்பீட்டையும், நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தும் முன் விவசாயிகளின், கிராம சபையின் ஒப்புதல் வேண்டும் எனச் சொன்ன 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பாஜக வும், தேஜகூவும் ஆதரித்தன.
             சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அய்முகூ ஆட்சி கொண்டுவந்த போது மோடியும் பாஜகவும் அது லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பறித்துவிடும் என சரியாகவே எதிர்த்தனர்.
             தன்னை நம்பர் 1 மஸ்தூர் என சொல்லிக் கொண்ட மோடி, அமைப்புசாரா துறையிலுள்ள தொழிலாளர் நிலைமைகளை முன்னேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். தொழிற்சாலை குடும்பம்என அழைத்த மோடி, அதில் தொழிலாளர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், மேலான ஓய்வூதிய மற்றும் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படும் என்றும் சொன்னார். தொழிலாளர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் தொழிலாளர்களின் வங்கி ஒன்றும் கூட உருவாக்கப்படும் என பாஜக சொன்னது.
அனைத்தும் தழுவிய உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கை சொன்னது.

யதார்த்த நிலை

             மோடி தலைமையிலான அரசாங்கம், 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்திலுள்ள ஒப்புதல் ஷரத்தைஎடுத்து விட முயற்சிக்கிறது. நாட்டிலுள்ள 65 கோடி விவசாயிகளுக்கு நிலம் ஒன்றுதான் வருமானத்திற்கான ஆதாரம். விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுவதற்கு மேலான சூழலை உத்தரவாதம் செய்வதற்குப் பதிலாக மோடி அரசாங்கம் அதைப் பறித்து பெருந்தொழில் நிறுவனங்களிடம் கொடுத்து விடத் துடிக்கிறது. நிலம் கையகப்படுத்தி 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதை விவசாயிக்கு திருப்பித் தர வேண்டியதில்லை என்று சட்டத் திருத்தம் சொல்வதன் மூலம் நில வர்த்தக முதலைகள் கட்டுப்பாட்டில் நிலத்தை கொடுத்துவிடுகிறது.
             பல போகம் விளையும் நிலத்தையும் கையகப்படுத்த சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது. விவசாயிகள் கைகளில் நிலம் இருந்தால் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதுடன், உற்பத்தி செய்யப்படும் பொருட்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவாக இருப்பதையும் உத்தரவாதம் செய்ய முடிகிறது. நிலத்தைப் பறிப்பதன் மூலம் சட்டத் திருத்தம் உணவுப் பாதுகாப்பை ஒழித்துக்கட்டி விடுகிறது.
             பாஜக தலைவர் சாந்தகுமார் தலைமையிலான குழு தற்போது உள்ள 67% பேருக்கு பதிலாக 40% பேருக்கு உணவு மானியம் அளித்தால் போதுமானது என்கிறது.
             விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு மாறாக விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மீது கட்டுப்பாட்டு விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும், இடுபொருள் விலை, விளைச்சல் தரும் விலையை விடக் கூடுதலாக இருப்பதால் விவசாயிகள் பெரும் கடனுக்கு ஆளாகிறார்கள் என்கின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல், அரியானா விவசாய அமைச்சர், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை கோழைகள் என்கிறார்.
             சிறு வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைத் திரும்பப் பெற மோடி அரசு மறுத்து வருகிறது. பன்னாட்டு சிறு வணிக தொடர்  நிறுவனங்களை மோடி அரசு மகிழ்வூட்டி, சிறு, நடுத்தர வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு பொருள் வழங்கும் நிறுவனங்கள் (டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்), இவற்றில் வேலை செய்வோர் என அனைவரிடமும் பொய் சொல்லியுள்ளது.
             தொழிலாளர் உரிமைகளை பறிக்க மோடி அரசாங்கம் ஆனதெல்லாம் செய்கிறது. தொழிற்சாலை சட்டங்கள் அமலாகின்றனவா என்று தொழிற்சாலை உரிமையாளர்களை கண்காணிப்பதை தடுக்கும் தொழிலாளர் சீர்திருத்தங்களைமோடி அரசு கொண்டு வர முயற்சிக்கிறது. அதாவது, தொழிலாளர் சட்ட மீறல்களில் அரசாங்கம் தலையிடாது என்கிறது.
             மோடி அரசாங்கம் குழந்தைத் தொழி லாளர் முறையை சட்டபூர்வமாக்க முயற்சிகள் எடுக்கிறது.
             ஜன் தன் யோஜனாதிட்டப்படி திறக்கப்படும் வங்கிக் கணக்குகளில் பொதுத் துறை வங்கிகளில் 71% பூஜ்ஜியம் வைப்புத் தொகை கணக்குகளாகவும் தனியார் வங்கிகளில் 64% எனவும் உள்ளது. எஸ் வங்கியில் 89 ஜன் தன் கணக்குகளும் கோடக் மஹிந்திரா வங்கியில் 77ம், ஆக்சிஸ் வங்கியில் 75ம் உள்ளன. ஸ்டேட் பேங்கில் 95 ஜன் தன் கணக்குகள் பூஜ்ஜியம் வைப்புத் தொகை கொண்டவை. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இது 84 என உள்ளது. எல்லாம் சேர்த்து மொத்தத்தில் சராசரியாக 28% கணக்குகளே செயல் பாட்டில் உள்ளன.
             ஊரக வேலை உறுதித் திட்டம், மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. 

ஊழல் ஒழிப்பு 

வாக்குறுதி

காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நாடு பெரும் ஊழல் அவதூறுகளில் சிக்கி நின்றபோது, மோடி எல்லா மட்டத்திலும் ஊழல் ஒழிக்கப்படும் என விமர்சையாக வாக்குறுதி கொடுத்தார். வெளிநாடுகளிலுள்ள கருப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்பட்டு இங்கு திறமையான அரசாளுகைக்கு பயன்படுத்தப்படும் என்றும் சொன்னார். வெளிநாட்டுப் பயணங்களின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஊழல் இந்தியாவில் பிறந்ததற்கு வெட்கப் பட்டார்கள் என்றும் இப்போது மோடியின் ஆட்சியில் உள்ள இந்தியா பற்றி பெருமை கொள்கிறார்கள் என்றும் சொல்லி வந்தார்.

யதார்த்த நிலை

             மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா அமைச்சர் பங்கஜா முன்டே ஆகியோர் மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது பற்றி மோடி கனத்த மவுனம் காக்கிறார். ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடி இந்தியச் சட்டங்களை ஏய்க்கிற லலித் மோடி நாட்டை விட்டுச் செல்ல வசுந்தரா ராஜே உதவியிருப்பது அம்பலமாகியுள்ளது. வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் நடத்தும் நிறுவனத்துக்கு லலித் மோடி ரூ.11.8 கோடி கடன் கொடுத்துள்ளார்.           துஷ்யந்தும் அவரது மனைவியும் வசுந்தரா ராஜேவுக்கு பிறந்தநாள் பரிசாக அந்த நிறுவனத்தின் பங்குகளைக் கொடுத்துள்ளனர்.
             கருப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என மோடி சொன்னது வெறும் தேர்தல் சமய வாய்ச் சவடால் என பாஜக தலைவர் ஒருவர் பொது வெளியில் சொல்லி வருகிறார்.
             ஓராண்டுக்கு மேலாக ஊழல் எதிர்ப்பு நிறுவனங்களை அரசாங்கம் செயலிழக்கச் செய்துவிட்டது. முழு ஓராண்டு கழித்து மத்திய கண்காணிப்பு குழு (சிவிசி), மத்திய புலன் விசாரணை அமைப்பு (சிஅய்சி) ஆகியவற்றுக்கு நியமனங்களை செய்த அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையும் கிடப்பில் போடப் பார்க்கிறது. அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் கமிஷன் தலைமைப் பதவிகளை அது இன்னும் நிரப்ப வேண்டியுள்ளது.
             யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஆளெடுப்பு நடந்ததை அம்பலப்படுத்திய மத்திய கண்காணிப்புக் குழு அறிக்கை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
             இந்திய மருத்துவ கழகத்தில் (ஏஅய்அய் எம்எஸ்) நடந்த ஊழலை மூடி மறைக்க மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா, இதற்கு முந்தைய தேஜகூவின் சுகாதார அமைச்சர் நியமித்த விசாரணையை நீக்கி விட்டு புதிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இவை, இதே நட்டா, ஹிமாச்சல பிரதேச சுகாதார அமைச்சராக இருந்தபோது, அப்போதிருந்த அய்ஏஎஸ் அதிகாரியைக் காப்பாற்றவே.

மத நல்லிணக்கம், சமூக நீதி, பெண்கள் உரிமைகள்
வாக்குறுதிகள்

             சிறுபான்மையினருக்கு சமமான வாய்ப்புக்கள் கொடுக்கப்படும்.
             மோடி தன்னை சமூக நீதியின் முன் மாதிரியாகக் காட்டி சமூக நல்லிணக்கம் என்ற வாக்குறுதி கொடுத்தார்.
             பெண்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

யதார்த்த நிலை

             கடந்த ஓராண்டில் கிறித்துவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீதான தாக்குதல் என்பது பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளது. டெல்லியின் திரிலோக்புரியிலிருந்து டெல்லிக்கு அருகில் பாஜக ஆட்சியிலிருக்கும் ஹரியானா மாநிலம் பல்லப்கார் வரை முஸ்லீம்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் மோடி அந்த இடங்களைப் பார்ப்பதற்கோ அல்லது அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளிலோ அக்கறை காட்டவில்லை. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான சாக்ஷி மகாராஜ், சாத்வி நிரஞ்சன் மற்றும் யோகி ஆதித்யாநாத் போன்றவர்கள் மதவெறி நஞ்சை உமிழ்கிறார்கள்.
             தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலும் பல மடங்கு உயர்ந்துள்ளது. நாடு  முழுவதும் பழங்குடியினர் வசமுள்ள நிலங்களை கைப்பற்றி அதைப் பெரும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தானமாக கொடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. வன உரிமை சட்டத்தை திட்டமிட்ட வகையில் ஒழித்துக் கட்டுகிறது.
             மோடியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சென்னை அய்அய்டியின் அம்பேத்கார் - பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.
             தூய்மை இந்தியா திட்டம், சாக்கடைகளில் வேலை செய்யும் துப்பரவு தொழிலாளர்களுக்கான முகக்கவசம், கையுறை, காலுறை போன்ற அடிப்படை பாதுகாப்பு சாதனங்கள் எதையும் உத்தரவாதம் செய்யவில்லை.
             கர் வாப்சி’, ‘சமத்துவ யாகம்பிரச்சா ரங்கள், மதம் மாறிய தலித்துகள் மீதான இந்துத்துவ பிரிவுகளின் தாக்குதலே.மேலும் அவர்களை இந்து மதத்திற்கு கட்டாயப்படுத்தி திரும்பி வரச் செய்வதும் ஆகும்.
             பெண்கள் உரிமைகள் மீதான காவிக் கும்பலின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. ஹரியானா மாநில முதல்வர் போன்ற பாஜகவின் தலைவர்கள் பாலியல் வன்முறைக்கு பெண்கள் மீது பழி சுமத்துகின்றனர். பாலியல் வன்முறை நெருக்கடி மய்யங்கள் (ரேப் கிரைசிஸ் சென்டர்ஸ்) மற்றும் பெண்கள் சார்பு வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றிற்கான செலவினம் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. பாஜக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெண்கள் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தாய்மார்கள் சோம்பேறிகளாக இருப்பதாகவும் அவதூறு பேசி வருகிறார்கள்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து
வாக்குறுதி

             அனைவரும் பெறக்கூடிய விதத்தில் நல்ல கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை பொதுத்துறை நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலம் அளிக்க பாஜகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்தது.
             சிறுபான்மையினர் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட  பிரிவினருக்கு கல்வி அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு வாக்குறுதி அளித்திருந்தது.

யதார்த்த நிலை

             கல்வி, சுகாதாரம் போக்குவரத்தில் போட்டி போட்டுக் கொண்டு தனியார்மயம் தொடர்கிறது.
             4 ஆண்டு இளங்கலை படிப்பை அய்முகூ திணித்தது. தேஜமுகூ, சிபிசிஎஸ் போன்ற துக்ளக் கட்டளை மூலம் இந்திய பல்கலைக் கழகங்களை நாசமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
             தகுதியடிப்படையில்லாமல், மோடிக்கு விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையிலான பணி நியமனங்களால் அய்சிஎச்ஆர், அய்சிஎஸ் எஸ்ஆர், எஃப்டிஅய்அய், பல்கலைக் கழகங்கள், அய்அய்டி ஆகியவற்றுக்கு தரக் குறைவான தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
             கல்வி காவிமயப்படுத்தப்பட்டு பாடத் திட்டத்தின் தரம் சிதைக்கப்படுகிறது.

Search