COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


அமைப்பு முடிவுகளை
திட்டமிட்டபடி அமலாக்குவதில் நல்ல துவக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)ன் தமிழ்நாடு மாநிலக்குழு கோவையில் ஜூன் 13, 14 தேதிகளில் கூடியது. மாநிலக் குழு கூட்டத்திற்கு வந்திருந்த தோழர்களோடு பேசி, மாவட்டக் குழுக்களைக் கூட்டுவதற்கு நாட்கள் குறிக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு, கட்சி மாநில மாநாடு, நவம்பர் துவக்கத்தில் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பெரிய அணி திரட்டல், மய்ய தொழிற்சங்கங்களின் அழைப்பான செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றி பெற வைப்பது, லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆகஸ்ட் மாதம் நெடுக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சார இயக்கம் நடத்துவது, ஜூலை28 க்குள் அமைப்புக் கடமைகளை நிறைவு செய்வது, ஜூன் 26 அன்று கோவையில், சென்னையில், திருபெரும்புதூரில் நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள் மேடை நிகழ்ச்சிகளை வெற்றி பெறச் செய்வது, ஆந்திர சிறைகளில் வாடும் தமிழக உழைக்கும் மக்களுக்கு நீதி கோரி விழுப்புரத்தில் ஜூன் 30 நிகழ்ச்சி நடத்துவது, சென்னை காஞ்சி திருவள்ளூர் தோழர்கள் ஆர்கே நகர் தொகுதியில் இகக வேட்பாளர் தோழர் மகேந்திரனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது போன்ற விஷயங்கள் பற்றி மாவட்டக் கமிட்டிகள் உடனடியாகக் கூடி முடிவெடுக்க வேண்டும் என மாநிலக் குழு வழிகாட்டியது.
மாநிலக் கமிட்டி முடிவுகளை நடை முறைக்குக் கொண்டுவர, ஜூன் இறுதிக்குள் மாவட்டக் கமிட்டிகள் கூட்டுவதற்குத் திட்ட மிடப்பட்டது. தோழர் என்.கே.நடராஜன் நாமக்கல் மாவட்டக் கமிட்டி கூட்டத்திற்கும், தோழர் பாலசுந்தரம் விழுப்புரம், சேலம், நெல்லை, தஞ்சை நாகை, குமரி மாவட்ட கூட்டங்களுக்கும் தோழர் குமாரசாமி புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை, கோவை கூட்டங்களுக்கும் செல்வதென முடிவானது. ஜூன் 16 நாமக்கல், ஜூன் 18 புதுக்கோட்டை, ஜூன் 19 திருவள்ளூர், ஜூன் 21 விழுப்புரம் சென்னை, ஜூன் 22 சேலம் கோவை மாவட்ட கமிட்டி கூட்டங்கள் நடந்தன.
கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே தனது தோழர்களை கமிட்டிகளை அரசியல் கருத்தியல்ரீதியாக அமைப்புரீதியாக அணி திரட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. எல்லா மாவட்டக் கூட்டங்களிலும் மே 30 - 31 லக்னோ அகில இந்திய பயிற்சிப் பட்டறை வழிகாட்டுதல்கள் கூட்டாகப் படிக்கப்பட்டன.
தேசிய சூழல், இடதுசாரி ஒற்றுமை, மக்கள் மேடை, கர்பி ஆங்லாங், வெகுமக்கள் முனைகளில் வாய்ப்புக்கள், கட்சி அமைப்பு தொடர்பான முடிவுகள், 10ஆவது காங்கிரஸ் நக்சல்பாரி மற்றும் கட்சி துவக்க ஆண்டின் 50ஆவது ஆண்டுக்கான கடமைகள் இலக்குகள் ஆகியவை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் தரப்பட்டன.
லக்னோ வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்மானங்களின் பின்வரும் பகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
பஞ்சாயத்துக்களில் நமது பாத்திரத்தை தலையீட்டை பலப்படுத்துவது, நமது வெகு மக்கள் அரசியல் தலையீடுகளின் அடித்தளத்தையும் ஆற்றலையும் விரிவுபடுத்துவது, கட்சி உள்ளூர் கமிட்டிகள் கிளைகள் மற்றும் உறுப்பினர்களின் பாத்திரத்தை முழுமையாக செயலுக்குக் கொண்டு வருவது ஆகியவையே, தொடர்ச்சியான உள்ளூர்மட்ட செயலூக்கம் என்ற கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில், நம்முன் உள்ள சவால்கள்’.
தொழிலாளர் வர்க்கக் குடும்பங்களின் மிகவும் அடிப்படையான பொதுவான பிரச்சனைகளான கூலி, பாதுகாப்பும் கவுரவமும் உள்ள வேலை இல்லாமை, தொழிற்சாலைகள் நலிவுறுதல், மூடப்படுதல், வீட்டு வசதி, அடிப்படை வசதிகள், மருத்துவம், கல்வி இதர அடிப்படை உரிமைகள் ஆகியவற்றின் மீதான தொழில் பகுதிகள் மற்றும் தொழிலாளர் வாழ்பகுதிகள் இயக்கத்தோடு, தொழிற்சாலை/பணியிட அடிப்படையிலான தொழிற்சங்க வேலை இணைக்கப்பட வேண்டும். மாவட்ட மட்டங்களிலும் கீழ்மட்டங்களிலும் உள்ள கட்சிக் கமிட்டிகள், தமக்கு இழைக்கப்படும் பறிகொடுத்தலை பெரிதும் வெறுத்து எழுகிற, அமைப்பாக்க பேரார்வமும் போராடும் உறுதியும் கொண்ட, எழுகிற தொழிலாளர் பிரிவினரோடு நெருக்கமான பிணைப்புக்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்’.
கட்சிக்குள் இருக்கிற வயது மற்றும் பால்ரீதியான சமச்சீரற்ற நிலைமை இன்னொரு முக்கிய பிரச்சனை. கட்சிக்குள் மேலும் மேலும் பெண்களை இளைஞர்களை சேர்ப்பதன் மூலம் மட்டும்தான் இந்தப் பிரச்சனையைக் களைய முடியும். இந்த உடனடி கடமைக்கு மொத்த கட்சியும் சிறப்பு கவனம் செலுத்துகிற அதே நேரம், மாணவர்/இளைஞர், பெண்கள் அரங்கங்களில் பணியாற்றும் தோழர்கள் இந்த விசயத்தில் குறிப்பான பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில், இதனுடன் தொடர்புடைய இரண்டு அம்சங்கள் மீது பயிற்சி பட்டறை அழுத்தம் வைத்தது - இளைய தலைமுறையினர், பெண்கள் மத்தியில் இருந்து ஊழியர்களை வளர்த்தெடுத்து அவர்களுக்கு கட்சிப் பொறுப்புக்கள் தருவது, பெண் தோழர்கள் சுதந்திரமாக உணர்வதற்கும், இயல்பாக பணியாற்றுவதற்கும் உகந்ததாக உட்கட்சிச் சூழலை உருவாக்குவது. தொழிலாளர் வர்க்க மறுகட்டமைப்பை கவனத்தில் கொண்டு, தொழிலாளர் வர்க்கம் மத்தியில் இருந்து, குறிப்பாக அமைப்பாக்கப்பட்ட துறை மற்றும் நவீன உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர் மத்தியில் இருந்து, கூடுதல் உறுப்பினர்கள் சேர்ப்பது என்பதற்கும் பயிற்சி பட்டறை அழுத்தம் வைத்தது’.
தீவிரமான வலதுசாரி சக்திகள் எழுந்துள்ள சூழலில், கார்ப்பரேட் மதவெறி தாக்குதலை எதிர்கொண்டு, புரட்சிகர இடதுசாரிகளின் பெரிய வெற்றிகள், இன்னும் கூடுதல் சக்தி வாய்ந்த அறுதியிடல் நோக்கி ஒத்திசைவுடன் அணிவகுக்க, கட்சி தனது அனைத்து ஆற்றலையும் வலிமையையும் ஒருமுகப்படுத்த வேண்டும்’.
நாமக்கல் மாவட்டக் கமிட்டி கூட்டம் கூடுதல் உறுப்பினர்கள் பங்கேற்புடன், மாநிலக் கமிட்டி முடிவுகளை அமலாக்குவது பற்றி குறிப்பாக ஒரு லட்சம் பேரைச் சந்திப்பது பற்றி ஆர்வத்துடன் விவாதித்தது. விழுப்புரம் மாவட்டக் கமிட்டி, கூடுதலாக வாக்குச் சாவடி மட்டத்தில் 7 - 8 கிளைகளை    அமைப்பாக்குவது, 50,000 பேரைச் சந்திப்பது, ஆகஸ்ட் மாதம் வேலை நிறுத்த தயாரிப்பு கருத்தரங்கம் நடத்துவது, செம்மரக் கடத்தல் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான பழங்குடியின தமிழ்நாட்டு தொழிலாளர்கள் சந்திக்கும் பொய் வழக்குகள்,  துன்பமயமான சிறைவாசம், பிணை மறுப்பு பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கைகள் கோரி நடைபெறும் 30.06.2015 ஆர்ப்பாட்டம் ஆகியவை பற்றி விவாதித்தது. மாவட்டக் கமிட்டி முடிவுகள் இரண்டு தினங்களில் சுற்றறிக்கையாகத் தரப்பட்டது.
சேலத்தில், லக்னோ வழிகாட்டுதல்கள் மாநிலக் கமிட்டி முடிவுகள் மீதான விவாதத்தின் போக்கிலேயே, பால் கொள்முதல் நிறுத்தம், ஓய்வூதியம் நிறுத்தம் ஆகியவற்றை எதிர்த்து நாம் நடத்திய போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. நம்மைத் தேடி வருபவர்கள், அவர்கள் கொண்டு வரும் விஷயங்களில் போராட்டம் நடத்துவது நல்லது; ஒரு புள்ளியில் அரசியல் முனைப்புடன் உள்ளூர் மட்ட கிளர்ச்சி போராட்டம் வளர்த்தெடுப்பது அவசியம் என உணரப்பட்டது. மாவட்டத்தில் 80,000 பேரையும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சட்டமன்றத் தொகுதியில் 40,000 பேரையும் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. மற்ற விஷயங்களை மேலும் திட்ட வட்டமாகத் தீர்மானிக்க, நிலைக்குழு கூட்ட முடிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை திருவள்ளூர் சென்னை கோவை மாவட்டங்களில் தமிழக அரசியல் சூழல் தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லா தோழர்களும் பின்வரும் கேள்விகளுக்குப் பதில்கள் சொன்னார்கள்.
             அஇஅதிமுக பலப்பட்டுள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா?
             திமுகவின் அரசியல் வாய்ப்புக்களில் முன்னேற்றம் உள்ளதா?
             தற்சமயம், பாஜக மாற்றணியாக எழ வாய்ப்புள்ளதா?
             அதிகாரத்தில் பங்கு அதற்காகக் கூட்டணி என்ற திருமாவளன் அழைப்பை நாம் எப்படி அணுகுவது?
             சட்டமன்றத் தேர்தல்களில் இகக, இகக(மா) நிலைப்பாடு எப்படி அமையும்?
             சட்டமன்றத் தேர்தல் முன்னமே நடக்க வாய்ப்பு உள்ளதா?
             தமிழகத்தில் இரு முனைத் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதா? அல்லது பல முனை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதா?
             மேலே உள்ள இரண்டில் (நமது அமைப்பு தயாரிப்பு என்பது தாண்டி) எந்த சாத்தியப்பாடு நமக்குச் சாதகமானது?
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அஇஅதிமுகவிற்கு மகிழ்ச்சி தரவில்லை.மோடியும் பாஜகவும் பெற்ற தனிப் பெரும்பான்மை முன் அஇஅதிமுகவின் 37 இடங்கள் மதிப்பு இழந்து விட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பும் சிறைவாசமும் பேரிடிகளாக விழுந்தன. குமாரசாமியின் குளறுபடிகள் நிறைந்த தீர்ப்பு, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு ஆபத்து என்ற கத்தியை அஇஅதிமுகவின் தலைமேல் தொங்க விட்டுள்ளது.
மே 2014க்கு முன்பு வரை, மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்து கொண்டே, மத்திய அரசு எதிர்ப்பாளர் தோற்றம் தந்து, ஜெயலலிதா, திறம்பட தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி வெளியை அபகரித்து வைத்திருந்தார். நிலப்பறி மசோதாவை, மத்திய அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை ஆதரித்து வரும் அஇஅதிமுக இனியும் எதிர்க்கட்சி வேடம் போட முடியாது. இந்துத்துவா வெறியாட்டங்கள், அய்அய்டி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத் தடை போன்றவற்றில் அஇஅதிமுகவின் மவுனமும், அதற்கு பெரிய பாதிப்பே ஆகும்.
மக்கள் முதல்வராக இருந்தபோதும், பிறகு திரும்பவும் தமிழக முதல்வர் ஆனபிறகும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும், ஜெயலலிதா சுருதி இறங்கி சோர்வுடனே காணப்படுகிறார். எதிர்க்கட்சிகள் பலவீனம் தாண்டி வேறு எந்த பலமும் பெரிதாக இல்லாத அஇஅதிமுக, சில ஆண்டுகளிலேயே மிகவும் நெருக்கடியான சூழலைச் சந்திக்கவே வாய்ப்பு உள்ளது. அஇஅதிமுக பலவீனமாகவே உள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை, அஇஅதிமுக எதிர்கொள்கிற நெருக்கடிகளையோ, மோடி அரசின் சங்கடங்களையோ சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை. ஊழல், உட்பூசல், ஈழத் தமிழருக்கு துரோகம் என்ற அழுத்தும் சுமைகளிலிருந்து எழ முடியவில்லை.கூட்டணி கடை விரித்தால் வாங்குவார் யாருமில்லை. (கிருஷ்ணசாமி நீங்கலாக). திமுக நிலைமையில் முன்னேற்றம் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக பலூனிலிருந்து காற்று வெளியேறி விட்டது. முற்றுகையிடப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு பாஜக உதவுவது, இருவரும் சேர்ந்திருப்பது, இரண்டு கட்சிகளுக்கும் பாதிப்பே ஆகும். மதிமுக, பாமக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டனர். விஜயகாந்தும், பாஜக அஇஅதிமுக நெருக்கத்தால் குழப்பத்தில் உள்ளார். பாஜகவுக்கு, தனக்கென தமிழகத்தில் எந்த அடித்தளமும் கிடையாது. ஆகவே மாற்றாக வர வாய்ப்பு இல்லை. சாதிய ஆணாதிக்க இந்துத்துவா நஞ்சை உமிழ்வதன் மூலம், தமிழகத்தின் சில பதட்டமான பகுதிகளில் தன்னை நிற்க வைத்துக்கொண்டு வளர முயற்சிக்கும்.
இகக,  இககமா, அஇஅதிமுக திமுகவோடு கூட்டு சேர வாய்ப்பு இல்லை. பாஜக அஇஅதிமுக கூட்டணி போன்ற ஒன்று நடந்தால், காங்கிரஸ் விஷயத்தில் தடுமாறலாம். மற்றபடி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, தமாகா கூட்டணிக்கு முயற்சிக்க வாய்ப்புள்ளது.
உச்சநீதிமன்ற மேல் முறையீட்டை பதவியில் உள்ள முதல்வராகச் சந்திக்க விரும்புவது, எதிர்க்கட்சிகளின் தொடரும் பலவீனங்களைப் பயன்படுத்துவது என்ற காரணங்களால் முன்னமே தேர்தல் நடத்த முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. எப்படியும், முன்னமே தயாராவது நல்லதுதானே!
பல முனைப் போட்டிக்கு வாய்ப்புள்ளது. எப்படியும் ஒருவரைத் தோற்கடிக்க வேறொரு வரை வெற்றி பெறச்செய்வது என்ற துருவ சேர்க்கை நிலை, நம் போன்ற அமைப்புகளுக்கு உகந்ததல்ல. சொந்த தயாரிப்பு, சொந்த அடித்தளம், சொந்த அமைப்பு பலத்திற்கு, மாற்று ஏதும் இல்லை. கூட்ட விவாதங்கள் மேலே சொல்லப்பட்ட விதத்தில் செலுத்தப்பட்டன
திட்டமிட்டபடி, கோவை திருபெரும்புதூர், நாகர்கோவில் நிகழ்ச்சிகள் ஜூன் 26 அன்று நடந்தன. கோவையில் 17 கிளைகளையும் 2 செயல்வீரர் குழுக்களையும், வாக்குச் சாவடி மட்டத்தில் அமைப்பாக்க திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டையில் 1 லட்சம் பேர், திருவள்ளூரில் 1 லட்சம் பேர், சென்னையில் 1ணீ லட்சம் பேர் கோவையில் 1ணீ லட்சம் முதல் 2 லட்சம் பேர் என சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூரில் மாவட்டக் கமிட்டி கூட்டத் திற்குப் பிறகு இரண்டு உள்ளூர் மட்ட கமிட்டிகள் கூடி உள்ளன. 2 பகுதி கமிட்டிகள் உருவாக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த சுற்று வேலையோடு சேர்த்தும் அடுத்த சுற்று வேலையைக் கொண்டு செல்லவும், புதுக்கோட்டை, சென்னை, கோவை தோழர்கள் கூடுதல் பகுதி கமிட்டிகள் கட்ட முடிவு எடுத்துள்ளனர். தமிழ்நாடு நெடுக குறுகிய காலத்தில் இரண்டு முறை வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களோடு நெருக்கமாக விவாதித்துள்ளோம். ஆயிரங்களில் திரட்டிக் கொண்டு லட்சங்களில் மக்களைச் சந்திக்கத் தயாராகி உள்ளோம்.
நெல்லையில், ஜூன் 27 அன்று விருதுநகர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட ஊழியர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் லக்னோ வழிகாட்டுதல்கள் விளக்கப்பட்டன. ஜூலை 28 வரையிலான பணிகளும் செப்டம்பர் 2க்கான தயாரிப்புக்களை துரிதப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. தூத்துக்குடி வேலைகளை ஒழுங்குபடுத்த ஒரு கட்சி அமைப்பை உருவாக்குவதென முடிவானது.
குமரியில், கிட்டத்தட்ட 60 தோழர்கள் கலந்துகொண்ட ஜூன் 28 ஊழியர் கூட்டத்தில் லக்னோ வழிகாட்டுதல்கள் விளக்கப்பட்டன. பிற மாவட்டங்களைப் போல் இங்கும் ஜூலை 28 வரையிலான அமைப்பு தயாரிப்புக்கள், செப்டம்பர் 2 தயாரிப்புக்கள் விவாதிக்கப்பட்டன.
எல்லா இடங்களிலும், உறுப்பினர்களை கிளைகள் மற்றும் செயல்வீரர் குழுக்களில் அமைப்பாக்குவது, கிளைகளை வாக்குச் சாவடிகளை ஒட்டி மறுகட்டமைப்பு செய்வது, ஒவ்வொரு கிளையும் 100 பேரிடம் ரூ.1,000 வசூல் செய்வது, செப்டம்பர் 2க்குப் பிறகு, புதிய உறுப்பினர் சேர்ப்பது ஆகிய கடமைகள் வலியுறுத்தப்பட்டன.
வெவ்வேறு மாவட்ட வேலைகளிலும், மாவட்டங்களுக்குள் உள்ள வேலைகளிலும் கூட ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சோர்வு, அவநம்பிக்கை, சக தோழர்களோடு உள்ள உறவுகளில் சிக்கல், கூட்டு செயல்பாடு மற்றும் தனிநபர் பொறுப்பேற்பில் தடுமாற்றம், வேலைகளில் மந்த நிலை போன்று வெவ்வேறு இடங்களில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, மக்களைத் திரட்டுவது, அரசியல் தலையீடுகள், நம் தலைமையிலான போராட்டங்கள், பிற இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் ஊடாடல் தலையீடுகள் போன்றவற்றின் மூலம் கட்சியின் மதிப்பு கூடி உள்ளது. அதன் தோற்றம் உயர்ந்துள்ளது. ஆனால் கட்சி விரிவாக்கத்தில் உறுதிப்படுத்தலில் கடுமையான ஏற்றத் தாழ்வும் தேக்கமும் நிலவுகின்றன. இந்தச் சமச்சீரற்ற தன்மையைக் களைந்து அனைத்தும் தழுவிய வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டியுள்ளது.

Search