டைமன்ட்
இன்ஜினியரிங் தொழிலாளர்கள் கைது
தமிழ்நாட்டின்
காவல்துறை
உள்நாட்டு
பன்னாட்டு முதலாளிகளின் நண்பன்
காவல்துறை உங்கள் நண்பன் என்று காணும்
இடங்களில் எல்லாம் எழுதி வைத்தாலும் காவல்துறை முதலாளிகளின் வசதி படைத்தவர்களின்
நண்பன் என்பதே யதார்த்தம் என்பதை டைமன்ட், ரூபி, எமரால்ட் இன்ஜினியரிங் தொழிலாளர்கள் போராட்டம் மீண்டும் ஒரு முறை
எடுத்துக் காட்டியுள்ளது.
மாம்பாக்கத்தில் உள்ள டைமன்ட், ரூபி, எமரால்ட் இன்ஜினியரிங் தொழிலாளர்கள்,
சங்கம் துவங்கியதால் 400 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும், அனைவரையும் மீண்டும் பணிக்கமர்த்த வேண்டும், நிர்வாகம் சங்கத்துடன் பேச வேண்டும் என வலியுறுத்தி தேனாம்பேட்டையில்
உள்ள தொழிலாளர் ஆணையகம் முன்பும் இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் அலுவலகத்திலும் ஜூன்
8 மற்றும் 9 தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிர்வாகத்தை பேச்சுவார்த்தைக்கு
வரவைப்பதாக தொழிலாளர் ஆணையக அதிகாரிகள் உறுதியளித்த பிறகும் நிர்வாகம்
தொழிலாளர்களுடனோ, அரசுடனோ பேச மறுத்தது. வேறு வழியின்றி
தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஜூன் 18 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டனர்.
தங்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகம் சங்கத்துடன்
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆலை வாயில் அவர்களுக்குத்
திறக்கப்படவில்லை. ஆனால் காவல்துறை ஆலை வாயிலுக்கு வந்தது. ஆலை வாயிலில்
திரண்டிருந்த தொழிலாளர்களிடம் நிர்வாகத்தை பேச வைப்பதாக உறுதியளித்தது. அந்த
உறுதியின் பேரில், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். ஆனால்,
காவல்துறையினரின் வாக்குறுதி காற்றில் பறந்தது.
நிர்வாகம் பேச வரவில்லை.
ஜூன் 19 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டனர். நிர்வாகத்தை பேச வரவழைப்பதாகச் சொன்ன
வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத காவல்துறை, தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரள்வதைத் தடுக்க ஆலை வாயிலின் முன்
தடுப்புகள் போட்டிருந்தது. நிர்வாகம் நூறு மீட்டர் யாரும் வராமல் இருக்க தடை
உத்தரவு பெற்றிருப்பதாகக் காரணம் சொன்னது.
ஏமாற்றமுற்ற தொழிலாளர்கள் தடுப்பை
அகற்றி ஆலை வாயில் முன் திரண்டனர். காவல்துறை, ஆலை வாயிலில் திரண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்து
திருமண மண்டபம் ஒன்றில் சிறை வைத்தது.
சிறை வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு
காவல்துறை மதிய உணவு கொண்டு வந்தது. உணவுப் பொட்டலத்தைப் பார்த்துமே, அது நிர்வாகத்திடம் பெறப்பட்டது என்பதை தொழிலாளர்கள் தெரிந்து
கொண்டனர். உணவுப் பொட்டலங்கள் கொண்டு வரப்பட்ட அட்டைப் பெட்டிகளிலும் டைமன்ட்
என்ஜினியரிங் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வர
மறுத்து தாங்கள் கைது செய்யப்படும் அளவுக்கு பிரச்சனையை வளர்த்து விட்டுள்ள
நிர்வாகம் தந்த உணவு தங்களுக்குத் தேவையில்லை என்று தொழிலாளர்கள் அந்த உணவைப்
புறக்கணித்தனர். காவல்துறையினர் வேறு வழியின்றி, உடனடியாக வேறு உணவு ஏற்பாடு செய்தனர்.
அன்று மாலை, சிறை வைக்கப்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் இருந்து 15 பேரை தங்களுடன் பேச வருமாறு காவல்துறையினர் அழைத்தனர். தொழிலாளர்கள்
பேச்சு வார்த்தைதானே என்று 15 பேரை பேச அனுப்பி வைத்தனர். நேரம்
செல்லச் செல்ல பேச்சு வார்த்தைக்குச் சென்ற தொழிலாளர்கள் திரும்பவில்லை. அவர்கள்
அனைவரது அலைபேசிகளும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தன. அவர்கள் ரிமாண்ட்
செய்யப்பட்டிருக்கலாம் என தொழிலாளர்கள் புரிந்துகொண்டனர். காவல்துறையின் நிர்வாக
ஆதரவு ஒடுக்குமுறை நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
காவல்துறையினர் மற்ற அனைவரையும்
விடுவிப்பதாகவும் அவர்கள் செல்லலாம் என்றும் சொன்னபோது, பேச்சு வார்த்தை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அந்த 15 பேர் வராமல் நாங்கள் யாரும் செல்ல மாட்டோம் என்று தொழிலாளர்கள்
தெரிவித்தனர். தொழிலாளர்கள் கலைந்து செல்லவில்லை என்றாலும் காவல்துறையினர்
சென்றுவிடுவோம் என்று சொன்னபோது, அவர்கள் மறுநாளும் இதே போன்ற
போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்
செல்லப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்கள்
உறுதியாகச் சொன்னார்கள். 7 பேரை திரும்ப ஒப்படைப்பதாக
காவல்துறையினர் சொன்னபோது தங்களுடன் கைதான ஒருவரைக் கூட அங்கு விட்டுவிட்டுச்
செல்ல முடியாது, அவர்கள் அனைவரும் உடனடியாக ஒப்படைக்கப்பட
வேண்டும் என்று தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர்.
காவல்துறை 7 பேரை ஒப்படைத்தது. தொழிலாளர்கள் மற்றவர்களும் வரும் வரை கலைய
மாட்டோம் என்றனர். தொழிலாளர்களின் ஒற்றுமை, உறுதி முன்பு காவல்துறை பணிந்தது. மீதமுள்ள 8 பேரை கல்பாக்கம் காவல்நிலையம் சென்று அழைத்துச் செல்லலாம் என்றது.
தொழிலாளர்கள், அவர்கள் அனைவரும் அவர்கள் கைது
செய்யப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றனர். காவல்துறை
அந்த 8 பேரையும் மண்டபத்துக்கு கொண்டு வந்து
தொழிலாளர்கள் முன் நிறுத்தி அவர்களை கலைந்து செல்லச் சொன்னது.
இவ்வளவும் நடந்து முடியும்போது மணி
இரவு 11.30 ஆகிவிட்டது. தொழிலாளர்கள் இந்த
நேரத்துக்கு மேல் வீட்டுக்குத் திரும்ப பேருந்து வசதி இல்லையென்பதால் அதற்கு
காவல்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். காவல்துறை அதற்கு ஏற்பாடு
செய்யும் அளவுக்கு வசதியில்லை என்று சொல்லி மறுக்கவே, அப்படியானால் அவர்கள் அந்த மண்டபத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை
கலைந்து செல்வதாகச் சொன்னபோது காவல்துறை ஒப்புக்கொண்டது. தொழிலாளர்கள் அந்த
மண்டபத்திலேயே தங்கியிருந்துவிட்டு மறுநாள் காலை கலைந்து சென்றனர்.
டைமன்ட் என்ஜினியரிங் நிர்வாகம்
சட்டவிரோதமாக 400 தொழிலாளர்களை பணியில் இருந்து
நீக்கியுள்ளது. டைமன்ட் என்ஜினியரிங் நிர்வாகம் அரசு அதிகாரி அறிவுறுத்திய
பின்னும் பேச்சு வார்த்தைக்கு வர மறுக்கிறது. அரசு அதிகாரி சொல்வதை மீறுபவர்கள்
மீதுதானே பொதுவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது? முதலாளிக்கு ஒரு சட்டம். தொழிலாளிக்கு வேறு சட்டம். ஆயினும்
நிர்வாகத்தின் வஞ்சகப் போக்குக்கு ஒத்திசைந்து செயல்படும் காவல்துறையின் சூழ்ச்சி
தொழிலாளர்களின் ஒற்றுமை, உறுதியின் முன் செயலற்றுப் போனது.
தடையை மீறினார்கள், தடுப்பை அகற்றினார்கள் என்று வழக்கு பதிவு செய்து, அதற்கு அடுத்த நாள், 3 தொழிலாளர்களை காவல்துறை அவர்கள்
வீடுகளுக்குச் சென்று கைது செய்தது. பொய்
வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என
வலியுறுத்தி ஜூன் 23 அன்று நூற்றுக்கணக்கான டைமன்ட்
என்ஜினியரிங் தொழிலாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்ட
மூன்று தொழிலாளர்களுக்கும் பிணை கிடைத்துள்ளது. போராட்டம் தொடர்கிறது.