COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


நாளும் கொலையாகும் தலித்துகளுக்கு நீதி கேட்டு
கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் சாதி ஆதிக்கத்திற்கு பெயர்போன மாவட்டம். கவுரவக் கொலைகள் வன்கொடுமைகள் பொதுச் சொத்தில் பங்கு மறுப்பது கோவில் நுழைவு மறுப்பு சேவை சாதிகளின் சேவை மறுப்பு என தலித்துகள் மீதான தாக்குதல் இன்னமும் நீடிக்கிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகளில் உள்ள தலித் தலைவர்கள் அதிகாரம் இல்லாத தலைவர்களே.
1990கள் மற்றும் 2000களில் தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் திரு.சேட்டு முக்கியமான ஒருவர்.இவர் அம்பேத்கார் பெரியார் மக்கள் கழகத்தில் செயல்பட்டார்.சங்கம்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்.இகக(மாலெ) மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி வீட்டிற்கு பக்கத்தில் குடியிருப்பவர். 19.05.2015 அன்று இரவு இவர் தலை மீது கல் போடப்பட்டு இவர் கொல்லப்பட்டார்.
1000 பேர் நீதி கேட்டு திரண்டனர். மக்கள் திரண்டதால் காவல்துறை சிலரைக் கைது செய்தது. கடைசியில் சேட்டை, முத்தழகன் என்ற ஒரு தலித் கொலை செய்தார் என அவரிடமே வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளது. தர்க்கரீதியாக பார்க்கும் போது முத்தழகன் சேட்டை கொலை செய்திருக்க எந்த காரணமும் இல்லை என பகுதி முழுவதும் இருக்கிற தலித் மக்களும் ஜனநாயக செயல்வீரர்களும் கருதுகின்றனர். முத்தழகன், தான் கொலை செய்யவில்லை என்று சொன்னதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது, இந்தப் பின்னணியில் இன்னார்தான் கொன்றிருப்பார்கள், கொலைக்கு சதி செய்திருப்பார்கள் என்று குறிப்பாக உடனடியாக சொல்ல முடியாவிட்டாலும் முத்தழகனைத் தாண்டி விசாரணை தொடரப்பட வேண்டும் என மக்களும் இகக(மாலெ)யும் கருதுகின்றன.
இந்நிலையில் நாளும் கொலையாகும், வன்கொடுமைகளுக்கு ஆளாகும், கவுரவக் கொலைகளுக்கு ஆளாகும், தலித் மக்களுக்கு நியாயம் கேட்டு 26.06.2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில் சேட்டு கொலையின் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்என ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. கந்தர்வகோட்டை காவல் நிலையம் முதலில் அனுமதி தருவதாகச் சொன்னது. பின்னர் சேட்டு கொலையின் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட வேண்டும் என நாம் சொன்னதால் எஸ்பி ஆலோசனைப்படி அனுமதி மறுப்பதாக காவல்துறை தெரிவித்தது. சேட்டு கொலை தொடர்பாக நாம் சொல்கிற விசயங்களில் அவர்களுக்கு நெருடல் உள்ளதாம். அவர்களுக்கு நெருடல் உள்ளது, நம் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என 19.06.2105 முடிவெடுத்தபோதே, அனுமதி மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது என மதிப்பீடு செய்தோம். அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி நடத்தலாம் என்ற நம் ஆலோசனை பகுதி தலித் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 26.06.2015 மாலை தலித் இளைஞர்கள் கணிசமாக கந்தர்வகோட்டை நகரத்தில் திரண்டனர். 200 பேர் கண்டனம் முழங்க, போராட்டப் பதாகை விரிந்தது. குவிந்திருந்த காவல்துறையோ, அவர்களது தடையோ, மா லெ கட்சியின் போராட்டத்தை ஏதும் செய்ய முடியவில்லை. பரபரப்பான நிகழ்ச்சியைக் காணக் கூடியிருந்த, இடதுசாரிகள் தலித் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது கண்டு உற்சாகம் அடைந்தனர். சேட்டு கொலை மர்ம முடிச்சை அவிழ்க்கவும், விசாரணையைத் தொடரவும் வலியுறுத்திய போதே, கவுரவக் கொலைக்கு ஆளான சேலம் ஓமலூர் கோகுல்ராஜ் கொலைக்கு நீதி கேட்டும் முழக்கங்கள் எழுந்தன. மர்ம முடிச்சு ஒரு வழியாய், பகிரங்கமாக வெளியே வந்தது.கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

Search