COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


ஜெயலலிதா சொல்லி வரும் பொய்கள் கிழிபடும் காலம்

ரம்சான் கஞ்சிக்கு இலவச அரிசி என்று ஜெயலலிதா அறிவித்ததால் அவருக்கு தமிழக இசுலாமியர்கள் நன்றி சொன்னதாக ஜெயா தொலைக்காட்சி செய்தி சொன்னது. ஜெயா தொலைக்காட்சி செய்திகள் அப்பட்டமான புனைவுகள் என்பதை ஆம்பூர் இசுலாமிய இளைஞர் காவல் படுகொலைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் மெய்ப்பித்துவிட்டது. 
ராமநாதபுரத்தில் காவல்நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இசுலாமிய இளைஞர் இறந்துபோன சம்பவத்தின் வடு ஆறாமல் இருக்கும்போதே, இந்தப் படுகொலை தமிழ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூரில் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டவர், பிறகு இறந்துபோனார்.  ஷமீல் அகமது இறந்த பிறகு, அவர் சாவுக்குக் காரணமான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கைக் கோரி போராடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாரே தவிர கைது செய்யப்படவில்லை. ரம்சான் காலத்தில் இருக்கும் தமிழக இசுலாமியர்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு காவல் படுகொலைகள், போராடியவர்கள் கைது என பரிசு தந்துள்ளது.
ராமநாதபுரத்தில், ஆம்பூரில் இசுலாமிய இளைஞர்கள் காவல் நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி பிறகு உயிரிழப்பதையும், தீவிரவாதிகளைப் பிடிப்பதாகச் சொல்லி மேலப்பாளையம் இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்படுவதையும் இசுலாமியர்களே தங்கள் உழைப்பில் குடிக்கும் ரம்சான் கஞ்சி கூட சரி செய்து விடாது. நாடு முழுக்க சங் பரிவார் கும்பல்கள் இசுலாமியர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை பரப்பி வரும் சூழலில், ஜெயலலிதா பொறுப்பில் இருக்கிற தமிழ்நாடு காவல் துறை அந்தப் பிரச்சாரத்துக்கு செயல்வடிவில் வலு சேர்க்கிறது. தலித் இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடப்பது ஜெயலலிதா ஆட்சியின் தனிமுத்திரை ஆகியுள்ளது. பாஜக வலுவிழந்து இருக்கிற தமிழ்நாட்டில், அதன் மதவெறி நிகழ்ச்சிநிரலின் சில பகுதிகளை, அதன் இயல்பான கூட்டாளி என்ற விதத்தில், ஜெயலலிதா வெற்றிகரமாக அமலாக்குகிறார்.
கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலில் பாஜகவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். அவரது கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலை புரிந்து கொண்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர்கள் சென்னையில் உள்ள சின்டெல் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள்.
திடீரென்று 25,000 பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்தது. தமிழ்நாட்டில் போராட்டங்களை சந்தித்தது. அய்டி துறை பளபளப்பு வெறும் பூச்சு என்பதை அம்பலப்படுத்தும் விவாதங்கள் நடந்தன. நாட்டு முன்னேற்றத்தின் நாடி என்று தவறாகக் காட்டப்படும் டாடாவுக்குச் சொந்தமான டிசிஎஸ் நிறுவனத்தின் பெயர் நாறிப் போனது.
வெளியில் தெரிந்தால்தானே பெயர் நாறிப் போகும். ஆன வரை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டது சின்டெல் நிறுவனம். 3,000 பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 1,000 பேரை வெளியேற்றிவிட்டது. இது பற்றி ஊடகங்களுக்கு செய்தி ஏதும் தரவில்லை. சங்கம் ஒட்டுகிற சுவரொட்டிகள் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியாளர்களால் உடனடியாக கிழித்தெறியப்படுகின்றன.
ஒரு பூனையை வேலைக்கு எடு. குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிட்டால் நீ சிங்கமாவாய் என்று உறுதி சொல்.அந்த இடத்துக்குச் செல்ல விடாமல் பார்த்துக்கொள்.சிங்கமாகிவிடும் நம்பிக்கையிலேயே பூனை ஒரு நாள் செத்துப் போகும். சின்டெல் நிறுவனத்தின் மனிதவள தத்துவம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.
சின்டெல் நிறுவனத்தில் வேலையில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன் அது பற்றிய அறிவிப்பு தரப்படுவதில்லை. திடீரென மனிதவள அதிகாரி அறைக்கு அழைக்கப்படுகிறார்கள். பணி விலகல் கடிதத்தில் கையெழுத்திட, 15 நிமிங்களுக்குள் அங்கு இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை அனுபவிக்கும் நிறுவனம், ஊழியர்களை மனம்போன போக்கில் வெளியேற்றி அவர்கள் வாழ்க்கையை இருளில் தள்ளுவது பற்றி, இதற்கு முன்பு பல நிகழ்வுகளில் நடந்தது போலவே, ஜெயலலிதாவுக்கு சற்றும் அக்கறை இல்லை.
(கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள இந்த அய்டி ஊழியர்கள் என்ன ஆசனம் செய்தால் மனஅமைதியை திரும்பப் பெற முடியும் என்று தமிழிசை சொல்ல வேண்டும்).
தமிழக விவசாயிகள், ஆர்கே நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது, அங்கு சென்று சாலை மறியல் நடத்தினார்கள். ஜெயலலிதா விவசாயக் கடன் பற்றி, நாட்டுக்கு விவசாயிகளே தேவையில்லை என்று தனது திட்டங்கள் மூலம் சொல்லிக் கொண்டிருக்கும், மக்கள் நல நடவடிக்கைகளுக்கு படிப்படியாக மூடுவிழாக்கள் நடத்திக்கொண்டிருக்கும், மக்கள் பிரச்சனை, ஊழல் என்றால் மவுனாசனத்தில் மூழ்கிவிடும் மோடிக்கு கடிதம் எழுத அமர்ந்துவிட்டார்.
விவசாயிகளுக்கான கடன் வட்டி மானியத் திட்டத்தில் மத்திய அரசு செய்யவிருக்கும் மாற்றங்கள் பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கை             வெளியிட்டிருப்பதாகவும் அந்த மாற்றங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்காது எனவும் பழைய திட்டங்கள் ஜூன் 30க்குள் முடிவடைவதால் அதைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 29 அன்று ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோதே மோடிக்கு கடிதம் எழுதினார். இப்போது ஜெயலலிதா, அந்தக் கடிதத்தையும் பற்றி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் எழுதுகிறார்.இரண்டு கடிதங்களும் விவசாயிகள் நலன்காக்க அஇஅதிமுக அரசு மகா நடவடிக்கைகள் எடுத்து விட்டதாகக் காட்ட பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள விவசாயக் கடன் கூட தங்களுக்கு கிடைப்பதில்லை, அதை வசதி படைத்த விவசாயிகளே பெருமளவில் வசப்படுத்தி விடுகிறார்கள் என்றும் வெறும் 10%  விவசாயிகள்தான் வங்கி கடன் வாங்க முடியும் என்றும் சிறுகுறு விவசாயிகள் சொல்கிறார்கள். கடனைக் கூட உரியவர்களுக்கு உரிய விதத்தில் சேர்க்காமல் விவசாயிகளுக்கு இருக்கும் குறைந் தபட்ச பாதுகாப்பையும் உறுதிபடுத்தாததற்கு ஜெயலலிதாதானே பொறுப்பேற்க வேண்டும்?
ஜெயலலிதா இதுவரை மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் எல்லா பிரச்சனைகளிலும் தமிழ் நாட்டில் அவர் நிறைவேற்ற வேண்டிய நடவடிக் கைகளை நிறைவேற்றாமல் அவரது பொறுப்பில் இருந்து நழுவியதைப் போலவேதான் இந்தப் பிரச்சனையிலும் நடக்கிறது.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா சொன்னார். மோடிக்கு இருப்பதைப் போலவே ஜெயலலிதாவுக்கும் வசனங்கள் எழுதித் தர சிறப்பு உதவியாளர்கள் இருக்கிறார்கள். மோடியின் வசனங்கள் அம்பலமாகி, இன்று அவர் மவுனம் கடைபிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது போன்ற நிலைமையில்தான் ஜெயலலிதாவும் இருக்கிறார். மீதமிருக்கிற சில மாத கால ஆட்சியைக்    கடத்துவது கூட ஜெயலலிதாவுக்கு பெரிய பிரச்சனையாகவே இருக்கும்.
பற்றியெரிகிற மக்கள் பிரச்சனைகள் மீது அக்கறை இன்மை, உரிமைப் பறிப்பு, ஜனநாயக மறுப்பு ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்பால் அலட்சியம், ஒடுக்குமுறை என யதார்த்த நிலைமைகள் தமிழக மக்களைச் வாட்டி வதைக்கும்போது, ஜெயலலிதா சொல்லி வந்த பொய்கள் கிழிபடுகின்றன.

Search