COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, July 1, 2015


அஇஅதிமுககாரர்களால் முற்றுகையிடப்பட்ட ஆர் கே நகர் தொகுதி மக்கள்

ஜூன் 23, 24 தேதிகளில் இகக வேட்பாளர் தோழர் மகேந்திரனுக்கு வாக்குகள் கேட்டு இகக மாலெ தோழர்கள் ஆர்கே நகர் தொகுதியில் வேட்பாளருடன் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தின்போது தோழர்களின் கண்ணில் பட்டவையும் காதில் கேட்டவையும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஜூன் 23 அன்று காலை முதல் மாலை வரை, தோழர்கள் ஜானகிராமன், சேகர், ஜவஹர் தலைமையில் நடத்தப்பட்ட வாக்கு சேகரிப்பில் மாலை நேர பிரச்சாரத்தில் வேட்பாளர் சி.மகேந்திரன் இகக தோழர்களுடன் கலந்துகொண்டார். தோழர்களுடன் பழ.நெடுமாறனும் அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சென்னை மாநராட்சி டிவிசன்கள் 39,40 பகுதிகளில், உள்ள ஜீவாநகர், வஊசி நகர், இளங்கோ நகர், சிவா நகர், கீரை தோட்டம் போன்ற குடியிருப்பு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தோழர்கள் பிரச்சாரம் மேற்கொண்ட தண்டையார்பேட்டையில் உள்ள சாலைகளில் எந்த இடத்திலும் வேகத் தடைகள் இல்லை. ஜூன் 22 அன்று ஜெயலலிதா அந்தப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டதால் அவை அகற்றப் பட்டிருக்கலாம். அன்றாடம் இரண்டு வேளைகள் குப்பைகள் அகற்றப்படுகின்றன. புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளன.
ஆர்கே நகர் தொகுதி அஇஅதிமுகவினரால் முற்றுகையிடப்பட்டிருந்தது. வாக்காளர்கள், வாக்காளர்கள் அல்லாத பொது மக்கள், காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்து வெளியே வந்தால் அஇஅதிமுககாரர்கள் முகத்தில்தான் விழிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. தொகுதி மக்கள் மத்தியில் ஓர் அச்சம் கலந்த உணர்வு காணப்பட்டது.
காணும் இடம் எங்கும் அஇஅதிமுகவினர் கரை வேட்டியுடன் நிறைந்திருந்தது, பாஷன் ஷோ நடப்பதுபோல இருந்தது. எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கு அஇஅதிமுகவினர் இருந்தனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து ஆர்கே நகர் தொகுதியில் முகாமிட்டிருந்தனர். கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தறுவாயில் இருக்கும் வீடுகளில்  அவர்கள் தங்கியிருந்தனர். பெரியார் பூங்கா, தேநீர் கடைகள், சிறுகடைகள், டாஸ்மாக் கடைகள், இண்டு இடுக்குகள் என அந்தப் பகுதி முழுவதும் எல்லா இடங்களிலும் அஇஅதிமுககாரர்களைப் பார்க்க முடிந்தது.
ஒவ்வொரு சந்திலும் 20 வீட்டுக்கு ஒரு வீட்டில் அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பெரும்கூட்டாக அமர்ந்து ஏதோ வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களிடம் இருந்து எந்த விவரமும் தோழர்கள் முதலில் பேசும்போது தெரியவர வில்லை. பிறகுதான் அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில், இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் என தெரிந்தது. அவர்களது வேலையே சாப்பிட்டுவிட்டு கரை வேட்டியுடன் சுற்றி வருவது மட்டும்தான் என்பதை தோழர்கள் சற்று நேரம் கடந்து புரிந்து கொண்டனர். அவர்களை பொறுத்த வரை மக்கள் மூவ்மென்டைகவனிப்பதுதான் வேலை. அய்ம்பது வாக்காளருக்கு 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்காளர்களிடம் இயல்பாக பேச முடிய வில்லை. வாக்காளர்களும் பேசத் தயக்கம் காட்டினர். வீடுகளின் வெளியே சுவற்றில் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் என்று எழுதப்பட்டிருந்தது. இளங்கோ நகரில் எல்லா வீடுகள் பற்றியும், வாக்காளர்கள், ஆண், பெண், இளைஞர், கட்சி பொறுப்பாளர் விவரங்களுடன் ஆளும் கட்சியினர் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.  
பல வீடுகளில் இந்த விவரம் என்னவென்று அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. விவரம் தெரிந்த ஒரு தனியார் நிறுவன தொழிலாளி, தங்கள் வீட்டுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பேன்ட் சட்டை, சேலை உள்ளிட்டவை வந்து விட்டதாகவும் இந்த வேலைகள் கச்சிதமாக முடிந்துவிடும் என்றும், 26ஆம்தேதிக்கு பிறகு இந்த உபசரிப்பு இருக்காது, வழக்கம்போல வடசென்னை புறக்கணிப்புதான் என்றார்.
தெரு குழாய்களில் பல ஆண்டுகளாக கழிவுநீர்தான் வருகிறது என்கிறார்கள் மக்கள். போடப்பட்ட சாலைகள் தேர்தலோடு போய் விடும் நிலையில் உள்ளது. ஆனாலும் அப்பகுதி அமைப்புசாரா வேலைகள் செய்கிற ஆண்கள் இம்மாதம் கொண்டாட்டமாக இருக்கிறோம் என்கிறார்கள்.
நான்கு சதுர கிலோமீட்டர் சுற்றளவு கூட இல்லாத இந்த தொகுதியில், வருடத்துக்கு ஒரு தெருவை குடியிருப்பை கவனித்து குடிநீர் வசதி செய்திருந்தாலும் தண்ணீர்பிரச்சினை தீர்ந்து இருக்கும் என்கிறார்கள் பெண்கள்.
நாற்பது ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம். இது வரை எங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதில்லை. சாக்கடை சேர்ந்துதான் குழாயில் குடிநீர் வருகிறது. காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியும் இல்லை. கழிவுநீர் கலந்துவரும் இந்த நீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் சூழ்ந்துகொள்கின்றன.உங்களை தண்ணீர் குடியுங்கள் என்று கூட எங்களால் சொல்ல முடியவில்லை. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து கழித்த பெண்ணின் எண்ணங்கள் இவை.
தண்டையார்பேட்டையில் உள்ள சிவா நகரைச் சேர்ந்த ஒருவர் எங்களுக்கு குடியிருக்க நிலம் வேண்டும். ஒரு கூரை இருந்தால்போதும். அது கூட எங்களுக்கு இத்தனை ஆண்டுகளாக தரப்படவில்லை. எனது மகளுக்கு மனவளர்ச்சி இல்லை. இந்த குடிநீரை பயன்படுத்தியதாலோ என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் துன்பம் தவிர வேறு ஏதும் பார்த்திருக்க வாய்ப்பில்லாத ஒரு பெண் இப்படிச் சொன்னார்.
சிவா நகரில் ஒரு முதியவரும் அவரது மனைவியும் தெருஓரம் ஒரு தார்பாய் விரித்து அமர்ந்திருந்தனர். 80 வயது தாண்டிவிட்ட அவர்கள், யாராவது அதிமுக மந்திரிகள், பிரதிநிதிகள் வந்தால் பென்சன் கோரி மனு தர அமர்ந்திருக்கிறோம் என்றனர். பல ஆண்டுக ளாக முதியோர் ஓய்வூதியத்துக்காக விண்ணப் பித்து வருகிறேன். எத்தனையோ படிகள் ஏறி இறங்கிவிட்டேன். இன்னும் எனக்குக் கிடைக் கவில்லை என்றார் மூத்த பெண் ஒருவர்.
திருவெற்றியூரின் தனியார் நிறுவன தொழிலாளி, இப்பவாவது கம்யூனிஸட்ங்க தள்ளாடும் தண்டையார்பேட்டையை தட்டி எழுப்ப தனியா நிக்கிறீங்களே. வடசென்னை என்றாலே கொடுங்கையூர் குப்பை கிடங்கு, கொருக்குபேட்டை நெரிசல் சாலை, பெட்ரோல் கலந்து வரும் குடிநீர், புறக்கணிக்கப்படும் காசிமேடு என்பதுதான் அடையாளம்.                 வண்ணாரப்பேட்டை  மக்களை குடிசை மாற்று வாரியம் கொள்ளையடிக்கிறது. இருபது வருசமா செய்ய முடியாததை இப்ப மட்டும் எப்படி செஞ்சுடுவாங்க என்று கேட்டார். கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேர்தல் தாண்டி கூட்டுப் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.
அடுத்து ஒருதெரு முனையில் நான்கு இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.  தியாகராயா  கல்லூரியில் படிக்கிறோம். வேறு எதுவும் இங்க கல்லூரி, பள்ளியும் இல்லை. இங்கு பள்ளி, கல்லூரி வேண்டும்.காசு பணம் பிடுங்காத கல்வி வேண்டும்.டாஸ்மாக் கடை மூடவேண்டும்.நடக்குமா? கம்யூனிஸ்ட்க்கு எங்கள் முதல் ஒட்டு என்றனர்.
ஜூன் 24 அன்று இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் தலை மையிலான குழு பிரச்சாரம் மேற்கொண்டது. சென்னை நகர தொழிலாளர்கள் கொண்ட இந்தக் குழுவினருடன் பழ.நெடுமாறனும் இககவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாலை 5 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்தப் பிரச்சாரத்தில் பல்வேறு தெரு முனைக் கூட்டங்களில் தோழர் எ.எஸ்.குமார், பழ.நெடுமாறன் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, ஜூன் 15 அன்று நடந்த இடதுசாரி கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பில் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜானகிராமன் கலந்துகொண்டார்.

Search