மியான்மர்
மீதான தாக்குதல் அபாயகரமான தேசிய வெறி
சமீபத்திய மியான்மர் மீதான இந்திய
இராணுவத்தின் தாக்குதலை ஒட்டி மோடி அரசாங்கம் மற்றும் சில ஊடகங்களின் தேசவெறி வாய்
வீச்சும் தோற்றமும் தெற்கு ஆசிய அண்டை நாடுகளுடனான அமைதிக்கும் இந்தியாவின்
நலனுக்கும் கேடு விளைவிப்பதும் பொறுப்பற்றதும் ஆகும்.
18 இந்திய வீரர்களின் மரணத்திற்கு
காரணமான மணிப்பூரின் அதிரடித் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
வடகிழக்கு
மாநிலங்களிலுள்ள பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்னெடுக்க தவறியதையே
இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசவெறி கூச்சல் மேகங்களுடன்
மியான்மரில் நடத்தப்பட்ட அதிசயத் தாக்குதல் இந்தப் பிராந்தியத்திலுள்ள
முரண்பாடுகளுக்கு தீர்வாகாது; அது உண்மையிலேயே சூழ்நிலையை இன்னும்
அதிகரித்த அளவில் மோசமானதாக்கும். இந்தத் தாக்குதலையொட்டிய, வலிமையான வீண் ஜம்பம் மியான்மர் உடனான இந்தியாவின் உறவையும், சிலாகித்துப் பேசப்பட்ட ‘கிழக்கு நோக்கிய
பார்வை’ கொள்கையையும் சேதப்படுத்திவிட்டது.
இது
ஓர் எல்லை தாண்டிய தாக்குதலே இல்லை என மியான்மர் மறுத்து வருகிறது.
கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் இழப்பு என்பதை அங்குள்ள கிளர்ச்சியாளர் குழுக்கள்
மறுத்து வருகின்றன. மோடி அரசாங்கத்தின் இந்த மார்தட்டல் இந்தப் பிராந்தியத்தின்
அமைதியை சேதப்படுத்திவிட்டது.
ஆளும் கட்சியின், சில ஊடகங்களின் செய்தித் தொடர்பாளர்கள் இந்த நிகழ்வைப் பயன்டுத்தி,
பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் இதே ‘அதிரடி தாக்குதல்’ (ஹாட் பர்சுய்ட்) கொள்கை எச்சரிக்கை
விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் கவலை கொள்ளத்தக்கதாகும்.
கடந்த பத்தாண்டுகளாக போரில்
ஈடுபடாததால் இராணுவத்தின் மரியாதை குறைந்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சர்
மனோகர் பரிக்கர் சொல்கிறார்; பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி, கார்கில் போன்ற ஒருதலைபட்சமான சில இடையூறுகள் தவிர இந்திய ராணுவம் காத்திரமான
போர் எதிலும் ஈடுபடவில்லை என்று அதே கருத்தை பிரதிபலிக்கிறார். மனித இழப்புகளைப்
பற்றிய எவ்வித கவலையுமில்லாமல் அரசியல் ஆதாயத்துக்காக இந்தியா அதன் அண்டை நாடுகள்
மீதான போர் அல்லது இராணுவ நடவடிக்கை என்பதை பாஜக தலைவர்கள் விரும்புகிறார்கள்
என்பதைத்தான் அவர்கள் கூற்றுகள் அம்பலப்படுத்துகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதங்கள்
வைத்திருக்கின்றன.இந்தப் பொறுப்பற்ற போர் வெறி இரு நாட்டு மக்களும் பரஸ்பரம்
அழிவதற்கான எச்சரிக்கையே ஆகும்.
வடகிழக்கு மற்றும் காஷ்மீர்
பிரச்சனைகளுக்கான திறவுகோல் அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறது
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை நோக்கிய பயணத்தின் முதல் மற்றும் மிக அவசரத்
தேவையாக, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை
நீக்குவதும், ஆயுதப்படைகளால் குடிமக்களுக்கு
இழைக்கப்படும் குற்றங்களில் நீதி, பொறுப்பாக்குதலை
உத்தரவாதப்படுத்துவதும் ஆகும்.