COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 18, 2018

ஜனவரி 1 - 14 இரண்டு வாரங்களின் டைரிக் குறிப்பு

எஸ்.குமாரசாமி

ஜனவரி 1: காலையில் கோவை சென்றேன். சாந்தி கியர் தொழிலாளர் நலச் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகரின் மனைவி அகால மரணமடைந்த செய்தியறிந்து, கோவை தோழர்களுடன் துக்கம் விசாரிக்க சென்றோம்.
சாந்தி கியர்சின் பத்துக்கும் மேற்பட்ட தோழர்களுடன், கட்சி உறுப்பினர் சேர்ப்பு, தீப்பொறி சந்தா, பிரிக்கால் இருவர் விடுதலைக்கான கையெழுத்து இயக்கம், ஜனவரில் 31 சென்னை பேரணி பற்றிப் பேச முடிந்தது. அன்று மதியம் கட்சியின் கோவை மாநகரக் குழுவின் முன்னணித் தோழர்களுடன், அடுத்த கட்ட வேலைகள் பற்றி விவாதம் நடந்தது. ஆர்கே.நகர், குஜராத் இமாச்சலப்பிரதேச தேர்தல் முடிவுகள் தொடர்பான தீப்பொறி கட்டுரை வாசித்து விவாதிக்கப்பட்டது.
ஜனவரி 2: கோவை சிறைக்கு வழக்கறிஞராகச் சென்று 03.12.2015 அன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட தோழர்கள் மணிவண்ணன் ராமமூர்த்தியைச் சந்தித்தேன். வழக்கறிஞ ரும் ஏஅய்சிசிடியுவின் புதிய மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான தோழர் தாமஸ் கே.லூயிஸ் உடன் வந்திருந்தார். தோழர்கள் நாம் மேற்கொண்டுள்ள இயக்கம் பற்றியும் வழக்கு மறுபரிசீலனை வாய்ப்புக்கள் பற்றியும் கவனமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அவர்களது கவலைகள் பிரச்சனைகள் பற்றித் தெரிவித்தனர். தங்கள் தண்டனை தொழிலாளர் வர்க்கத்துக்கு, போராட்டத்துக்கு எதிரான தண்டனை என்ற கருத்தில் ஊன்றி நிற்கின்றனர். சிறையில், நாம் தோழர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும்போதே வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் ச.பாலமுருகன் மாவோயிஸ்ட் இயக்கத் தோழர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். பரஸ்பர அறிமுகம் நடந்தது.
ஜனவரி 3: கட்சி மாநில நிலைக்குழு கோவையில் கூடியது. இரண்டு, ஒரு மணி நேர இடைவேளைகளுடன் காலை 10.30 முதல் மாலை 8.15 வரை கூட்டம் நடந்தது. நிலைக்குழு தோழர்கள் அனைவரும் வந்திருந்தனர்.
அன்று கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமைச் சங்கத்தின் நிர்வாகக் குழு கூடியது. கூட்டத்தில் கையெழுத்து இயக்கம் பற்றிப் பரிசீலிக்கப்பட்டது. ஜனவரி 7 குருபூஜை நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சில பத்தாயிரம் கையெழுத்துக்கள் வாங்குவது என்ற கட்சியின் முடிவு தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 11 சங்க நிர்வாகக்குழு கூடி, 01.07.2018 முதலான காலத்துக்கான கோரிக்கை மனு பட்டியலை தயாரிப்பது எனவும், அதற்கான கோரிக்கைகளைத் தொழிலாளர்களிடம் கேட்டறிவது எனவும், கோரிக்கைகளை 11.01.2018 இறுதி செய்து, 12.01.2018 பொதுப் பேரவையில் படித்துக் காட்டி ஒப்புதல் பெறுவது எனவும் முடிவானது.
கோவையில் இருந்தபோது, பெருமாள்முருகனின் வேப்பெண்ணய்க் கலயம் சிறுகதைத் தொகுப்பை படித்து முடிக்க முடிந்தது. தமிழ்ச்செல்வியின் அளம் கனமாக மனதில் நிற்கிறது. ஆசிரியர், சுந்தராம்பாள், வடிவாம்பாள், ராஜாம்பாள், அஞ்சம்மாள் என்ற பெண்களின் ஊடாக, கிராமப்புற வறிய விவசாயப் பெண்களின் வாழ்க்கையைக் கண் முன் நிறுத்துகிறார். கற்றாழை, அளம் இரண்டுமே, ஆண் துணையின்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகிற பெண்களைப் பற்றியது. கிராமப்புற வறிய பெண் மொழி, பெண் உலகம் பற்றி வாசித்தவற்றில் தமிழ்ச்செல்வியின் கதைகள் மனதைக் குடைந்து கொண்டே இருக்கும்.
அன்று இரவு தோழர் ஆசைத்தம்பியுடன் செம்மொழி விரைவு ரயிலில் தஞ்சாவூர் சென்றேன்.
ஜனவரி 4: கந்தர்வக்கோட்டையில், தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டையின் தோழர்கள் ஆசைத்தம்பி, வளத்தான், தேசிகன், கண்ணையன், இளங்கோவன், குணசேகரன் ஆகியோருடன் தீப்பொறி கட்டுரைகள், நிலைக்குழு முடிவுகள் விவாதிக்கப்பட்டன. அடுத்த கட்ட வேலைகள் திட்டமிடப்பட்டன. அன்று மதியம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. தோழர் ஆசைத்தம்பி கட்சி முடிவுகளை விளக்கினார். 55 கிளைச் செயலாளர்களைக் கூட்டுவது பற்றியும், 4, 5, 6 நிகழ்ச்சிகள் பற்றியும், அடுத்த கட்ட தயாரிப்புகள் பற்றியும் திட்டமிடுதல் நடந்தது. கூட்டத்தின் இறுதிப் பகுதியில், பேசும் வேலை மட்டுமே எனக்கு இருக்குமாறு தோழர் ஆசைத்தம்பி பார்த்துக் கொண்டார். அன்று மாலை 7.30 அளவில் செங்கமேடு சென்றோம். தோழர் திருமேனிநாதன் வீட்டில் தோழர் விஜயன் முன்னிலையில் இளைஞர்களைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்து உறுதிமொழி எடுப்பது நடந்தது. அன்று 13 இளம் தோழர்கள் கட்சியில் சேர்ந்தனர். தோழர் திருமேனிநாதனின் பெற்றோரும் கட்சி தோழர்களே. அவர்கள் அன்புடன் இரவு உணவு அளித்தனர்.
ஜனவரி 5: காலை நடை முடிந்த பிறகு, தோழர்கள் ஆசைத்தம்பி திருமேனிநாதனுடன், பீமா கோரேகான் நிகழ்வுகள், தமிழ் நாடெங்கும் தலித்துகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்கள், அவசரகதியில் முத்தலாக் சட்டம் மூலம் இசுலாமியரைத் தண்டிக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி  விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை  உயர்த்திப் பிடிப்பதன் அவசியம் உணரப்பட்டது. உடனடியாகச் சிறு பிரசுரம் தயாரானது. இகக, இகக(மா), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் பேசி அவர்களையும் அழைத்து, 06.01.2018 மாலை கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையத்தில் நிகழ்ச்சி நடத்த முடிவானது. தோழர் ஆசைத்தம்பி போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்புடன் சென்று, சட்டமன்ற உறுப்பினரின் மிரட்டல்களுக்கு இடம் தர வேண்டாம் என பணிமனை மேலாளரிடம் பேசிவிட்டு வந்தார். அதன் பின் அவர்களும் வந்து என்னை சந்தித்துப் பேசினார்கள். அன்று மதியம், தோழர் திருமேனிநாதனுடன் இணைந்து தோழர் உயிரோவியன், +1, +2 படிக்கும் மாணவர்களைக் கட்சியில் சேர்க்கும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். 24 மாணவர்கள் அன்று அந்தக் கூட்டத்தில் கட்சியில் சேர்ந்தனர். கூட்டத்தில் தோழர்கள் வளத் தான், ஜோதிவேல், ரேவதி கலந்து கொண்டனர். அன்று மாலை, துவாரில் தோழர்கள் விஜயன், ரங்கசாமி, பாலஅமுதன், லெனின் ஆகியோரும் பங்கேற்ற கூட்டத்தில் 20 இளைஞர்கள் கட்சியில் சேர்ந்தனர். இளைஞர்கள், நெய்வேலி, ஆண்டிகுளப்பம்பட்டி, துவார், பள்ளத்தான்மனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
ஜனவரி 6: மதியம் பெரியகோட்டையில் 9 இளம்பெண் தோழர்கள் கட்சியில் சேர்ந்தனர். இன்னமும் சிலரைச் சேர்க்க முடியும் என்றனர். ஒரு நாள் காரில் ஒரு நாள் ஆட்டோவில் ஒரு நாள் டூ வீலரில் கிராமங்களுக்குச் சென்றோம்.
அன்று மாலை, மகாராஷ்டிராவிலும் தமிழ்நாடு எங்கிலும், தலித் மக்கள் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் முழங்குவோம், உடனடி முத்தலாக் தடைச் சட்டம் அவசர கதியிலானது, ஒரு தலைப்பட்சமானது, அநீதியானது, போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் என்ற முழக்கங்களுடன் கந்தர்வகோட்டையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நம் தரப்பில் தோழர் வளத்தான் தலைமை தாங்கினார். தோழர் ஆசைத்தம்பி துவக்கவுரையாற்றினார். இகக மாவட்டச் செயலாளர் தோழர் செங்கோடன், இகக(மா)வின் தோழர் பன்னீர்செல்வம், விசிகவின் மாவட்டச் செயலாளர் தோழர் விடுதலைக் கனல் உரையாற்றினர். தோழர்கள் நான் பேச போதுமான நேரம் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டம் எழுச்சியோடு நடந்ததாக பங்கேற்ற அனைவரும் உணர்ந்தனர். அன்றிரவு கணிசமான இளம் தோழர்கள் வழியனுப்ப வந்தனர்.
சென்ற ஆண்டு இறுதியில் புரட்சிகர  இளைஞர் கழக மாநாடு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது. அமைப்பு நன்றாகவே வேலை செய்கிறது. இரு நிகழ்வுகள் முக்கியமானவை. தலித் மாணவர் விடுதியில் உணவு தரம் இல்லாததாக, உண்ண முடியாததாக இருப்பதாக புகார் வந்தபோது, நமது தோழர்கள் உடனடியாக அங்கே சென்று நடவடிக்கை எடுத்து பிரச்சனை தீர வழி செய்தனர். இப்போது திரும்பவும் பிரச்சனை வந்துள்ளதால் திரும்பவும் தலையிட வேண்டி உள்ளது.
கறம்பகுடியில் உள்ள மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 4 ஆண்டுகளாக இயங்குகிறது. இந்த இருபாலர் கல்லூரியில் 800  மாணவர்கள் படிக்கிறார்கள். 500 பேர் பெண்கள்.300 பேர் ஆண்கள். மருதன் கோன் விடுதிக் கல்லூரியைச் சுற்றி உள்ள மருதன்கோன்விடுதி, மயிலாங்கோன்பட்டி, வாண்டான்விடுதி, பந்துவங்கோட்டை, கல்லாகோட்டை ஆகிய பகுதிகளில் பெரும்பான்மை மக்கள் தலித்துகளே. கல்லூரியின் பெயர் கெடுகிறது, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அதனால் இருபாலர் கல்லூரியை பெண்கள் கல்லூரியாக மாற்ற வேண்டும் என, ஆதிக்க சக்தியின் தூண்டுதலில், இந்த தனித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்வைத்துள்ளார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் (திருச்சி) இது பற்றி முடிவெடுக்க கல்லூரிக்கு வந்தார். நமது தோழர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி ஒட்டினார்கள். நேரில் சென்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆணும் பெண்ணும் சேர்ந்து சேர்ந்து போகிறார்கள் எனச் சொன்னபோது, இருபாலர் கல்லூரியில் சேர்ந்துதானே போவார்கள் என்றும், 60, 70 வயதில் சந்தித்தா சேர்ந்து போவார்கள் என்றும் நம் தோழர்கள் பதில் சொன்னார்கள். மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் எல்லாம் இருபாலர் கல்லூரியாக இருக்கும்போது, இந்தக் கல்லூரியை பெண்கள் கல்லூரியாக மாற்றக் கோருவது மாணவர்களை இழிவுடுத்துவது என்றார்கள். பெண்கள் கல்லூரியில் சேர்வது குறைந்துள்ளது எனப் பொத்தாம்பொதுவாகச் சொல்லப்பட்டபோது, பதிவேடுகள் மூலம், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நிரூபித்தனர். கடைசியில், கல்லூரியில் கற்பித்தல் பணியிடங்களை நிரப்ப, உணவகம், வண்டி நிறுத்துமிடம், ஆய்வகம், நூலகம், முறையான சாலை, போதுமான கழிப்பறைகள், சுற்றுச்சுவர் நிறுவச் சொல்லியுள்ளனர். புதுக்கோட்டையில் புரட்சிகர இளைஞர் கழகம் காலூன்றுகிறது. வளர்கிறது.
மக்கள் தொகையில் 35 வயதுக்குக் கூடுதலாக உள்ளவர்கள் மிகப் பெரும்பான்மையினர். ஆனால் கட்சியில் பல்வேறு மட்டங்களில் மூத்தவர்களே என்பதில் உள்ள பொருத்தமின்மை தகர்க்கப்பட வேண்டும். அவசர அவசியமாய், பிப்ரவரி 10, 2018க்குள், புதிதாகச் சேர்க்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். தயக்கம் இல்லாமல் முயன்றால், இந்தக் கடமையை நிறைவேற்ற முடியும் என புதுக்கோட்டை அனுபவம் காட்டுகிறது.
ஜனவரி 7: திருபெரும்புதூரில் இளம்தோழர்கள் மற்றும் மற்ற முன்னணிகளோடு ஒரு சந்திப்பு நடந்தது. அதற்கு முன்பு மியாங்கோ ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது. இளைஞர் கழக அமைப்பை நிறுவி போராடுமாறு அவர்களுக்கு ஆலோசனை தரப்பட்டது. திருபெரும்புதூர் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்துவதில் சில குழுக்கள் இயங்க வேண்டும், இந்தக் குழுக்கள் திரட்ட வேண்டிய கையெழுத்துக்கள் மற்றும் ஜனவரி 31 அணிதிரட்டலுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என முடிவானது.
ஜனவரி 8: மாநில நிலைக்குழு சுற்றறிக்கை, நிலைக்குழு முடிவுப்படி இடதுசாரி கட்சிகளுக்கான கடிதம் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டி இருந்தது. 8 மாலை தோழர்கள் சேகர், பழனிவேல் போன்றோருடன் இன்னொவேட்டர் ஆலையில் 41 பேரையும், ஆன்லோட் கியர்சில் 120 பேரையும் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்தோம். அதே நாளில் நமது தோழர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திலும் கலந்து கொண்டார்கள். 8ஆம் தேதி இரவு, 9ஆம் தேதியில் பொழுதுபோக்காக டேவிட் பால்டக்கியின் எண்ட் கேம் படிக்க முடிந்தது.
ஜனவரி 9: நேற்று இரவும் இன்று காலையும் கட்சி அனுப்புகிற கடிதம் தொடர்பாக, இககமா மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன், இகக மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், எஸ்யுசிஅய் (சி) மாநிலச் செயலாளர் தோழர் ரங்கசாமி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன்.
லெனினின் என்ன செய்ய வேண்டும் நூலில் இருந்து பின்வரும் பகுதியை எடுக்க வேண்டி இருந்தது. ‘ஊழியர்கள் இல்லை, எனினும் ஊழியர்கள் திரளாக இருக்கவே செய்கிறார்கள். ஊழியர்கள் திரள்திரளாக இருக்கக் காரணம், ஆண்டுதோறும் தொழிலாளி வர்க்கமும் மேன்மேலும் வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளும் தம்மிடையே இருந்து அதிகரித்து வரும் எண்ணிக்கையில், அதிருப்தி அடைந்த நபர்களை உருவாக்கியவாறு இருக்கிறது. இவர்கள் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறார்கள். எதேச்சாதிகார ஆட்சிமுறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவி அனைத்தும் அளித்திடத் தயாராய் உள்ளனர். இதே எதேச்சதிகார ஆட்சி முறையைச் சகிக்க முடியாது என்பதை எல்லோரும் அங்கீகரிக்கவில்லை என்றாலும், மேன்மேலும் அதிகரித்த மக்கள் திரள் தீவிரமாக உணர்ந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில், நம்மிடம் ஊழியர்கள் இல்லாதிருக்கக் காரணம், மிகமிக அற்பமான சக்தியை உள்ளிட்ட எல்லா சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாகவும் அதே நேரத்தில் சீராகவும் இசைவாகவும் ஒழுங்குபடுத்தி சித்தம் செய்யும் திறமை உள்ள தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆற்றல்மிக்க அமைப்பாளர்கள் நம்மிடம் இல்லை’. லெனின் மேற்கோள், 20ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் கட்டுவதற்கும், என்ன செய்ய வேண்டும் என, செவிட்டில் அறைந்தது போல் சொல்கிறது. அங்கும் இங்குமாய் அமைப்பில் நிலவும் வருத்தங்கள், வேறுபாடுகள் களையப்படுவதற்கு, தலைமைத் தோழர்களிடம் கட்சி முடிவுகளை அமல்படுத்துவதில் ஏற்படும் திறன் வாய்ந்த அய்க்கியமே வழி என்றும் தோன்றியது.
ஜனவரி 10: காலையிலிருந்து இளம்தோழர் சீதாவிடம் சொல்லி தீப்பொறி கட்டுரைகளுக்கான குறிப்புக்களை எழுத முடிந்தது. போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்துக்கான ஒரு பிரசுரமும் தயாரானது. அன்று தோழர் சீதாவுடன் மதிய உணவு அம்மா உணவகத்தில் முடிந்தது. அன்று  மாலை டைமண்ட் செயின் முருகப்பா குரூப்பின் ஆலை வாயிலில் 65 தோழர்கள் கட்சியில் உறுப்பினர் ஆனது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. வெளியில் வந்து சந்தித்த சங்க நிர்வாகிகளிடம், கையெழுத்து இயக்கத்தில் அனைத்து வகைப்பட்ட தொழிலாளர்களிடமும் கையெழுத்து வாங்குமாறு கேட்டுக் கொண்டேன். அன்று மாலை கட்சி, புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், ஏஅய்சிசிடியு தோழர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து மய்ய தொழிற்சங்க தலைவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை 12.01.2018 முதல் துவக்கும்போது நம் தரப்பில் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளரும், ஏற்கனவே 3 முறை காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் இருந்தவருமான தோழர் கே.பழனிவேலை இருக்கச் சொல்லலாம் என முடிவானது. நமது எல்லா சக்திகளையும் திரட்டி போராட்டத்தை ஆதரிக்கவும், போராட்டம் நீடித்தால் புரட்சிகர இளைஞர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் மூலம் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவானது. இரவு கோவை புறப்பட்டேன்.
ஜனவரி 11: காலை கோவை சென்றேன். காலச்சுவட்டில் படித்த இளவேனிலின், 2017ன் தமிழ்த் தேவதை கட்டுரை, அருவி படம் பற்றி கூர்மையான காத்திரமான கேள்விகளை எழுப்பியது. எனது ஆகச்சாதகமான கருத்துக்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியது. வசந்திதேவியின் கட்டுரை, நிலம் என்ற பிரச்சனையை முன்எடுப்பதில் உள்ள வேறு கோணங்கள் பற்றிய சிந்தனைகளுக்கு உதவியது. அன்று மாலை நடந்த பிரிக்கால் சங்க நிர்வாகிகள் கூட்டத்திற்காக, தொழிலாளர்கள் தந்த அனைத்து கோரிக்கைகளையும் படித்தேன். நிர்வாகக் குழு கூட்டத்தில் தோழர்கள் அன்று போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆலைக்குள் நடந்த பட்டினிப் போராட்டம் பற்றியும் ஜனவரி 7 குருபூஜையன்று நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் 20,000 கையெழுத்துக்கள் வாங்கியது பற்றியும் தெரிவித்தார்கள். கூட்டத்தில், 750 ஒப்பந்த பயிற்சி தொழிலாளர் பணி நிரந்தரம், வாரத்தில் 5 நாட்கள் வேலை, பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, கடைசி கிரேடில் ரூ.50,000 குறைந்த பட்ச சம்பளம் போன்ற கோரிக்கைகள் தயாராயின. நிர்வாகிகள் 4 குழுக்களாக பொறுப்பேற்று தலைமை தாங்கி 60,000 கையெழுத்துக்கள் வாங்குவது, ஜனவரி 31 பேரணிக்கு அழைத்து வருவது என முடிவானது.
ஜனவரி 12: காலை தடம் இதழில் படித்ததில் எழுத்தாளர் இமையம் நேர்காணல் கவனத்தை ஈர்த்தது. சென்ற இதழில் ஆதவன் தீட்சண்யா பேட்டி, எல்லா இடதுசாரிகளும் இவ்வளவு கூர்மையாகச் சிந்தித்து அதே கூர்மையுடன் அந்த எண்ணங்களை வெளிப்படுத்தினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என யோசிக்க வைத்தது. இமையமும் என் சிந்தை கவர்ந்த எழுத்தாளர். அவர் வெளிப்படையான திமுக அனுதாபி. தலைவரைச் செல்லமாக சொட்டை என்றழைத்து, கட்சிக்குள் நிலவும் கார்ப்பரேட் சூழலையும் கதையாக்கியவர். இலக்கியத்தை ஜனநாயகப்படுத்தியதில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திராவிட இயக்க எழுத்தாளர்களின் பங்கு பற்றிய இமையத்தின் கருத்துக்கள் ஏற்கத் தக்கவையே. பெண் எழுத்தாளர்கள் பற்றிய அவரது பார்வையை ஜீரணிக்க முடியவில்லை.
அன்று மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பிரிக்கால் சங்கத்தின் 3 ஷிப்டுகளுக்கான பொதுப் பேரவை நடந்தது.பொதுக் கோரிக்கைகள் அனுப்ப ஒப்புதல் பெறப்பட்டது. பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் கதையில் நடந்தது போல், உறுப்பினர்க்கு ஒருவர் ஜனவரி 31 பேரணிக்கு அனுப்பி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த புராணக் கதையில் வந்ததுபோல், சிவபெருமானையோ, முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து யாரையாவதோ பேரணிக்கு அழைத்து வரவும் முயற்சிக்கலாம், அவர்கள், வருவார்களா என்று தெரியவில்லை, வந்தால் நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கட்சியில் சேர, மாலெ தீப்பொறி சந்தா கட்ட, கட்சியின் மார்ச் 23 - 28 பத்தாவது மாநாட்டுக்கு ஒத்துழைப்பு தர அழைப்பு விடுக்கப்பட்டது. தொழிலாளியாய் சிந்திக்குமாறும் தொழிலாளியாய் செயல்படுமாறும் தொழிலாளியாய் வாழுமாறும், அதுவே ஒப்பந்தத்திற்கு தயாராகும் சிறந்த வழி என்றும் சொல்லப்பட்டது.பொதுப் பேரவை நடந்த இடத்திலேயே எல்ஜிபி தொழிலாளர் முன்னணிகளுடன் ஒரு சந்திப்பு நடந்தது. தோழர்கள் என்கே.நடராஜன், பாலசுப்ரமணியன், ஜான்.கே.லூயிஸ் உடனிருந்தனர். அலுவலகம் திரும்பி, எட்டு நாட்கள் சம்பளப் பிடித்த வழக்கில் ஓர் இடை மனு தயாரிக்கப்பட்டது. ரயில் ஏற நேரம் இருந்ததால், முன்னணித் தோழர்களிடம் உச்சநீதிமன்ற நடப்புக்கள், தமிழை ஆண்டாள் என்ற வைரமுத்து கட்டுரையை சாக்காக்கி சங் பரிவார் நடத்தும் அராஜகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜனவரி 13: சென்னை திரும்பினேன். தீப்பொறிக்கு, போக்குவரத்து தொழிலாளர் போராட்டம், உச்சநீதிமன்ற நடப்புக்கள் பற்றி எழுதி முடித்தேன். ஆண்டாளின் திருப்பாவையை சாண்டில்யன் உரையுடன் திரும்ப ஒரு முறை படித்தேன். நாச்சியார் திருமொழியின் சில பாசுரங்களையும் படித்துவிட்டு, தமிழை ஆண்டாள் என்று வைரமுத்து கட்டுரையைத் திரும்பவும் படித்தேன்.
ஜனவரி 14: வெறுப்பரசியல் பற்றிய கட்டுரையை எழுதி முடித்தேன். ஏசியன் பெயின்ட்ஸ், ஹ÷ண்டாய் தொழிலாளர் முன்னோடிகளைச் சந்தித்து உரையாடினேன். தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் பண்டிகை மற்றும் தேசிய விடுமுறைகள் சட்டத்தின் பிரிவு 3 (2) என திருத்தம் மூலம் சிறப்பு விடுமுறைகள் அறிவிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பாணையை எடுக்க முடிந்தது.தமிழக அரசு பொங்கலை ஒட்டி 12.01.2018 அன்று சிறப்பு விடுமுறை என்று இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அரசாணை மூலம் அறிவித்தது.ஆனால் இதை எந்தத் தொழில் நிறுவனமும் அமல்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நாளுக்கு கூடுதல் சம்பளம் வழங்க தொழிலாளர்கள் சட்டப்படி கோர வேண்டியுள்ளது.
ஜனவரி 1 முதல் 14 வரையிலான நாள் குறிப்பை மாலை 9 மணி வாக்கில் எழுதி முடித்தேன்.
தாமதமானதால், திட்டமிட்டபடி புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியவில்லை. 

Search