COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, January 2, 2018

வலது திசையிலே செல்கிற இந்தியாவை இடது திசையில் செலுத்துவதற்கு அனைவரும் சேர்ந்து பாடுபட உறுதியேற்போம்

(டிசம்பர் 16 - 17 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரில் நடந்த ஏஅய்சிசிடியு 9ஆவது மாநில மாநாட்டின் பொது மாநாட்டில் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரை)

தோழர்களே,

உலகம் முழுவதும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி இருக்கும்போது, இந்த நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு, வலதுசாரி பிற்போக்கு சக்திகள், உலகத்தையே வளைத்துப் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலே எழுந்துள்ள ஆபத்து, குஜராத் தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், மிகச் சுலபமாக, ஒரு செய்தி பரவி உள்ளது. பாஜகவுக்கு வேண்டியவர்கள், நரேந்திர மோடிக்கு வேண்டியவர்கள், சமூக ஊடகத்தில் ஓர் எளிமையான தேர்வை முன்வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ராம் வேண்டுமா? ஹாஜ் வேண்டுமா? புத்திசாலித் தனமாக முடிவெடுங்கள். ஆங்கிலத்தில் டிசைட் ஒய்ஸ்லி (ஈங்ஸ்ரீண்க்ங் ரண்ள்ங்ப்ஹ்). ஆர் எ எம் (தஅங) வேண்டுமா? அல்லது எச் எ ஜே (ஏஅஒ) வேண்டுமா? இரண்டிலும் மதக்குறியீடுகள் உள்ளன. ராம் என்றால், ராமர் கோயில், அயோத்தி, இந்துத்துவா. ஹாஜ் என்றால் இசுலாமியர் மேற்கொள்ளுகிற புனிதப் பயணம். ஆனால் இதை குஜராத்துக்கு ஏற்ப திரித்துச் சொல்கிறார்கள். குஜராத்தில் இன்று முதலமைச்சராக இருப்பவர் ரூபானி - ஆர். பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா - எ. மோடி - எம். இது ராம் ஆகிறது. ஹர்திக் படேல் - எச். அல்பேஷ் தாகோர் - எ. ஜிக்னேஷ் மேவானி - ஜே. இது ஹாஜ்.
நரேந்திர மோடியும் பாஜகவும் 2014க்குப் பிறகு, இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மிகப்பெரிய பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாட்டில் பசுமாடு பற்றி பேசுகிற வரை பாஜகவுக்கு ஆதாயமாக இருந்தது. பாகிஸ்தான், துல்லிய தாக்குதல், சீனம், டோக்லம் பற்றி பேசும்போது ஆதாயமாக இருந்தது.
ஆனால், பொருளாதாரம் பற்றி நாடு பேச ஆரம்பித்தவுடன் நரேந்திர மோடி பின்வாங்க வேண்டிய அவசியம் வந்தது. கோட்டைக்குள் ளேயே குத்துவெட்டு வந்துவிட்டது. அது நாட்டுக்கு நல்லது. சத்ருகன் சின்ஹா பாஜகவுக்கு எதிராகப் பேசுகிறார். தேஜமுவின் வாஜ்பாய் ஆட்சி நடந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, இந்தியப் பொருளாதாரம் தவறான திசையில் சென்றுகொண்டி ருக்கிறது என்று இன்று பேச ஆரம்பித்திருக்கிறார். விவசாய நெருக்கடிக்கு பாஜகவால் இன்று பதில் சொல்ல முடியவில்லை. பணமதிப்பகற்ற நடவடிக்கை இந்த நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஜிஎஸ்டியின் விளைவுகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. வேலையின்மை பிரச்சனைக்கு பதில் சொல்ல முடியவில்லை.
ராஜா ஸ்ரீதர் மிகச்சரியாக சுட்டிக்காட்டினார். வேலையின்மை பிரச்சனைக்கு அவர்களால் தீர்வு காண முடியவில்லை என்பதற்கு பியுஷ் கோயல் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். எப்படித் தந்தார்? ராணி மேரி ஆன்டனெட், பிரான்ஸ் நாட்டு மக்கள் ரொட்டி வேண்டும் என்று கேட்டபோது ரொட்டி இல்லை என்றால் கேக் சாப்பிடு என்று சொன்னார். பிரஞ்சு புரட்சியில் கில்லட்டினில் அவரது தலை சிக்கியது. தமிழ்நாட்டில் 1967ல் தமிழ்நாட்டு மக்கள் அரிசியில்லை என்று சொன்னபோது, காங்கிரஸ்காரர்கள் எலிக்கறி தின்னச் சொன்னார்கள். அன்று தமிழ்நாட்டு மக்கள் காங்கிரசை வங்கக் கடலிலே வீசி எறிந்தார்கள். இன்று வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைப்பது என்பது சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. நாடு முழுவதும் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்களே, வேலையில்லா திண்டாட்டத்துக்கு என்ன பதில் என்று கேட்டபோது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று சொன்னீர்களே, எங்கே வேலை என்று கேட்ட போது, வேலையில்லா திண்டாட்டம் நாட்டுக்கு நல்லது என்கிறார் பியுஷ் கோயல். இந்தியப் பொருளாதாரத்துக்கு அது நல்லது என்கிறார். வேலையின்மை இருக்கும்போது, வேலை வேண்டும் என்று கேட்டு அலைவதற்குப் பதிலாக, வேலை கொடுப்பதற்கு தயாராக வேண்டும் என்று பியுஷ் கோயல் சொல்கிறார். இன்டஸ்ட்ரியலிஸ்டாக, பிசினஸ்மேனாக இளைஞர்கள் மாறுவார்கள் என்று பேசுவது அறியாமை மட்டுமல்ல, ஆணவமும் ஆகும். கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் எதிர்காலம் பற்றிய அவர்களது வேகம், தாகம் எதையும் காலில் போட்டு மிதிப்பேன் என்று சொல்கிற ஆணவமாக அது வெளிப்படுகிறது.
இன்று பாஜக குஜராத்தில் தடுமாறுகிறது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாகக் கூடப் போகலாம். ஆனால், அஞ்சி நடுங்க வேண்டிய நிலை நரேந்திர மோடிக்கு வந்துள்ளது. 130 கோடி பேர் வாழ்கிற, மகத்தான வரலாறுக்குச் சொந்தமான இந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி, கேவலமான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் அளவுக்கு கீழிறிங்கிவிட்டார். பாகிஸ்தான் குஜராத் தேர்தல்களில் தலையிடுகிறது என்கிறார்.
பாகிஸ்தான் பக்கத்து நாடு. அந்த நாட்டுக்காரர்கள் கேட்கிறார்கள், உங்கள் நாட்டில் நடக்கும் தேர்தலில் தலையிட வேண்டிய அவசியம் எனக்கென்ன என்று கேட்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகும்போது, பாஜக சரிந்துவிடும் எனும்போது, எப்படியாவது சாதியை நுழைக்க வேண்டும், எப்படியாவது மதத்தை நுழைக்க வேண்டும், எப்படியாவது பாகிஸ்தானை நுழைக்க வேண்டும் என்று மோடி முயற்சி செய்தார். மணிசங்கர அய்யர் வாயை கொடுத்து சிக்கிக் கொண்டார். தேர்தல் பிரச்சார நேரத்தில் தேவையில்லாமல் நீச் என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டார். கீழ்த்தரமான செயல்களில் பாஜக ஈடுபடுகிறது என்று பொருள்பட அவர் சொன்னதை, மோடி மிக சாமர்த்தியமாக, நீச், இழிசாதியைச் சேர்ந்தவர் என்று என்னைச் சொல்லிவிட்டார் என்று ஊரெங்கும் போய் பேசினார்.
ஆங்கில இந்து நாளேட்டில் அற்புதமான கருத்துப்படம் வெளியாகியிருந்தது. கழைக் கூத்தாடி வீதியில் நின்று, சாட்டையை எடுத்துக் கொண்டு முதுகிலே அடித்துக் கொள்வார். அப்படி அடித்துக் கொள்பவர், அப்படி அடித்துக் கொண்ட பிறகு காசு போடச் சொல்வார். நீச் என்ற அந்த சாட்டையை எடுத்துக் கொண்டு குஜராத் எங்கும்போய் மோடி அடித்துக் கொள்கிறாராம், அடித்துக் கொண்டு, காசுக்குப் பதிலாக வாக்குகள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறார் என்று அந்தக் கருத்துப் படம் சொன்னது. மணிசங்கர அய்யர், மன்மோகன் சிங், நாட்டின் முன்னாள் ராணுவ தளபதிகள், பாகிஸ்தானுக்கான இந்தியாவின் தூதர்கள் எல்லாம் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில், நீச் என்று பேச திட்டமிட்டு பின் பேசியதால், மோடியின் சுயமரியாதைக்கு பங்கம் வந்தது என்று சொல்லப் பார்த்தார். காங்கிரஸ் பக்கம் தலித்துகளின் வாக்குகள் சென்றுவிடும், தாகோர் சாதியைச் சேர்ந்த அல்பேஷ் தாகோரின் வாக்குகள் சென்றுவிடும், ஹர்திக் படேலின் படிடார் வாக்குகள் சென்றுவிடும், எனவே, இசுலாமியர் வாக்குகள் போக 65% வரை இருக்கிற இதர இந்துக்களுடைய, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருடைய வாக்குகள் வந்து சேர வேண்டும் என்பதால், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தன்மானம் சிதைக்கப்பட்டுள்ளது, மோடியின் தன்மானம் சிதைக்கப்பட்டுள்ளது, குஜராத்தின் பெருமிதம் சிதைக்கப்பட்டுள்ளது என்று கேவலமாக பேச வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டார்.
இந்திய நாட்டின் உழைக்கும் மக்கள் எழுப்புகிற கேள்விகளில் இருந்து பாஜக தப்பிச் செல்வது இனியும் சாத்தியமில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிச்சயமாக இன்று நாம் ஒரு முக்கியமான கட்டத்தின் ஊடே சென்று கொண்டிருக்கிறோம். வருகிற டிசம்பர் 25, வெண்மணி நடந்து அய்ம்பதாவது ஆண்டு துவங்குகிறது. வெண்மணியை என்றும் மறவோம் என்று நாம் உறுதியேற்க வேண்டிய நாள் அது. தெபாகா, தெலுங்கானா, புன்னப்புறா வயலார், அல்லது தஞ்சை தரணியிலே நடந்த போராட்டங்கள், இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் தோழர் மூர்த்தியோ, தோழர் சுகுமாரனோ, தோழர் எ.எஸ்.குமாரோ, தனித்தனியாக எங்கள் இயக்கம்தான் இந்தப் போராட்டங்களை நடத்தியது என்று சொல்ல முடியாது.
கம்யூனிஸ்ட் பாரம்பரியம். அது பொது வான பாரம்பரியம். பகத்சிங்கில் இருந்து துவங்குகிற பாரம்பரியம். நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, ஆதிக்கத்தை, சுரண்டலை எதிர்த்து போராடி உயிர்த்தியாகம் செய்த இயக்கம் செங்கொடி இயக்கம். அந்த செங்கொடி இயக்கம் ஒன்றுபட்டு இந்த சமூகத்தில் உள்ள அனைத்து அநீதிகளையும் எதிர்ப்போம் என்று முடிவெடுத்திருக்கிறது. அந்த செங்கொடி இயக்கம் இன்று பிரிக்கால் தொழிலாளர்கள் விடுதலைக்காகவும் கரம் கோர்ப்போம் என்று இந்த மாநாட்டின் மூலம் முடிவெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிற விசயம்.
வெண்மணி என்கிற முதல் கோணலில் துவங்கிய கழகங்களின் ஆட்சி இன்று முற்றிலும் கோணலாக மாறியிருக்கிறது. எப்படி மாறியிருக்கிறது? ஜப்பான் நிறுவனமும் பிரான்ஸ் நிறுவனமும் சேர்ந்து நடத்துகிற ரெனோ நிசான் நிறுவனம் என்ன கேட்கிறது? அந்த காலத்தில் கட்டபொம்மன் கேட்டதாகச் சொல்வார்கள். உனக்கு நான் ஏன் கட்ட வேண்டும் வரி? உனக்கு நான் ஏன் கட்ட வேண்டும் கிஸ்தி? இப்படி கேட்டதாகச் சொல்வார்கள். ஆனால் இன்று தமிழ்நாடு அரசாங்கம் கிஸ்தி கட்டுகிறது. தமிழ்நாடு அரசாங்கம் கருவூலத்தை அகலத் திறந்து வைத்து ரெனோ நிசானிடம் எடுத்துக்கொண்டு போ என்கிறது.
எப்படி? என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள்? ÷ண்டாய் நிறுவனத்தோடு என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம்? தமிழ்நாடு முழுவதும் தொழில் துவங்குகிற பன்னாட்டு நிறுவனங்களோடு என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்கள்? கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள்? நீ எவ்வளவு முதலீடு போடுகிறாயோ, அவ்வளவுக்கும் உனக்கு வரிச் சலுகை என்றார்கள். நிலம் தந்தார்கள். நீர் தந்தார்கள். மின்சாரம் தந்தார்கள். இவையெல்லாம் போக போட்ட முதலீட்டை அப்படியே வரிச் சலுகையாகத் தருகிறார்கள். சற்று காலம் எடுக்கும், ஆனால் மொத்தமும் திரும்ப வரும் என்றார்கள். இன்று ரெனோ நிசான், ரூ.2,500 கோடி முதலீடு போட்டேன், நீ நட்டஈடும் வட்டியுமாகச் சேர்த்து ரூ.5,000 கோடி கொடு என்று கேட்கிறான். கழகங்களது ஆட்சியில், தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டின் கருவூலம் சூறையாடப்பட்டது. தமிழ்நாட்டின் மனித வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டுச் சமூகம் ஒரு கடைசலில் இருக்கிறது. இங்கு இடதுசாரி முற்போக்கு அரசியலுக்கான தேவை மிகமிகப் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. நிச்சயமாக, இந்த மேடையில் இருக்கிற எங்களைப் போன்ற தோழர்கள் எல்லாம், இங்கு எல்லோருடைய விருப்பமும், நடைமுறை அரசியலில், செயல்தந்திரத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக சில நேரங்களில் வேறுவேறு பக்கங்களில் நிற்க நேரும். ஆனால் இந்தியா இடது திசை நோக்கி திரும்ப வேண்டும் என்பதில் பொதுவான கருத்து கொண்டவர்களாக இருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் இறங்குகிறோம். இடதுசாரிகளின் ஒற்றுமை, அதனை கருவாகக் கொண்டு, ஒரு பரந்த ஒற்றுமை உருவாக வேண்டும் என்ற முயற்சி எடுக்கிறோம். அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாநாட்டின் பொது கருத்தரங்கம் நடக்கிறது.
இறுதியாக பிரிக்கால் தொழிலாளர் விசயத்தில் நான் இங்கு வந்திருக்கிற உங்களையே, பிரிக்கால் வழக்கில் நீங்கள் ஒரு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மத்தியில் இந்த வழக்கு தொடர்பான சில விசயங்களை பரிமாறிக் கொள்வது மிகமிக அவசியம் என்று கருதுகிறேன்.
உங்களுக்குப் புரியாததல்ல. மாட்சிமை மிகுந்த உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதி களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதல்ல. நாம் சொல்லுகிறோம், அது உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் சரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் சரி, நீதிபதிகளே, நீங்கள் நீதி வழங்குவதில்லை, நீங்கள் வெறும் தீர்ப்புக்காரர்கள் மட்டுமே என்பதை நினை வில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குச் சொல்கிறோம். தீர்ப்புகளில் இறுதித்தன்மை நிச்சயம் அவசியம். இந்தியாவின் எல்லா சட்டங்களும் நீதிபரிபாலன முறையும் வெள்ளைக்காரர்களிடம் இருந்து வந்தவை. லாரட் அட்கின் ஒரு தீர்ப்பில் சொல்கிறார்: பைனாலிடி ஈஸ் குட். ஜஸ்டிஸ் ஈஸ் பெட்டர்’. தீர்ப்புகளில் இறுதித்தன்மை நல்லது. நீதி வழங்கப்படுவது அதை விட மேலானது. இன்னொரு நீதிபதி லார்ட் ஸ்கேர்மன், ‘ஒரு வழக்கில் ஒரு பக்கம் சந்தேகம் எங்கோ ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கும்போது, அந்த சந்தேகத்தை அப்படியே வைத்துக் கொண்டு குற்றவாளி என்று எப்படி முடிவுக்கு வர முடியும்என்று கேட்கிறார்.
பிரிக்கால் தொழிலாளர் வழக்கில் சில விசயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 27 பேர் மீது வழக்கு போட்டார்கள். தோழர் சுகுமாரனுக்கும் தோழர் மூர்த்திக்கும் தெரியாததல்ல. என்ன வழக்கு? 19.09.2009 அன்று ராய் ஜார்ஜ் என்ற அதிகாரி கையொப்பமிட்டு 42 பேரை பணிநீக்கம் செய்கிறார். பணிநீக்க உத்தரவு கிடைக்கிறது. 20.09.2009 அன்று சதி நடக்கிறது. சங்க அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் குமாரசாமி கலந்துகொள்கிறார். தொழிலாளர்கள் முறையிடுகிறார்கள். பணி நீக்கம் செய்கிறார், என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். குமாரசாமி சொல்கிறார், தீர்த்துக் கட்டிவிடு. 21.09.2009 அன்று போகிறார்கள். மனிதவளத்துறைக்குள் நுழைகிறார்கள். ராய் ஜார்ஜ் ஓர் அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது மணிவண்ணன் ஆரம்பிக்கிறார். சென்னை தலைவர் குமாரசாமி சொன்னபடி, உள்ளூர் தலைவர் கிருஷ்ண மூர்த்தி சொன்னபடி உன் தலையில் அடிக்கிறோம், நீ செத்துத் தொலைஎன்று சொல்லிக் கொண்டே அடிக்கிறார், வரிசையாக மற்ற எட்டு பேரும் அப்படி சொல்லிக் கொண்டே அடிக்கிறார்கள், அடித்ததால் காயங்கள் ஏற்படுகின்றன, மறுநாள் இறந்துவிடுகிறார். இது வழக்கு.
ஆனால் கீழமை நீதிமன்றம் என்ன சொல்லிவிட்டது? பணிநீக்க உத்தரவு வழங்கியதற்கு ஆதாரம் இல்லை. அப்படியானால், பணிநீக்கம், பணிநீக்கம் செய்ததால் கோபம், அதனால் சதி, சதியால் கொலை என்பது உறுதியாகவில்லை. கீழமை நீதிமன்றம் சொல்கிறது: சதி நடந்ததாக எங்களால் முடிவுக்கு வர முடியவில்லை’. அப்படியானால் வழக்கின் இரண்டு அடிப்படைகள் அடிபட்டுப் போகின்றன. ஒன்று, பணிநீக்க உத்தரவு வழங்கியதாக கீழமை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டு, சதி நடந்தது என்பதை கீழமை நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் 27 பேரில் 19 பேரை விடுதலை செய்துவிட்டது. தோழர் குருசாமி பிளான்ட் 3ல் வேலை செய்பவர். கீழமை நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையில், புகாரில் குருசாமியின் பெயர் இடைச்செருகலாக உள்ளது என்று சொல்லி அவரை விடுதலை செய்தது.
8 பேர் இரட்டை ஆயுள் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு உயர்நீதிமன்றத்துக்கு வருகிறது. உயர்நீதிமன்றம் என்ன சொன்னது? இந்த குற்ற வழக்கில், புகார், அரசு தரப்பு ஆவணம் 1, முதல் தகவல் அறிக்கை, அரசு தரப்பு ஆவணம் 40. அரசு தரப்பு ஆவணம் 1ல் குருசாமியின் பெயர், சம்பத்குமார் மற்றும் சரவணகுமார் பெயர்களுக்கு இடையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் குருசாமியின் பெயர் வேறு இடத்தில் வருகிறது. நீதிபதி நாகமுத்து சொல்கிறார்: இவர்கள் குருசாமியின் பெயரை செருகி சேர்த்துவிட்டார்கள். முதல் தகவல் அறிக்கையில் இடமே இல்லாமல் இருந்தது. எனவேதான் எங்கே காலி இடம் வந்ததோ, அந்த காலி இடத்தில் குருசாமி பெயரை தொழிற்சங்க காரணங்களுக்காக சேர்த்துவிட் டார்கள். குணபாலனின் பெயரும் வேண்டுமென்றே எழுதியிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையில் குணபாலன் பெயர் இல்லை. புகாரில் குணபாலன் பெயர் இல்லை. ஆகவே, அதுவும் ஜோடிக்கப்பட்டது’.
யாருக்கும் என்ன கேள்வி எழுகிறது? கொலை வழக்கு என்றால் மரண தண்டனை வரை வழங்க முடியும். அப்படி ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் மிகவும் விவரமான நீதிபதி என்று அறியப்படுகிற நீதிபதி நாகமுத்து குருசாமி பெயரை செருகியிருக்கிறார்கள், குணபாலன் பெயரை செருகியிருக்கிறார்கள், என்று சொல்லும்போது, 9 பெயர்களில் இரண்டு பெயர்களை நுழைத்திருக்கும்போது மற்ற 7 பெயர்களையும் ஏன் நுழைத்திருக்கக் கூடாது என்ற கேள்வி வருமா, வராதா? ஒரு பக்கம் சந்தேகம் வரும்போது, மறுபக்கம் எப்படி நிரூபணம் ஆகும்?
உயர்நீதிமன்ற நீதிபதி, முதல் தகவல் அறிக்கை 21.09.2009 அன்று 6.30 மணிக்கு எழுதப்படவில்லை என்று சொல்கிறார். முதல் தகவல் அறிக்கை திரிக்கப்பட்டது என்கிறார். புலன்விசாரணை அதிகாரி சம்பவ இடத்தில் இருந்தார், சம்பவ இடத்தில் பந்தோபஸ்து போலீஸ் ஓராண்டாக இருக்கிறது, ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகிற ஓர் இடத்தில், அய்ந்து பேருக்கு மேல் காயம் அடைந்ததாக சொல்லப்படுகிற, ஒரு கலவரம்போல் இருந்ததாக சொல்லப்படுகிற ஒரு சம்பவத்தில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் காவல்நிலையம் இருக்கிற இடத்தில், ஒருவர் கூட 6.30 மணி வரை புகார் செய்யவில்லை என்பதை இந்த நீதிமன்றத்தால் நம்ப முடியவில்லை என்று நீதிபதி நாகமுத்து சொல்கிறார். குமாரசாமி சொல்லவில்லை. முதல் தகவல் சப்ரஸ்ட், மறைக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி நாகமுத்து சொல்கிறார்.
நிறுவனத்தில் ஓர் ஆம்புலன்ஸ் பதிவேடு உள்ளது. அந்த ஆம்புலன்சில்தான் காயமடைந்த அனைவரையும் எடுத்துச் சென்றதாகச் சொல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் பதிவேட்டில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றால், ‘ஆக்சிடென்ட்என்று எழுதி ராய் ஜார்ஜ் என்று பெயர் எழுதப்பட்டிருந்தது. பிறகு ஆக்சிடன்ட்என்பதை அடித்துவிட்டு அசால்ட்என்று எழுதப்பட்டது. இப்படி அடித்துத் திருத்தி எழுதியதற்கு யாரும் கையெழுத்து போடவில்லை. இதனை, முதல்/அசல் தகவல் மறைக்கப்பட்டுள்ளது என்ற நீதிபதி நாகமுத்துவின் கூற்றுடன் இணைத்துக் காண வேண்டும்.
இதே நீதிபதி சொல்கிறார்: இந்த சம்பவம் சிசிடிவி ரெகார்டிங்கில் பதிவாகியிருக்கிறது. மென் மே லை. பட் சயின்ஸ் டசன்ட் லை’. மனிதர்கள் பொய் சொல்லலாம். விஞ்ஞானம் பொய் சொல்லாது. சிசிடிவி ரெகார்டிங்கை முறைப்படி பதிவு செய்து தாக்கல் செய்திருந்தால், உண்மை வெளியே வந்திருக்கும்’.
உண்மை வெளியே வந்திருக்கும், ஆனால் வரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொல்கிறது. உண்மை வெளியே வராத வழக்கில் மரணமடைந்தவருக்கு இரண்டு காயங்கள் இருந்தன, அதனால், 1 மணிவண்ணன், 2 ராமமூர்த்தி ஆகியோருக்கு தண்டனை என்பது எவ்விதத்திலும் நியாயமில்லை என்று நாம் சொல்கிறோம்.
நான் சொல்ல வருவது ஓர் எளிமையான உத்தியாக இருக்கலாம். ஆனால் மிகமிக அவசியமான உத்தி என்பதால் இந்த மாநாட்டில் கேட்டுக் கொள்கிறேன். நாம் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் சட்டப்படி நமக்கு இல்லை. அரசு தரப்பு சிறிய அய்யத்துக்கும் இடமில்லாமல் குற்றச்சாட்டை நிரூபணம் செய்திருக்கிறதா, இல்லையா என்பதுதான் கேள்வி. ஆனால் நீதிமன்றங்கள் சொல்கிற அளவுகோல், ஒரு பக்கம் சந்தேகம் இருக்கும்போது, மறுபக்கம் நிரூபணம் ஆக முடியாது என்பதுதான். எனவே, நான் உங்களிடம் கேட்கிறேன், அரசு தரப்பு, மணிவண்ணனுக்கு, ராமமூர்த்திக்கு எதிராக குற்றச்சாட்டை நிரூபித்திருக்கிறது என கருதுகிறீர்களா? அல்லது அரசு வழக்கை ஜோடித்திருக்கிறது என்று கருதுகிறீர்களா? மக்கள் மன்றமாக நீங்களே தீர்ப்பளியுங்கள்.
(ஜோடிக்கப்பட்டுள்ளது என்று குரல்கள்)
இதுதான் மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டிய விசயம். மக்கள் மத்தியில் சென்று, பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கையொப்பங்கள் பெற வேண்டும்.
அடுத்து ஒரு கேள்வி வருகிறது. உச்சநீதிமன்றம் நமது தோழர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதற்குப் பிறகு வழக்காட முடியுமா? பேரறிவாளன் இத்தனை ஆண்டு காலம் சிறையில் இருந்தி ருக்கக் கூடாது. அவர் எப்போதோ வெளியே வந்திருக்க வேண்டும். நாம் கொடூரமான தண்டனைகளை, நீடிக்கும் தண்டனைகளை பொதுவாக ஏற்பதில்லை. கோட்பாட்டளவில் அவற்றை நிராகரிக்கிறோம். பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இப்போது, தண்டனை வழங்கப்பட்டு, அவர் சிறையில் இருக்கும்போது, அவர் வழக்கில் மறுவிசாரணைக்காக நோட்டீஸ் வழங்கலாம் என முடிவு எடுத்துள்ளது.
ஏ.ஆர்.அந்துலேவுக்கு எதிராக ஆர்.எஸ்.நாயக் என்பவர் போட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் சொல்கிறது: குடிமக்கள் எவர் ஒருவருக்கும் நீதிமன்றத்தின் செயலால் பாதிப்பு வந்தால், தீங்கு நேரும்பட்சம், (இஃப் எ ராங் ஹாஸ் பீன் டன் பை தி கோர்ட் டு எனி சிட்டிசன் ஆஃப் இந்தியா), அந்தத் தீங்கை சரி செய்கிற உள்ளார்ந்த அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது’. அந்துலே விசயத்தில் இருக்குமானால், இங்கே இருக்கிற அனைத்து மய்ய தொழிற்சங்கங்களின் சார்பாக நான் சொல்கிறேன், அந்துலேக்கு கிடைத்த நியாயம், மணிவண்ணனுக்கும் ராமமூர்த்திக்கும் கிடைக்கும் வரை நாம் ஓய மாட்டோம்.
நிச்சயமாக வழக்கறிஞர்கள் மூலம் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டுவோம். ஆனால், அதற்கு முன்பு மக்கள் மன்றத்திலே சென்று நடந்ததைச் சொல்வோம். நியாயம் கேட்போம். தோழர் மூர்த்தி அவர்கள் சொன்ன விசயம், உண்மையிலேயே தொழிற்சங்க இயக்கத்துக்கு மிக ஆறுதலான செய்தி. இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யக் கோரும் மனுவை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று, டபிள்யுஎஃப்டியுவில் இணைந்திருக்கிற உலகம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் நாம் சொல்ல வேண்டும் என்று மேடையில் இருக்கிற எல்லா இயக்கங்களையும் சேர்ந்த தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
நாம் தமிழ்நாடு முழுவதும் ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.  சென்னையிலும் கோவையிலும் லட்சம் கையெழுத்துகள் வாங்குகிறார்கள் என்றால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் அவர்களோடு போட்டி போட்டு, நாங்கள் பின்தங்க மாட்டோம் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மத்திய குழு கூட்டம், புதுச்சேரியில் வருகிற 21, 22, 23 தேதிகளில் நடக்கவுள்ளது. பிற மொழி பேசுகிற, இந்தியா முழுவதும் இருக்கிற தொழிலாளர்களிடமும் கையெழுத்துகள் பெறுவோம். இப்போது தொமுச தலைவர் சுப்பராமன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு ஏற்பாடு செய்வதாக அவரும் உறுதியளித்திருக்கிறார்.
நமது அன்புக்குரிய தோழர் ஜி.ராமகிருஷ்ணன், பிரிக்கால் தொழிலாளர் வழக்கு பற்றி அக்கறையோடு கேட்டுத் தெரிந்து கொள்வார். தோழர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கையெழுத்து பெறுவொம். தோழர் முத்தரசனிடம் மரியாதைக்குரிய நண்பர் திருமாவளவனிடம், தமிழ்நாட்டின் முக்கியமான ஆளுமைகள் அனைவரிடமும் கையெழுத்துகள் பெறுவோம். நாடு முழுவதும் இதுபோல் கையெழுத்துகள் பெறுவோம்.
பிரிக்கால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை, மாருதி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை, கிராசியானோ தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அனைத்துமே, நவதாராளவாத பொருளாதார நிகழ்ச்சிநிரலை, யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் தண்டனை வழங்கப்படும் என்ற செய்தியைத்தான் சொல்கின்றன.

மூலதனம் தாக்கியிருக்கிறது. திருப்பி எதிர்த்து எழ வேண்டிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு, இந்தியாவின் பொருளாதாரத்துக்கு, இந்தியாவின் சுதந்திரத்துக்கு, இறையாளுமைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு எதிராக எல்லா இயக்கங்களும் போராட்டங்கள் நடத்துவோம் என்றும் வர இருக்கிற காலங்களில் ஒன்றுபட்ட போராட்டங்களுக்கு கூடுதலான அழுத்தத்தை அனைவரும் சேர்ந்து தருவோம் என்றும் வலது திசையிலே செல்கிற இந்தியாவை, பிடித்து இழுத்து வந்து, இடது திசைக்குச் செலுத்துவதற்கு, நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட இந்த மாநாட்டில் உறுதியேற்போம் என்று கேட்டுக்கொண்டு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

Search